Wednesday, April 21, 2004

சுகந்தி சுப்ரமணியன்

ஒரு பெரிய அணை. நீர் நிரம்பிய நிலை. மேலும் நீர் வருகிறது. உடைப்பெடுக்கும் நிலை. இப்போது நீர் எப்படி வெளியேறும்? அணையின் பலவீனமான பகுதியின் வழியாகத்தான் முதலில் வெளியேறும். அந்த நீர் மேற்புறமாக வழியலாம்; சுவரில் வலுக்குன்றிய பகுதி உடையலாம்; மதகுகள் லேசாக இருந்தால் பிய்த்துக்கொண்டு போகலாம்; அல்லது வந்த வழியாகவே வெளியேறிவிடலாம்....

இப்போது மனித மனத்திற்கு வருவோம். பெரும் துயரத்தைச் சந்திக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? கண்ணீர் விட்டுக் கதறலாம்; சினமுற்றுக் கத்தலாம்; மன அழுத்தத்தால் மெளனம் காக்கலாம்; புலம்பித் தள்ளலாம்; அதிரடியாய்ப் போராட்டத்தில் இறங்கலாம்.... இப்படி மனம் எந்த இடத்தில் பலவீனமாய் இருக்கிறதோ, அந்த இடத்தின் வழியே துயரம் வெளிப்பட்டுவிடும். இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் துயரம் வெளிப்படுகிறது. துயரங்களின் கனம் தாங்காத சுகந்தி சுப்ரமணியன் (37), கவிதை எழுதுகிறார்.

மரணம், வலி, துயரம், ஏக்கம், இயலாமை, வருத்தம், அதிர்ச்சி, விரக்தி, சோர்வு, அச்சம், கவலை, போதாமை, வறுமை, தோல்வி, சங்கடம், ஆயாசம்.... என அகராதியில் இன்னும் மிச்சமிருப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தின் தாக்கத்தையும் ஒரே இடத்தில் பெறவேண்டுமா? சுகந்தியின் கவிதை வெளிக்குள் நுழையுங்கள்.

மாத விடாயின் போதும் கருவுற்ற போதும் பெண் படும் துயரங்கள், மற்றவர்களுக்காக அவள் வாழவேண்டியிருப்பது, அவள் எதிர்கொள்ளும் வசை, வன்முறை, உரிமை மறுப்பு, அடையாளம் இழப்பு, அவமானம், 'எதிர்வீட்டுக்காரியின் என் முகம் பற்றிய வர்ணனை', பாதுகாப்பின்மை, எதிலிருந்தும் தப்பிக்க முடியாத வாழ்க்கை, தனிமைத் துயர், குடும்பத்திற்குள் அகதியான நிலை, 'போதும் கலைத்துவிடு எனச் சொல்ல பக்கத்து வீட்டில்கூட ஆட்கள் இருக்கும்' சமூகம், உறவுகளின் உண்மை முகம், நிலையின்மை, நழுவிச் செல்லும் வாழ்க்கை.... எனச் சுகந்தியின் விரல், இந்தச் சிரிக்கும் உலகின் உண்மைத் தோற்றத்தை அம்பலப்படுத்துகிறது.

இத்தகைய உலகத்தை நெருக்கமாகக் காணும் ஒருவர், எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என நாம் கணிக்க முடியும்.

'என்னைக் கவலைகள் தின்னத் தகாதென நின்னைச் சரணடைந்தேன்' என்றான் பாரதி. கவலை, ஒரு விபரீத நோய்க் கிருமி. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடித்த கதைதான். உள்ளே நுழையவிட்டால் பிறகு, நம்மையே தின்று ஏப்பம் விட்டுவிடும். கவலையின் கரங்களில் நாம் ஒரு பொம்மையாகிவிடக் கூடாது. நம் சூத்திரக் கயிறு, நம்மிடமே இருக்கவேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதான செயலா என்ன?

'ஆகாயத்தில் கண்ணும் பூமியிலே மனசுமாய்' இருக்கும் சுகந்தி, மென்மையான-நுண்மையான மனத்தவர். அவரால் இந்தக் கவலைகளை வெல்ல முடியவில்லை.

எனக்குள் சிதைந்து போகிறேன்.
என்றாலும்
என்னை மீட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.
என் எலும்புகளில் ரத்தத்தோடு
உணர்வுகளையும் நான் மீட்டாகவேண்டும்.
என் சுவாசத்தினூடே விஷம்
உறிஞ்சப்படுவதையும் நான்
நிறுத்தியாக வேண்டும்....
- என்ற கவிதையில் ஒரு மிதமிஞ்சிய அச்சமும் பதற்றமும் விரிகின்றன.

சிரித்திரு என்கிறாய்.
சரிதான்.
என்னால் முடியவில்லை.
எல்லோரும் அப்படித்தான் என்கிறாய்.
என்றாலும் முடியாதென்கிறேன்.
சும்மாகிட என்கிறாய்.
மாட்டேன் என்றேன்.
செத்துப்போ என்கிறாய்
என்னை உன் காலால் எட்டித் தள்ளியபடி.
எனக்கென நான் வாழ்க்கையை
மிச்சம் வைத்திருக்கிறேன்
வாழமுடியாமல்


-'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' எனப் பாடியதெல்லாம் என்னாயிற்று? நம் பெண்கள் பலருக்கு இந்த அனுபவம் என்ன புதிதா? இப்படி ஒரு நாள் கழியாவிட்டால் அதுதானே புதிது.

அவள் முகம் பார்க்கும்போதெல்லாம்
சுடுசொற்கள் வந்துவிடுகின்றன.
மிகவும் வேதனைதான்; என்ன செய்வது?
நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்.
அது:
நானாக இருக்க முடியாதுபோன வருத்தம்தான்


-இப்போது சிக்கலின் அடித்தளம் என்னவென்று புரிகிறது. நான் என்ற உள்மன வேட்கை, ஒவ்வொரு மனத்திற்குள்ளும் சாம்பல் மூடிய தீயெனக் கனலுகிறது. இன்னொரு கவிதையில் பாருங்கள்.

உண்மையில் எல்லோருக்கும்
பிடித்தமானதைப் பற்றிப் பேசத் தெரியவில்லைதான்.
ஆனாலும் நட்பு தோழமை போன்றவை
வெற்று வார்த்தைகளாகிப் போனபின்
எனக்கெதற்கு இந்த விசாரம்.
மனித நடமாட்டமில்லாத இடங்கள்
ஆபூர்வமானவை; அழகானவை கூட....


- மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கும்போது இந்த இடத்திற்குத்தான் வந்துசேர வேண்டியிருக்கிறது.

சுகந்தி பெரும்பாலும் துயரத்தையும் எதிர்மறை உணர்வுகளையுமே எழுதுகிறார். ஆனால், ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாய் அமைந்துள்ளது. வாசிக்கையில் அதே உணர்வில் நாம் இழுத்துச் செல்லப்படுவதை உணருகிறோம்.

இந்த மரம் என்னைத் திட்டியதில்லை
அல்லது எந்த மரமும்.
என் நன்றியைத் தெரிவிக்கிறேன்
மீண்டும்.


-இந்தக் கவிதை, வலியைப் பேசுகிறது. ஆனால், இதில் ஒரு புதுமையான வெளிப்பாடு இருப்பதைக் கவனித்தீர்களா?

சப்தங்களின் கூடாரங்களில்
நடனமாடிய சொற்களை
ஆணியடித்து அறைந்த பின்னும்
அலையடித்துக் கிடக்கும் மனசை
மணல் வெளியில் எறிந்த பின்னும்
எங்கோ இருக்கும் பறவை தேடும்
தன் இனத்தை வீட்டில் தொலைத்தபின்னும்
எதுவுமில்லை இனி தொலைக்க என்று
ஆகிப்போன பின்னும்
நான் சப்தங்களின்...


-மொத்தக் கவிதையுமே இவ்வளவுதான். இந்தக் கவிதையின் வடிவத்தில் ஒரு சிறப்பு உண்டு. தொடங்கிய சொல்லிலேயே முடிவதோடு, ஒரு சுழலும் தன்மை இதில் இருக்கிறது. முடியும் இடத்தில் கவிதை, மீண்டும் மீண்டும் தொடங்கிவிடுகிறது.

மனம் ஒரு விசித்திரம். அது, நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கிறது. 'மதம் பிடித்த யானையாய்', 'அறுந்துவிடப்போகும் பட்டம்போல்', 'விடை தேடும் பறவையாய்', 'ரயிலும் தண்டவாளமும் இணையும் தருணத்தில் சிக்கித் தவிக்கும் உயிராய்', 'தத்திப் பறக்கும் சிறுகுருவிபோல்' எனப் பல வகைகளில் சுகந்தியின் கவிதை மனம், அவதாரம் எடுக்கிறது.

புதையுண்ட வாழ்க்கை(1988), மீண்டெழுதலின் ரகசியம்(2003) ஆகிய கவிதைத் தொகுப்புகளைச் சுகந்தி படைத்துள்ளார். சுமார் இருபது ஆண்டுகளுக்கும் முன்பே பெண்ணியத்தின் குரலை ஒலித்தவர். கவிஞர் மீரா இலக்கிய விருது பெற்றவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மனைவி. திருப்பூரில் வசிக்கிறார். தற்சமயம் உடல்நலன் குன்றியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்.

இந்த உலகில் மனிதர்கள் குறைவு; வேறு உயிரினங்களே மிகுதி. ஆனால், உலகின் அமைதி, பெரும்பாலும் மனிதர்களால்தான் கெடுகிறது. மனிதன், பிற உயிரினங்களுக்கு மட்டுமில்லை; தன் சக மனிதனுக்குக்கூட மகிழ்ச்சியை அளிப்பதில்லை. சுயநலமும் ஆதிக்க மனோபாவமும் இந்த அழகான பூமிப் பந்தை, துயரக் கிண்ணமாக மாற்றி விடுகின்றன.

நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமா என அறிய, ஒரு சிறிய சோதனை. நீங்கள் இந்த உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வெட்ட வெளிக்கு வாருங்கள். உங்கள் காலின் கீழ், தலைக்கு மேல், எட்டுத் திசைகள் என 360 பாகை அளவில் ஒரு சுற்று சுற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு கோணத்திலும் மனிதன் அல்லாத ஏதேனும் ஓர் உயிரைப் பார்க்கிறீர்களா? அதுவே சிறந்த இடம். நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமாக இல்லையென்றால் அதைச் சிறந்ததாக மாற்றுங்கள்.

ஒரு சின்னஞ்சிறு குருவியாலும் மலராலும் நாய்க்குட்டியாலும் நமக்கு மகிழ்ச்சியைத் தரமுடிகிறது! ஆறு அறிவு படைத்த மனிதர் பலரால் அது முடியவில்லை. இ·து ஒரு விநோதம்தான். ஆனாலும் நல்லவர்களும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அதனால்தானே அவ்வப்போது மழை பெய்கிறது. முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம்.

நமக்கென ஒரு கதவு திறக்கும். நம் வெக்கையைப் போக்க, ஒரு குளிர்த்தென்றல் நம்மைத் தழுவும். முட்செடியிலிருந்தும் ஒரு பூ மலரும்.

சொல்லத் தெரியாத பறவை
தன் சந்தோஷத்தை
பறந்து பறந்து நிரப்புகிறது வெளியில்


- என்கிறார் சுகந்தி.

அந்தப் பறவை, உங்கள் தோளில் வந்து உட்காருவதாக!

Tuesday, April 20, 2004

குட்டி ரேவதி

கவிதையை அடைவதற்கு ஆயிரக்கணக்கான வழிகள் உண்டு. உணர்வுப் பெருவெள்ளத்தில் ஒரு சருகென விழலாம். அறிவு நெடுஞ்சாலையின் போக்குவரத்துச் சமிக்ஞைகளுக்கு நின்று நின்றும் செல்லலாம். ஞானக் குகை வழியாக ஊர்ந்தவாறும் போகலாம். நோக்கின்றிக் கண்மூடித்தனமாய்ச் செல்லும்போதும் கவிதையின் மீது மோதிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. மொழியின் முதுகில் ஏறிக்கொள்ளும்போது அதுவும்கூடச் சில நேரங்களில் நம்மைக் கவிதையிடம் அழைத்துச் சென்றுவிடும்.

படைப்பாளியின் சமையல் அறையில் மொழி முதலில் ஒன்றும் தெரியாததுபோல் அஞ்சறைப் பெட்டிகளுக்குள் அமர்ந்திருக்கும். ஒரே மாதிரியான உணவுகளை நாள்தோறும் சமைக்கும்போது மொழி, தன் சுவையை இழந்துகொண்டே வருகிறது. புதுமையான சமையலில் மொழி, இதுவரை காட்டாத சுவைகளை வெளிப்படுத்திவிடும். புதுவிதக் கலவைகளை உண்டாக்கும்போது அந்த உணவால் ஊரே மணக்கும்.

நல்ல உணவானது, சூடு, சுவை, மணம், ஆற்றல் ஆகிய நான்கையும் தருவதாய் இருக்கும். நல்ல படைப்பாளி ஒரே மாதிரி சமைக்கமாட்டார். வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனைகளில் ஈடுபடுபவரைப் போல் அவரிடம் ஒரு தொடர்ந்த ஆய்வு இருக்கும்.

தொடர்பற்ற இரு சொற்களை ஒரு புள்ளியில் இணைக்கும் போது ஒரு புதுவித மின்சாரம் பாய்வதைச் சிலர் உணர்ந்திருப்பார்கள். வெவ்வேறு தோட்டத்து மலர்களைக் கோக்கும் போது மாலையின் அழகு கூடும்தானே! கலப்பினப் பசுவும் தாவரங்களும் அதிக வீரியத்துடன் விளங்குவது, அறிவியல் உண்மை ஆயிற்றே!

குட்டி ரேவதியின் சமையல் மிகச் சிறப்பாய் இருக்கிறது. அவரின் சொற்களுக்குள் செறிவான மின்னோட்டம் உள்ளது. வெவ்வேறு சொற்கூட்டில் இருக்கும் பறவைகளை இவர் சிறந்த முறையில் இணை சேர்க்கிறார்.

கணுக்கால் வரை மரணத்தின் சகதி
இழுவிசை மீறி இன்னும் நீண்டதூரம்
கால் களைக்க நடக்கவேண்டும்
நினைவின் வேர்கள்
பூமியின் இதயத்திலிருந்து
வெளியேறிப் புடைத்திருக்கும் படிவங்களில்
தங்கி இளைப்பாறலாம்
அங்கும் பொறிக்கப்பட்டிருக்கும்
சமீபத்திய மரணத்தின் நிழல்

இந்தக் கவிதையில் 'மரணத்தின் சகதி' என்ற சொற்சேர்க்கையைக் காணுங்கள். இந்த இரு சொற்களுக்கு நேரடித் தொடர்பு கிடையாது. இவற்றை இணைத்த பிறகு இப்பொழுது பெறக்கூடிய பொருள்கள் பற்பல. இன் என்ற ஐந்தாம் வேற்றுமை உருபு, இவர் கவிதைகளில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதே கவிதையில் நினைவின் வேர்கள், பூமியின் இதயம், மரணத்தின் நிழல் ஆகிய சொற்சேர்க்கைகளையும் இங்கு நோக்குவது பொருத்தம் உடையது.

....செவிலித்தாயின் கண்களுக்குள்ளிருந்து அவளது ஆர்வத்தின்
நாய்க்குட்டி அடிக்கடி எட்டிப் பார்ப்பது பிடிக்கவில்லை....
-இங்கு ஆர்வத்தின் நாய்க்குட்டி என்ற சொற்சேர்க்கை, மிக அழகாகப் பொருந்தியுள்ளது.

எங்கோ பூமியின் தொடையறுத்துப் பாய்கிறது
எமது தோழர்களின் ரத்தம்
- 'பூமியின் தொடை' என ஏன் சொல்லவேண்டும்? உருண்டை வடிவப் பூமிக்குத் தலையும் காலும்கூட கிடையாதே! பிறகு எப்படி தொடை வந்தது? அப்படியே சொல்லவேண்டியிருந்தாலும் வேறு உறுப்புகளைச் சொல்லியிருக்கலாமே! தொடை என்றது ஏன்? அதிகச் சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் இச்சொல், துரியோதனனின் தொடை வரைக்கும் என்னை அழைத்துச் சென்றது.

அம்முத்தத்தின் மீது படர்ந்திருக்கிறது
நினைவுகளின் நூலாம்படை - என்றும்

எனது மார்பின் பள்ளத்தாக்குகள்
சிறு ஓலத்தையும் பன்மடங்கு எதிரொலிக்கின்றன -என்றும்

மதில் சுவரிலிருந்து பந்தைப்போல்
துள்ளிக் குதிக்கிறது கறுப்புப்பூனை.....
ஒரு பகலின் விளிம்பிலிருந்து
மறு பகலின் கைப்பிடிச்சுவருக்குத் தாவுகிறது - என்றும்

..உனது கடிதத்திலிருந்து
எழும் நறுமணப் புகை
அன்றைய இரவும் பகலும் கமழ்ந்து
அறையின் மூலையில் பூனையாய்ச் சுருண்டு அமர்ந்திருக்கிறது
- என்றும் குட்டி ரேவதியின் சொற்கலவைகள், புதிய சுவையை அளித்தவண்ணம் உள்ளன.

துருப்பிடித்த மீசைகள், ஒளியின் கண்ணிமைகள், புத்தகத்தின் மார்பு, இரவின் தோட்டங்கள், ஏக்கங்களின் சமுத்திரம், உடலின் சுனை, மரணத்தின் வாசனை, உடலின் நதிப்படுகை, மார்பின் புல்வெளி, கவிதையின் தழைகள், கனவின் விதை, நினைவின் அகராதி, நினைவின் நகக்கணுக்கள், இதயத்தின் சருமம், மனதின் கண்ணாடி, மெளனத்தின் கைகள், கடிதத்தின் முனகல்கள், துயரப் பறவையின் நீலச் சருகு, இமைகளின் வரப்பு, தூய அருவிகளின் வெண்பாடல்.... என இவரின் கலப்பினச் சொற்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இவை, சராசரியான சொல்லோட்டத்தை மீறியவை. புதிய வெளிகளையும் பொருள்களையும் கண்டடைவதற்கான இடைவிடாத தேடல், குட்டி ரேவதியிடம் உள்ளது. அதற்கான சான்றுகளே, இவை.

சொற்களைக் கொம்பு சீவி விடுவதோடு அற்புதமான காட்சிகளையும் இவர் வழங்குகிறார்.

தேநீரின் ஆவி
ஜன்னலின் வெளிச்சத்தில்
ஒரு பறவையாகிறது
ஒரு கனவு நீண்ட நேரமாக
அமர்ந்திருக்கிறது மேசை மீது
- என இவர் காட்டும் ஒரு காட்சி தனித்துவத்தோடு ஒளிவீசுகிறது.

கதவுக்கும் வலைஜன்னலுக்கும் இடையே சிக்கிக்கொண்ட
வண்டொன்று
சிறையில் அடைக்கப்பட்ட வீரனைப்போல்
ஓயாமல் சுவர்களோடு மோதுகிறது
- என்ற காட்சியில் வீர வண்டின் பராக்கிரமம், நம் கண் முன் விரிகிறது. வண்டுக்கே இவ்வளவு வீரம் இருக்கும்போது, மனிதர்கள் கோழைத்தனமாய் இருக்கலாமா? என்பது இதனுள் இருக்கும் மறைமுகக் கேள்வி.

அதிகாலையில் பறவைகள் அலகினால்
இறகைக் கோதுவதையும்
ஒரு சூரியக் கதிரினால் சுகமாய்ச் சொறிந்துகொள்வதையும்
காண்கிறேன்
- என்கிற காட்சி, மிக வசீகரமாய் இருக்கிறது.

மழை, நடனப்பெண்ணின் அவிழ்ந்த உடையைப்போல்
தரையில் கிடந்தது
- என்கிற உவமையைக் கையாளும் முதல் நபர் இவரே.

...மருத்துவச்சி வந்தாள்
சூலுற்றவளை நிர்வாணித்தாள். மெல்ல...
அகட்டிய காலின் இரு உள்தொடைகளிலும்
சாம்பல் உதிரும் சிகரெட் சூடுகள்
கண்களாய்க் கனன்றுகொண்டிருந்ததைக் கண்டாள்
அதிர்ச்சியில் காதுகளைப் பொத்திக்கொண்டாள்:
'இன்னுமா அவனுக்கு நீ மனைவி?'
- இந்த எளிய சொற்களுக்குள் ஒரு பெரிய வாழ்வையே சித்திரிக்க முடிகிறத என்றால் குட்டி ரேவதி, உங்களால் வேறு என்னதான் முடியாது?

முலைகள், பூனையைப் போல் அலையும் வெளிச்சம், தனிமையின் ஆயிரம் இறக்கைகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வழங்கியுள்ளார். முலைகள் என்று தன் முதல் நூலுக்குத் தலைப்பு இட்டதால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இவரின் தொகுப்பில் சில பாலியல் கவிதைகள் உள்ளன. ஆனால் அவை, செயற்கையாக வலிந்து எழுதியவை அல்ல. மிக இயல்பான வெளிப்பாடு.

மரம் திரையாகிறது
மறைவில் அவள் தன் நெஞ்சைத் திறந்து
இரு செந்தாமரைகளைப் பரிசளிக்கிறாள்
சலனமற்றிருந்த பறவைகள்
திரை அசைவில் கலைந்து
தாமும் தாமரைகளாய் நீந்துகின்றன
சிலந்தியாகி அங்கும் இங்குமாய்
மரத்தைச் சுற்றிப் பின்னுகிறாள் அவனை
எரியும் உடலின் கொழுந்தாகி
மரம் நிற்கிறது
நின்றவாறே - என்ற வரிகளில் தவறேதும் இல்லை.

முலைகள்
சதுப்புநிலக் குமிழிகள்

பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்...
-எனத் தொடங்கி நீளும் இவரின் தலைப்புக் கவிதை, மெச்சத்தக்க விதத்தில் அமைந்துள்ளது.

சித்த மருத்துவராய்ப் பணியாற்றும் இவர், சென்னையில் வசிக்கிறார். திரைப்படம் சார்ந்தும் இயங்கிவரும் இவர், சில செய்திப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 15-6-1974-இல் பிறந்தவர். இனவரை மருந்தியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். தான் தேர்ந்த பாதையில் உறுதியாக நடைபோடும் இவர், முதிர்ந்த படைப்பாளியின் வீச்சைப் பெற்றுள்ளார்.

...உணர்வுகளின் குவியல் நான்
ஒளிதேசத்தில் வாழ விரும்பும்
விடுதலைப் பறவை...
ஒரே பிறப்பில்
அழவும் சிரிக்கவும் ரசிக்கவும்
பொழியவும் எரிக்கவும் மகிழவும்
அழியவும் ஜனிக்கவும் பூத்தவள்
...-என்கிறார் குட்டி ரேவதி.

இவரைச் 'சித்த' மருத்துவர் என அழைப்பது தகும்.

Monday, April 19, 2004

லீனா மணிமேகலை

கரப்பான் பூச்சிகளைப் பார்த்துச் சிலர் 'மிகவும்' அஞ்சுவதைப் பார்த்திருப்போம். பல்லியைப் பார்த்துச் சிலர்; எட்டுக்கால் பூச்சியைப் பார்த்துச் சிலர்.. என அஞ்சுவது அன்றாடக் காட்சி. இரத்தத்தைப் பார்த்தால் சிலருக்கு மயக்கமே வந்துவிடும். ஆடு, கோழி, பன்றி, ஒட்டகம்..எனப் பாவப்பட்ட பிறவிகளைப் பலி கொடுக்கும் இடத்திலிருந்து தலைதெறிக்கச் சிலர் ஓடுவதுண்டு. தாய்மார்கள் தம் பிள்ளைகள் இந்தக் காட்சிகளைப் பார்த்துவிடாமல் சேலைத் தலைப்பால் பிள்ளை முகத்தை மூடுவதுண்டு.

ஆனால், இந்த குணம், பெரிய அளவில் மாறி வருகிறது. இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியில் அடிதடி, குத்துவெட்டு, கொடூரம், குரூரம், படுபயங்கரம்...என்ற அடைமொழிகளுக்கு உரிய காட்சிகள் அடிக்கடி வருகின்றன. அப்பொழுதெல்லாம் ஏதேனும் சிற்றுணவைக் கொறித்தபடி வேடிக்கை பார்ப்போர் அதிகரித்து வருகின்றனர். காரணம், இவை, சாதாரண காட்சிகளாகிவிட்டன. பலர் வீட்டுக் குழந்தைகளே கூட 'டிஷ்யூம் டிஷ்யூம்' எனச் சிறப்பு ஒலியெழுப்பி, 'சடசடசடசட'வெனத் துப்பாக்கியால் சுடுவது, பெற்றோருக்குப் பெருமையாய் இருக்கிறது.

வாழ்வின் மீது வன்முறையின் தாக்கம் இவ்வாறு இருக்க, படைப்பில் அதன் வீச்சு இருக்கத்தானே செய்யும்!

வீசிய சொல்லில்
அறுந்து தொங்கியது
தலை
-என்கிற லீனா மணிமேகலையின் படைப்புகளுள் வன்முறையின் பல கோணங்களைக் காண முடிகிறது.

பயணத்தின்
ஒவ்வொரு கட்டத்திலும்
உதிர்த்துவிட நேர்கிறது
உறவுகளை
ரத்தம் சொட்ட சொட்ட

தலைகளை மிதித்துக்
கொண்டேஎடுத்து வைக்கிறேன்
அடுத்த அடிகளை...
-என்றும்

தனிமை என்னை
மூர்க்கமாகத் தாக்கியது...
-என்றும்

உணர்வுகள் ஏறி மிதித்து
மனசு முழுக்க ரணம்

மூளையெங்கும் விதைத்த
தீயின் நாற்றுகள்

கண்களில் கசியும்
கனவுகளின் குருதி...
-என்றும்

மெளனங்கள்
எப்பொழுதும்
செயலற்றவையாகவே
தோன்றினாலும்
கூர் கத்தியின் பதத்தை
தடவிப் பார்க்கும்
நடுக்கத்தை
ஏற்படுத்தவே செய்கின்றன
-என்றும்

பழைய நண்பன்
என்ற சொல்
கறுப்பு ரத்தத்தால் எழுதப்பட்டது
-என்றும் லீனாவின் வரிகள் தொடர்கின்றன.

இங்கு எடுத்துக் காட்டிய வரிகளைக் கூர்ந்து பாருங்கள். அழுத்தம், அடர்த்தி, தீவிரம் ஆகியவற்றோடு ஒரு புதிய வெளிப்பாட்டு முறையைக் காணலாம். அதே நேரம் வன்முறையின் தீநாக்குகள் கடுநடம் ஆடுவதையும் கவனிக்கலாம். வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருகிற பணியாளரைப் போல், சொற்கள் இவருக்குக் கீழ்ப்படிந்துள்ளன; இவரின் உணர்வுகளை- எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளன. எதிர்மறையான சொற்களை உரத்த குரலில் நாடகத்தன்மையுடன் சொல்லி, சினத்தை வெளிப்படுத்துவோர் பலர். ஆனால் லீனா, இத்தகைய உணர்வுகளைக் கவித்துவத்துடன் வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

கவிஞர்கள் பலர், பொதுவாக ஒரே முறையில், கருவில் - தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களைப் போல் - படைத்துத் தள்ளுவது கிடையாது. வெவ்வேறு உணர்வுகளை ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுத்துவதில்தான் ஒருவரின் தனித்துவம் புலனாகும். லீனாவின் கவிதைகளில் வன்முறையின் தாக்கம் மட்டும் இருப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது. பாலியல் உணர்வுகளையும் இவர், மிகவும் நளினமாகச் சித்திரிக்கிறார்.

தனிமை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த
தருணத்தில்
நீயும் நானும்
நான் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க
நீ உறுத்துப் பார்த்திருந்த
அவயவங்களின் சலனங்களை
என் உதட்டில் அழுந்தியபடி

நேர்ந்துவிடப்போகும்
தொடுதலை
அறிவித்துக்கொண்டிருந்தன
அவிழ்ந்து நழுவும்
உணர்வுகள்

அறையில்நீயும் நானும்இல்லாத ஏதோ ஒன்றுநம்மை இயக்குவித்தபடிஎப்படி நிகழ்ந்தது என்று தெரியாமலேநிகழ்ந்துவிட்டிருந்தது
அந்த முதல் முத்தம்- என்ற இவரின் விவரணை, ஒரு படம் போல் நம் மனங்களில் ஓடுவதைக் காணலாம்.

விடைபெற்றுச்சென்ற பின்னும்
நீஅமர்ந்திருந்த தடமும்
தொட்டிருந்த தோளும்
தந்திராத முத்தங்களும்
உன்னை நிகழ்த்திக்
கொண்டேயிருந்தன
பிழையில்லாமல்
- என்கிறார்.
சிக்கிக்கொண்ட இசைப்பேழையின் இழை, ஒரே வரியை மீண்டும் மீண்டும் ஒலிப்பதுபோல் சில நிகழ்வுகள், நம் மனங்களில் ரீங்கரிக்கும். அந்த உணர்வை இந்தக் கவிதையின் வழியே மிக அழகாக நமக்குள் மீண்டும் நிகழ்த்துகிறார், லீனா.

...என் ஆறாவது புலனாய்
அறியப்பட்டிருந்த உன்னிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
விண்டு விட்டிருந்தது
என் பூமிப் பந்து

திசை மாறும் ரேகைகள்
வளர்ந்துவிட்ட திசைகள்
ஏதோ ஒரு காரணம்
நம்மைச் சுரந்துகொண்டிருந்த
மெல்லிய உணர்வு பிளந்து
முத்தமிட்ட இடங்கள்
சுட்ட புண்களாய்
குழிந்துவிட்டிருந்தது
பிடுங்கி எறியப்பட்ட
புதிய நிலத்தின்
நீரும் வெளிச்சமும்
பழகிவிடும் என்றாலும்
முதல் சந்திப்பின்
கபடமற்ற
அறிமுகச் சிரிப்பை
அன்று கண்ட
கனவுகளின் பிரதேசத்தில்
பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்

என்றாவது
உன்னைப் பார்க்க நேர்கையில்
சலனமற்றுச் சிரிக்க
- என்ற கவிதைக்குள் ஒரு பெரிய கதையே புதைந்திருக்கிறது.

ஒற்றையிலையென என்ற கவிதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரரான லீனா, விருதுநகர் மாவட்டம்- மகராஜபுரம், புதுப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். திரைத்துறையில் பணியாற்றுகிறார். மாத்தம்மா, பறை, தீர்ந்து போயிருந்தது காதல், Break the shackles, Connecting Lines ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். செல்லம்மா, வெள்ளைப் பூனை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கனவுப்பட்டறை என்ற ஊடகவியல் நிறுவனத்தை நிறுவியிருக்கிறார். பொறியியல் பட்டதாரியான லீனா, கவிதைகள் 'கட்டி' வருகிறார். வாசகர்களைக் கட்டிப் போட்டும் வருகிறார்.

நான்
விரும்பும் என்னை
எப்பொழுதும்
விரும்புவதில்லை
இந்த உலகம்

யார் விரும்பும் என்னையும்
ஒருபொழுதும்
விரும்புவதில்லை
நான்
-என்கிறார் லீனா மணிமேகலை.

நாணயத்தின் பூம்பக்கத்தில் லீனா; தலைப்பக்கத்தில் உலகம். இதோ, சுண்டுகிறேன். சரசரவெனச் சுழன்று, என் உள்ளங்கைகளுக்குள் நாணயம் ஒளிந்துகொள்கிறது. வாசகர்களே நீங்கள் சொல்லுங்கள். என் கைக்குள் இருப்பது, பூவா? தலையா?

Sunday, April 18, 2004

உமா மகேஸ்வரி

நம் எல்லோரிடமும் சல்லடைகள் இருக்கின்றன. பெரிய ஓட்டைகளோடு உள்ளவை, பல. மொழியெனும் பேராற்றை அள்ள முயல்கிறோம். ஓட்டையின் அளவுக்கு ஏற்ப, தடித்த சொற்களே கிடைக்கின்றன. அவற்றைத் தூக்க முடியாமல் தூக்கி, சுமக்க முடியாமல் சுமந்து, வாழ்வின் அழுத்தத்தைப் பழிக்கிறோம். 'இருப்பது உண்மையானால் கடவுளே நீ ஒழிக!' எனச் சபிக்கிறோம். வழிந்தோடிய அணுவினும் மெல்லிய சொற்கள், நமைக் கண்டு நகைக்கின்றன. நுண்ணிய துளைகள் எங்கே? கூரிய சொற்களைப் பிடிப்பது எவ்விதம்? அவற்றை உளத்திலேந்திக் காற்றில் மிதப்பது எப்பொழுது?

உவகையூட்டும் இப்பேரனுபவத்தை உணர விருப்பமா? நல்ல கவிதைகளை நாடுங்கள். மொழியின் அழகும் ஆழமும் திருநடம் புரிவது, இங்குதான்.
பெருங்கூட்டத்தின் இடையே இருப்பினும் ஒரு நொடியில் ஏகாந்த வெளிக்குக் கடத்திச் செல்லும் ஊடகம், இது. இதில் யாருக்கேனும் ஐயம் இருக்கிறதா? உமா மகேஸ்வரியின் கவிதைகளைப் படியுங்கள்.

விடுமுறைக்குப் பின்னான வீடு
விரிகிறது தனது
அலாதியான சிக்கல்களோடு
ஒரு மாபெரும் சிலந்தி வலையாக.

...... ஸ்கூல் பஸ் நகர்கிறது
சிரிப்பொலிகளோடும்,
அழுகைத் துளிகளோடும்,
ஆடும் கைகளோடும்.

முடிக்கப்படாத குழந்தை ஓவியத்தின்
வர்ணங்கள் வாசற்படியில்
வடிந்திருக்கின்றன.

பாதாளத்துக்குள் இறங்கிவிட்ட
வீட்டின் தலையைப் பிளந்து
என் தனிமையோடு
உள்நுழைகிறேன்

என்னைப் பிய்த்துத் தின்னத்
தயாராகக் காத்திருக்கிறது
அசையாத குரங்கு பொம்மையின்
ஒற்றைக் கை

- கண்ணெதிரே தோன்றும் இந்தக் காட்சிகளின் பின்னே வலிமையான உணர்வு, ஆதிக்கம் செலுத்துகிறது.

மென்மையான சொற்களைக் கொண்டு மிகத் தீவிரமான உணர்வைத் தட்டியெழுப்பும் இவரின் வரிகள், எளிய வாசகருக்கும் புரியக்கூடியவை. இவ்வகையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் நவீன கவிஞர்களுள் சிலர், இவரின் வரிகளை உற்று நோக்குவது நல்லது.

ஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது
தோசைகளின் விட்டம்.
விளிம்பு தாண்டாதது அவற்றின் வட்டம்
உலோகக் கடின அடித்தளத்தில்
ஊற்றப்பட்டாலும் அவை
ஒருபோதும் இழப்பதில்லை மென்மையை.

.....உள்ளே வெந்தாலும்
வெளிக்காட்டாத புன்முறுவல் மேலே.

....அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்.
ஆண்டாண்டு காலமாய் அப்படியே

-தோசையை இத்தகைய கோணத்தில் பார்த்த முதல் ஆள், இவரே. தனித்துவமும் புதிய பார்வையும் கொண் டவர் என்பதற்கு, இவரின் கவிதைகள் நெடுகிலும் நிறைய சான்றுகள் உள்ளன.

எருக்கஞ் செடியிலிருந்தது
பார்த்தேயிராத ஒரு பறவை.
விசிறி மடிப்புப் பாவாடை நலுங்காது
கொசுவியமர்ந்த சிறுமியின்
தோற்ற ஒழுங்கிலிருக்கும் சிறகுகள்

-என்பதில் மிக நேர்த்தி யான உவமையும் அழகியலின் முழுமையும் பொருந்தியுள்ளன.

மரங்களின் விசும்பல்;
விம்மும் காற்று.
உரத்து அழ முடிகிறது
பக்கத்து வீட்டுக் குழந்தையால்.
....இளைப்பாறும் பறவைகள் போல்
இறக்கை கவிழ்ந்த புத்தகங்கள்.
இரவுக்குள்ளிருந்து
தன் குரலால்,
எதையோ உருவும்
ஒரு பறவை.

-எனவும்

.....நீ போகும் பொழுது
திரும்பாத உன் முகத்தைத்
தெருமுனையில் தழுவுகிறேன்
இன்றும் இந்த வழியனுப்புதல்
வண்டியைச் சாய்க்கும் பாரமாக
விழுகிறது என் கொழுத்த பகல் மீது

-எனவும்

உரசியெறிந்த உன் ஒற்றைச் சொல்லில்
பற்றியெரியும் பகல்களுக்குள் வசிக்கிறேன்
-எனவும்

இன்றேனும் உதிர்ந்த பூக்களைக்
குப்பையென்றொதுக்க வேண்டாம்
-எனவும்

நீ உதைத்துத் திறந்த அறைக்கதவு
கதறுகிறது கல்லெறிபட்ட நாயாய்
-எனவும்

கொதித்தடங்கிய பாலேடாக
சுருக்கமோடியிருக்கின்றன என் உணர்வுகள்
-எனவும்

கடிகாரக் குருவி நிமிடம் கொத்துகிறது.
அடுப்பின் தணல் ஆடுகிறது ஓயாமல்.
என் இளமையென சோகையுறுகிறது
மாசி மாத வெயில்
-எனவும்

ஒப்பனைகள் அற்று
உன்னருகே என்னைத் திறக்கிறேன்.
தொலைவிலிருந்து ஒரு
பசுமஞ்சள் மரம் பாடுகிறது.

...உலர்ந்த துக்கமேட்டில்
அசைகிறதொரு புன்னகை.
நான் உன் மீதுறைகிறேன்.
தீரும் தீரும் எனத் தேடிய பாதை
குழம்புகிறது தவறிய கண்ணாடிப் பொருளாக
-எனவும்

காலையின் இசையைத்
தனியே மீட்டும்
தவறிய கைக்குட்டையெனக்
காற்றில் சுழலும் வெண்பறவை
-எனவும்

காமத்தின் அந்தர ஏணியில்
கால் வைக்கிறேன்
நடுநடுங்கி.
பாசி படர்ந்த குளப் படிகளில்
விரிகிறது
மோகத்தின் ஊதா நிறம்.
மணல் மேடுகள்
குமுறித் திறக்க,
பனிப் புயலில்
அமிழ்கிறது சொல்லியவொரு காதல்.
நீவிய படுக்கை விரிப்பு
நீட்டி வரைந்து காட்டுகிறது
அவன் உடலின்
வெளிக்கோடுகளை
-எனவும்

வளரும் இவரின் கவிஆளுமை, செங்குத்தாக உயர்ந்து சிகரங் களை வென்று, பேருருக் கொள்கின்றது. மொழியாளு மையும் சிந்தனா வன்மையும் கவித்துவமும் ஒன்றிணைந்து, இவரிடம் சுடர்விடுகின்றன. அடக்கி வைத்த உணர்வுகள், கட்டற்றுப் பெருக்கெடுக் கின்றன; தடைகளை உடைத் தெறிகின்றன. ஆவேசமான கடுஞ் சொற்களை விட மென்மையான சொற்கள், அதிக வீரியமுள்ளவை என் பதற்கு இவரின் வரிகளே சான்று.

உமா மகேஸ்வரி, போடிநாயக்கனூரில் உள்ள திருமலாபுரத்தில் 1971-இல் பிறந்தவர். 1985 முதல் கவிதை எழுதி வரும் இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, கணவர்-குழந்தைகளுடன் ஆண்டிப்பட்டியில் வசிக்கிறார். நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்தவர்.

மஹி என்ற பெயரில் சிறு கதைகளும் எழுதுகிறார். கவிதையின் வீச்சினை, உரை நடையில் தக்கவைக்கும் பெருவலிமை, இவரிடம் உள்ளது. மரப்பாச்சி, தொலைகடல் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை என்ற நாவலும் நூலுருவம் பெற்றுள்ளன. ஏழாம்கல் காலம் என்ற நாவலை, இப்பொழுது எழுதி வருகிறார்.

கணையாழி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு; 2001-இல் சிறுகதைக்காக, கதா தேசிய விருது ஆகியன பெற்றவர்.

இவரின் தொடக்கக் காலப் படைப்புகளை விட, அண்மைக் காலக் கவிதைகளே அதிகப் புலன் வெளிச்சம் கொண்டவை. ஆங்காங்கே எழுத்து/சொற் பிழைகள் சில உள்ளன (பதட்டம் / பதற்றம், முகச் சுளிப்பு / சுழிப்பு, அருகாமை / அருகில், முகப்புக்கள் / முகப்புகள், கோர்வை / கோவை, பீறிடல் / பீரிடல்...). ஆயினும் இவற்றை இவர், எளிதில் திருத்திக்கொள்ள முடியும்.

அன்று அந்த மழையில்
நனையாதிருந்த நாம்
நீந்தினோம்
ஒருவரும் அறியாதவொரு
ஒற்றை ஓடையில்.
-என்கிறார் ஒரு கவிதையில். "ஒரு ஒற்றை ஓடை' என்பதில் "ஒரு' என்பது தேவையற்றது.

இவை, சிறிய பிழைகள்; இவரின் மகத்தான கவிதைச் சிறப்பிற்கு முன்னால் மன்னிக்கத் தகுந்தவை. கலீல் ஜிப்ரானின் தடத்தில் பாதம் பதிக்கும் உமா, தமிழுக்கு நல்வரவு.

குத்துவிளக்கின் முத்துச்சுடரென
முதல் வெள்ளி முகிழ்க்கும்
இந்தக் குளிர்இரவை
எனக்கென்றே
இருத்தி வைத்திருக்கிறேன்
-என்கிறார், உமா மகேஸ்வரி.

நட்சத்திரங்களின் நட்பு, எப்பொழுதும் இரவோடுதானே.




அமுதசுரபி, பிப்ரவரி 2005

Saturday, April 17, 2004

கிருஷாங்கினி

நவீன கவிதைகளின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுள் முதன்மையானது, அவை புரிவதில்லை என்பதே. பூட்டினை மட்டுமே அக்கவிதைகள் கொண்டுள்ளன; சாவிகளைத் தொலைத்துவிட்டன; வாசகர், எளிதில் வந்து சேர முடியாதபடி அவற்றின் பாதைகள் மிகவும் சிக்கலானவையாய் உள்ளன என்றெல்லாம் பரவலான கருத்துகள் உள்ளன. நாயிடம் முழுத் தேங்காய் அகப்பட்டால் சும்மா, உருட்டி விளையாடலாமே தவிர, அதனால் நாய்க்கும் பயனில்லை; தேங்காய்க்கும் பயனில்லை. தேங்காய் திறந்தால்தானே அதைச் சுவை பார்க்க முடியும். அப்புறம்தானே உயர்ந்த சுவையுள்ளதையும் சுவையற்றதையும் கண்டறிய முடியும். ஒன்று, தேங்காயை உடைப்பதற்கான கூர்மையையும் வலிமையையும் வாசகர்கள் பெறவேண்டும். அல்லது, கவிதை, வாழைப் பழம் போன்றோ, மாம்பழம் போன்றோ மாற்று வடிவம் எடுக்கவேண்டும்.

கைக்குழந்தைக்குத் திரவ உணவுதான் சிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திட உணவுக்கும் கடின உணவுக்கும் அதைப் பழக்கப்படுத்த வேண்டும். சமூகம், கல்வி கேள்வி ஞானத்தில் மிக உயர்ந்துவிட்டால்( குழந்தை வளர்ந்துவிட்டால்) அதற்கு எத்தகைய உணவும் செரிமானமாகிவிடும். ஆனால், இதையே காரணம் காட்டி, கல்லூரி செல்லுபவருக்குப் பருப்புச் சோறு பிசைந்து ஊட்டிவிடக் கூடாது. ஒரு கவிதையை எழுதி, நாமே வைத்திருக்கும் வரை சிக்கல் இல்லை. அதை வெளியிடும் போது அதை யார் வேண்டுமானாலும் படிக்கக்கூடும். எவர் படித்தாலும் அது அவரவர்க்குத் தகுந்த பொருள் தரும்படி எழுதுவது, பெரிய சவால். இதனால்தான் சிறுவர்க்கானவை, பெரியவர்க்கானவை என முதலிலேயே இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள்.

பெரியவர்க்கான கவிதைகள் எனப் பிரித்தாலும் இதிலும் சிக்கல்கள் உண்டு. பெரியோர் எல்லோரும் ஒரே தகுதி, அனுபவம், கல்வியுடையவர் அல்லர். எனவே ஒரு கவிதையை எந்தப் பெரியவர் படித்தாலும் அவருக்கு ஒரே உணர்வு உண்டாகும் எனக் கூற முடியாது. எனவே, பொறுப்புள்ள படைப்பாளி, கலவையான வாசகர் கூட்டத்தைக் கவனத்தில் கொண்டு, கூடிய வரை எளிமையாகப் படைக்கவேண்டும். அப்போதுதான் முதன்மை நோக்கமான உணர்வுக் கடத்தலுக்கு வாய்ப்புண்டு.

விடுகதைத் தன்மையுள்ள கவிதைகளில் முடியுமிடத்தில் கவிதையின் கதவைத் திறப்பார்கள். இன்னும் சிலவற்றில் கதவு, தலைப்பிலேயே இருக்கும். வேறு சிலவற்றில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு சொல்லுக்குள் திறப்பிருக்கும். உட்குவிதலும் வெளிவிரிதலும் இருவேறு கவிதைப் பாணிகள். எந்தப் பாணியை எடுத்துக்கொண்டாலும் நம் ஒரே வேண்டுகோள், வாசகர்களைக் கவனத்தில் கொள்ளுங்கள் என்பதே.

வாசகர் மேல் அக்கறையுள்ள கிருஷாங்கினி, தன் சில கவிதைகளில் ஒரு புதிய முறையைப் பின்பற்றியுள்ளார்.

பிரதான நுழைவாயில், அகலமாக, அழகாக;
சில விசாலமான அறைகள்
பிரதான வாயிலை நோக்கி.

......முற்றத்தில் சந்திப்பும்
அடிக்கடி வார்த்தை பரிமாற்றமும் குசலமும்
பரஸ்பரம் உண்டு.

அறைக் கதவுகள் அடைபடாத நிலை.

இப்போதெல்லாம்
அறைகளில் அவர்கள்.
அறைகள் எல்லாம் மாடப் பிறைகளாயின.
ஒவ்வொரு பிறைக்கும் கதவுண்டு
தாழ்ப்பாளும் உடன் உண்டு, அழுத்தமாக.

.........
எப்போதும் பிறைகளாகும் தயார் நிலையில்
அறைகள் மறுபடியும் பிறைகளாகும்.
-இந்தக் கவிதை, எதைப் பற்றிச் சொல்கிறது என வாசகர் ஒருவேளை புரிந்துகொள்ளாவிட்டால் என்ன செய்வது? சிந்தித்த கிருஷாங்கினி, இதற்கு, தேசீயம் எனத் தலைப்பிட்டுள்ளார். இப்போது சிக்கலே இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் புரிந்துவிடும்.

வேறொரு கவிதையைப் பார்ப்போம்.
ஒட்டியிருந்த அடி அரிசியில்
எங்கிருந்தோ ஒரு பல்லிக் குட்டி;
குறுக்கும் நெடுக்குமாக அலைந்தபடி
அரிசியைக் கடைகிறது- சுற்றி
பக்கச் சுவரினதிர்வுகளுக்கு
ஆளாகி 'சில்வர்' அடுக்கின்
அரைக் கிணறு தாண்டி
மறுபடியும் கீழே விழும்
வழவழப்பை மீறி ஏது செய்ய?
சிறு மத்தை சார்த்தியிட
பிடிப்புற்று வெளியேறி
வானம் பார்க்கலாயிற்று
கடைத்தேற

- இக்கவிதையைத் தான் எந்தப் பொருளை வலியுறுத்த வேண்டி இயற்றினோமோ அதை வாசகர் புரிந்துகொள்வாரா? சிந்தித்த கிருஷாங்கினி, எனக்கும் ஒரு மத்து எனத் தலைப்பிட்டுள்ளார்.

சூழலின் காரணமாக துயரச் சேற்றில் சிக்குண்ட ஒவ்வொருவரும் மேலேற முயன்றுகொண்டே உள்ளனர். அவர்களால் மேலே வர முடிவதில்லை. அவர்கள் மேலே வர, மேம்பட, நம் கை கொடுப்போம்; உதவுவோம் எனச் சொல்ல விரும்பித்தான் இப்படி ஒரு தலைப்பை வைத்துள்ளார்.

அழகான பசு அதிகம் கறக்கும்
ஊசி போட்டு மருந்திட்டாவது,
இறந்தது இளமையும் திறமையும்
உடன்வர யாருமில்லை
யாரையும் விடவுமில்லை
கூட்டத்தைத் திருப்தி செய்
கடமை அதுவே
கற! கற! அதிகம் கற!
வலி, வலி, வலி!
பிழி, பிழி, பிழிந்தெடு!

- நெகிழ்ந்த கடிகாரம் என்ற தலைப்பிலான கவிதையில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன. இத்தலைப்பிலுள்ள நெகிழ்ந்த என்ற சொல், காலாகாலமாய்ப் பெண்களின் நிலை, இவ்வாறுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

கிருஷாங்கினி, அங்கதம் தொனிக்கும் சில கவிதைகளையும் படைத்துள்ளார்.

....................
பரிசு பெற அதிகம் உழைக்க வேண்டும்
இப்படியாகத்தானே- அல்ல
நிறைய ப்ரயாசைப்படு
அதிகம் சென்று பார்,
கொண்டு கொடு
பக்கக் கிளைகளைத் தனதாக்கிக்கொள்
உரியன கொடுத்து.
அப்பாடா!

பெற்ற பின் பேசு, எல்லாம்
தகுதியின் அடிப்படைதான்.
நடுவர்கள் முட்டாள்களல்ல;
ஸ்தாபிதம் பெற்றபின்
கிடைத்த விதம் பற்றி
பகிராதே எவரிடமும்
அங்கீகாரம் பெறாத
எவரிடமும் இரக்கம் காட்டாதே
அவர்கள் அப்படித்தான்
எப்போதும்
வெளியில் பேசும் வீரர்கள்
உன் வழியில் செல்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்

- பரிசுகளின் முன்னும் பின்னுமுள்ள பெருங்கதைகளை இக்கவிதை, பிட்டுப் பிட்டு வைக்கிறது.

பிருந்தா என்ற இயற்பெயர் கொண்ட இவர், எழுதுகோல் பிடித்த பின் கிருஷாங்கினி எனப் பெயர் சூட்டிக்கொண்டார். இந்தப் புனைபெயருக்குப் புல் போன்ற உடல்கொண்டவள் எனப் பொருள் கூறுகிறார். கோவை மாவட்டம் தாராபுரத்தில் 20.11.1948 அன்று பிறந்த இவரின் முதல் சிறுகதை, 1982ஆம் ஆண்டு கணையாழி மாத இதழில் வெளிவந்தது.

இவரின் கணவர் நாகராஜன், ஓவியர். மகள் நீரஜா ரமணி கிருஷ்ணா, பரத நாட்டியக் கலைஞர். ஓவியமும் நாட்டியமும் உலவும் இடத்தில் இருப்பதால் அவற்றின் தாக்கம், இவர் படைப்புகளில் உள்ளன.

மேல் திண்ணை, கீழ்த் திண்ணை;
மண்வாசல் பிறகு
பின்வாசல்.

சதுர அடி
450, 500 முதல்
1000மும் அதற்கும் மேலும்.
ஆயினும்
வாசல் என்னவோ
4 அடி அகலமும் 12 அடி நீளமும்
...முதுகின் சுமை காரணமாய்
ஐங்கோணம், அறுகோணம், எண்கோணமாய்
தினம் தினம் காலையில்
மின்னும் நட்சத்திரங்கள்!

- அழகியல் மிகுந்த இக்கவிதையில், தானே வரைந்த கோலங்களை இடையில் இட்டுள்ளார். இப்படி, கவிதையையும் ஓவியத்தையும் ஒருசேரப் பின்னுவது, இதர கவிஞர்களிடம் இல்லாத ஒன்று.

கவிதையில் மட்டுமின்றி, சிறுகதைக் கலையிலும் கிருஷாங்கினி தேர்ந்துள்ளார். கானல் சதுரம் என்ற கவிதைத் தொகுப்பையும் சமகாலப் புள்ளிகள், கிருஷாங்கினி கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்துள்ளார். தன் மகளுடன் இணைந்து, பரதம் புரிதல் என்ற பரதக் கலை நூலைப் படைத்துள்ள இவர், தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் திரட்டி, பறத்தல் அதன் சுதந்திரம் என்ற நூலையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.

இவரின் சமகாலப் புள்ளிகள் சிறுகதைத் தொகுதி, 1998ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான 2ஆம் பரிசு பெற்றது. தமிழ் வளர்ச்சித் துறையின் தேர்வு. "கானல் சதுரம்" கவிதைத் தொகுதி-1998, கவிஞர் தேவமகள் அறக்கட்டளை (கோவை) 2002க்கான "கவிச்சிறகு" விருது அளித்துச் சிறப்பித்தது. மத்திய அரசின் கலை மற்றும் கலாசார மையத்தின் உயர்நிலை மானியம் 2002-2004 (senior fellowship) பெற்றுள்ள இவர், "தமிழில் 50களுக்குப் பிறகு எழுதப்பட்ட புதுக் கவிதையில் பெண்களின் கருப் பொருள், அணுகுமுறை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவரின் பெரும்பான்மையான கவிதைகள், எதிர்மறை உலகைப் படம்பிடிப்பவை. துன்பியல் நிகழ்வுகளை விவரிக்கும் இவரின் ஆக்கங்கள், பலவீனமான மனம் கொண்டவராக இவரை அடையாளப்படுத்துகின்றன. சில இடங்களில் இவரின் கேள்விகளில் கூர்மை, வெளிப்படுகிறது. பல இடங்களில் விரிவான ஆலாபனைக்குத்தான் இவர் முயல்கிறார்; இரத்தினச் சுருக்கமாகச் சொல்லுவதற்கு முயல்வது, இன்னும் நலம் சேர்க்கும்.

எனது வாத்யத்தைக் கையிலெடுத்து
மீட்ட ஆரம்பிக்கிறேன்;

தெருஓர பெஞ்சுகளில், மரத்தடியில்
தெருவின் நடுவில், ஓரத்தில்
சந்தோஷமாய், நெகிழ்ச்சியாய், சோர்வாய்.

நாற்புறமும் நிழல்கள்
என்னை ஊடுருவி ஊடுருவி
எங்கெங்கோ பின்னல்களாய்
சென்று சென்று மீள்கின்றன.

ஸ்தூலமாய், திடப் பொருளாய்
நிணம் நரம்புடன்
மனிதர் மத்தியில் நான் அரூபமாய் நிழலாய்க் கரைகிறேன்

- என்கிறார் கிருஷாங்கினி.

காவல் துறையினரின் கனிவான கவனத்திற்கு, இங்கிருந்த கிருஷாங்கினி என்பவரைக் காணவில்லை......



அமுதசுரபி, ஜனவரி 2005

Friday, April 16, 2004

கனிமொழி

கவிதையின் அளவு என்ன? பாத்துளி முதல் பார காவியம் வரை தமிழில் படைக்கப்பட்டுள்ளன. இரண்டடியில் கவிபாடி, திருவள்ளுவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். குறுந்தொகையில் எட்டு வரிகளை ஒட்டியே பாடல்கள் அமைந்தன. சங்கப் பாடல்கள், மிகுந்த சொற்சிக்கனம் உடையவை. கவிதையல்லாவிடினும் இரண்டு -மூன்று சொற்களில் அமைந்துள்ள ஆத்திசூடியையும் நாம் கூர்ந்து நோக்கவேண்டும். 'நறுக்கென்று நாலே வார்த்தையில் சொல்' என முன்னோர் சொல்லுவர். 'கவிதை மின்னலுடைத்தாகுக' என்றான் பாரதி. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் மரபு நமக்குண்டு.

ஆனால், பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்களைக் கொண்ட கம்பராமாயணமும் இங்கு கொண்டாடப் பெறுகிறது. காவியங்களில் ஆயிரம் பாடல்கள் என்பது, சர்வ சாதாரணம். இம்மென்றால் எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரமுமாய்ப் பாடித் தள்ளியவர்கள், பலர். காலம் முழுதும் இதே வேலையாய்ச் சொற்சிலம்பம் ஆடினால் எழுத்தாணி கூர்மழுங்கி, ஏடு பிதுங்குவது இயல்புதானே! இக்காலத்திலும் பலர் காவியங்கள் படைக்க முயலுகிறார்கள். இன்று கவிஞர்கள், காவியம் படைப்பதன் நோக்கங்களுள் ஒன்று, அதிகப் பக்கங்களை ஓட்ட முடியும் என்பது. ஏற்கெனவே உலவும் கதையை எடுத்துக்கொண்டு படைத்த காவியங்கள், அன்றும் இன்றும் நிறைய உண்டு. கவிதை நடையில் கதையைச் சொல்லும் இம்முயற்சிகள் பலவற்றில் கதையம்சமே அதிகம். பாலில் நீரைக் கலந்துவிட்டு இதுவும் பால்தான் எனச் சாதிக்கும் தேநீர்க்கடைக்காரரை நமக்குத் தெரியாதா என்ன?

பார்வையாளர் இருக்கைகளில் இருக்கவேண்டியவர்கள் எல்லோரும் கால்பந்து மைதானத்தினுள் இறங்கி, ஆட்டக்காரர்களை அசையவிடாமல் செய்தாலோ, அல்லது மைதானத்திலிருந்து விரட்டிவிட்டாலோ, ஆட்டம் எப்படி இருக்கும்? தமிழ்க் கவிதைப் படைப்பு, இப்போது இந்த ஆபத்துக்கு ஆளாகியிருக்கிறது. அச்சுப் பரப்பு முழுவதையும் எழுத்துகளால் நிரப்புவதும், தேவையற்ற சொற்களால் நிரப்புவதும் பெருகிவரும் காலம், இது.

மரபுக் கவிதைகள் பல நேரங்களில், கருப்பொருளைத் தீர்மானிக்கும் முன்பே வடிவத்தைத் தீர்மானித்து விடுகின்றன. கட்டுப்பாடில்லாமல் சொற்களை வாரி இறைக்கும் கெட்ட பழக்கம், தமிழில் அதிகமுள்ளது. இதனால்தான் கவியரங்கம், கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்துவோர், 16, 24, 32 என வரிகளைக் குறிப்பிட்டு கவிதை, அதற்குள் அமையவேண்டுமென நிபந்தனை விதிக்கின்றனர். உரைநடையில் 10 வரிகளில் சொல்வதைக் கவிதையில் ஒரு வரியில் சொல்லலாம். பாலைச் சுண்டக் காய்ச்சுவதுபோல சொற்களைச் சுருக்கினால்தான் கவிதை மெருகேறும்.

மேடை, வானொலி, தொலைக்காட்சிக் கவியரங்குகளில் 10 நிமிட நேரம் கொடுத்தால் நீட்டி முழக்கிக் கதைபேசும் காட்சிகள்தான் அரங்கேறும். மூன்று நிமிடங்களில் முடிக்கச் சொன்னால் கவிதை அம்மட்டோடு பிழைப்பதற்கு வாய்ப்புண்டு. புத்தகம், இதழ், மேடை, பிற ஊடகங்கள் அனைத்திலும் இப்படித் திரும்பும் இடமெங்கும் ஊளைச் சதையோடு தமிழ்க்கவிதை காட்சியளிக்கிறது. நல்லவேளையாக, ஹைகூ வடிவம் வந்தது. வெறும் தண்ணீரே இதில் பால் என்ற பெயரில் வந்தாலும் எல்லாம் மூன்று வரிகளில் முடிவதால், பரவாயில்லை என ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். குறைவான வரி எல்லை உடைய லிமரிக், லிமரைகூ போன்ற இறக்குமதி வடிவங்களும் தோன்றியிருப்பது, ஒரு நல்ல அறிகுறி.

இப்படி வடிவங்களில் சிக்கிக்கொள்ளாமல் குறைவான சொற்களில் கவி படைக்கும் சிலரும் இப்போது வளர்ந்துள்ளனர். அவர்களுள் ஒருவர், கனிமொழி.




எத்தனை முறை விலக்கினாலும்

திரும்பத் திரும்பப் புரண்டு

மேலே கால்தூக்கிப் போடும்

குழந்தையாய் நினைவுகள்


-மொத்தமே நான்கே வரிகள். அருமையான உவமை. கச்சிதமாய் அமைந்துள்ளது. மேலும் சில துளிப்பாக்களைப் பாருங்கள்.



அந்த

அயோக்கிய ஜோசியன்

என் சிறகுகளை

முறித்துப் போடாதவரை

நானும் பகுத்தறிவுவாதிதான்!



*


தழும்புகள் உள்ளன

தீயென்றும் தெரிகிறது

ஆனாலும்

இன்னும் பூக்களைச் சொரிந்துகொண்டுதான்

இருக்கிறது

மரம்



*


வானம் வசப்பட வேண்டாம்

எனக்குப் பழக்கமானது

பூமி மட்டுமே.



*


தோல் தேய்ந்து

தொலைந்து போகும் வரை

கழுவுகிறேன் சபைக்கு சரிப்படாத

என் கருப்பு நிறத்தை.



*


கதவுகள் மூடியே இருக்கட்டும்

அஸ்திவாரங்கள் ஆடிக்கொண்டிருந்தாலும்

தென்றலையாவது தடுக்கலாம்.



*


என் காதலில்

பெருமைப்பட ஒன்றுமில்லை.

சுவாசிப்பதைப் பற்றிச்

சிலாகித்துச் சொல்ல

என்ன இருக்கிறது?



*


எந்நாடு போனாலும்

தென்னாடு உடைய சிவனுக்கு

மாதவிலக்குள்ள பெண்கள்

மட்டும் ஆவதே இல்லை.



- இங்கு எடுத்துக்காட்டப்படும் ஒவ்வொன்றிலும் உண்மை, ஆழ்ந்த அனுபவம், சமூக விமர்சனம், வித்தியாசமான அணுகுமுறை போன்றவை இணைந்து கவிதை வடிவம் பெற்றுள்ளன.



ஆனால், 'கவிமொழியைத் தீவிரமாகக் கைக்கொள்ளாமல் மூன்று வரித் துணுக்குகளாகவே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதேன்?' என்ற கேள்வியைக் கனிமொழி முன் வைத்தார்கள். அதற்கு, 'உணர்வதுதானே கவிதையாக முடியும். வரித்துணுக்குகள் என்றால் அந்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல என்னிடம் அதற்கு மேல் ஒன்றும் இல்லாதிருக்கலாம். சொல்ல நினைத்ததைச் சொல்லி முடித்தபின் ஏன் வடிவத்தை வளர்த்திக்கொண்டு போகவேண்டும்?' என்று பதில் அளித்துள்ளார்.



'எந்தத் தலைப்பானாலும் சரி, இந்தா பிடி எட்டு எண்சீர் விருத்தங்கள்' என்கிற ஆசு கவிகள் மத்தியில் 'அதைப் பற்றிச் சொல்ல என்னிடம் வேறு ஒன்றும் இல்லை' எனச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்.



கனிமொழி, உண்மையைப் பேசுகிறார் என்பதற்கு இவர் கவிகளில் நிறைய சான்றுகள் கிடைக்கின்றன.




தன் இளம் இருட்டுச் சுவர்களுக்குள்

என்னைப் பத்திரமாய்ச் சீராட்டிய வீடு,

அம்மாவின் பழைய சேலையைப் போல

மெத்தென்று மனதைத் தழுவும்



-என அநேகக் கவிஞர்களைப் போல் பழைய நினைவுகளில் ஆழ்கிறார், கனிமொழி. நிறம், கற்பு, சுதந்திரம், ஆணாதிக்கம்....எனப் பெண்கள் பலரும் கையாண்ட கருப்பொருட்களை இவரும் விட்டுவைக்கவில்லை.



கனிமொழியின் தலைப்பிடப்படாத ஒரு கவிதையின் முழு வடிவத்தைப் பார்ப்போம்.




மேஜையின் விளிம்பில்

வைக்கப்பட்டிருக்கும்

மெல்லிய கண்ணாடிக்

குவளையைப் போல் உள்ளது

நம்பிக்கை.




விபரீதமான ஒரு தருணத்தை

எதிர்நோக்கிக் காத்திருக்கிறது

திரவம்.




எங்கு வைத்தாலும்

நகர்ந்து விளிம்புக்கு வந்துவிடுகிறது

குவளை.




அவசரத்தில் எறியப்படும்

வார்த்தைகளையும்

நழுவிவிழும் உண்மைகளையும்

அறியப்படாதுபோகும் ஸ்பரிசங்களையும்

எதிர்நோக்கிச்

சிதறிப்போதலை வேண்டியபடி.




ஆனால்

என்றுமே

காலியாய் இருப்பதில்லை மேசை.



- இது, சிறப்பாக இருந்தாலும் கவிதையின் இரண்டாவது வரியும் இரண்டாம் பத்தியும் கடைசிப் பத்தியும் தேவையற்றவை என்பது, என் கருத்து. அவை இல்லாவிட்டாலும் கவிதை, இதே உணர்வை அளிக்கின்றது.



கனிமொழி, கருவறை வாசனை, அகத்திணை என்ற இரு கவிதைத் தொகுப்புகளை அளித்துள்ளார். முன்னாள் முதல்வரின் மகள். ஆயினும் மிக எளிமையோடும் எளியவற்றின் மீது அன்போடும் மென்மையான உணர்வுகளோடும் விளங்குகிறார். வாசிக்கத் தூண்டும் எளிய வரிகளும் மெல்லிய சோகமும் தவழும் இவர் கவிதைகள், கவிதையை நாடி வருவோரை ஏமாற்றுவதில்லை.




என்ன சொல்லி என்ன

என்ன எழுதி என்ன

நான் சொல்ல வருவதைத் தவிர

எல்லாம் புரிகிறது உனக்கு

-என்கிறார், ஒரு கவிதையில்.




நீங்கள் சொல்ல வருவது புரிகிறது, கனிமொழி.


அமுதசுரபி, டிசம்பர் 2004

Thursday, April 15, 2004

வத்ஸலா

கவிதை என்பது எது? விளக்க விளக்க விரியும் இக்கேள்விக்கு ஒரே சொல்லில் பதில் சொல்லவேண்டும் எனில் 'உண்மை' என்பேன். 'அவர் ஒரு கவிதையைப் போல் வாழ்ந்தார்' என்பதற்கு 'உண்மையாக வாழ்ந்தார்' என்றே பொருள்கொள்ள முடியும். எழுதுபவர், வேறொருவரின் விருப்பத்தை நிறைவேற்றவோ, பாராட்டுகளைக் குறிவைத்தோ, உலகாயத பயன்களுக்காகவோ எழுதும்போது, உண்மையிலிருந்து கவிதை விலகிச் செல்கிறது. நிகழ்வையோ, உணர்வையோ, அலங்காரங்களோடு உயர்வு நவிற்சியில் சொல்லும்போதும் இந்த விலகல் நிகழ்கிறது. முழு உண்மையை எந்தப் படைப்பும் வெளிப்படுத்திவிட இயலாது. உண்மைக்கு எவ்வளவு அருகில் அது இருக்கிறது என்பதே கவிதையின் சிறந்த அளவீடு.

அப்படியானால் உண்மை மட்டுமே கவிதையாகிவிடுமா? அதே உண்மை, உரைநடையிலோ, ஓவியத்திலோ, வேறு கலை வடிவத்திலோ, ஏன், செய்திப் பகுதியிலோ வருமாயின் அப்போது அதற்கு என்ன பெயர்? செய்திப் பகுதியில் வரும் ஒன்று, உண்மையாய் இருக்குமாயின் அதை உண்மையான செய்தி எனலாம். எப்போது உண்மையும் கலைநயமும் இணைகின்றனவோ, அப்போது கவிதை அங்கே புத்துயிர் பெறுகிறது.

கலைநயம் என்பது என்ன? செய்தியைப் போன்று நேரடியாக அது பேசக்கூடாது. நமது மனத்தைச் சுண்டி இழுக்கும் தன்மை அதற்கு இருக்கவேண்டும். எதிர்பாராத ஒரு புதிய கோணத்திலிருந்து அது வெளிப்பட வேண்டும். உடனடிப் பயன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னை நுகர்வோரிடம் அது வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இன்னும் பல முகங்கள், கலைநயத்திற்கு உண்டு. இந்தக் கலைநயத்தையும் உண்மையையும் ஒரு புள்ளியில் இணைப்பது, மிகக் கடும் சவால். ஏனெனில், ஒன்றைப் பிடிக்கும்போது மற்றொன்று நழுவிச் சென்றுவிடும். இச் சவாலைச் சமாளிப்பதற்காகத்தான் கவிஞருக்குக் கவிதா நீதி என்ற சிறப்புச் சலுகையை உலகம் வழங்கியுள்ளது.

இந்த அடிப்படையில் பார்த்தால், தமிழில் கவிதை என்ற பெயரில் உலவும் பலவற்றை நாம் இரக்கமின்றி நிராகரிக்க வேண்டி வரும். வெகு சிலவே கவிதையின் பெயரைக் காப்பாற்றும். வத்ஸலாவின் சில ஆக்கங்கள், கவிதையாகப் பரிசீலிக்கத் தகுந்தவை.

....இரண்டடித் தொட்டிக்குள் அடங்கினாலும்
நான் ஆலமரம்தான்.
...வேரை ஒடுக்கி, கிளையை ஒடித்து
என்னைத் தொட்டிக்குள் சிறைவைத்து
வளரவிடாது தடுக்கப்பட்ட
குட்டை மரமானாலும் நானும் ஒரு ஆலமரம்.

...என் குட்டித்தனம்தான்
என் கவர்ச்சி.
அந்தக் கவர்ச்சியை ரசிக்க வருவர்
ஓராயிரம் பேர்.
ஒரு சிறுமி கேட்கிறாள்,
'இந்த குட்டை மரத்தை
ஏன் பூமியில் வளரவிடவில்லை?'
பதில் வருகிறது.

'அதற்கு வளர்ச்சிப் போதாது
பூமியில் வைத்தால் பிழைக்காது'
சிறுமி கைக்கொட்டிச் சிரித்தாள்,
'பூமியில் வைத்தால்தானே வளர முடியும்'

நான் இலையசைத்து
அவளை
ஆசீர்வதிக்கிறேன்.
'பெண்ணே நீ ஆலமரமாவாய்!'

இலக்கணப் பிழைகள் இதில் இருந்தாலும் கருப்பொருளாலும் வெளிப்பாட்டினாலும் இது, கவிதை என்ற தகுதியை அடைந்துவிடுகிறது.

நான்
சொத்தில்லா லக்ஷ்மி
கல்வியில்லா சரஸ்வதி
அச்சமுள்ள துர்க்கை

...நான்
மாதவம் செய்துவிட்டேன்.
தவப்பயனை எப்படி அழிப்பது?

மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா
என்ற கவிமணியின் வரிகளை இவர், கடும் கோபத்துடன் புரட்டிப் போட்டிருக்கிறார்.

வந்து சேர்ந்தன
முன்னூற்றி இருபத்தி ஏழு கடிதங்கள்...
நான் பரிசளித்த மோதிரத்தை
ஒரு ஏழைபெண்ணிற்கு மொய்யெழுதிவிட்டதாக...
எல்லாவற்றையும்
திருப்பிவிட்டதாக
எழூதியிருக்கிறாய்.
எல்லாவற்றையுமா?

அன்றொருநாள்
என் கூந்தலில்
பட்டுத் தெறித்த மழைத்துளிகள்
உன்னில் ஏற்படுத்தியதே அந்த சிலிர்ப்பு

..ஒரு சமயம்
நிலவை ரசிக்கையில்
சில்லிட்டுப்போன உன் கையை
என் கைக்குள் வைத்து
நான் அளித்தேனே
அந்த வெப்பம்

இப்படி விட்டுப் போன
சிலவற்றையும்
பட்டியல் போட்டு
திருப்பி விடு

வத்ஸலாவின் பெரும்பாலான ஆக்கங்கள், சோக ராகம் பாடுபவை. இயலாமையும் ஆற்றாமையும் இவரைச் சினமூட்டியுள்ளன. தன் சோகங்கள், தன்னுடையவை மட்டுமல்ல; பெண் இனத்தின் மிகப் பெருஞ்சோகத்தின் ஓர் அங்கமெனப் புரிந்துகொண்டதாக எழுதியுள்ளார். ஆயினும் இவருடைய பல ஆக்கங்கள், வெறும் நிகழ்வாக, காட்சியாக நின்று விடுகின்றன. பிரச்சினைகளைச் சொல்லவேண்டும் என்ற முனைப்பு, கவித்துவத்தைக் கைவிட்டாலும் பரவாயில்லை என இவரை நகர்த்தியுள்ளது. எனினும் பல காட்சிகள், வலிமையான தாக்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது.

...அம்மா சொன்னதெல்லாம்
'சித்தி வருவா
அவகிட்ட சமத்தாயிரு
சீக்கிரமா பெரியவனாயிடு
ஸாரி கண்ணா, நா போயிட்டு வரேன்'
பந்தை உருட்டிக்கொண்டே நான் தலையாட்டிய பிறகே
அவள் நாற்காலியை உதைத்தாள்
வயிற்றிலிருந்த என் தங்கச்சி பாப்பா அதிர
கயிறு கழுத்திலிறுக

எனக்கு கயிறு பிடிக்காது

- இப்படிப் பல காட்சிகள். சுருக்கமான சொற்களில் பரந்த வாழ்வைப் படம் பிடிப்பவை.

வத்ஸலா, 1943-இல் பிறந்து இயற்பியலிலும் கணிப்பொறியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணிப்பொறி மையத்தில் 25 ஆண்டுகள், கணினிப் பொறியியலாளராகப் பணியாற்றியவர். நாற்பத்தெட்டாவது வயதில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதத் தொடங்கியவர். சுயம் என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்துள்ளார். இவருடைய வரிகளைக் குறிப்பிட்டு, 'ஒரு புதிய பெண் கவிஞரின் குரல் தெளிவாக ஒலிக்கிறது' என்கிறார், ஞானக்கூத்தன்.

வடசொற் கலப்பு, இலக்கணப் பிழைகள், வளவளப்பு போன்ற சில குறைகளைக் களைந்தால், இவர் , கவிதையின் மேலும் சில சிகரங்களைத் தொட முடியும்.

Wednesday, April 14, 2004

செளந்தரா கைலாசம்

கவிதையும் இசையும் மிகவும் ஒத்திசைவுடையவை. நாம் சொல்லவரும் செய்தியை / உணர்வை, இசை கலந்து சொல்லும்போது செய்தி, அசாத்திய வலிமை பெறுகிறது. எனவேதான் இசை அடிப்படையிலான மரபுக்கவிதை, தனிச் செல்வாக்கோடு திகழ்கிறது. கணிதக் கட்டுமானம் உடைய இது, நினைவிலிறுத்த ஏற்றதாகப் பன்னெடுங்காலமாய் மதிக்கப்பெறுகிறது. கோயில்களில் 'சாமி' வந்து ஆடுவோர், தம்மையறியாது தமக்குத் தொடர்பில்லாதவற்றைச் சொல்வதுபோல் மரபுக்கவிதை, எழுதுவோரே எதிர்பார்க்காத வரிகளைச் சிலநேரம் தந்துவிடும். சங்க இலக்கியம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரை தமிழில் தோன்றிய அனைத்தும் யாப்பினால் கட்டப்பெற்றவை. தமிழ் மக்களின் உளவியலையும் சிந்தனைப் போக்கையும் கூட எதுகை - மோனைகளும் சந்தமுமே தீர்மானித்தன; தீர்மானிக்கின்றன எனில் மிகையன்று. தமிழக நாட்டுப் பாடல்களும் பழமொழிகளும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இந்தப் பின்னணியின் பயனாய், தமிழில் மரபுக் கவிதைகள் எண்ணற்றுப் பெருகின. மரபுக் கவிஞர்களும் அவ்வண்ணமே பெருகினர். இவர்களுள் பெரும்பாலோர் , ஆண்கள். கடுமையாகத் தேடினால், ஏதோ ஒரு விழுக்காட்டினர் பெண்கள் தேறுவர். பெயரளவுக்குத்தான் இவர்கள் பெண்கள். எப்பொருளையும் ஆண்களின் பார்வையிலேயே இவர்கள் பார்த்தனர். இந்த இலக்கியச் சிறுபான்மையினரின் இக்கால எடுத்துக்காட்டு, செளந்தரா கைலாசம்.



புலவோர்தரு புறமோதிய
பெருவீரமும் அரிதா?
பலகேடுகள் புரிவார்படை
பனியேசுடர்க் கதிர்நாம்!
அயலார்படை முயலாகிடத்
துகளாகிடக் கிளர்வாய்
புயலாய்எழும் புதல்வோர்தரும்
வனிதாமணிக் குலமே!


எனக் கிடுகிடு சந்தமானாலும்


ஆலே அமர்ந்தவிதை போலே வளர்ந்தநெடு
மாலே பயந்தஎழில் மானே வியந்தவிழி
யாலே அழைத்துஅரு ளாலே அணைத்து ஒளி
வேலே எடுத்துவினை வேரோ டறுத்துவரும்
சேயே கொடுத்தபெருந் தேவீ திருப்புவனத்
தாயே வணங்கவருள் தா!

என அலையடிப்பது போன்ற சந்தமானாலும்

நெஞ்சை விட்டே ஆசை என்ற
நெருப்பு நீங்கவும் - இந்த
நீணித்தில் கொடுமை மாறி
அமைதி ஓங்கவும்
அஞ்சுகின்ற நிலைமை இங்கே
ஏற்படாமலும் - பொல்லா
ஆணவத்துப் பேயின் ஆட்சிக்
காட்ப டாமலும்
எனத் துள்ளல் சந்தமானாலும் அம்மையார் தம் மொழியாளுமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

செளந்தரா கைலாசம் கவிதைகள், இறைவன் சோலை, உள்ளத்தில் நிறைந்த உத்தமர்கள், இதயப் பூவின் இதழ்கள், கவிதைப் பூம்பொழில், நெஞ்சில் விளைந்த நித்திலங்கள், சிந்தை வரைந்த சித்திரங்கள் ஆகிய பாட்டுத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இவை தவிர கட்டுரை, சிறுகதை நூல்களையும் படைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம், செட்டிபாளையம் எனும் சிற்றூரில் 28-2-1927 அன்று தேசிய பின்னணி உடைய குடும்பத்தில் பிறந்தார். 14 வயதில் திருமணம் ஆனவர். பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்தும் தோய்ந்தும் தாமே பாடல் இயற்றத் தொடங்கினார். தமிழறிஞர்கள் உள்பட பலரும் இவர் முயற்சிகளைப் பாராட்டி ஊக்கமூட்டியுள்ளனர். சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழும் இவர், சொற்பந்தல் கட்டிப் பல்லோரையும் ஈர்த்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக விளங்கிய கைலாசத்தின் மனைவி ; இன்றைய இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மாமியார்... என மிகச் செல்வாக்கு வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும் அமைதியும் பணிவும் பல நற்குணங்களும் கொண்டவர்.

வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, அகவல், பல்வேறு சந்தங்கள் எனப் பற்பல செய்யுள் வடிவங்களையும் ஆற்றோட்டமாக, எதுகையும் மோனையும் கொஞ்சி விளையாடப் பொழிந்துள்ளார், இவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத்துடன் தொடர்புள்ள இவர், இயல்பாகவே அதிக எதிர்பார்ப்பைத் தூண்டினார்.

உணர்வுகளின் ஓவியமே
உயர்கவிதை! நெஞ்சத்தின்
இணைவுகளின் சாசனமே
இயற்கவிதை! எழிற் கவிதை!

- என்பது உள்பட கவிதை பிறப்பது எப்படி? என்ற தலைப்பில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார், அம்மையார்.

ஆயினும் பெரும்பாலும் கடவுளர் துதியாகவும் மனிதரைப் போற்றுவதாகவும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. ஒருவரின் பெற்றோர், ஊர், அவருடைய சிறப்புகள் அனைத்தையும் செய்யுள் வடிவில் அடுக்கியுள்ளார். எதுகை மோனைகளையும் சந்தத்தையும் உருவிவிட்டால் அவை, கவிதை மதிப்பை அன்று ; உரைநடையின் மதிப்பைக்கூட பெறா. இறைத்துதியில் வருணனையும் தலபுராணமும் தாயே நீயே துணை என்பது போன்ற மரபார்ந்த வழிபாடும் வேண்டுதல்களுமே மிகுந்துள்ளன.

வண்ணத் தாமரைப் பூவிலிருப்பாள்!
வதனப் புன்னகை ஒளியை விரிப்பாள்!
- என்ற வரிகள்,
வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்!
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!

- என்ற பாரதியின் வரிகளை ஒற்றியுள்ளன.

இதந்தரு வகையில் இந்த
இனியபாரதநாட்டிற்குச்
சுதந்திரம் வாங்கித் தந்த
தூயவர் காந்தி தன்னை
- இங்கு பாரதியின் எதுகைகளை இவர் கையாண்டுள்ளார். இவற்றைத் தாக்கம் என்று சாதாரணமாகச் சொல்லிவிட இயலாது.


தன்னரும் சிறப்பை நூலில் தருகிறார் மாப்போ சியார்!
- இந்த அடியில் ம.பொ.சி. என்ற பெயர், மாப்போ சியார் என வந்துள்ளது.


ஊ.வே.சா. ஐயரைத்தன் உயிராக நினைப்பவனை,
கோவே! என் நெஞ்சமர்ந்த குருவே என் றழைப்பவனை
- என்ற அடிகளில் உ.வே.சா. என்பது, ஊ.வே.சா. ஆகிவிட்டது.


பூவையர் பெருமை புகல்திரு. வீ.க.!
- இங்கு திரு.வி.க., திரு.வீ.க. ஆகிவிட்டது. வேறோர் இடத்தில்


தழைத்திடும் திரு.வி. காவின் தவத்திரு வடிவும்
- என்கிறார். திரு.வி.க., திரு.வி. கா ஆகிவிட்டார். இவை, நீட்டல் விகாரங்கள் எனச் சமாதானம் கூறவேண்டாம். பெயர்ச்சொல்லை மொழிக்குள் கையாளும் திறன் போதவில்லை என்பதே உண்மை.


விலையற்று மிளிர்கின்ற ஒளிமா ணிக்கம்!
விடுதலையைத் தரவந்த தெய்வத் தூது!
உலகத்தின் மூலையிலே துன்பம் மூண்டால்
உள்ளத்தின் நடுவிலிடி விழுந்தாற் போன்ற
நிலையுற்று மிகவாடி நெகிழும் நெஞ்சு!
நிலவிமிருள் தனைச்சாடும் மின்னல் கீற்று!


- எனப் பாரதி என்ற தலைப்பில் பாடிச் செல்கிறார். உள்ளத்தின் நடுவில் இடி விழுந்துபோல் என்ற மிக உக்கிரமான நிலையைக் காட்டிய பிறகு, மிகவாடி என்ற சொல் எதற்கு?


அருள்மண்டும் நெஞ்சினராய் ஆகாது போவோமேல்
இருள்மண்டும் சமுதாயம் இற்றுச் சிதறிவிழும்!
- இங்கு இருள்மண்டும் என்பது சரி ; அருள்மண்டும் என்ற சொல்லாட்சி சரிதானா?


கொஞ்சவய தென்றாலும் கொடிகட்டிப் பறக்கிறது!
தஞ்சமெனப் பலநாடு தாளில்வந்து கிடக்கிறது!
- என அமெரிக்காவைப் பாடுகிறார். பலநாடு கிடக்கிறது என்பதில் ஒருமை / பன்மைப் பிழை உள்ளது.


மனிதரைப் பாடமாட்டேன் என்ற கண்ணதாசனின் பாட்டிற்கு, மனிதரைப் பாடுவேன் என எதிர்ப்பாட்டுப் பாடியவர், அம்மையார். அந்தக் கண்ணதாசனைப் பற்றிப் பாடுகையில்,

....அஞ்சாது வென்றகவி அரசன்உன் புகழ்வாழ்க!
தும்மலிலும் கவிதைத் தொனியிருந்தே அரசாளும் !
.....

- என்கிறார். புகழ்வதற்கு ஓர் அளவில்லையா? தும்மலிலும் கவிதைத் தொனியா? இந்த உயர்வு நவிற்சியைக் கண்ணதாசன்கூட ஒப்புக்கொள்ள மாட்டார்.

இலங்கைச் சிறைவாழ்வால் ஏந்திழையை மாந்தரவர்
நலங்குறைய ஏதும் நவிலுவரோ என்பதனால்
தீக்குளிக்கச் செய்தபின்தான் ஸ்ரீராமன் சீதையினை
ஏற்கத் துணிந்தின்ப வாழ்க்கையிலே ஈடுபட்டான்!
எண்ணுங்கால் இராமபிரான் எப்பொழுதும் மானுடனாய்
மண்ணுலகில் வாழ்ந்திருந்த மாட்சி தெரிகிறது!
- என இராமனின் செயலை நியாயப்படுத்துகிறார். ஆண்களின் கண்வழியே இவர் பார்ப்பதற்கு இதுவே சான்று.

இராணனின் ஈஸ்வர மாலையைத் தமிழாக்கியுள்ளார் என மகிழ்ந்தபோது, வேறொரு பாடலில் வடமொழி மந்திரங்களை அப்படியே தமிழ்ச் சொற்களிடையே கலந்துள்ளார். வடசொற்களும் பெரும் எண்ணிக்கையில் விரவியுள்ளன.

டாமரி, டங்கா ரிணி, ணார்ணா
ஸ்தாண்வீ, தாட்சா யணீ,நாரீ,
தாமஸீ, தாத்ரீ, பார்வதி, பட்
காரிணி என்றே ஓதிடுவோம்.
- இரு தமிழ்ச் சொற்களுக்கு இடங்கொடுத்து விட்டாரே! என்னே தமிழ்ப்பற்று!
கவியரங்கங்கள், கவிதைகளுக்கு எதிரானவை என ஞானக்கூத்தன் முன்பொரு முறை கூறியிருந்தார். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அம்மையாருடைய வரிகள். காகித விலையேற்றத்திற்குக் காரணம் எனப் பலரை வலம்புரி ஜான் சாடுவதுண்டு. இவரை அந்தளவிற்கு மோசமாகச் சொல்ல நான் விரும்பவில்லை. வெறும் சொல்லடுக்காய் விளங்கும் இவரின் செய்யுள்களைச் சிறிய பதிப்பாசிரியப் பணிகூட இல்லாமல் அச்சேற்றியிருப்பது, தமிழுக்கும் கவிதைக்கும் நன்மை தரவில்லை. கவியரங்கத் தலைவர் வாழ்த்து, தன்னைக் கவிபாட அழைத்தமைக்கு நன்றி என்றெல்லாம் உள்ளவற்றை இவர், எந்த அடிப்படையில் கவிதையென நம்புகிறார்?


முன்னாளில் காபாவும் புத்லி பாயும்
முயன்றுசெய்த பெருந்தவமே மோகன் தாஸாய்ப்
பின்னாளில் பிறப்பெடுத்து வந்த தென்று
பேருலகம் அத்தனையும் பேசும் வண்ணம்...

- காந்தியைப் பற்றிய இவ்வரிகள் , மூன்றாம் வகுப்பு மாணவன், பேச்சுப் போட்டியில் மனப்பாடமாய் ஒப்பிக்கும் தோற்றத்தையே அளிக்கின்றன.


மோழை, வதிகின்ற போன்ற சொற்களைத் தம் கவிதையில் கையாண்டுள்ள அம்மையார், தமது புலமையைப் பறைசாற்ற விரும்பியுள்ளார். இந்த இடங்களில் எளிய சொற்களை இவர் பயன்படுத்தியிருக்க முடியும்.

ஏதாவது நல்ல வரி கிடைத்துவிடாதா என மிகவும் முயன்று தேடிப் பார்த்தேன். சொல் விளையாட்டாய்ப் பல அகப்பட்டன. அம்மையாருக்குச் செய்யுளுக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடு தெரியாதிருப்பது, வியப்பளிக்கிறது. இவருக்குக் கவியரசி என்ற பட்டமிருப்பதை, இவரின் எல்லா நூல்களின் பின் அட்டையின் வழி தெரிகிறது. இவருடைய சொற்பொழிவுகளுக்காகப் பெற்ற பட்டங்களைப் பற்றி இப்போது ஆயவில்லை. கவிதைக்காக இவர் பெற்ற பட்டம், தமிழ்நாட்டில் பட்டங்கள் மலிவானவை என்பதைக் காட்டுகின்றன.


உரிய காலத்தில் இவருக்குத் தக்க விதத்தில் கவிதையை அறிமுகப்படுத்தாமல், இவர் எழுதுவதே சரியென்று ஊக்குவித்த தமிழ் அறிஞர்களை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டும். பாராட்டுவது மட்டுமே ஊக்குவிப்பது என்ற எண்ணம் தவறானது.

உறங்குகின்ற சொற்களினை
ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்துத்
திறங்குவியச் சேர்த்துவிட்டால்
செழுங்கவிதை தோன்றாது
- எனப் பலவாறு கவிதைக்கு இலக்கணம் சொல்லி, 'அவை தம் கவிதைகளில் அமைந்துள்ளனவா என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் வாசகர்களாகிய நீங்கள்தாம்' எனத் தன் நூலொன்றின் முன்னுரையில் கூறியுள்ளார்.

மன்னிக்கவேண்டும் அம்மா!

நல்ல கவிதைக்குத் தாங்கள் இப்போதுகூட முயலலாமே!
அமுதசுரபி, அக்டோபர் 2004

Tuesday, April 13, 2004

கவிதாயினி அ. வெண்ணிலா

பெண்கள் அநேகம் பேர், பிள்ளை பெற்று விடுகிறார்கள். ஆனால், அவர்கள் தாய்மை அடைந்தார்களா என்பது கேள்விக் குறிதான். பிள்ளையை எப்படியெல்லாம் வளர்க்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டான தாய்மார்கள் , இங்கு அதிகம். வசையும் வன்முறையும் காணாத குழந்தைகளை யாராவது கண்டதுண்டா? தன் சொந்தக் குழந்தையின் மீது, ஒரு விழுக்காடு சுயநலமும் இல்லாமலா அன்பு செலுத்துகிறார்கள்? பிரதிபலன் எதிர்பார்த்தால் அதற்கு அன்பு என்றா பெயர்? தாயே தெய்வம் என வணங்கும் இந்த நாட்டில் கருக்கொலையும் சிசுக்கொலையும் தொட்டில் குழந்தைகளும் இருக்கின்றனவே ! காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதெல்லாம் இருக்கட்டும் . ஆண் குஞ்சையும் பெண் குஞ்சையும் வெவ்வேறு விதமாக எந்தக் காக்கையாவது நடத்துகிறதா? ஒவ்வொரு கட்டளையும் குழந்தையின் அடிப்படை உரிமைகளின் மீது ஒரு சமாதிக்கான செங்கல்லாய் இறங்குவது தெரியும்தானே? இந்த அழகில் 'அம்மா' உணர்வெழுச்சி(சென்டிமென்ட்)யும் தியாகம், தெய்வாம்சம், ஆகா ஓகோ என்றெல்லாம் புகழ்வதும் மோசடி இல்லையோ?
இப்படியெல்லாம் கேள்வி கேட்காமல் இருந்தால் இளையராஜாவின் 'அம்மா' பாடல்களைக் கேட்டு நாம் கண்­ர் விடலாம். பட்டினத்தாரைப் படித்துவிட்டு உள்ளம் உருகலாம். அன்னையர் தினத்தை ஆராதிக்கலாம். உணர்ச்சி, ஓடத் தொடங்கிவிட்டால் அறிவு நின்றுவிடும்தானே!
கவிதையைப் பொதுவாக, உணர்வுபூர்வமாக அல்லாமல், அறிவுபூர்வமாக அணுகக் கூடாது என்பர். தாய்மையை அனுபவித்து, குதூகலிக்கும் அ. வெண்ணிலாவை நாமும் உணர்வுபூர்வமாகவே அணுகுவோம். என் மனசை உன் தூரிகை தொட்டு, நீரிலலையும் முகம், ஆதியில் சொற்கள் இருந்தன ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளின் மூலம் இவர், பரவலான கவனிப்பைப் பெற்றுள்ளார்.
ஆடைக்குள்ளிருந்துதாயின் வாசம்சொட்டுச் சொட்டாய்கோப்புகளில் இறங்குகிறது.அவசரமாய்அலுவலக கழிப்பறையில் நுழைந்துபீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறதுபசியைத் தின்று அலறும்குழந்தையின் அலறல்.
பால் ஊட்டமுடியாத நிலையில், மார்பகம் கனத்துக் கல் போலாகி விடும். அத்தகைய நிலையில் பீச்சி விடுவதைத் தவிர வேறு வழியில்லை. அந்த உண்மையை வெண்ணிலா, அருமையாகப் பதிவு செய்துள்ளார்.
மிதியடிச் சத்தத்தைமிதப்படுத்து.அழைப்பு மணியோகதவு தட்டலோயோசித்து- பின்மெதுவாய் எழுப்பு.'யார் வீட்ல' எனகேட்கும் முன்குரலைமென்மையாக்கு.நீ நுழையும்எந்த வீட்டினுள்ளும்- ஒருகுழந்தை தூங்கிக்கொண்டிருக்கலாம்.
'உறங்கும் குழந்தை', எண்ணற்ற பொருள்கள் உடைய ஒரு படிமம். மிகுந்த அக்கறையும் கனிவும் முன்னெச்சரிக்கையும் தாய்மையும் தொனிக்கும் இக்கவிதை, அனைவருக்கும் ஒரு சிறந்த செய்தியை முன்வைக்கிறது.
பாலை உள்வாங்கிஉதட்டிற்குக் கொண்டுவந்து உமிழ்வதும்...
வரும் தூக்கத்தைஅழுகையால் விரட்டி,தூக்கத்திற்கு அழுவதும்...
தூக்கினால் கீழிறங்கியும்கீழே விட்டால் தூக்கச் சொல்லியும்...
விதவிதமான விளையாட்டு சாமான்களை ஒதுக்கிஉடைந்த பாத்திரங்களோடு உருள்வதும்...
குழந்தையின் முரண் நகைக்குரிய இயல்புகளை எளிய சொற்களில் இக்கவிதை சித்திரிக்கிறது. இப்படியாக, குழந்தைக்குச் சோறூட்டுவது, அதை அடிக்கவேண்டியிருப்பது, அது, துண்டொன்றைக் கட்டிக்கொண்டு அம்மா ஆவது, பிசாசை அழைப்பேன் என அதைப் பயமுறுத்துவது, யாரும் சொல்லித் தராமலேயே செய்தித் தாளை அப்பாவிடம் கொடுத்து, கீரைக்கு அம்மாவை அழைக்கும் குழந்தை, அதன் சிரிப்பு, வீட்டையே மாற்றிய குட்டி இளவரசி, கேள்விகளால் நிரம்பிய குழந்தைகளின் உலகம், குழந்தைக்கான கதைகளால் குழந்தையானது, சப்தம் போடாமல் விளையாடுமாறு குழந்தைகளிடம் கூச்சமே இல்லாமல் சொல்வது, நிலா கும்பல், சொப்பு விளையாட்டு, குழந்தையும் மழையும், தொட்டிலும் குழந்தையும், தங்கம் - செல்லம் என்றெல்லாம் கொண்டாடிய குழந்தையை, அடுத்த குழந்தை பிறந்ததும் நாயே என்றது, குழந்தைகள் ஊருக்குப் போயிருக்கிற நாட்களில் வந்து போன யானை - மழை - இறகுதிர்த்த பறவை - எரி நட்சத்திரம், குழந்தைக்குச் செய்யவேண்டிய வேலைகள், அது, ஒன்னுக்கிருந்து தாளம் போடுவது, தொலைந்தாலும் அகப்படும் விளையாட்டு கார் சாவி, குழந்தையின் அழுகை, அத்துடன் சேர்ந்து இயற்கையை இரசிப்பது........ எனக் குழந்தையின் உலகிற்குள் தம்மையே கரைத்துக்கொண்டுள்ளார், வெண்ணிலா. இவரின் குழந்தை , அதிருஷ்டசாலிதான். இதர குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டிச் சோறூட்டுவோம் . இங்கோ, நிலாவே சோறூட்டுகிறதே!
இப்படி ஓயாமல் குழந்தையின் ஒவ்வோர் அசைவையும் கவிதையாக்கும் வெண்ணிலா, குழந்தைக் கவிஞர் மட்டும் அல்லர். காதலிலும் முத்திரை பதித்துள்ளார்.
முத்தத்தில் துவங்கிமுத்தத்தில் முடியும்தாம்பத்ய உறவுஎத்தனை பேருக்கு வாய்க்கிறது?
யாரும் சொல்லாமலேயேகற்றுக்கொள்கிறார்கள்அலுத்துத் தூங்குவதற்கான உடற்பயிற்சியாக.
என்கிற வரிகளில் உண்மை உறைந்துபோய் இருக்கிறது.
உன் இனிஷ’யல் போட்டுக்கொள்ளஉனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்நான்கைந்து மணி நேரம்ரத்த வெள்ளத்தில் மிதந்து
கேட்டால் கிடைக்குந்தான்உன் முத்தம்உன் அரவணைப்புஉன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டாபாலூட்டுகிறோம்
கரு சுமந்துகுழந்தைத் தவம் இருக்கும் பெண்களைசுமக்கஎந்த ஆணுக்கு உள்ளது கருப்பை
மிக நுண்மையான செய்தியை வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். பிள்ளைப் பேற்றின் போது கணவன் உடன் இருக்கவேண்டும் எனப் பூடகமாகத்தான் இதைச் சொல்வது வழக்கம். இந்தத் துணிச்சல்தான் நவீன பெண்ணின் அடையாளமாக வெளிப்படுகிறது. மின்சாரம் நின்ற நேரத்தில் உதட்டை ஈரப்படுத்திய குறும்பு, என்னை எழுது என்றவனிடம், 'மழையில் நனைவது சுகமா? மழைப் பற்றி எழுதுவது சுகமா?' என்றது, 'உன் நினைவுகளை இங்கொன்றும் அங்கொன்றும் தெளித்துக்கொள்கிறேன் , குழந்தை தன்னைச் சுற்றிப் பொருட்களைப் பரத்திக்கொள்வதைப் போல' என்றது ஆகியவை இவரின் காதல் மனத்தைக் காட்டுகின்றன.
வெண்ணிலாவிற்குப் பலவற்றிலும் நிறைவின்மை உள்ளது. முத்தமிட்டு, தலை வருடி, முகத்தோடு முகம் வைத்து, விரல்களில் நெட்டி எடுத்து எல்லாம் எழுப்பாமல் 'ஏய்' எனக் கால் žண்டி எழுப்புவது குறித்துக் கேட்கிறார். 'அந்தரங்க விநாடிகள் அத்தனையும் காணாமல் போயின நண்பன் , கணவனான போது' என்கிறார்.
சுக இருப்புக்காககால் மேல் உள்ள காலைக் கண்களால்நெருடிப் போகாத
பார்வையைச் சந்தித்தவுடன்சரியாய் இருக்கும்முந்தானையைக்கூட இழுத்துவிட்டுக் கொள்ள வைக்காத
குழந்தைக்குப் பாலூட்டும்விநாடிகளில்...தரைபிளந்து உள்நுழையும்அரைப்பார்வை வீசாத
காற்றில் ஆடை விலகும்நேரங்களில்...கைக்குட்டை எடுத்துமுகம் துடைத்துக்கொள்ளாத
ஆண்களுக்குநண்பர்கள் என்று பெயர்.
- எல்லாக் குற்றங்களையும் ஆண்களின் கூடையில் நிரப்பி விடும் முயற்சி, இது. 'பார்வை'க் குற்றங்களுக்கு ஒருவரை மட்டும் குறை கூறுவது, பொருந்தாது.
காதலித்த போது காதலைப் பற்றிப் பாடியுள்ளார். திருமண வாழ்க்கை, குழந்தை , அதன் வளர்ச்சி, மாத விலக்கு...எனத் தாம் நேரடியாக அனுபவித்தவற்றையே அதிகமாகப் பாடியுள்ளமை, இவர் எழுத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கற்பனையாகப் புனைந்து, சொற்பெருக்காகவும் வார்த்தை விளையாட்டாகவும் பாடாமை, இவர் சரியான திசையில் செல்வதை உணர்த்துகிறது.
நீரிலலையும் முகம் தொகுப்புக்காக, சிற்பி விருது, தேவமகள் விருது, கவிதை உறவில் முதல் பரிசு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். உளவியலிலும் கல்வியியலிலும் முதுகலைப் பட்டமும் இந்தியில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர்.சிறுகதை, புதினம் ஆகியவற்றிலும் கைவண்ணம் காட்டுகிறார். வந்தவாசியில் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கணவர் , கவிஞர் மு. முருகேஷ். காதல் திருமணம் வெற்றி பெறும் என்பதற்கு இவர்களையே எடுத்துக்காட்டாய்க் கூறலாம்.
சில நூறு விநாடிகளைப் பார்த்திருக்கின்றன பூக்கள்.
சில நூறு மாதங்களைக்கடந்திருக்கின்றன செடிகள்.
சில நூறு ஆண்டுகளைசுவாசித்திருக்கின்றன மரங்கள்.
பல நூறு தலைமுறைகளைவாசித்துக்கொண்டிருக்கும் மலைகள்.
பூ, செடி, மரம், மலைஅத்தனையும் புரட்டிப் பார்த்துவிடும் என் ஒற்றைக் கவிதை
என்கிறார், அ. வெண்ணிலா.
நம்புகிறோம். இந்த நிலா, சூரியனுக்கே இரவல் கொடுக்கக்கூடும்.

அண்ணாகண்ணன்

Monday, April 12, 2004

கவிதாயினி திலகவதி

இன்று பேருந்தும் மகிழுந்தும் 'சீறு'ந்தும் பொதியுந்தும் இயக்கும் பலர், முதலில் மிதிவண்டியில்தான் தொடங்கியிருப்பார்கள். அதுபோல, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், ஆய்வு என எழுத்துத் துறையினரும் நடிப்பு, நிருவாகம், இசை, அரசியல்....என வேறு துறைகளைச் சேர்ந்தோரும் முதலில் கவிதையிலிருந்துதான் தொடங்கியிருக்கிறார்கள். படைப்பாளிகள் என்று அறிவித்துக்கொள்ளாத பலர், ' நானும் முன்னே கவிதையெல்லாம் எழுதியிருக்கேன்' எனச் சொல்வதை நாம் அதிகம் கேட்கிறோம். கலை - இலக்கிய உலகின் எளிய, கவர்ச்சிகரமான முதன்மை நுழைவாயிலாகக் கவிதையே விளங்குகிறது.

இப்படிக் கவிதையில் தம் உணர்வுகளை வெளிப்படுத்தப் பயின்றோர், நாளடைவில் பிற கலை வடிவங்களையும் எளிதில் கைக்கொள்ள முடிகிறது. இவ்வகையில் அனைத்து இலக்கிய வடிவங்களின் தாயாகவும் கவிதை திகழ்கிறது. கவிதையில் தொடங்கி, சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் முத்திரை பதித்தமைக்கு, வாழும் எடுத்துக்காட்டுகளுள் ஒருவர், திலகவதி, இ.கா.ப.

தமிழ்நாட்டிலிருந்து இந்திய காவல் பணிக்குத் தேர்வான முதல் பெண் அலுவலர் என்ற பெருமைக்குரியவர், திலகவதி. காக்கிச் சட்டைக்குள் இரும்பு இதயங்கள் மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்தைப் பொய்யாக்கும் சிலருள், முதன்மையானவர்.
மனிதநேயத்தோடும் நேர்மை - நாணயத்தோடும் பணியாற்றுகிறார். கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அதேநேரம் , இலக்கியத்தில் எண்ணும் எழுத்துமாக இருக்கிறார். முதலில் கவிக்குயிலாக இருந்த இவர், பின்னர் பஞ்சவர்ணக் கிளியாக மாறிப் போனார்.

அலைபுரளும் கரையோரம் என்ற இவரின் முதல் கவிதைத் தொகுதி, 1987-இல் வெளியானது. 50-க்கும் மேலான நூல்கள், பல்வேறு பரிசுகள் - விருதுகள், சாகித்திய அக்காதெமி - தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் என அழுத்தமான தடம் பதித்திருக்கிறார். வெளிவந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகும், ஒரு நூலின் பல பக்கங்கள், இன்றைக்கும் பொருந்துவது, வியப்பளிக்கிறது.

கொழுகொம்பாய் இருந்தவர்கள்
தங்களையே தாக்கும்
தரமற்ற வெறும் தடிகளாகி,
தழுவ வரும்

கொடிகளையே உறிஞ்சி வாழும்
கொடியுருவிகளாகிப் பல
கொடுமை பயப்பதனால்,

இப்போது-
தரை மீது மட்டும்
படரத் தயாராகி விட்டன
கொடிகள்
என்கிற வரிகள், தனித்து வாழும் பெண்களின் குரலோடு இணைந்து ஒலிக்கின்றன.

பெரிய பெரிய போஸ்டர் தனிலே
சிறிய ஆடை அணிந்த மாதர்
என்ற வரிகளும் சமூகத்தைச் சிறப்பாகப் படம்பிடிக்கின்றன.

தலைசிறந்த
அடிமைக்கு
தலைவன் பட்டம்
தரவும் படும்

பந்தயக் குதிரைகள்
வயலை உழும்;
வீணைகள்

அடுப்பில் எரியும்;
இந்த நாட்டில்
எதுவும்
நடக்கும்
'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' என்ற பாரதியின் ஏக்கத்தை இவர், வேறு வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.

அநாதைக்குத்தான் தெரியும்
அன்பின் தேவை
வறிஞனுக்குத்தான் இருக்கும்
செல்வத்தில் மோகம் அடிமைக்குத் தான் இருக்கும்
சுதந்திர தாகம்
பெண்ணுக்குத்தான் புரியும்
விடுதலையின் அருமை

என்ற கவிதை, பெண்ணின் நிலையையும் தேவையையும் தெளிவாகக் காட்டுகின்றது.

வறுமையில்
வாடியவரை
அவன்
ஒரு
தீ- கம்யூனிஸ்ட்.

வசதி கொஞ்சம்
வந்த பின்
வ-கம்யூனிஸ்ட்.

செல்வம்
வந்த பின்
அவன்
ஒரு
கேபிடலிஸ்ட்

இளமை
இருந்தவரை
அவன்
ஒரு reformist

முதுமை
வந்தபோது
அவன் ஒரு
காந்தீய வாதி

அவனை
சந்தர்ப்பவாதி
என்பது
தவறு

சராசரி இந்தியன்
என்பதே
சரியான
விளக்கம்

அரசியல்வாதிகளை இக்கவிதை, தோலுரிக்கிறது என்றால், அடுத்து வருவது, நமது விழாக்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்துகிறது.

பேச்சாளர்
பேசினார்
மைக் முன்னால்!

விழாத் தலைவர்
பேசினார்
மேடையில்
இருந்த
சிலரோடு.

அவையினர்
ஒருவரோடொருவர்
பேசினர்.

- இதென்ன, கடந்த 17 ஆண்டுகளாகத் தமிழ்நாடு உறைந்துவிட்டதா? அன்று பாடியவை, இன்றைக்கும் அப்படியே பொருந்துவதைப் பார்த்தீர்களா?

புதுக்கவிதையில் மட்டுமின்றி, மரபுக் கவிதையிலும் திலகவதி, திறன் காட்டியிருக்கிறார்.

என்னடா மனிதன் நீயோர்
ஏந்திழை இன்கை பற்றப்
பொன் பொருள் மெத்தை பீரோ
பூந்துகில் ஆடை கட்டில்
இன்னமும் பாத்திரங்கள்
ஏதேதோ வேண்டுமென்பாய்!
கன்னலைச் சுவைப்பதற்கும்
கைக்கூலி கேட்கின்றாயே!

இதுபோன்ற தனிப்பாடல்கள் தவிர்த்து, 35 எண்சீர் விருத்தங்களில் மீண்டும் சகுந்தலை என்ற குறுங்காவியமே பாடியிருக்கிறார். பல பாடல்கள், மிகவும் சுவையாக உள்ளன. சகுந்தலை யாரென்றே தெரியாது என துஷ்யந்தன் மறுத்தபோது, சகுந்தலை பாடுகிறாள்:

......"என்றோஎன் தாயுமெனை விட்ட கன்றாள்!
இன்றென்னைத் தாயாக்கி இவனும் விட்டான்!
இன்றெங்கே சென்றிடுவேன் ? ஏ பூ மாதா!
இனியுன்னை அன்றியெனை ஏற்பார் யாரோ!"

சில பாடல்களில் யாப்பு, கச்சிதமாக அமையவில்லை என்றாலும் எந்த வடிவத்தையும் ஆளுவதற்கான இவரின் முயற்சி, பாராட்டத்தக்கது.

புதுக்கவிதை என்ற வடிவில் உள்ள பலவும் நீர்த்துள்ளன.

வளர்ப்பு நாய்கள்
ஆள் வந்ததும் செயல்படும்
ஆனால் தோட்டத்து ரோஜா
யாருக்காகவும் என்றில்லாமல்
தானே தனக்குள்
பரவசப்பட்டு
ஒரு நாள்
சந்தோஷமாய்ச் சிரிக்கும்


இதில் முதல் மூன்று வரிகளிலேயே கவிதை முடிந்துவிட்டது. ஆனால், வீணாக மேலும் 5 வரிகள் நீளுகின்றன. பல, கவிதையாக முதிராமல் கருத்தாகவும் முழக்கமாகவும் வெளிப்பட்டுள்ளன.
தருமபுரியில் பிறந்த இவர், 1976-இல் இ.கா.ப. அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார். வேலூர், திருச்சி, சென்னை எனப் பல பகுதிகளில் பல பொறுப்புகளை வகித்த இவர், இப்பொழுது, கடலோரக் காவல் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. யாகப் பணியாற்றுகிறார். தேயுமோ சூரியன், அரசிகள் அழுவதில்லை என்ற புதினங்களுக்காகத் தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருதினை இரு முறை பெற்றவர். அமுதசுரபி புதினப் போட்டியில் முதல் பரிசு உள்பட மேலும் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களுக்கும் திரைப்படத்திற்கும் பங்களித்துள்ளார். மிகச் சிறப்பாகப் பேசக் கூடியவர்.
பன்முகத் திறமை மிக்க இவர், பாரதியின் புதுமைப் பெண்ணுக்குரிய இலக்கணங்கள் பொருந்தியுள்ளவர். எண்பதுகளில் அமுதசுரபியில் வெளிவந்த இவரின் தனிமை என்ற கவிதை, இவரை யார் என்று காட்டும்.

சொற்களால் காயப்படாத
பொருள் அடர்ந்த அமைதியில்
அலையும் ஓசையும்
கடலாய் நான் ஆகி விட மாட்டேனா?

உயிரும் உணர்வும் கரைந்து கரைந்து
காற்றாய் அருவமாய்
சுருதியின் உயர்வில் ஒன்றாய்
மருவி விட மாட்டேனா?

காட்சியும் புலனும் இதயமும்
இயக்கத்தை நிறுத்த
எல்லையிலா வெட்ட வெளியில்
நான் இணைந்து விட மாட்டேனா?

மயிலிறகாய் வருடும் இந்த வரிகளுக்குள் திலகவதியின் ஆன்மா, விழித்திருக்கிறது.

Sunday, April 11, 2004

மாலதி

பெண்களின் மனத்தை ஆழங்காண முடியாத கடல் என்றார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்றனர். இப்படி மடித்த பொட்டலமாகவும் திரை மூடிய சித்திரமாகவும் இருந்தது அவர்களின் இயல்பு அன்று. அது, அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. அதிர்ந்து பேசாமையும் அதிகம் பேசாமையும் எதிர்த்துப் பேசாமையும் அவர்களின் இயல்புகளாகக் கருதப்பட்டன. கணவனுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் பெண்ணை, பெரும் பத்தினி என்று போற்றினர். பிறகு, அதுவே அவளின் கடமையும் ஆயிற்று. சாதாரண விருப்பங்களைத் தெரிவிக்கக்கூட அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காதல், காமம் ஆகியவற்றைத் தெரிவிப்பதோ, பெரும் இழிவாகக் கருதப்பட்டது.

சங்க கால அகப் பாடல்களில் மடலேறுவது ஆணுக்கு மட்டுமே உரியது. காதலின் உச்ச நிலையில் "இவளை நான் விரும்புகிறேன்" என்பதைத் தெரிவிக்க, மொட்டையடித்துக்கொண்டு, பனையோலைகளால் ஆன குதிரை மேல் ஏறி, ஓலையின் கீறல்களால் உடலெங்கும் காயமாகி, ஊர்வலம் வருவதை மடலேறுதல் என்றனர். இப்படிப் பெண்கள் மடலேறக்கூடாது என இலக்கணம் கூறுகிறது. இந்த விதியை முதன்முதலில் திருமங்கையாழ்வார் மீறினார். இறைவனை ஆணாகவும் தன்னைப் பெண்ணாகவும் கற்பித்துக்கொண்ட இவர், தான் மடலேறுவதாகப் பாடியுள்ளார். ஒரு வகையில் இதை ஓர் ஆண்தான் பாடியுள்ளார் என அமர்த்தினால், மடலேறுவதாகப் பாடிய முதல் பெண்ணாக மாலதியை நாம் குறிப்பிடலாம்.

"பிறப்புகளில் எல்லாம்
நெடிதுயிர்த்த வேட்கையில்
உடல் கொடுத்தேன் ஆகுதியாய்

உன் பேரை மந்திரப்படுத்தி
வெட்டிச் சிதைத்த செருக்கை
மொட்டையடித்து மடலேற்றி
வீழ்த்தினேன் இதயக் கணப்பில்.

கண்ணீர்ப் புனல் மீறி
வெந்து நீறானது என் உடமை

இப்போது வா வந்து விடு

தங்க மல்லிகைப் பூவை நெகிழ்த்து
மங்கு மௌனங்களைப் பேச விடு.

அமைதியை முழக்கு பேரிகையாய்
ஆசையை அமர்த்தி அழவிடு

வா வந்துவிடு."


"மடலேற்றம்" என்ற தலைப்பிலான இக்கவிதையின் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை மாலதி தொடங்கியுள்ளார். நெல்லை மாவட்டம், பிரம்மதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, சென்னையில் பிறந்து, பெங்களூரில் வசித்து, மராட்டிய மாநிலம், சதாராவில் வாழ்ந்து வருகிறார், மாலதி. இதுவரை வரிக்குதிரை, தணல் கொடிப் பூக்கள், மரமல்லிகைகள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். பள்ளியில் படிக்கும்போதே கவிதை முயற்சியில் இறங்கிய மாலதி, திருமணத்திற்குப் பிறகு அதைக் கைவிட்டார். நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டு(ம்) எழுதத் தொடங்கி, 1999இல் இவருடைய முதல் தொகுப்பு வெளியானது.

சமுதாயம் சொல்வதைத் திருப்பிச் சொல்வதற்குச் சிந்தனையாளர்கள் தேவையில்லை. கிளிப்பிள்ளைகளே போதும். விபச்சாரத்தைச் சமுதாயம் இழிவாகப் பார்க்கிறபோது, மாலதி அதை வேறொரு கோணத்திலிருந்து பார்க்கிறார்.

"சோரம் மிகப் புனிதமானது
ஏனெனில் பணம் பத்திரங்கள் துச்சம் அதில்
பிறிதும் கண்மூடிக் காதல்
அதில்தான்.

லட்சியங்கள் நிற்பதில்லை
அதன் முன்.
பாசாங்கு ஓடினபின்
சுவடு விடாமல்.

திறந்த, முழு சரணடைவு
அதில்தான்
அன்புடை நீ மாசுபடுத்தாதே இதை.
இன்னொரு திருமணமாக்கி இதையும்."


சொத்து பத்துக்காகவும் வீட்டு வேலைக்கு ஆள் வேண்டியும் அந்தஸ்துக்காகவும் பலாபலன்களைக் கணக்கிட்டும் மனப்பொருத்தம் இல்லாமலும் நிறைவேறும் திருமணங்கள், மாசு பட்டுத்தான் உள்ளன. ஒருவரை மனத்தால் நினைத்தாலே அவர் கற்பிழந்தவர் ஆகிறார். உள்ளொன்றும் புறமொன்றும் இல்லாமல், தமது மனச்சான்றின்படி எவர் ஒருவர் தூய்மையாளரோ, அவர் இந்தக் கவிதையின் மீது கல்லெறியலாம்.

மாலதி, இந்தக் கருப்பொருளை வேறொரு விதமாகவும் பதிவு செய்துள்ளார்.

"..............
வெற்றிலைச் சாற்று உதடுகளின்
உலர்வு போல் இயல்பான
ஆயிரமாயிரம் பகலிரவுகளைக்
கொண்டு கால் மாட்டில் வையுங்கள்.

கற்பைப் பற்றின உங்கள்
மலைப் பிரசங்கத்தில்
கலந்துகொள்ள வருகிறோம் நாங்கள்."


இதில் பயின்று வரும் ஒவ்வொரு சொல்லும் மிகுந்த வீரியம் மிக்கவை. இது எழுப்பும் கேள்விகள், மிக வலிமையானவை.

மாலதியின் தலைகீழ்ச் சிந்தனை, மேலும் தொடர்கிறது. "நிலம் என்னும் நல்லாள்" என வள்ளுவர் வாக்கிருக்க, இவர், "நிலம் என்னும் பொல்லாள்" என்ற தலைப்பில் கவிதை வடிக்கிறார்.

"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்" எனக் குறளிருக்க,

நெருஞ்சிப் பழம் எடுத்துப்
பிழிந்து வைத்தேன்
கை எரிந்தாலும் உனக்காக

நீ வெளிச்சங்களில் குணசாலி......."


என்கிறார், மாலதி. "வெளிச்சங்களில் குணசாலி" என்ற சொற்களில்தான் எவ்வளவு பொருள்கள்.

வீடே பெண்ணுக்குச் சொர்க்கம், பாதுகாப்பு என்றெல்லாம் பலர் எண்ணியிருக்கையில்

"வீட்டுக்குள் என்ன கிடக்கிறது
பிணைப்பும் தளையும் தவிர?
சதைக்குள் இரத்தத்துக்குள்
ஈரங்களுக்குள் துடிக்கும் உறவு
வீட்டுக்குள் நிச்சயம் இல்லை"


என்று அடித்துச் சொல்கிறார். குடும்ப வாழ்வையே வெறுப்பவர் போலும் என நினைத்தால், மகளைப் பற்றி இனிக்க இனிக்கப் பாடியுள்ளார்.

"தன் வீட்டை விட
என் வீட்டை நேசிக்கும்
விருந்தாளி......

கண்ணாலே முத்தமிட்டு
குரலுக்கு இசை தடவி........

செலவுக்கெல்லாம் கவலைகொண்டே
செலவுகள் நிறைய வைத்து

இதயத்தில் அனைவருக்கும்
மிகப் பெரிய வரவு வைத்து....

வீட்டுக்கு வளைபோட்டு
கொலுசிட்டுக் குழைவிக்கும்
என் விருந்தாளி

இன்னொருத்தன் பெண்டாட்டி
அடுத்த வீட்டுச் சொத்து
நான் பெற்ற என் மகள்"


என்கிற போது, இவரின் பேரானந்தம் நமக்குப் புரிகிறது.

"நீ என்
பிச்சைப் பாத்திரத்தில் விழுந்த
வைரமாலை.
விளிம்புகளில் வந்த வானவில்.
யுகதீபம், கருணைக் கடல்
என்
நெற்றிப் பொட்டின் நேர் விளக்கம்
முழுசாய் அன்பின் விரிவு நீ
அப்படியும் உன்னுடன் தான்
என் சச்சரவுகள்"


மாலதிக்குத் தன் மனத்திற்கிசைந்தவரைக் கொண்டாடவும் தெரிந்திருக்கிறது. ஆனால், ஏக்கமும் இயலாமையும் கோபமும் விரக்தியும் இவரின் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. கவிதை எழுதுவதை, "பழக்கமான குற்றம்" என்பதும் "தோத்தாங்குளிகளெல்லாமே கொஞ்சம் கவிதை எழுதி வைக்குமோ" என்பதும் "கவிதை எழுதுவது இளக்காரத்துக்குரிய செயல் என்பதில் சந்தேகமில்லை" என்பதும் மாற்றிக்கொள்ள வேண்டிய எண்ணம். இப்படித்தான் "கவிதை எழுதறவனெல்லாம் அயோக்கியனாகவும் ஒழுக்கக் கேடனாகவும் இருப்பான்" என்று சுரதா, ஒரு முறை சொன்னார். பாலகுமாரனோ, "கவிதை , சோம்பேறிகளின் வேலை" என்று சொன்னதாக ஞாபகம். உதிரி உதாரணங்களைத் துறைசார்ந்த பொதுக்கருத்தாக மாற்றுவது, மிகவும் தவறு.

மாலதியின் கவிதைகளில் வடசொற்கள், அதிக அளவில் இடம் பெற்றுள்ளமை, சிறிது நெருடலைத் தருகிறது. இவர், தமிழ்நாட்டுக்கு வெளியே வெகுகாலமாய் வாழ்வதால் இது நேருகிறது எனினும் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் இவர் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டலாம்.

தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு, இவரிடம் உள்ளமை பாராட்டுக்குரியது.

"தன்னிரக்கம் வேண்டாம்
புலம்பாதே
முறையீடு செய்யாதே
என்று நிறைய சொல்லிக்கொள்கிறேன்
எனக்கு நானே
ஆனாலும்
ரணம் தேடித் தடவுகிற
களிம்புக் கை போல
மனசு
வலி தேடிப் போய்
சுகம் கொண்டாடுகிறது"


என்ற தன்நோக்கு, ஒரு சிறந்த முன்நோக்கு.

தொலைபேசித் துறையில் முதன்மைக் கணக்கு அலுவலராகச் சதாராவில் பணியாற்றும் மாலதி, சிறுகதை, கட்டுரை வடிவங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். எளிமையும் தன் கருத்தைக் கூர்மையாக எடுத்து வைக்கும் துணிவும் ஒப்பனையற்ற உண்மையும் மாலதியின் கவிதைகளுக்குத் தனித்துவம் சேர்க்கின்றன.

"இந்த மௌனத்தில் அப்பிக்கொண்ட
நினைவுகளின் வண்ணக் கலவையை
அந்தர்யாஹம் அனுபவிக்கிறது

ஹோலி முடிந்தும்
குளிக்க மனமில்லாத
குழந்தை போல"


என்கிறார், மாலதி.

எங்கள் ஹோலி, இன்னும் முடியவில்லை.

Saturday, April 10, 2004

கவிதாயினி தமிழச்சி

உலகம் எதிரெதிரில் பாதியாகப் பிரிந்து கிடக்கிறது இரவு-பகல், பொய்-உண்மை, அழுக்கு-தூய்மை, அநீதி-நீதி என எந்தப் பொருளை எடுத்தாலும் அதற்குச் சரிசமமான பொருண்மைகளோடு எதிர்த்தரப்பில் வேறொரு பொருள் இருக்கும். இவை இரண்டிற்கும் இடையே எப்போதும் போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கவிதை, தான் உண்மையென்று நம்பும் ஒன்றையே எப்போதும் பேசும். எனவே, பொய்ம்மைக்கு எதிராகக் கவிதை, போரிட்டுக்கொண்டே இருக்கிறது.

கவிஞர்கள், தமக்கு வசதியான ஓர் இடத்தில் நின்றுகொண்டு இந்தப் போரினை நிகழ்த்துவார்கள். அந்த இடம், தேசியமாய் இருக்கலாம். இனவாதம் - மொழிவாதமாய் இருக்கலாம். சுதேசியப் பொருளாகவோ, பெண்ணடிமை எதிர்ப்பாகவோ ஏன், ஓசைக்கு எதிரான மௌனமாகவோ கூட இருக்கலாம். இந்த வரிசையில் தமிழச்சி எடுத்துக்கொண்ட இடம், கிராமம்.

எஞ்சோட்டுப் பெண் என்ற தொகுதி மூலம் அறிய வருகிற தமிழச்சியின் இயற்பெயர், த.சுமதி. ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் மல்லாங்கிணறு என்ற கிராமத்தில் பிறந்தவர். சென்னை, இராணி மேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளர்.


செம்மண் புழுதிப் பொடிசுகள்
கம்மங்கூழ்...
சினை வயிற்றோடு
மேயும் சிவப்பி...
என் பெயர் எழுதிப் பார்த்த
நெட்டிலிங்கம்...
வெத்திலையின் மேல்
சுண்ணாம்பாய்க்
கருவேல மரத்தில் காந்தலுக்கு
ஒதுங்கும் கொக்கு...
என்னத்தா மெலிஞ்சிட்டியளே
என எதிர்ப்படுகையில்
விசாரிக்கும் கிடை ஆட்டுக் கிழவி
என எப்போழுதும் போலவே
இந்தக் கோடையிலும்
எனக்காக காத்திருக்கும்
எல்லாமும் இருக்கின்றன
என் பிறந்த ஊரில்...
ஒரு மாலை நேரத்து
மாரடைப்பில்
பாராமல் எனைப் பிரிந்த
என் அப்பாவைத் தவிர

ஊர்க்காட்சிப் பட்டியலை இப்படி முடித்ததால் ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்துவிட்டார், தமிழச்சி. வேறொரு கவிதையில்,

படப்பிடிப்பில் பங்கெடுப்பதற்காய்
வாடகைக்கு வரவழைக்கப்பட்ட
ஏழைக் குழந்தைபோல்
தவிப்பாய் இருக்கிறது எனக்கு, அப்பா
உங்களை இழந்துவிட்ட பிறகு

<க்ஷழ்>
என்கிறார். பிறிதொன்றில்,
<க்ஷழ்>
<ல்ழ்ங்><ண்>
இரத்தப் புற்றுநோய் கண்ட
இரண்டரை வயதுப் பெண் குழந்தையை
இழந்த பெற்றோரை எப்படி எதிர்கொள்ள...
தேற்றுவதற்குத் தோற்றுப்போன
வார்த்தைகளைத் தேடிய என்னிடம்
"தங்கச்சிப் பாப்பா சாமியாயிட்டா
இனிமேல்
சைக்கிளுக்குச் சண்டையில்லை' என்று
சுவரோரம் நிற்கும்
புது சைக்கிளைக் காட்டி
காதோரம் அதன் நான்கு வயது
அண்ணன் குதூகலிக் கையில்
சட்டென அழுகை வந்தது எனக்கு
சைக்கிள்
விடக் கற்றுக்கொண்ட புதிதில்
பிடிமானம் தவறி விழுந்து
ஆடுசதை பிய்ந்த காயம்
ஆறும் வரை அலுக்காமல்
தூக்கிச் சுமந்த
ஒரு துக்க நாளில்
மரணம் தூக்கிப்போன
என் அப்பாவை நினைத்து

<க்ஷழ்>
என்கிறார். இதிலும் ஒரே கல்லில் இரு கனிகளைப் பெற்று விடுகிறார். இப்படியாகப் பல கவிதைகளில் தம் தந்தை இறந்த சோகத்தை மிக வலிமையாக இறக்கி வைக்கிறார். தந்தையை எல்லையற்ற பாசத்தின் குறியீடாகவும் கிராம வாழ்வின் ஒட்டுமொத்த அடையாளமாகவும் சித்திரிப்பதில் வெற்றி பெறுகிறார். இவர் தந்தை 1996--:-1997 தி.மு.க. அமைச்சரவையில் கூட்டுறவு & வணிக வரித் துறை அமைச்சராக இருந்த வே. தங்க பாண்டியன். இப்போது மகளின் கவிதைகளில் அமர வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
<க்ஷழ்> <க்ஷழ்>
இந்த நூலை, வாழ்க்கை வரலாற்றுக் கவிதைகளின் தொகுப்பாகக் கருதலாம். ஏனெனில் தமிழச்சியின் மனம் கவர்ந்த பலரும் இந்நூலில் நிறைந்து நிற்கிறார்கள். தந்தையைப் போலவே தமக்கை, தோழி, உறவினர்கள், ஊர்க்காரர்கள் ரெயில் பயணி... எனப் பலருடனான அனுபவங்களை உணர்ந்து எழுதியுள்ளார். வெளியே தெரியாத வேர்களாம் இவர்களைக் கதாநாயகத் தன்மையுடன் விவரிக்கிறார். பத்திரிகைச் செய்தியும், தருமபுரியில் மாணவிகள் எரிக்கப்பட்டதும் இவரைக் கவிதை எழுதத் தூண்டியுள்ளன.
<க்ஷழ்> <க்ஷழ்>
மிக உயர்ந்த அச்சுத்தரத்தில் இந்நூல் வெளிவந்துள்ளது. இந்த அக்கறையும் முழுமையும் உலகத் தரத்திற்கு இந்நூலை எடுத்துச் செல்கின்றன. ஆனால், தமிழச்சியின் எழுத்து, இன்னும் கூர்மை யடைய வில்லை. வளவளவென்று எழுதும் தன்மை இருக்கிறது.
<க்ஷழ்>
<ல்ழ்ங்><ண்>
மோருக்கு வந்திருந்தால் / பரவாயில்லை.
பாலுக்கே வந்திருச்சே

என்ற சொலவடைக்கு இவர், நீண்ட விளக்கம் அளித்துள்ளார். எல்லாவற்றையும் விளக்கி எழுதுவது, கவிதை நடை ஆகாது. சுருக்கியும் குறிப்பாலும் உணர்த்துவதே சிறப்பு.
<க்ஷழ்> <க்ஷழ்>
தாமஸ் ஹார்டியின் ஆங்கிலக் கவிதையைத் தழுவித் தமிழில் எழுதியுள்ளார். இத்தகைய கவிதைகளைத் தனியே தொகுப்பதே நன்று. சொந்தக் கவிதைகளுடன் கலந்து வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
<க்ஷழ்> <க்ஷழ்>
சிறிய திருத்தங்களை அவர் மேற்கொண்டால் கவிதை, மேலும் சிறப்பாக வடிவம் பெறும்; வசீகரிக்கும். இந்தியாவிற்கு மட்டு மல்ல, இவர் கவிதைகளுக்கும் கிராமங்களே முதுகெலும்பு.
<க்ஷழ்> <க்ஷழ்>
தாழிலில் மத்து. ஒரு கயிற்றில் தமிழச்சி மறுகயிற்றில் கிராமம். கடையக் கடையத் திரண்டு வருகிறது கவிதை தித்திப்புடன்.
<க்ஷழ்>
<ல்ழ்ங்><ண்>
எனதூர்க்
கரிசல் மண்ணில் மல்லாந்து
வட்டார மொழி சுழிக்க
வடிவங்களின்
முகம் தொலைத்து
நதி நீராய்ப்
புரண்டோட வேணுமெனக்கு
இலக்கின்றி

என்கிறார் தமிழச்சி.
<க்ஷழ்> <க்ஷழ்>
ஜீவ நதியே வருக!
<ட்ழ்>
அமுதசுரபி, ஜூன் 2004

Friday, April 09, 2004

கவிதாயினி திலகபாமா

தாய்வழிச் சமூகத்திலிருந்து மாறிய பிறகு, அனைத்தும் ஆண்மையமாகிவிட்டன. முக்கியமாக மொழி, ஆணின் பார்வையில் கட்டமைக்கப் பெற்றுள்ளது. இதனால்தான் விதவை, வைப்பாட்டி, அமங்கலி, சக்களத்தி... என ஏராளமான சொற்கள், பெண்ணுக்கு மட்டுமே உள்ளன. பெண், "ள்' விகுதி பெறுவதும் ஆண், "ர்' விகுதி பெறுவதும் இதனால்தான். "ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்' என்ற சிந்தனை, இக்காலத்தில் வலுப்பெற்றுள்ளது. தங்களை இரண்டாம் தரமாக்கும் மொழிக் கட்டுமானத்தை உடைப்பதில் இப்போது பெண்களுக்கு ஆர்வம் மிகுந்துள்ளது. "குடிமகன்' என்ற சொல்லுக்கு மாற்றாகக் "குடிமகள்' என்ற சொல்லைத் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அண்மையில் அறிவித்தது நினைவிருக் கலாம். அவ்வகையில் "சூரியன்' என்ற சொல்லுக்கு மாற்றாகச் "சூரியாள்' என்ற சொல்லை அறிமுகப்படுத் தியுள்ளார், திலகபாமா.

சூரியனுக்கும் கிழக்கே, சூரியாள், சிறகுகளோடு அக்னிப் பூக்களாய்..., எட்டாவது பிறவி ஆகிய கவிதை நூல்களைப் படைத்துள்ள இவர், பெண்ணியத் துக்காகப் போர்க்குரல் எழுப்பி வருகிறார். ஆனால், பெண்ணியம் என்ற வகைப்பாட்டை இவர் விரும்பவில்லை.

திலகபாமாவின் சில சிந்தனைகள் அதிரடி யானவை. "பிடிக்காமல் சேர்ந்து வாழவேண்டாம், பிரியுங்கள்' என்ற தொனியில்

நிறுத்தப்படட்டும் பயணங்கள் / இணையாத இணையாய் /
இல்லாத வாழ்வு நிறுத்தி / அச்சு முறித்து/துளிர்க்கட்டும் சக்கரங்கள் / பூக்களாய்
என்கிறார்.

மற்றொரு கவிதையில்,
பத்தினித் தனங்களுக்காக / பட்டினி கிடக்க தயாராயில்லாது /
தாமரை ஒன்று தரையிறங்கி /
தரையோடு வேர்விட்டு/தாகம் தணியும்
என்கிறார்.

வேறொரு கவிதையில்

காடுவிட்டுத் தொட்டிக்குள் வந்தாச்சு / பூப்பது வெற்றியென பூத்து /
சிரித்துத் தொலைக்கிறேன்.

தொட்டிச் செடிகள் / இடம் பெயராது / நம்பிக்கையுடன் நீ இருக்க.
இரவுகளில் என் / இனிமை தேடி நான் பயணிப்பேன் / நகரும் தொட்டிச் செடியாய்
என்கிறார்.

இது, சாதாரணப் பெண்ணின் சிந்தனை அன்று; எதிர் நீச்சல் போடுகிற - எல்லை அறுக்க விரும்பும் தென்றலின் பார்வை.

கனவுகளை இப்போதெல்லாம் / நானே கலைத்துக் கல்லாகின்றேன் /
நிறைந்திருந்த கனவுகளைக் காலி செய்து விட்டு / வெறும் மடியானாலும் / நனவுகளோடு பயணிக்கிறேன் / கனமில்லாது மடி லேசாயிருக்கிறது.


கற்பனை வாழ்வல்லாது எதார்த்தத்தை வலியுறுத்தும் இந்த வரிகள், வழக்கத்துக்கு மாறானவை.

காலங்காலமாய் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பதாக ஒரு கூற்று, வழங்கி வருகிறது. இதை விமர்சிக்கிறார், திலகபாமா.


என் தோல்விகளின் தரிசனங்களாய் / ஒளிர்ந்து கொண்டிருக்கும் நீ /
உன் வெற்றிகளின் பின்னால் நான் / இருப்பதாய் / சொல்லித் திரிகிறாய்.

மலர் வளையங்களை என் / காலடியில் வைத்துவிட்டு /
தந்த மலருக்காக / தம்பட்டம் அடிக்கிறாய்

இரண்டாயிரத்து பதினைந்துகளுக்கு / நான் போனதாக வருத்தப்படும் நீ /
எனைப் பின்னோக்கி வரச் சொல்கிறாய் / இணையாய் இருக்கவென்று.


இது, மிக அபூர்வமான வெளிப்பாடு, ஆண் முன்னாலும் பெண் பின்னாலும் இருப்பதான கற்பிதத்தை இக்கவிதை உடைக்கிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, ஆண்கள்தான் இன்னும் முன்னேறவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

புதிய பார்வைகள் தரிசனமாகின்றன / கைகள் பிடித்திருந்த வட்ட ஸ்டேரிங் /
இதுவரை இருந்த செக்கு மாட்டுப் / பாதையை நீள் கோட்டுக்கு மாற்றிவிட / ஆக்ஸிலேட்டரில் என் கால்களின் அழுத்தம்

என்கிற வரிகளில், வட்டப் பாதையிலிருந்து தடையற்ற நேர்ப்பாதைக்கு இவர் வந்துள்ளது தெரிகிறது.

தொன்மக் கூறுகளைத் திறமாகப் பயன்படுத்துவதில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார், திலகபாமா.

உனக்கு எனக்காய் நான் / கணக்கு பார்க்காது நீ / கணக்கு பார்க்கையில் /
கழுத்தை அலங்கரித்த / சவரன் தாலி சாபம் பெற்ற / சந்திரமதி தாலியாய் /
எல்லார் கண்ணுக்குத் தெரிந்தாலும் எனக்கு மட்டும் தெரியாது
என்றும்


இராமன் கால்பட்டும் / துணை துணை வராததால் /
கல்லாய்க் கிடந்து / தவம் செய்கிறாள் தனை /
நேசித்த இந்திரனை / நித்ய இணையாய் வேண்டி
என்றும்


சிகண்டியென மாறிய / அம்பையாய் / எடுத்த பிறவி பயன் பெற / எடுப்பேன் புதுப்பிறவி
என்றும்

மதுரை எரித்த கண்ணகியின் / மார் அக்னியின் எச்சம் / எடுத்து வைத்தேன் / மாதவி நாடிப் போகும் / கோலவன்களை எரிக்க என்றும்

கணவனின் குரலுக்கு / கை நழுவ விட்டு வந்த /
அதிரும் அரவை இயந்திரம் / தூக்கியடித்து சிந்திப் போக / என் தன்மானங்களும் கனவுகளும் / வள்ளுவன் குரலுக்கு வாசுகி விட்டு / வந்த வடக்கயிற்றுடன் / தூக்கிலிட்டு கிடக்கும்
என்றும்

தாயாரிடம் வளராது / தாதியரிடம் வளர்ந்த / அன்றைய கார்த்திகைக் குழந்தைகளாய் /
இன்றைய இன்குபேட்டர் / குழந்தை
என்றும்

ஆதி சிவனார் முதல் / தாய்வீடு அனுப்புதல் ஒரு /
தண்டனையாகவும் / அனுப்பாதிருத்தல் ஒரு / சாபமாயும் சாதித்த திருவிளையாடலாய்
என்றும்

காலடி பட்டதும் / கை கூப்பி எழுந்திடாத / அகலிகையிடம் உள்ளது ஆண்மை.

கணையாழிக்கு காத்திராது / காதலைக் கண்களில் சொல்லும் /
சகுந்தலையின் இருப்பு ஆண்மை.

சூடிக் கொடுத்து சூடிக் கொள்ளவும் / சூட்டிக் கொள்ளவும் காத்திராத /
ஆண்டாளின் ஆயுதம் ஆண்மை.

குமரிக்கரையில் / அலைகளின் மந்திர உச்சரிப்பில் /
தனக்காக சிவனாரை தவம் கிடக்க / வைக்கும் கன்னியில் உள்ளதாண்மை
என்றும்

இவர் பயன்படுத்தியுள்ள தொன்மக் கூறுகள், வீரியமிக்க உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

பட்டிவீரன்பட்டியில் பிறந்து, சிவகாசியில் வசித்து வரும் திலகபாமா, மருத்துவ நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். பாரதி இலக்கியச் சங்கச் செயலாளராக விளங்குகிறார். அண்மையில் "மரத்தடி' என்ற இணையக் குழு நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு வென்றுள்ளார். இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

அடுத்து என்ன வரும் / அறியாது எனைக் கடையும் /
தேவர்களும் அசுரர்களும் / நானே அமுதம் என்றறியாது
என்கிறார், திலகபாமா.

உஷ்ஷ்! இரகசியங்களை வெளியே சொல்லாதீர்கள்.

- அண்ணா கண்ணன்


Thursday, April 08, 2004

கவிதாயினி இளம்பிறை

கவிதை, எப்போதாவது தோன்றுவது என்று கருத்தாக்கத்தைத் தள்ளிவைப்போம். நமது மனம் எந்த உணர்வுடனாவது லயம் சேரும் போது அந்த உணர்வுக்கேற்ப கவிதை பிறந்து விடுகிறது. நமது மனம், நினைத்த மாத்திரத்தில் லயம் சேருமானால் நம்மால் நினைத்த நொடியில் கவிதை படைக்க முடியும்.

கவிதை என்ற பெயரில் நிறைய வெளி வருகின்றன. அவை கவிதைகளா என்பது சிந்தனைக்குரியது. ஆனால், அதிக எண்ணிக் கையில் கவிதை எழுதும்போது கவிதைப் போக்குகள் சிலவற்றை நாம் காணலாம். சுமாராக எழுதத் தொடங்கிப் பட்டை தீட்டப்பெற்று மிகச் சிறப்பான கவிதைகள் எழுதுவோர் உண்டு. இது, ஏறுவரிசை. மிகச் சிறப்பாக எழுதத் தொடங்கி, அடுத்தடுத்த படைப்புகளில் அந்தச் சிறப்பைத் தொட முடியாமல் சுமாராகத் தேய்வோர் உண்டு. இது, இறங்குவரிசை. ஒருவகைக் கட்டமைப்பில் ஒரே மாதிரி அலைவரிசையில் சிலர் எழுதுவர். இது, தொடர்வரிசை. பொதுவாக மோசமாகவும் திடீரென நல்ல கவிதைகளும் சிலர் எழுதுவ துண்டு. இது, லாட்டரிச் சீட்டுப்போல. எப்போதாவது தான் பரிசு விழும். இதற்குக் கவிஞரின் திறமை காரணமில்லை. வசமாக வந்து மாட்டிக்கொள்ளும் சொற்களே காரணம். இந்த வகைகளில் இளம்பிறையை முதல் வகையில் சேர்க்கலாம்.

'மவுனக்கூடு', 'நிசப்தம்', 'முதல் மனுசி' என மூன்று கவிதைத் தொகுப்பு களைப் படைத்தவர். திருவாரூரை அடுத்துள்ள சாட்டியக்குடியில் பிறந்தவர். இப்போது சென்னையில் ஆசிரியர் பணியாற்றுகிறார். இயற்பெயர், ச. பஞ்சவர்ணம்.

மென்மையான உணர்வுகளை மிகச் சிறப்பாகக் கையாளும் இவர், கிராமத்தில் பிறந்ததால் மண் வாசனையுடன் எழுதுகிறார். நாட்டுப்புற உள்ளடக்கம் இவரிடம், கூர்தீட்டிய கத்தியைப் போல் மின்னுகிறது. பழக்கமான களத்தில் வசதியான ஆயுதம் வாய்த்துவிட்டால் வீரத்திற்குக் குறைவேது?

சோப்புப்போட்டுக் குளிக்கவச்சா
செவந்திடுவேன் பொண்ணுயின்னு
தோப்புப் புழுதிக்குள்ள
தூங்கவிட்டுப் போனவளே...
பரிட்சக்கி கட்டவேணும்
பணங்குடும்மாயின்னு கேட்டா
படிக்கவச்சி எப்பேர்ப்பட்ட
பாவத்த நான் செஞ்சுபுட்டேன்யென
அழுது அழுது ஒரு
அஞ்சு ரூபா தந்தவளே...

என்னப்பெத்த எந்தாயே உம்
பள்ளிக் கூடத்து மக
பாட்டுக்கட்டிப் பாடுறேம்மா - நான்
எங்க திரிஞ்சாலும் - என்
இதயத்துல வாழுகிற உனக்குத்தான் மொதப்பாட்டு - என்
உயிர்பாடும் தாலாட்டும்...!

எனத் தன் அம்மாவைப் பாடும்போது உயிரை உருக்குகிறார்.

"அப்பாவுக்கும்... அவரது நண்பர் களுக்கும் சமர்ப்பணம்' என்று தன் "நிசப்தம்' நூலைக் காணிக்கையாக்குகிறார். அப்பாவைப் பற்றிய இவரின் வரிகள், நம்மைக் கண்ணீர் விடவைப்பவை.

என் கருப்பு நிறத்தை
வீடே சேர்ந்து
கிண்டல் செய்யும்போதெல்லாம்
"என் தாயார் போல
கருத்தான என் மக' யென
ஆறுதல் தந்தாய்...
பத்தடி முன்னால்விட்டு
பின்னால்கூட வரும்
யாரிடமாவது
சொல்லிக்கொண்டு வருவாய்
"என் மக டீச்சருக்குப் படிக்குது
ரேடியோவுலயெல்லாம் பேசியிருக்கு....'
கொடுத்த பொருளைத்
திருப்பிக்கேட்க
உன்னளவிற்குக்
கூச்சப்பட்டவர்களை
நான் பார்த்ததே இல்லை..
சொத்து குறித்து
யாராவது விசாரித்தால்
"என் பொம்பள மக்கதான்
என் சொத்து...
நான் செத்துப்போனால்
அவர்களெல்லாம்
கூடி அழுவுதுதான்
என் சுகம்' யென
உருக்கமான கவிதை சொல்வாய்

கள்ளங்கபடமற்ற அந்த ஏழைத் தந்தையால்தான் இந்தக் கவிதை நிமிர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட தந்தையும் இந்தக் கவிதையும் தமிழ்நாட்டின் பெருமைகளுள் ஒன்றாகக் கருதத்தக்கவை.

அல்லுபகல் உழைப்பவள
அடிக்ககைய நீட்டாதய்யா
சீக்கிரமா சமச்சித் தாரேன்
"சிடு சிடு''னு பேசாதய்யா...

என்ற கவிதை, வன்முறைக்கு எதிரான தர்மாவேசமாக இல்லாமல் கெஞ்சும் தொனியில் இருப்பது, சிந்தனைப் பழைமையை வெளிப்படுத்துகிறது.

"அப்பாவின் கையெழுத்து!' என்ற கவிதை, ஓர் அற்புதமான சிறுகதையாக விரிகிறது. மகளின் மதிப்பெண் அட்டையில் ரேகை வைப்பதிலிருந்து மாறி, கையொப்பம் இட விரும்பும் வழிவிட்டான் மயன் சன்னாசி, மிகச் சிறப்பாகப் பதிவாகியுள்ளார்.

"நீ எழுத மறுக்கும் எனதழகு சில' என்ற தலைப்பில் இவர் பட்டியலிடுவது முக்கியமானது.

இளம்பிறையின் காதல் கவிதைகள், வலியும் ரணமும் மிக்கவை இஷ்ட தேவதைகளின் வாழ்த்துகளையும் துஷ்ட தேவதைகளின் சாபங்களையும் இணைந்தே பெற்றிருக்கிறது, காதல்.

"இறந்த பின்பும்
ஒரே குழியில் புதைபடவேண்டும்''
என்றெல்லாம்
பேசிக்கொண்டவர்கள் நாம்.
காலம்
கற்றுத் தந்திருக்கிறது பார்த்தாயா....?
பார்த்தும்... எது குறித்தும்
பேசாமல் பிரிவதற்கு.

காலந்தோறும் காதல், தனி மனிதர்களுக்கு இழப்பையும் இலக்கியத்திற்குச் செழுமையையும் அளித்துவருகிறது. இளம்பிறை அதற்கு இன்னொரு சாட்சியம்.

கிராமத்து உணர்வுகளையும் காதலையும் தவிர உலகின் பல்வேறு பக்கங்களையும் இளம்பிறை தொட்டுச் செல்கிறார்.

"சில்க் சுமிதா என்கிற விஜயலெட்சுமிக்காக...' என்ற கவிதையில்

நான் அழுகிறேன் சுமிதா.
உன்னோடு ஆடியவரெல்லாம்
"குடும்பம்...குழந்தை' யென
கெளரவப் பிரஜைகளாய்...
நீ மட்டும் ஏன் பெண்ணே
மண்ணோடு?
என ஆற்றாமையோடு புலம்புகிறார்.

இரவின் வாயில்...
புகைந்து கொண்டிருக்கும்
"சிகரெட்'' நான் என்றும்

கண்களுக்குத் துணிவில்லை
மனம்
அண்ணாந்து பார்க்கிறது
அவமானங்களால்
விரட்டப்பட்ட இடங்களை... என்றும்

சடைப்பூரானாய் தடித்துக் கிடக்கும்
சிசேரியன் தழும்புகள் காட்டி
வயிறு பார்ப்பாள் தோழி என்றும்

உதிர்ந்துகொண்டிருக்கும்
தன் இறகுகளை
பூச்சிகள் இழுத்துச் செல்வதைப்
பார்த்துக்கொண்டிருக்கும் பறவைக்கு என்றும்

மனக்காயங்களோடு
புகார் கொடுக்கச் சென்ற பெண்களை
உடற்காயங்களோடு
வெளியே எறிந்த காவல் நிலையங்கள் என்றும்

பேய் மழையில் நடுங்கி...
ஒதுங்க வர மாட்டேன் ஒருபோதும்
உங்கள் கெளரவத்தின்
தாழ்வாரத்தில் என்றும்

நுண்ணிய கவிதை உணர்வுகளை உண்மையான எழுத்தில் வடிக்கும் இளம்பிறை, பாராட்டத்தக்கவர். யாளி, களம், திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருதுகளும் கவிஞர்கள் தின விருதும் பெற்றவர். திரைப்படப் பாடலும் எழுதி வருகிறார்.

இரவின் மடிமுழுதும்
உதிரும் கவிகள்
பொங்கிப் பிரவகிக்கும்
ஒத்தச் சொல்லில்
என்கிறார், இளம்பிறை.

இந்த ஒத்தச் சொல்லுக்காக, அகராதியில் சில பக்கங்களை விட்டுவையுங்கள்.

- அண்ணா கண்ணன்

Wednesday, April 07, 2004

கவிதாயினி மீனாட்சி

மற்ற எழுத்து வடிவங்களைவிட கவிதை, மிகவும் உணர்வுமயமானது, செயற்கையும் பாவனைகளும் நிரவல்களும் இல்லாமல் மென்மையான - உண்மையான உணர்வுகளைத் தொடர்ந்து தக்கவைப்பது, கவிஞருக்குப் பெரும் சவால். இதில் தோல்வி அடைகிறபோதுதான் கவிஞர்கள், வார்த்தை விளையாட்டுகளிலும் உருவ-உத்தி வேறுபாடுகளிலும் கவனம் செலுத்தி, ஈடுகட்டப் பார்க்கிறார்கள். இத்தகைய படைப்புகள், இரசமிழந்த கண்ணாடியைப் போல் வாசகர் முன்னால் சரணடைகின்றன.

நீண்ட காலமாக எழுதுவது என்பது வேறு. நீண்ட காலமாய்க் கவிஞராய் வாழ்வது என்பது வேறு. அவ்வகையில் கடந்த 35 ஆண்டுகளாகத் தானே ஒரு கவிதையாக வாழும் அரிய பிறவி, மீனாட்சி.

சொற்கள் அல்லாத ஓசைகளைக் கவிதையில் பயன்படுத்த ஓர்அசாத்திய திறமை வேண்டும். நம் கவிஞர்கள், "ஏ இந்தியனே', "ஓ நண்பனே' என "ஏ, ஓ' என்ற ஓசைகளால் கவிதையைச் செயற்கையாக்கி இருப்பதை நாம் அறிவோம். "அடடா', "அடே', "டாய்...' என ஏராளமான நாடகத்தன்மை மிக்க ஓசைகள் இங்கு புழங்குகின்றன. ஆனால், மீனாட்சியின் கவிதைகளில் ஓசைகள், மிக இயல்பாய் இடம் பெற்றுள்ளன.

நான் ஒரு அற்பப் புழு..../அலகால் அரிசியைக் கொத்தி/பாலையும் குடித்தேன்./பம் பம் பம்பம்..../ சங்கொலிப் பாதையில்/ சங்கிலி உடைத்துப் பறக்கிறேன்/ நானும் பறக்கிறேன்

-இதில் பம் பம் பம்பம் என்ற ஓசை, கவிதைக்கு உற்சாகத் தன்மையை ஊட்டிவிட்டது.

கண்ணாடிகூட கண்சிமிட்டுமா?/எனக்குள்ளே தத்தீம் தீம் தீம்/ தீபம் நின்றது / ஊய் ஊய்...

என்பதிலும்

இனி சங்கீதமே நம் துணை/ குடிசைக்குள்ளும்/ வஸந்த மோஹன ஹம்ஸத்வனிகள்/ பல்லவி பூரிப்புகள்/ காந்தார ககன ஜோர்கள்/ நிஷாத நிச்சயங்கள்/ கப கப நீ/ கப கப ஸா

என்பதிலும்

ஸரி கம பத நிஸ/விமர்சகர்களே/ என் மெளன எல்லைக்குள்/கணை தொடுக்காதீர்கள்/ ஸநி தப மக ரிஸ/ இளைப்பாறுங்கள்/ இன்னும் சிறிது நேரம்
என்பதிலும்

காசுக்குப் புன்னகைக்கும் /ஆயா தள்ளிவரும் / இரும்பு வண்டியிலே/மகவைக் கிடத்திவிட்டு / டாடா சொல்லுகிறாள்/ பெற்றுப் போட்டவள்./ ஆகாச வீதியிலே/அன்னை முகம் தேடுகிறான் / தேவாரம் பாடாத / ஞான சம்பந்தன் /குயிலி சொல்கிறது / குக்கூ கூயி/குக்கூ கூயி

என்பதிலும்

முதிர் அந்தியின் வானம்/தழல் துண்டம்/ புரட்சியின் சின்னம்/நறுக்..../ பாச்சைத் தாவல்/

என்பதிலும்

என் மெளனங்களை மேடையாக்கி /மரபுத் தூபப் புகையெழுப்பி/புனிதக் கூண்டுகளை வடிக்கிறவர்களே!/ நான் நிமிர்ந்தெழும் நல்லோரையில்/ இந்தப் பிரமிடுகள் எல்லாம்/என் சுட்டுவிரல் குடைகளே! /தத்தரிகிட தத்தரிகிட தித்தாம்

என்பதிலும்

சின்னஞ்சிறு ஓசை அலகுகள், கவிதைக்கு அபாரமான சுவையை அளிக்கின்றன.

புதுமையின் மீது நாட்டமும் தீவிரமான தேடலும் இல்லாத கவிதை, எளிதில் வீழ்ச்சியடையும். ஆனால், மீனாட்சியின் கவிமனம், குழந்தையின் குதூகலத்தோடு இவ்வுலகின் புதிய தரிசனங்களை நம் முன் விரிக்கின்றது.

தருமன் கைராட்டை/ இயங்கிய இழுப்பில் /பருத்திக் கம்பி முண்டு முடிச்சாய்/தண்டில் கொண்டை சுற்றியது./அருகே,/கொண்டையவிழ்ந்த அரையாடைப்/பாஞ்சாலி / நெசவுக்காரக் கண்ணனைத்தான் /கூவி அழைத்தாள்

என்ற உருவகம், தனித்துவம் மிக்கது.

வயிற்று நோவில் /துடிக்கும் தவளை /சொத்தைப் பல்லால் /பாம்பின் அவதி

என்பதிலாகட்டும்

கார்த்திகை விளக்கு /இருட்டுக்குப் பொட்டு

என்பதிலாகட்டும்

அம்மா என்ன செய்வாள்? /பிஞ்சு முகம் படிப்பாள் /கவிதைகள் உதட்டில் எழுதுவாள் /காவியம் கண்ணில் பேசுவாள் /கைக்குள் உலகம் சேர்ப்பாள் /நெஞ்சுக்குள் உயிர் வளர்ப்பாள் /அம்மா /அம்மம்மா

என்பதிலாகட்டும்

பொன்வண்டே /எத்தனை அழகு நீ /உன்னை உன் அழகை /ஓவியமாய் எழுதமாட்டேன் /குரல் கூட்டிப் பிரபந்தங்கள் பாடமாட்டேன் /உன் பொன்னை நூலாக்கி/இழையோட விடமாட்டேன்

என்பதிலாகட்டும் மீனாட்சியின் அபூர்வ மான கவித்துவம், நம்மைச் சிலிர்க்கச் செய்கிறது.

மதுரை நாயகியே... /உன்னருகே ஓடிவரும் /உன் மகளை /உன் மகனே /வழிவம்பு செய்கின்றான். /கோயிலிலும் காப்பில்லை /உன் காலத்தில் - அழகி நீ! / எப்படி உலாப் போனாய்?

என்ற பிரபல கவிதைக்குச் சொந்தக்காரர், இவர். உலக உயிரினங்களைத் துன்புறுத்தும்- கொல்லும் கொடுமையை மிக எளிய சொற்களால் மிக மிக ஆழமாகக் கண்டிக்கிறார். மின் விசிறியில் அடிபட்ட குருவிக்கு இரங்கல் பாடுகிறார். அணு குண்டு பரிசோதனையிலிருந்து, பெண்களுக்கெ திரான வன்முறைகள் வரை உலகின் பற்பல பிரச்சி னைகளைத் தீவிரமாக கண்டிக்கிறார். ஜெர்மனியிலிருந்தபோது

விஜய் கண்ணா, உன் கரடிக் குட்டியே தேவலை

என நட்புடன் பேசியுள்ளார்.

வானத்தில் பூரண நிலா /மூங்கிலில் ஏழு ஸ்வரம் /முத்தமிடாத உதடுகள்

எனக் காதல் உணர்வையும் ஏற்றமுறப் பாடுகிறார்.

நெருஞ்சி (1970), சுடுபூக்கள் (1978), தீபாவளிப் பகல் (1983), மறுபயணம் (1998)

ஆகிய நான்கு கவிதை நூல்களைப் படைத்தவர்; ஜெர்மனி, பிரான்சு, ஹாலந்து போன்ற பல நாடுகளுக்குப் பயணித்தவர்; புதுவை ஆரோவில்லில் இளைஞர்கள் கல்வி மையம் என்ற 24 மணிநேரப் பள்ளியை நடத்துபவர்; ஆரோவில் கிராமச் செய்தி மடல் என்ற மாத இதழின் ஆசிரியர்; வினோபாஜி ஆசிரமத்தின் மூன்று சகோதரிகளுடன் சேர்ந்து ஆயிரம் கிராமங்கள் நடந்து சென்றவர்; தன்னை ஓர் உலகப் பிரஜையாக அறிவித்துக்கொண்டிருக்கிறார்.

நானே பாரதி /என் காலத்தின் கவிச் சக்கரவர்த்தினி /முன் எப்போதும் போலவே பேசுகிறேன் /என் கவிதை /சோதி மிக்க நவகவிதை/இந்த விதை களர் நிலங்களிலும் /கிளர்ச்சி செய்யும் /மண் கீறும் / ஊற்றடைப்புகளை-வெடியெனத் தகர்க்கும்

என்கிறார், மீனாட்சி.

ஆஹா, வந்தனங்கள் பேரரசி!

- அண்ணா கண்ணன்

Tuesday, April 06, 2004

கவிதாயினி மாலதி மைத்ரி

கவிதையில் எத்தகைய சொற்கள் இடம் பெறலாம் என்ற கேள்வி, ஆதிகாலம் தொட்டு நம்முன் நிற்கிறது. அகத்துறைப் பாடல்களில் தலைவன்-தலைவி பெயர் சுட்டக் கூடாது என்ற மரபு, இன்றுவரை நீடிக்கிறது, ஆனால், கொச்சைச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நெறிமுறை கைவிடப்பெற்று விட்டது. வேற்று மொழிச் சொற்களைத் தவிர்க்கும் வழக்கம், தொலைந்தே போயிற்று. மங்கல வழக்கு, இடக்கரடக்கல் ஆகிய வற்றைப் பலர் பின்பற்றுவ தில்லை. புதுக்கவிதை தோன்றிய போது அது யாப்பிலிருந்து மட்டும் வெளியேற வில்லை; முந்தைய சிந்தனை, மரபு, வழக்கம், நெறி முறை பலவற்றி லிருந்தும் வெளியேறியது.

இந்த மாற்றத்தைத் தவறு என்று கூற இயலாது. இது, மாபெரும் சமூக மாற்றத்தின் ஓர் அறிகுறி. இந்தச் சமூக மாற்றத்தின் அடையாளமாக, நம் கண் முன் உலவும் சான்றாகத் திகழ்கிறார், மாலதி மைத்ரி (1968). 'சங்கராபரணி', 'நீரின்றி அமையாது உலகு' என்ற இவரது கவிதைத் தொகுப்புகள் இரண்டிலும் முதல் பக்கத்தில் தான் பிறந்த ஆண்டை பெரிய அளவு எண்களில் வெளியிட்டுள் ளார். வயதைச் சொல்வதற்குத் தயங்கும் பெண்களின் மனோ பாவத்தை இவர் முதல் நோக்கி லேயே உடைக்கிறார்.

தமிழ்ப் படைப்புலகைப் பொறுத்தவரை பாலுறுப்பு களின் பெயர்களைப் பயன் படுத்தியோர், மிகக் குறைவு. அப்படியே பயன்படுத்தினாலும் பெண்ணின் மார்பகங்களை. மட்டுமே பலரும் எழுதியுள்ளனர். இடையை வர்ணித்தாலும் அதற்குக் கீழே செல்ல எவரும் துணிந்ததில்ல. இப்போது துணிந்துள்ள சிலருள், ‘யோனி’ என்ற சொல்லை பல முறைகள் பயன்படுத்தியுள்ளவர், மாலதி மைத்ரி.

இது, அதிர்ச்சி மதிப் பீட்டுக்காக என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சொல், அதிர்ச்சி அளிக்கிறது என்பதே சமுதாயத்தின் பலவீனத்தைப் பறைசாற்றவில்லையா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு அதிர்ச்சி அடைவது?

கடந்த சில ஆண்டுகளாக எயிட்ஸ் விழிப்புணர்வு அமைப்புகள், ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளன. ஆணுறை, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, பால்வினை நோய்... போன்ற சொற்களைத் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் மூலம் புழக்கத்துக்கு அவை கொண்டுவந்துள்ளன. பள்ளி களில் பாலியல் கல்வி வழங்க முயற்சி தொடங்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு சொல்லைக் கண்டு மிரட்சி அடைவது, வளரும் சமுதாயத் திற்கு அழகில்லை.

எந்த ஒரு சொல்லும் உரிய இடத்தில் பொருத்தமாகக் கையாளப்பெற்றுள்ளதா என நாம் பரிசோதித்துக்கொள்ள லாம். பொருத்தமற்ற இடத்தில் திணிக்கப்பெற்றிருந்தால் கேள்வி எழுப்பலாம். அதில் நியாயம் உண்டு. அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதே தவறு என்பதில் நியாயமில்லை.

ஏதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி என்னைவிட்டு விலகிச் செல்லத் தொடங்கின....

யோனி ஒரு பட்டாம் பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்

'விஸ்வரூபம்' என்ற இந்தக் கவிதையில் பூமியே ஒரு பெண்ணாக மலர்ந்திருக்கிறது. அதன் பல்வேறு அக-புற மாற்றங்கள் குறியீடுகளாகப் பதிவாகியுள்ளன.

ஔவையின் மகள் நான்
பல காலங்களையும் வெளிகளையும்
பலவித உடல்களினூடாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் ஔவையின்
மகள் நான்.

ஔவையின் யோனி விரிந்து
இரண்டாயிரமாண்டு கால வெளியையும் மொழி வெளியையும் உள்வாங்கி
என்னைப் பிதுக்கித்தள்ள
என் நகத்தாலேயே தொப்பூழ்க் கொடியைக் கிள்ளித் துண்டித்துவிட்டு
குருதியீரம் காயாமல் நடந்துபோகிறேன்.

இங்கும் 'யோனி' என்ற சொல், குறியீ டாகவே பயன்படுத்தப்பெற்றுள்ளது. இதற்குப் பதில் ‘கருப்பை’ என்ற சொல்லைக் கையாண்டிருக் கலாம் என்றாலும் சொல்லுகின்ற உணர்வின்- செய்தியின் வேகத்தைக் கூட்ட, இப்படி நேரடி யாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக் கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக....
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.

ஆண் எப்படி இருந்தாலும் பெண் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவனைப் பாதுகாத்து வருகிறாள். இதை எதிர்ப்பதே இக்கவிதையின் அடிப்படையாக உள்ளது. எனினும் இதில் ஏராளமான முரண்களும் கேள்விகளும் குழப்பங் களும் நிறைந்துள்ளன. ‘வாசல் யோனியாக’ என்ற இரு சொற்களால் கவிதை, மிகச் சிக்கலாகி விட்டது. அவற்றிலிருந்து அலை அலையாக எழும் கேள்விகளுக்குக் கவிதைக்குள் விடை இல்லை.

பாலியல் சொற்களில் மரபை மீறியது போலவே இடக்கரடக்கலையும் இவர் பொருட் படுத்தவில்லை. ‘மலம் கழித்தல்’ எனச் சொல்லாமல். ‘வெளிக்குப் போதல்’, . ‘இரண்டுக்குப் போதல்’. எனச் சொல்வது முன்னோர் வழக்கு. ஆனால், மாலதி, இதை மீறியுள்ளார்.

'அத்தையுடன் ஆற்றுக்குக் காலையில்
மலம் கழிக்கப் போகையில்' என்றும்

‘ அரவமற்ற புற்றருகில்
தங்கையுடன் மலம் கழிக்க’ என்றும்

வெளிப் படையாக எழுதியுள்ளார். ‘காலைக் கடன்’ என்ற நல்ல சொல் இதற்கு இருக்கிறதே!

சொற்பயன் பாட்டில்-வெளிப்பாட்டில் சில குறைகள் இருப்பினும் மாலதி மைத்ரியின் கவித்துவம், பிரமாதமாக ஒளி வீசுகிறது; பிரமிக்க வைக்கிறது.

நீருக்கடியில் கிடக்கும் ஒவியம் போல்
அசைந்து கொண்டிருந்தது தூரத்தில் வீடு என்றும்

என் ஆன்மாவைப் போன்ற
கறுத்த கசந்த தேநீரைக் குடித்துக்
கொண்டிருக்கிறேன் என்றும்

மண்ணில் பதிந்த உடைந்த கண்ணாடியாகக்
கிடந்தது கோடை ஆறு என்றும்

தோல் பேரீச்சையாய் ஒடுங்கி என்றும்
வார்த்தைகள் உரசி
பற்றும் மொழிக்காடு என்றும்

நாய் தலைக்குள் சிக்கி
பானை தவிக்கிறது என்றும்

நதி, கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக் கிடக்க என்றும்

ஒளிப் பருந்து
உறக்கத்தைக் கோழிக்குஞ்சென
ல்விக்கொள்கிறது என்றும்

வரிசை தப்பிய எறும்பு ஒன்று....
தலைதூக்கிப் பார்த்து
என்னைப் போலவே சிரிக்கிறது
வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு என்றும்

எதிரே கடல் அடர்நீலத்தில்
குழந்தையின் கையில் கிடைத்த
தண்ணீர்க் குவளையென
தளும்பிக் கொண்டிருக்கிறது என்றும்

ஒரு மீன் குஞ்சு
துள்ளி எழுந்து நழுவுகிறது
அந்தரத்தில் என்றும்

அற்புதமான கவிதைகளை மின்னல் தெறிப் புடன் படைத்துள்ளார்.

மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயற்கை, பேராட்சி செய்கிறது. தன்னை இயற்கையின் கூறுகளாக, தானே இயற்கையாக, பிரபஞ்சத்தின் செல்ல மகளாகத் தன்னை நினைக்கிறார். இவரின் உருவகங்களில் விரியும் பிரம்மாண்டம், சுவை மிகுந்த கவியாற்றலுடன் மிளிர்கின்றது.

புதுவையில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றும் இவர், சங்கராபரணி ஆற்றங்கரையில் பிறந்தவர். ‘கிரணம்’ பதிப்பகத்தின் பதிப்பாளர். பெண் விடுதலைக்குத் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்.

கவித்துவமான ஒரு வரி
மற்ற எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது
தெய்வம்போலத் திடீரென மழை கொட்டுகிறது

என்கிறார், மாலதி மைத்ரி.

இந்த மழைநீரை அவசியம் சேமிக்க வேண்டும்.
கவிதாயிணி மாலதி மைத்ரி

கவிதையில் எத்தகைய சொற்கள் இடம் பெறலாம் என்ற கேள்வி, ஆதிகாலம் தொட்டு நம்முன் நிற்கிறது. அகத்துறைப் பாடல்களில் தலைவன்-தலைவி பெயர் சுட்டக் கூடாது என்ற மரபு, இன்றுவரை நீடிக்கிறது, ஆனால், கொச்சைச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நெறிமுறை கைவிடப்பெற்று விட்டது. வேற்று மொழிச் சொற்களைத் தவிர்க்கும் வழக்கம், தொலைந்தே போயிற்று. மங்கல வழக்கு, இடக்கரடக்கல் ஆகிய வற்றைப் பலர் பின்பற்றுவ தில்லை. புதுக்கவிதை தோன்றிய போது அது யாப்பிலிருந்து மட்டும் வெளியேற வில்லை; முந்தைய சிந்தனை, மரபு, வழக்கம், நெறி முறை பலவற்றி லிருந்தும் வெளியேறியது.

இந்த மாற்றத்தைத் தவறு என்று கூற இயலாது. இது, மாபெரும் சமூக மாற்றத்தின் ஓர் அறிகுறி. இந்தச் சமூக மாற்றத்தின் அடையாளமாக, நம் கண் முன் உலவும் சான்றாகத் திகழ்கிறார், மாலதி மைத்ரி (1968). 'சங்கராபரணி', 'நீரின்றி அமையாது உலகு' என்ற இவரது கவிதைத் தொகுப்புகள் இரண்டிலும் முதல் பக்கத்தில் தான் பிறந்த ஆண்டை பெரிய அளவு எண்களில் வெளியிட்டுள் ளார். வயதைச் சொல்வதற்குத் தயங்கும் பெண்களின் மனோ பாவத்தை இவர் முதல் நோக்கி லேயே உடைக்கிறார்.

தமிழ்ப் படைப்புலகைப் பொறுத்தவரை பாலுறுப்பு களின் பெயர்களைப் பயன் படுத்தியோர், மிகக் குறைவு. அப்படியே பயன்படுத்தினாலும் பெண்ணின் மார்பகங்களை. மட்டுமே பலரும் எழுதியுள்ளனர். இடையை வர்ணித்தாலும் அதற்குக் கீழே செல்ல எவரும் துணிந்ததில்ல. இப்போது துணிந்துள்ள சிலருள், ‘யோனி’ என்ற சொல்லை பல முறைகள் பயன்படுத்தியுள்ளவர், மாலதி மைத்ரி.

இது, அதிர்ச்சி மதிப் பீட்டுக்காக என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சொல், அதிர்ச்சி அளிக்கிறது என்பதே சமுதாயத்தின் பலவீனத்தைப் பறைசாற்றவில்லையா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு அதிர்ச்சி அடைவது?

கடந்த சில ஆண்டுகளாக எயிட்ஸ் விழிப்புணர்வு அமைப்புகள், ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளன. ஆணுறை, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, பால்வினை நோய்... போன்ற சொற்களைத் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் மூலம் புழக்கத்துக்கு அவை கொண்டுவந்துள்ளன. பள்ளி களில் பாலியல் கல்வி வழங்க முயற்சி தொடங்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு சொல்லைக் கண்டு மிரட்சி அடைவது, வளரும் சமுதாயத் திற்கு அழகில்லை.

எந்த ஒரு சொல்லும் உரிய இடத்தில் பொருத்தமாகக் கையாளப்பெற்றுள்ளதா என நாம் பரிசோதித்துக்கொள்ள லாம். பொருத்தமற்ற இடத்தில் திணிக்கப்பெற்றிருந்தால் கேள்வி எழுப்பலாம். அதில் நியாயம் உண்டு. அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதே தவறு என்பதில் நியாயமில்லை.

ஏதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி என்னைவிட்டு விலகிச் செல்லத் தொடங்கின....

யோனி ஒரு பட்டாம் பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்

'விஸ்வரூபம்' என்ற இந்தக் கவிதையில் பூமியே ஒரு பெண்ணாக மலர்ந்திருக்கிறது. அதன் பல்வேறு அக-புற மாற்றங்கள் குறியீடுகளாகப் பதிவாகியுள்ளன.

ஔவையின் மகள் நான்
பல காலங்களையும் வெளிகளையும்
பலவித உடல்களினூடாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் ஔவையின்
மகள் நான்.

ஔவையின் யோனி விரிந்து
இரண்டாயிரமாண்டு கால வெளியையும் மொழி வெளியையும் உள்வாங்கி
என்னைப் பிதுக்கித்தள்ள
என் நகத்தாலேயே தொப்பூழ்க் கொடியைக் கிள்ளித் துண்டித்துவிட்டு
குருதியீரம் காயாமல் நடந்துபோகிறேன்.

இங்கும் 'யோனி' என்ற சொல், குறியீ டாகவே பயன்படுத்தப்பெற்றுள்ளது. இதற்குப் பதில் ‘கருப்பை’ என்ற சொல்லைக் கையாண்டிருக் கலாம் என்றாலும் சொல்லுகின்ற உணர்வின்- செய்தியின் வேகத்தைக் கூட்ட, இப்படி நேரடி யாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக் கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக....
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.

ஆண் எப்படி இருந்தாலும் பெண் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவனைப் பாதுகாத்து வருகிறாள். இதை எதிர்ப்பதே இக்கவிதையின் அடிப்படையாக உள்ளது. எனினும் இதில் ஏராளமான முரண்களும் கேள்விகளும் குழப்பங் களும் நிறைந்துள்ளன. ‘வாசல் யோனியாக’ என்ற இரு சொற்களால் கவிதை, மிகச் சிக்கலாகி விட்டது. அவற்றிலிருந்து அலை அலையாக எழும் கேள்விகளுக்குக் கவிதைக்குள் விடை இல்லை.

பாலியல் சொற்களில் மரபை மீறியது போலவே இடக்கரடக்கலையும் இவர் பொருட் படுத்தவில்லை. ‘மலம் கழித்தல்’ எனச் சொல்லாமல். ‘வெளிக்குப் போதல்’, . ‘இரண்டுக்குப் போதல்’. எனச் சொல்வது முன்னோர் வழக்கு. ஆனால், மாலதி, இதை மீறியுள்ளார்.

'அத்தையுடன் ஆற்றுக்குக் காலையில்
மலம் கழிக்கப் போகையில்' என்றும்

‘ அரவமற்ற புற்றருகில்
தங்கையுடன் மலம் கழிக்க’ என்றும்

வெளிப் படையாக எழுதியுள்ளார். ‘காலைக் கடன்’ என்ற நல்ல சொல் இதற்கு இருக்கிறதே!

சொற்பயன் பாட்டில்-வெளிப்பாட்டில் சில குறைகள் இருப்பினும் மாலதி மைத்ரியின் கவித்துவம், பிரமாதமாக ஒளி வீசுகிறது; பிரமிக்க வைக்கிறது.

நீருக்கடியில் கிடக்கும் ஒவியம் போல்
அசைந்து கொண்டிருந்தது தூரத்தில் வீடு என்றும்

என் ஆன்மாவைப் போன்ற
கறுத்த கசந்த தேநீரைக் குடித்துக்
கொண்டிருக்கிறேன் என்றும்

மண்ணில் பதிந்த உடைந்த கண்ணாடியாகக்
கிடந்தது கோடை ஆறு என்றும்

தோல் பேரீச்சையாய் ஒடுங்கி என்றும்
வார்த்தைகள் உரசி
பற்றும் மொழிக்காடு என்றும்

நாய் தலைக்குள் சிக்கி
பானை தவிக்கிறது என்றும்

நதி, கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக் கிடக்க என்றும்

ஒளிப் பருந்து
உறக்கத்தைக் கோழிக்குஞ்சென
ல்விக்கொள்கிறது என்றும்

வரிசை தப்பிய எறும்பு ஒன்று....
தலைதூக்கிப் பார்த்து
என்னைப் போலவே சிரிக்கிறது
வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு என்றும்

எதிரே கடல் அடர்நீலத்தில்
குழந்தையின் கையில் கிடைத்த
தண்ணீர்க் குவளையென
தளும்பிக் கொண்டிருக்கிறது என்றும்

ஒரு மீன் குஞ்சு
துள்ளி எழுந்து நழுவுகிறது
அந்தரத்தில் என்றும்

அற்புதமான கவிதைகளை மின்னல் தெறிப் புடன் படைத்துள்ளார்.

மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயற்கை, பேராட்சி செய்கிறது. தன்னை இயற்கையின் கூறுகளாக, தானே இயற்கையாக, பிரபஞ்சத்தின் செல்ல மகளாகத் தன்னை நினைக்கிறார். இவரின் உருவகங்களில் விரியும் பிரம்மாண்டம், சுவை மிகுந்த கவியாற்றலுடன் மிளிர்கின்றது.

புதுவையில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றும் இவர், சங்கராபரணி ஆற்றங்கரையில் பிறந்தவர். ‘கிரணம்’ பதிப்பகத்தின் பதிப்பாளர். பெண் விடுதலைக்குத் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்.

கவித்துவமான ஒரு வரி
மற்ற எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது
தெய்வம்போலத் திடீரென மழை கொட்டுகிறது

என்கிறார், மாலதி மைத்ரி.

இந்த மழைநீரை அவசியம் சேமிக்க வேண்டும்.