தாய்வழிச் சமூகத்திலிருந்து மாறிய பிறகு, அனைத்தும் ஆண்மையமாகிவிட்டன. முக்கியமாக மொழி, ஆணின் பார்வையில் கட்டமைக்கப் பெற்றுள்ளது. இதனால்தான் விதவை, வைப்பாட்டி, அமங்கலி, சக்களத்தி... என ஏராளமான சொற்கள், பெண்ணுக்கு மட்டுமே உள்ளன. பெண், "ள்' விகுதி பெறுவதும் ஆண், "ர்' விகுதி பெறுவதும் இதனால்தான். "ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்' என்ற சிந்தனை, இக்காலத்தில் வலுப்பெற்றுள்ளது. தங்களை இரண்டாம் தரமாக்கும் மொழிக் கட்டுமானத்தை உடைப்பதில் இப்போது பெண்களுக்கு ஆர்வம் மிகுந்துள்ளது. "குடிமகன்' என்ற சொல்லுக்கு மாற்றாகக் "குடிமகள்' என்ற சொல்லைத் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அண்மையில் அறிவித்தது நினைவிருக் கலாம். அவ்வகையில் "சூரியன்' என்ற சொல்லுக்கு மாற்றாகச் "சூரியாள்' என்ற சொல்லை அறிமுகப்படுத் தியுள்ளார், திலகபாமா.
சூரியனுக்கும் கிழக்கே, சூரியாள், சிறகுகளோடு அக்னிப் பூக்களாய்..., எட்டாவது பிறவி ஆகிய கவிதை நூல்களைப் படைத்துள்ள இவர், பெண்ணியத் துக்காகப் போர்க்குரல் எழுப்பி வருகிறார். ஆனால், பெண்ணியம் என்ற வகைப்பாட்டை இவர் விரும்பவில்லை.
திலகபாமாவின் சில சிந்தனைகள் அதிரடி யானவை. "பிடிக்காமல் சேர்ந்து வாழவேண்டாம், பிரியுங்கள்' என்ற தொனியில்
நிறுத்தப்படட்டும் பயணங்கள் / இணையாத இணையாய் /
இல்லாத வாழ்வு நிறுத்தி / அச்சு முறித்து/துளிர்க்கட்டும் சக்கரங்கள் / பூக்களாய் என்கிறார்.
மற்றொரு கவிதையில்,
பத்தினித் தனங்களுக்காக / பட்டினி கிடக்க தயாராயில்லாது /
தாமரை ஒன்று தரையிறங்கி /
தரையோடு வேர்விட்டு/தாகம் தணியும் என்கிறார்.
வேறொரு கவிதையில்
காடுவிட்டுத் தொட்டிக்குள் வந்தாச்சு / பூப்பது வெற்றியென பூத்து /
சிரித்துத் தொலைக்கிறேன்.
தொட்டிச் செடிகள் / இடம் பெயராது / நம்பிக்கையுடன் நீ இருக்க.
இரவுகளில் என் / இனிமை தேடி நான் பயணிப்பேன் / நகரும் தொட்டிச் செடியாய் என்கிறார்.
இது, சாதாரணப் பெண்ணின் சிந்தனை அன்று; எதிர் நீச்சல் போடுகிற - எல்லை அறுக்க விரும்பும் தென்றலின் பார்வை.
கனவுகளை இப்போதெல்லாம் / நானே கலைத்துக் கல்லாகின்றேன் /
நிறைந்திருந்த கனவுகளைக் காலி செய்து விட்டு / வெறும் மடியானாலும் / நனவுகளோடு பயணிக்கிறேன் / கனமில்லாது மடி லேசாயிருக்கிறது.
கற்பனை வாழ்வல்லாது எதார்த்தத்தை வலியுறுத்தும் இந்த வரிகள், வழக்கத்துக்கு மாறானவை.
காலங்காலமாய் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பதாக ஒரு கூற்று, வழங்கி வருகிறது. இதை விமர்சிக்கிறார், திலகபாமா.
என் தோல்விகளின் தரிசனங்களாய் / ஒளிர்ந்து கொண்டிருக்கும் நீ /
உன் வெற்றிகளின் பின்னால் நான் / இருப்பதாய் / சொல்லித் திரிகிறாய்.
மலர் வளையங்களை என் / காலடியில் வைத்துவிட்டு /
தந்த மலருக்காக / தம்பட்டம் அடிக்கிறாய்
இரண்டாயிரத்து பதினைந்துகளுக்கு / நான் போனதாக வருத்தப்படும் நீ /
எனைப் பின்னோக்கி வரச் சொல்கிறாய் / இணையாய் இருக்கவென்று.
இது, மிக அபூர்வமான வெளிப்பாடு, ஆண் முன்னாலும் பெண் பின்னாலும் இருப்பதான கற்பிதத்தை இக்கவிதை உடைக்கிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, ஆண்கள்தான் இன்னும் முன்னேறவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
புதிய பார்வைகள் தரிசனமாகின்றன / கைகள் பிடித்திருந்த வட்ட ஸ்டேரிங் /
இதுவரை இருந்த செக்கு மாட்டுப் / பாதையை நீள் கோட்டுக்கு மாற்றிவிட / ஆக்ஸிலேட்டரில் என் கால்களின் அழுத்தம்
என்கிற வரிகளில், வட்டப் பாதையிலிருந்து தடையற்ற நேர்ப்பாதைக்கு இவர் வந்துள்ளது தெரிகிறது.
தொன்மக் கூறுகளைத் திறமாகப் பயன்படுத்துவதில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார், திலகபாமா.
உனக்கு எனக்காய் நான் / கணக்கு பார்க்காது நீ / கணக்கு பார்க்கையில் /
கழுத்தை அலங்கரித்த / சவரன் தாலி சாபம் பெற்ற / சந்திரமதி தாலியாய் /
எல்லார் கண்ணுக்குத் தெரிந்தாலும் எனக்கு மட்டும் தெரியாது என்றும்
இராமன் கால்பட்டும் / துணை துணை வராததால் /
கல்லாய்க் கிடந்து / தவம் செய்கிறாள் தனை /
நேசித்த இந்திரனை / நித்ய இணையாய் வேண்டி என்றும்
சிகண்டியென மாறிய / அம்பையாய் / எடுத்த பிறவி பயன் பெற / எடுப்பேன் புதுப்பிறவி என்றும்
மதுரை எரித்த கண்ணகியின் / மார் அக்னியின் எச்சம் / எடுத்து வைத்தேன் / மாதவி நாடிப் போகும் / கோலவன்களை எரிக்க என்றும்
கணவனின் குரலுக்கு / கை நழுவ விட்டு வந்த /
அதிரும் அரவை இயந்திரம் / தூக்கியடித்து சிந்திப் போக / என் தன்மானங்களும் கனவுகளும் / வள்ளுவன் குரலுக்கு வாசுகி விட்டு / வந்த வடக்கயிற்றுடன் / தூக்கிலிட்டு கிடக்கும் என்றும்
தாயாரிடம் வளராது / தாதியரிடம் வளர்ந்த / அன்றைய கார்த்திகைக் குழந்தைகளாய் /
இன்றைய இன்குபேட்டர் / குழந்தை என்றும்
ஆதி சிவனார் முதல் / தாய்வீடு அனுப்புதல் ஒரு /
தண்டனையாகவும் / அனுப்பாதிருத்தல் ஒரு / சாபமாயும் சாதித்த திருவிளையாடலாய் என்றும்
காலடி பட்டதும் / கை கூப்பி எழுந்திடாத / அகலிகையிடம் உள்ளது ஆண்மை.
கணையாழிக்கு காத்திராது / காதலைக் கண்களில் சொல்லும் /
சகுந்தலையின் இருப்பு ஆண்மை.
சூடிக் கொடுத்து சூடிக் கொள்ளவும் / சூட்டிக் கொள்ளவும் காத்திராத /
ஆண்டாளின் ஆயுதம் ஆண்மை.
குமரிக்கரையில் / அலைகளின் மந்திர உச்சரிப்பில் /
தனக்காக சிவனாரை தவம் கிடக்க / வைக்கும் கன்னியில் உள்ளதாண்மை என்றும்
இவர் பயன்படுத்தியுள்ள தொன்மக் கூறுகள், வீரியமிக்க உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
பட்டிவீரன்பட்டியில் பிறந்து, சிவகாசியில் வசித்து வரும் திலகபாமா, மருத்துவ நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். பாரதி இலக்கியச் சங்கச் செயலாளராக விளங்குகிறார். அண்மையில் "மரத்தடி' என்ற இணையக் குழு நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு வென்றுள்ளார். இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அடுத்து என்ன வரும் / அறியாது எனைக் கடையும் /
தேவர்களும் அசுரர்களும் / நானே அமுதம் என்றறியாது என்கிறார், திலகபாமா.
உஷ்ஷ்! இரகசியங்களை வெளியே சொல்லாதீர்கள்.
- அண்ணா கண்ணன்
No comments:
Post a Comment