என் நூல்கள் சில...

கடற்கரையில் புதிய காற்று

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு, மெரினா கடற்கரையில் 2005 ஏப்ரல் 9ஆம் தேதி மாலை நடந்தது. அதே கடற்கரையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடற்கரைக் கவியரங்கம் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி சுமாருக்கு இது நடக்கும். வந்திருக்கும் கவிஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறிய வட்டமாகவோ, பெரிய வட்டமாகவோ அமர்ந்து கவிதை வாசிப்பார்கள். இதைப் பொன்னடியான், தமிழ்க் கவிஞர் மன்றம் என்ற அமைப்பின் மூலம் நடத்தி வருகிறார்.

சிலம்பொலி தமிழ்த்தரணி என்ற அமைப்பும் இத்தகைய நிகழ்ச்சியை மாதத்தின் ஒவ்வொரு பெளர்ணமி நாளன்றும் நடத்தியது. முழுநிலாக் கவியரங்கம் என்று பெயர். இவை தவிர இன்னும் பல அமைப்புகளும் பல தேதிகளில் பல சிலைகளுக்குப் பின் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தின; நடத்தி வருகின்றன.
இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, எளிது. அழைப்பிதழ், சுவரொட்டி, அரங்கம், ஒலிவாங்கி, ஒலிபெருக்கி, நாற்காலி, தேநீர், இனிப்பு / காரம் என எதுவும் தேவையில்லை. முதல் முறை நடத்திவிட்டு ஒரு பத்து அல்லது பதினைந்து பேர் வந்தால் போதும். அதே கூட்ட முடிவில் அடுத்த மாதம் என்று நடைபெறும் என்று தெரிவித்து விடுவார்கள். பெரும்பாலும் அதே நாள் (இரண்டாம் சனிக்கிழமை/ மூன்றாம் சனிக்கிழமை/ கடைசி ஞாயிறு...) நடக்கும்.

நிகழ்ச்சி எப்படி நடந்தாலும், எவ்வளவு பேர் வந்தாலும் அமைப்பினர் சிலர், அதுகுறித்து செய்தி இதழ்களில் ஒரு குட்டிச் செய்தி வருவதில் குறியாக இருப்பார்கள். இன்றைய நிகழ்ச்சிகளில் செய்தி வரவேண்டும் என்பது அவர்களின் துடிப்பாய் இருக்கும். ஏனெனில் நிகழ்ச்சிக்குப் பலர் வராவிட்டாலும் இன்றைய நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள். எனவே ஒரு நல்ல அறிமுகம் இருக்கும்.

பெரும்பாலும் வந்திருப்பவர்களிலேயே யாரையாவது திடீர்த் தலைமை தாங்க அழைப்பார்கள். பல வகையான வேடிக்கைகள் அங்கு அரங்கேறுவது வாடிக்கை. அவை பற்றியெல்லாம் இப்பொழுது வேண்டாம்.
சென்னை வலைப்பதிவாளர் சந்திப்புக்கு வருவோம். 'இகாரஸ்' பிரகாஷ் கணக்குப்படி 23 பேர் வந்திருந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இத்தகைய கடற்கரைக் கூட்டத்திற்குச் சென்றேன். ஆர்.வெங்கடேஷ், பத்ரி சேஷாத்ரி, மாலன், 'இகாரஸ்' பிரகாஷ், 'அம்பலம்' சந்திரன், ராமச்சந்திரன் உஷா, மதுமிதா, சுரேஷ் கண்ணன், 'சுவடு' ஷங்கர், 'ரஜினி' ராம்கி உள்ளிட்ட ஏற்கெனவே அறிமுகமான, முகம் தெரிந்த நண்பர்கள் பலரைக் கண்டேன்.

முகம் தெரியாவிட்டாலும் இணையம் வழியாக அறிந்த புதிய நண்பர்கள் பலரைக் கண்டேன். அமுதசுரபி மார்ச்சு '05 இதழில் பங்குச் சந்தை உள்ளும் புறமும் என்ற கட்டுரை எழுதிய தமிழ்சசியை நேரில் கண்டேன். அமுதசுரபி ஏப்ரல் இதழில் நாட்டின் மின்தேவைக்கு அணுவாற்றல் என்ற அரு¨மான கட்டுரையை எழுதிய எல்.வி.கிருஷ்ணனின் மகன் சத்யநாராயணன், வளமையான தமிழை வலியுறுத்தி வரும் இராம.கி. அய்யா, வித்தியாசமான பெயர் கொண்ட 'டோண்டு' ராகவன், 'சைவர் பிரம்மா' எஸ்.கே., அருணா சீனிவாசன், நாமக்கல் ராஜா, அருள்செல்வன், சந்தோஷ் குரு, வா.மணிகண்டன், 'உருப்படாதது' நாராயணன், சந்தையாக்க நிபுணர் மீனாக்ஸ் ஆகியோரை இங்குதான் முதன்முதலில் கண்டேன். அருள்செல்வனை இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம்!

என்னைப் பொறுத்தவரை இது, மிகவும் பயனுள்ள சந்திப்பு. இதன் மூலம் நட்பு வளரும் வாய்ப்பு உள்ளது. அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டது, நல்ல முறை. ஆனால், ஒலிவாங்கி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.

நான் கவனித்த, என் நினைவில் உள்ள சில உரையாடல்கள் பின்வருமாறு:
"1. தனிப்பட்ட பதிவுகளாகவே உள்ளன; சமூகப் பதிவுகளாக இல்லை. 2. பதிவுகளால் நேரம் வீணாகிறது. பயன் இல்லை." - மாலன்
"வலைப்பதிவுகளைப் பயனுள்ளதாக்க வேண்டும். பின்னூட்டத்தில் பாராட்டுவோர், கூகுள் ஆட்சென்ஸைச் சொடுக்கினால் அதன் மூலம் வலைப்பதிந்தவருக்குப் பண வருவாய் வர வாய்ப்பு உள்ளதா?" - அண்ணாகண்ணன்

"இல்லை. அப்படிச் சொடுக்கக் கூடாது. அதன் மூலம் பணத்தைப் பெருக்க முடியாது. வருவாய் கருதாமல் விக்கிபீடியா போன்ற ஒரு கலைக் களஞ்சியத்தில் சேர்க்கும் வகையில் சிறப்பானவற்றை, புதிய துறைகளைப் பற்றிப் பதியவேண்டும்." - பத்ரி

"பின்னூட்டங்களில் அடிப்படை நாகரிகம் இல்லை." - ஆர்.வெங்கடேஷ்.

"தமிழ்மணம் தளத்தால் காசிக்கு நிறைய செலவாகிறது. அதைப் பயன்படுத்தும் நாம் அந்தச் செலவில் பங்குகொள்ளவேண்டும்." - எஸ்.கே.

"எதிர்காலத்தில் வலைப்பதிவு இலவசமாகக் கிடைக்காது. வீடியோ பிளாக்ஸ் வருகிறது." - நாராயணன்.

"பெண்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை. தோழியர் கூட்டு வலைப்பதிவிற்கு யாரேனும் உங்கள் பதிவில் இணைப்புக் கொடுத்துள்ளீர்களா?" - ராமச்சந்திரன் உஷா

"இதை மேல்கைண்டு சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்"- ரஜினி ராம்கி.

"1. அப்படிக் கொடுத்துவிட்டால் என்ன சாதித்துவிட்டதாக நினைக்கிறீர்கள்? 2. தொழில்நுட்பத்தைப் பற்றியே அதிகம் பேசுகிறீர்கள். உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசுங்கள்" - சுரேஷ்கண்ணன்

"பின்னூட்டத்தை ஒருவர் நீக்கியதால் தனி வலைப்பதிவு தொடங்கினேன்." - வா.மணிகண்டன்.

"இயல்பியல், மட்டுறுத்தர் ஆகிய சொற்களை அறிமுகம் செய்தவன் இங்குதான் உள்ளேன். முருக்க மரத்தை அறிவீர்களா? ஆங்கிலத்தில் flame of the forest என்பதே தமிழில் முருக்க மரம். மார்க்கெட்டிங் என்பதை மாறுகொள்ளுதல் எனலாம். மொழியில் பழைய சொற்கள் கழிவதும் புதிய சொற்கள் புகுவதும் இயற்கை." - இராம.கி.

"இராம.கி. சொல்வது சரி. contentதான் முக்கியம்" - அருணா சீனிவாசன்.

மேலும் பலரும் பலவிதக் கருத்துகளை முன்வைத்தார்கள். ஒலிவாங்கி இல்லாததால் அவற்றைச் சரியாகக் கவனிக்க இயலவில்லை. படிப்படியாக ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்ல, இறுதியில் பத்துப் பன்னிரண்டு பேர்களே எஞ்சியிருந்தார்கள்.

'சுவடு' ஷங்கர், வந்தவர்களுக்கு வறுவலும் தண்ணீரும் அளித்துத் தெம்பளித்தார். பருமனானவர்களையே விரும்புவதாக வலைப்பதிந்திருந்த மீனாக்ஸ், "கடுமையாக உழைத்து, உடலைச் சற்றே மெலியவைத்துள்ளேன்" என்றார்.

எனினும் இந்த முயற்சி, ஒரு நல்ல தொடக்கம்.

என் நூல்கள் சில...

தமிழில் மெய்ப்பாளர் பயிற்சி - ஒரு புதிய முயற்சி

காந்தளகம் நடத்திவரும் பதிப்புத் தொழில் உலகம் மாத இதழின் மாசி 2036 (பிப்ரவரி 2005) இதழில் பட்டய மெய்ப்பாளர் பயிற்சி குறித்து மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஒரு திட்ட வரைவினை அளித்துள்ளார். புரூப் பார்ப்பது, பிழை திருத்தம் பார்ப்பது எனப் பரவலாக அறியப்படும் ஒன்றினைத் தமிழில் மெய்ப்பு என அழைக்கிறார்கள். மெய்ப்புப் பார்ப்போரை மெய்ப்பாளர் என்கிறார்கள்.

எப்படி ஒருவர் மெய்ப்பாளர் ஆவது? இதை முறைப்படிக் கற்றுக்கொள்ள முடியுமா? அப்படிக் கற்பதன் தேவை என்ன? எங்கே கற்பது? மாணவர் ஆவதற்கு என்ன தகுதி? அதற்கான பாடத் திட்டத்தில் இடம்பெறக் கூடியவை என்னென்ன? எவ்வளவு நாட்கள் பயிற்சி? எங்கெல்லாம் இந்தப் பயிற்சியை அளிக்க முடியும்? இதற்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன?.... எனப் பலவற்றை மிக நுணுக்கமாகச் சிந்தித்து ஒரு திட்ட வரைவாக அளித்துள்ளார் சச்சிதானந்தன். அவர் அளித்துள்ள வரைவில் பாடத்திட்டம் பற்றிய பகுதியை மட்டும் இங்கு அளிக்கிறேன்.

2.1 பாடத் திட்டம்:

2.1.1 அச்சுத் தொழில்- வரலாறு, ஈய அச்சு, எந்திரம், கணினி அச்சு, மறுதோன்றி எந்திரம், பிற எந்திர வகைகள், வண்ண அச்சு, எண்ணச்சு, தாள் அளவுகள், கட்டாளர் முறைகள். (கணினியகம், அச்சகம், கட்டாளரகம் யாவிலும் களப் பயிற்சி)

2.1.2 நூலாக்க முறைகள்- பக்க அளவுகள், பக்க வகைகள், பக்க ஒழுங்குகள், பக்க எண், பக்கத் தலைப்பு வகைகள், அச்சு எழுத்துரு வகைகள், புள்ளி அளவுகள், நிமிர்வு-சாய்வு-விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், நூல் தலைப்பு, பகுதித் தலைப்பு, பந்தி, பா, படம், அடிக்குறிப்பு, சொல்லடைவு, சுட்டி, உசாத்துணை அமைப்பு, மேற்கோள் பட்டியலமைப்பு, வடஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள் - தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், கோர்வைக் கட்டுக்காக, நடுக்கட்டுக்காக, அட்டை அமைப்பு, பின் அட்டையில் குறிப்பு, உலகத் தர நூல் எண், அரங்கநாதன் தர எண், பத்தாக்க எண்முறை, விலை, அச்சகப் பதிப்பகப் பெயர் தொடர்பான சட்டங்கள், பிற.

2.1.3 செய்தி - விளம்பர முறைகள்: இதழ்களின் அமைப்பு, செய்தி அமைப்பு, கட்டுரை அமைப்பு, பட விளக்கம், அச்சு எழுத்துரு வகைகள், புள்ளி அளவுகள், நிமிர்வு -சாய்வு-விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், வடஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள்-தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், விளம்பர வரிகள், விளம்பர வடிவமைப்பு, சுவரொட்டி வரிகள், துண்டு வெளியீட்டு வரிகள், ஒலி/ஒளி ஊடகங்களுக்கான செய்தி மற்றும் பனுவல் அமைப்பு, ஓடும் தலைப்புகள் அமைப்பு, பிற.

2.1.4 சொல்லியல்: பெயர்ச்சொல், வினைச்சொல், பேதச்சொல், கலைச்சொல், வடசொல், ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்கள், பிற.

2.1.5 சொற்றொடர்: தொகைச் சொல், இணைமொழி, தொடர்ச் சொற்கள், புணர்ச்சி, உவமைத் தொடர், பழமொழிகள், பிற.

2.1.6 வாக்கிய அமைப்பு, வாக்கிய வகைகள், வாக்கிய மரபு வழாநிலை, வாக்கியச் சிறப்பியல்புகள், வழக்குப் பிழை-திருத்தம், பெருவழக்கு, நிறுத்தக் குறிகள், பிற.

2.1.7 பனுவல்: கட்டுரை, செய்தி, கவிதை, பா, துணுக்கு, நறுக்கு, கதை, நெடுங்கதை, அறிவியல் கட்டுரை, மொழிபெயர்ப்பு, பிற.
2.1.8 அச்சுப் பனுவல்: பகுப் பதம், பகாப் பதம், ஈரெழுத்து மூவெழுத்துச் சொற்கள், வரிமுதலில் மெய் வரா மரபு, பிறமொழிச் சொல் சாய்வுருவாக, தொடர் குறுக்கங்கள், பிறமொழிக் குறுக்கங்கள் தமிழில், பிற.
2.1.9 மெய்ப்புக் குறியீடுகள்.

-மிகவும் நேர்த்தியான முறையில் பாடத் திட்டத்தில் என்னென்ன கூறுகள் இடம்பெற வேண்டும் என்பதனை அவர் சிந்தித்துள்ளார். ஒரு கருவை முழுமையாக அணுகுவதற்கு இ·து ஒரு சிறந்த சான்று. இந்தத் திட்டவரைவில் சேர்க்கவேண்டிய/ நீக்கவேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுமாறும் அவர் வேண்டியுள்ளார்.

தமிழ்ப் பதிப்புலகும் இதழுலகும் இணைய உலகும் வளர்ந்து வரும் இந்நாளில் மெய்ப்பாளர் மிகவும் தேவை. இதன் இன்றியமையாமையை இது தொடர்புடைய துறையினர் உணராமல் இருப்பதால் மெய்ப்பின் தேவை, மிக மிக அதிகரித்துவிட்டது.இவர்களுள் இரண்டு வகைகள் உண்டு. மூலப் படி எப்படி இருக்கிறதோ அப்படியே, தட்டச்சு ஆன பிறகு உள்ள படியில் உள்ளதா எனப் பார்ப்போர் ஒரு வகை. மூலப் படியிலேயே தவறு இருந்தால் அதைக் குறித்துக் கேள்வி எழுப்பி, மூலத்தை எழுதியவரிடம் விளக்கி, பிழை திருத்துவோர் இன்னொரு வகை. இரண்டாம் வகையினரைக் காண்பது மிக அரிது.

சிறப்பான மெய்ப்பாளர்கள் அருங்காட்சியகங்களில் வைக்கும் அளவுக்கு அருகிவிட்டார்கள். அதிலும் அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இன்னும் அதிகம். காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி ஆகியவற்றை எங்கெங்கே இடவேண்டும் என்பது குறித்து மெய்ப்பாளர் பலரும் கருத்து மாறுபடுகிறார்கள். இடைவெளி இடும் இடங்களில்கூட இந்த அல்லாட்டம் உண்டு. ஒற்றை / இரட்டை மேற்கோள் குறிகளை இடுவதிலும் பெரும் வேறுபாடுகள் உண்டு. எங்கு பந்தி பிரிப்பது என்பதும் இறுதியானதில்லை.

வேற்றுமொழிச் சொற்களை ஒலிபெயர்ப்பதிலும் இத்தகைய மாறுபாடு உண்டு. வடசொற்களைத் தமிழில் எழுதும் முறையிலும் ஒத்த கருத்து கிடையாது. கருப்பு/ கறுப்பு, கோயில்/ கோவில், பவளம்/ பவழம் எனப் பல சொற்கள் தமிழில் புழங்குகின்றன. இவற்றில் எது சரி எனக் கேட்டால் இரண்டுமே சரிதான் என்போர் பலர். இப்படித்தான் எழுதவேண்டும் என ஒன்றை மட்டும் சொல்லுவோர் சிலர்.

பிழை, எப்பொழுதுமே நம்மை வீழ்த்துவதற்குக் காத்திருக்கும் ஒரு புலி போலத்தான். 700 பக்கங்கள் உள்ள ஒரு நூலினைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு மெய்ப்புப் பார்த்தாலும் கடைசியில் அச்சான பிறகு 70 பிழைகளாவது இருக்கும். இது, குறைந்தபட்சம். கணக்கு வழக்கில்லாமல் பிழைகள் இருப்பதே பொதுவழக்கு. பிழை திருத்தம் எனக் கடைசிப் பக்கத்தில் சிலர் இடுவதுண்டு. சில நேரங்களில் அந்தப் பிழை திருத்தத்திலேயே பிழை இருக்கும்.

பிழையை மாயமான் என்றும் சொல்லலாம். பிழை என நினைக்கும் இடத்தில் பிழை இருக்காது. பிழை இல்லை என எண்ணும் இடத்தில் பிழை வந்து நிற்கும்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், பலர் தாம் பிழை செய்கிறோம் என்பதையே அறியவில்லை. பிழையையே சரியென எண்ணிக்கொண்டு அதையே ஆணித்தரமாகச் செய்து வருகின்றனர். இப்படி இருப்பவர்கள், சரியான பாதைக்கு வருவது என்பது கடினம். ஆனால், தாம் எழுதுவது பிழையோ என்ற ஐயம் இருப்பவர்களும் பிழை எனச் சுட்டிக்காட்டும் போது திருத்திக்கொள்வோரும் பிழை வரக்கூடாது என்ற அடிப்படை எண்ணம் உள்ளவர்களும் எவ்வளவோ தேவலாம். இத்தகையவர்கள், தங்களைச் சிறப்பாக வளர்த்துக்கொள்ள முடியும்.

அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு, இந்த மெய்ப்பாளர் பயிற்சி.
ஒரு பிரபல வார இதழில் நான் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது, முதல் நாள் ஒரு புதினம் அச்சுக்குப் போகத் தயாராய் இருந்தது. புதிதாய் வந்திருந்த என்னிடம் அதன் இறுதிப் படியைக் கொடுத்துச் சரிபார்க்கச் சொன்னார்கள். நான் அந்த நூறு பக்கப் படியைப் பார்த்து முடித்தபோது சராசரியாகப் பக்கத்திற்கு 20 பிழைகள் இருந்தன. அவற்றைப் பக்க ஓரங்களில் குறித்தேன். தட்டச்சு செய்தவரும் அங்கிருந்த மெய்ப்பாளரும் என்னைச் சினத்தோடு பார்த்தார்கள். 'நீங்க ரொம்ப க்,ச்,ப் போடுறீங்க' என்றும் 'பக்கத்தை என்ன இப்படிக் குதறி வச்சிருக்கீங்க?' என்றும் குற்றம் சாட்டும் தொனியில் கூறினார்கள். 'இப்படியெல்லாம் போட்டுக்கொண்டிருந்தால் இது இன்றைக்கு அச்சுக்குப் போகாது. சரியான நேரத்தில் அச்சுக்குப் போகாவிட்டால் அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சொல்லிவிடுவோம்' என அச்சுறுத்தவும் செய்தார்கள்.

அதன் பிறகு நான் எப்படியெல்லாம் மெய்ப்புத் திருத்தலாம் என எனக்கு ஒரு கையேட்டினை நிருவாகம் அளித்தது. அதில் நிறைய வழிகாட்டுதல்கள். 'மனத்தை என எழுதினால் எழுத்துக் கூட்டிப் படிக்கும் பாமரர்கள் சிரமப்படுவார்கள்; எனவே மனதை என எழுதினால் போதும்' என்பது போன்ற பல விதிகள் அதில் இருந்தன.

வார இதழுக்கு மட்டுமின்றி, நாளிதழுக்கும் இதே நிலைதான். இன்னும் சொல்லப் போனால் அங்கு இந்த நிலை, மிகவும் மோசம். நான் ஒரு நாளிதழில் பணியாற்றியபோது, ஒரு செய்தி மெய்ப்புப் பிரிவுக்கு வந்தது. சொல், வாக்கிய அமைப்பு, பந்தி, முன்பின் நிரல் என எதுவுமே சரியில்லை. நான் அதை முற்றிலும் மாற்றி, முறையாக எழுதி, தட்டச்சுக்கு அனுப்பினேன். அடுத்த நாள், மதுரையில் இருந்த தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்பு மேல் அழைப்பாய் வந்துகொண்டிருந்தது. 'யார் புரூப் பார்த்தது?' எனத் தேடினார்கள். பிறகு கடைசியில் பார்த்தால் நான் மாற்றித் திருத்தி எழுதிய பிரதியைத் தூக்கி வைத்துவிட்டு, ஏற்கெனவே இருந்தபடியே தட்டச்சாளர் விட்டுவிட்டார். பிழை திருத்தத்தை அவர் மேற்கொள்ளவில்லை. அதனால் இதழின் பெயர் கெட்டதோடு, அவருக்கு அபராதமும் விதித்தார்கள். நான் திருத்திய படியைப் படித்த செய்தி ஆசிரியர், மிகவும் பாராட்டினார்.

ஒருமுறை, ஒரு படத்தின் அடிக்குறிப்பில் 'ம.தி.மு.க. தலைவர் வைகோ' என இருந்தது. அடுத்தநாள் விசாரணை வைத்தார்கள். 'ம.தி.மு.க.வுக்குத் தலைவர் கிடையாது; பொதுச் செயலாளர்தான் உண்டு. சட்டப்படி இது தவறு' என்பது செய்தி ஆசிரியரின் வாதம். அதன் பிறகு இது சிறிய பிழை என விடப்பட்டது.
இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் மெய்ப்புப் பார்ப்பது, சாதாரண வேலையில்லை. மிகவும் பொறுப்பாகச் செய்யவேண்டிய வேலை. வார இதழில் ஒருமுறை 'அவன் வசதியோடு வாழ்ந்தான்' என வந்த இடத்தில், 'அவன் வசந்தியோடு வாழ்ந்தான்' என வந்துவிட்டது. பொருளே மாறிவிட்டது பார்த்தீர்களா? அதனால் மிகவும் கவனம் தேவை.

நாளிதழ்களில் லாட்டரிச் சீட்டு முடிவு வெளியிடும் பகுதியையும் பத்தாம் வகுப்பு/ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் பகுதியையும் மெய்ப்புப் பார்ப்பது மிகவும் கடினம். முழுக்க முழுக்க எண்கள் மட்டுமே இருக்கும். ஓர் எண் தப்பானாலும் போச்சு. தேர்வான மாணவர் ஒருவரின் எண் விடுபட்டால் என்னாவது? தோல்வியடைந்தவரின் எண் வெற்றிபெற்றதாக வந்துவிட்டால் என்னாவது?

லாட்டரியிலும் இப்படித்தான். பரிசு விழாதவர்க்கு விழுந்ததாகவோ, விழுந்தவர்க்கு விழாததாகவோ அச்சானால் மெய்ப்புப் பார்த்தவர் தீர்ந்தார்.
மூலத்தை ஒருவர் வாசிக்க, இன்னொருவர் திருத்தம் பார்க்கவேண்டும் என்பது மெய்ப்பின் பொதுவிதி. ஆள் பற்றாக்குறை காரணமாக இது, பெரும்பாலும் நடக்காது. ஒருவரே பார்க்கவேண்டியிருக்கும். இருவர் இருந்தாலும் இருவரும் ஒரே நேரத்தில் கிடைப்பது கடினம். ஒருவர் உட்காரும்போது, இன்னொருவர், தேநீர் குடிக்கச் சென்றுவிடுவார். அவர் திரும்பி வரும்போது, முன்னவர், தொலைபேசியில் மும்முரமாய் இருப்பார். வேறு எதற்குப் பார்க்கிறார்களோ இல்லையோ, எண்கள் வெளிவரும் போது மட்டும் இருவர் பார்க்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது மூத்தோர் வாக்கு. ஆனால், எழுத்தை விட எண்தான் மிகவும் சிக்கலானது. இதழ்களின் மெய்ப்பாளர் முதலில் பார்க்கவேண்டியது, அந்த இதழின் தேதி, சரியானபடி இருக்கிறதா? சில தருணங்களில் அந்த தேதியே மாற்றாமல் பழைய தேதியிலேயே அச்சாகும் ஆபத்தும் உண்டு. அதன்பிறகு, 'க்,ச்,ப் எல்லாம் பார்க்கிறவர், தேதியில் பிழை விட்டுவிட்டாரே' எனக் குத்திக் குத்திக் காட்டுவார்கள்.

அடுத்து, இதழின் பக்கங்கள் முறையாக, எண் வரிசைப்படி இருக்கின்றனவா? எனப் பார்க்கவேண்டும். இதழ்கள், ·பாரம் எனப்படும் முறையில் அச்சுக்குப் போவதால் முதல் ·பாரம், இரண்டாம் ·பாரம் எனத் தயாராகும். ஏற்கெனவே போன ·பாரத்தின் எண்களில் மீண்டும் போய்விடக் கூடாது.

அதுபோன்றே பூச்சியங்கள்கூட நம்மைப் பெரிய சிக்கலில் ஆழ்த்திவிடும். பத்து இலட்சம் என்ற எண்ணைக் குறிக்கும்போது ஒரு பூச்சியம் குறைந்தாலும் அதிகமானாலும் சிக்கல்தான். தொகையே மாறிவிடும். இந்தச் சிக்கலைத் தவிர்க்க, 10 இலட்சம் எனப் பாதி எண்ணும் பாதி எழுத்துமாக எழுதிச் சமாளிப்பவர் உண்டு.

கிராமத்திலிருந்து வேலை தேடி இதழியல் அலுவலகத்திற்கு வரும் பலருக்கும் முதலில் கொடுக்கப்படுவது, (புரூப்)மெய்ப்புப் பார்க்கும் வேலைதான். அவர்கள் அதில் ஓரளவு தேரினால்தான் அடுத்து, செய்தியாளர்(நிருபர்) பணி. அதில் ஏதும் தவறு நடந்தால் அவர் வேலை காலி. தட்டச்சு செய்தவர், உதவி ஆசிரியர், ஆசிரியர் எனப் பலரைக் கடந்துதான் ஓர் இதழ் அச்சுக்குப் போகிறது. அதில் தவறு நடந்தால் ஆசிரியர், உதவி ஆசிரியரைப் பார்ப்பார். உதவி ஆசிரியர், மெய்ப்பாளரைப் பார்ப்பார். மெய்ப்பாளர், தட்டச்சாளரைப் பார்ப்பார். தட்டச்சாளர், 'தப்பைச் சரிபண்ணத்தானே நீங்க இருக்கீங்க?' என மெய்ப்பாளர் மேல் பழியைப் போட்டுவிடுவார். பெரிய தவறு இல்லாமல் என்றுகூட சொல்ல முடியாது; கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும்வரை மெய்ப்பாளர் பிழைத்தார்.

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் இன்று பலரும் மெய்ப்பாளர் பணியாற்றுகிறார்கள். தெரியாதவற்றையெல்லாம் தெரிந்ததுபோல் காட்டும் பலரும் இருக்கிறார்கள். அண்மையில் பதிப்பாசிரியர் ஒருவரின் கட்டுரையில் 'காரி உமிழ்ந்தான்' என்ற வரி இருந்தது. அதைச் சுட்டிக் காட்டி, "சரியா?" என வினவினேன். "சரிதான்" என்றார். "'காறி உமிழ்ந்தான்' என்றுதானே வரவேண்டும்?" என்றதற்குக் கொஞ்சம் யோசித்துவிட்டு, "'காரி'தான் சரி; நான் அப்படித்தான் எழுதுவேன்" என்றார். அடுத்து, ஓரிடத்தில் 'அரைகுறை' என்ற சொல் வந்திருந்தது. ஒரு பழைய நூலில் அறைகுறை என இருந்தது நினைவுக்கு வந்தது. உடனே அகராதியை எடுத்துப் பார்த்தேன். அறைகுறை என்றால் அறுத்தலும் குறைத்தலும் எனப் பொருள் இட்டிருந்தது. அரைகுறைக்காரரிடம் அதை எடுத்துக் காட்டினேன். அந்த அகராதியே தவறு என்றார்.

வாழ்த்துக்கள் என எழுதுவோர் இன்னும் பலர். 'க்' வராது என்று சொன்னால், கேட்பதில்லை. 'பல ஆண்டுகளாக இப்படித்தான் எழுதி வருகிறோம். இப்பொழுது வந்து விதியை மாற்றாதீர்கள்' என எரிந்து விழுவார்கள்.

கண் செருகும்போது, பசிக்கும்போது, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, வானொலி கேட்டுக்கொண்டே, பக்கத்தில் இருப்பவருடன் பேசிக்கொண்டே மெய்ப்புப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். அதுபோல் அச்செழுத்து, கருப்பாய் இருந்தால் நீலம்/ சிவப்பு/ பச்சை என வேறு வண்ண எழுதுகோலால்தான் திருத்தத்தைக் குறிக்கவேண்டும். இவை போன்று நிறைய விதிமுறைகளைப் பின்பற்றினால்தான் ஓரளவுக்காவது மெய்ப்பு சிறக்கும். இவை குறித்து இந்தப் பயிற்சியில் கற்றுத் தருவர் என எதிர்பார்க்கலாம்.

இந்தத் துறை வளராததற்கு உரிய காரணங்களுள் ஒன்று: இதில் வருவாய் மிகக் குறைவு. பக்கத்திற்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் அதுவே அதிகம் என்ற நிலை. ஐந்து ரூபாய் கொடுத்தால் சிறிது முன்னேற்றம் உண்டு.
இன்றைய தமிழ்ச் சூழலில் எவ்விதம் மெய்ப்புப் பார்ப்பது என்பதில் இன்னும் பொதுக் கருத்து உருவாகவில்லை. முதலில் இதுவே பெரிய சவால்தான். தமிழில் இதுவரை மெய்ப்பை மட்டுமே மையப் பாடமாகக் கொண்டு ஒரு பட்டயப் படிப்பு என்ற சிந்தனையே புதுமையானது.

இதனை இணையதளத்தில் ஒரு செய்முறைப் பாடமாக அளித்தால் மிகவும் பயன்படும். எந்தச் சொல்/ வாக்கிய அமைப்பு சரி எனச் சொல்வதற்கும் இந்தத் தளம் பயன்படும். அது குறித்துக் கேள்வி எழுப்பவும் பதில் அளிக்கவும் நிபுணர் குழு இயங்கவேண்டும். ஆயினும் இவை அனைத்திற்கும் நிதி முதற்கொண்டு செயலாக்கம் வரையில் பலரின் உதவி தேவை. ஆர்வம் உள்ளவர்கள் உதவுமாறு அவர் வேண்டியுள்ளார். இந்த நல்ல முயற்சி வெற்றியடைய நம்மால் முடிந்தவரை உதவுவோம்.

இதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினால், அடுத்து இன்னும் பலவற்றுக்கும் பயிற்சி அளிக்கலாம். 1, தமிழை உச்சரிப்பதற்கும் தெளிவாகப் பேசுவதற்குமான பயிற்சி2, பதிப்பாசிரியர் பயிற்சி3, திறனாய்வாளர் பயிற்சிபோன்ற பயிற்சிகளை முறையாக அளிக்கவேண்டிய தேவையும் நம் சமூகத்தில் உள்ளது. அவற்றைப் படிப்படியாகச் செயலாக்கலாம்.

மெய்ப்பாளர் பயிற்சி குறித்து மேலும் அறிய விரும்புவோர்,பதிப்புத் தொழில் உலகம்,2, மனோகரன் தெரு,சென்னை-600031tamilnool@touchtelindia.netஎன்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தக் கடினமான, சிக்கலான கருவை எடுத்துக்கொண்டு கற்றுத்தருவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் முன்வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

என் நூல்கள் சில...

நாட்டார் ஐயா

அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது. இதே தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை ஆயின.
இவரைப் பற்றி இவரின் மகன் வே. நடராஜன் எழுதிய நாட்டார் ஐயா என்ற நூல், படிக்கக் கிடைத்தது. இதனைத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (சுருக்கமாக ‘கழகம்’) வெளியிட்டுள்ளது. (முதல் பதிப்பு 1998, பக்- 277, விலை- ரூ.60.00)
ஒரே ஒரு பிரதிதான் உள்ளது. எனவே உடனே திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் எனப் பதிப்பாளர் முத்துக்குமாரசுவாமி கூறியிருந்தார். எனவே, அதைத் திருப்பிக் கொடுக்கும் முன் ஒரு முறை படித்துவிட வேண்டும் என்ற உந்துதல் பிறந்தது.
அக்காலத் தமிழ் நடையில் நூல் உள்ளது. வே. நடராஜன் , இடையிடையே தன் அநுபவங்களையும் கலந்தே எழுதியுள்ளார். எனினும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரங்களை அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.
நாட்டார் என்பது, கள்ளர் மரபில் வந்தவர்களின் பட்டப் பெயர். கள்ளர் என்பவர், பல்லவரின் ஒரு கிளை. தொண்டை நாட்டினின்றும் சோழ பாண்டிய நாடுகளில் குடியேறி அரையர் என்னும் பெயருடன் ஆட்சி புரிந்து வந்தனர். பின்னர் சோழர் குடி முதலியனவும் இம்மரபில் கலந்துவிட்டது. (பக்-12)
நாட்டார், கள்ளர் சரித்திரம் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளமை குறிப்பித்தக்கது. உ.வே.சா., இந்நூலை மிகவும் பாராட்டியிருக்கிறார். இதனைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கவும் பரிந்துரைத்துள்ளார். மாண்புமிகு மு. கருணாநிதி, தன் தென்பாண்டிச் சிங்கம் நூலுக்குக் கள்ளர் சரித்திரத்தைத் துணையாகக் கொண்டுள்ளார். ‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று முன்னுரையில் எழுதியுள்ளார்.
வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி (1915), நக்கீரர் (1919), கபிலர் (1921), கள்ளர் சரித்திரம் (1923), கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் (1926), சோழர் சரித்திரம் (1928), ஆகியன நாட்டாரின் நூல்கள். கட்டுரைத் திரட்டு I என்ற நூலும் வெளிவந்துள்ளது. சில செய்யுள்களும் இயற்றியுள்ளார்.
இவை தவிர, பண்டைய இலக்கியங்கள் பலவற்றுக்கு உரை வரைந்துள்ளார். கீழ்க்கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது என்பவற்றிற்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி என்னும் பிற்கால நீதி நூல்களுக்கும் நாட்டார், திருந்திய முறையில் உரையும் முகவுரையும் எழுதியுள்ளார்.
அ.மு.சரவண முதலியாரைத் துணையாகக் கொண்டு, திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், அகநானூறு, மணிமேகலை ஆகியவற்றுக்கும் நாட்டார், சிறந்த உரை எழுதியுள்ளார்.
திருவருட் கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரியைத் தொடங்க நாட்டார் முயன்றுள்ளார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கும் முயற்சியிலும் இவருக்குப் பங்கு உண்டு. கல்லூரி, பல்கலை இரண்டின் தேவையையும் வலியுறுத்தி, அறிக்கைகளை நாட்டார் உருவாக்கியுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றவேண்டும் என்ற எண்ணத்தை, மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் 1981ஆம் ஆண்டு நிறைவேற்றினார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.
*********
''ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட் பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான்.
சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும்.
புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும். கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல் உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும். ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது.''
***********
நாட்டாரின் கருத்து, இன்றைக்கும் தேவைப்படுவது. தமிழின் தூய்மையைக் காக்கும் வரையே அதன் உயிர் பொலிவுறும். அப்படியே வேற்றுச் சொல் தேவையெனினும் கூடிய விரைவில் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து, புழக்கத்திற்குக் கொணர்வது நம் அனைவரின் கடமை.
இங்கு, நாட்டாரின் வரலாற்றினைச் சுருக்கமாகக் காண்போம்.
12-4-1884 அன்று நாட்டார், தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவேரி என்ற ஊரில் பிறந்தார். தந்தை, முத்துச்சாமி நாட்டார். தாயார், தையலம்மாள். நாட்டாருக்கு முதலில் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டனர். இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அதனால் ஒரு குறவனைக் கொண்டு சூடு போட்டு ஆற்றி முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரையும் வேங்கடசாமி என மாற்றினர்.
தொடக்கக் கல்வி வரை பள்ளியில் கற்ற இவர், பிறகு வீட்டில் இருந்தவாறு தாமே தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கம், மூன்று தேர்வுகளை நடத்தும் விவரம் அறிந்தார். அவற்றை எழுத விழைந்தார்.
1901ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி மதுரைத் தமிழ்ச் சங்கத்தை வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நிறுவினார். அச்சங்கத்தின் கீழ் பாண்டியன் புத்தகசாலை என்னும் நூல் நிலையமும் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை என்னும் தமிழ்க் கல்லூரியும் செந்தமிழ் என்னும் மாத இதழும் நிறுவப்பெற்றன.
இந்தத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய தனித்தமிழ்த் தேர்வுகளும் நடத்தப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இக்கலாசாலையில் இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும் என்ற விதியிருந்தது. இக்கலாசாலையில் படிக்காதோர், வெளியிலிருந்தும் தேர்வு எழுதலாம் என்ற விதிவிலக்கு இருந்தது.அதைப் பயன்படுத்தி நாட்டார் திருச்சியிலிருந்து தேர்வு எழுதினார்.
ஆண்டுக்கு ஒரு தேர்வு எழுதி மூன்றே ஆண்டுகளில் மூன்று தேர்வுகளிலும் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு இவர், ‘பண்டித’ ந.மு.வேங்கடசாமி நாட்டார் என அழைக்கப்பெற்றுள்ளார்.
திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் கோவையில் பணியாற்றிவிட்டு, மீண்டும் எஸ்.பி.ஜி. கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். திருச்சியில் பணியாற்றிய பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராகவும பணிபுரிந்துள்ளார்.
1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார்.
அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் தந்தையார் அ.மு.சரவண முதலியார், நாட்டாரின் நண்பர். இருவரும் இணைந்து கழகத்தின் வேண்டுகோளின் பேரில் திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளனர். (இந்நூலாசிரியர் வே. நடராஜனும் அ.ச.ஞானசம்பந்தனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தார், 1940ஆம் ஆண்டு நாட்டாருக்கு நாவலர் என்னும் பட்டம் அளித்துள்ளனர்.
இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக் கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார்.
நாட்டாரின் மணிவிழாவை 8-5-1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு செய்திருந்தது. ஆனால், 28-3-1944 அன்றே நாட்டார் மறைந்தார். அவர் மணிவிழாவுக்காக வசூலித்த 1712-4-0(ரூ-அணா-பைசா) தொகையை அவருடைய நினைவு விழாவுக்குப் பயன்படுத்தினர்.
அவர் சமாதி வைத்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பியுள்ளனர். ( 1944ஆம் ஆண்டு ஒரு மூட்டை சிமெண்டு விலை 3 ரூபாய் 12 அணா. 1000 செங்கற்கள் விலை ரூ.18. கொத்தனார் கூலி ரூ.5.)
1984இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும் 22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது.
நாட்டாரின் கனவுகளில் ஒன்றான திருவருள் கல்லூரியை 1992ஆம் ஆண்டு பி.விருத்தாசலம் தொடங்கினார். இதற்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இசைவு வழங்கியுள்ளது. இதில் தேர்ச்சியடைந்தோர், இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்குத் தகுதியுடையவர் என்று இப்பல்கலை தெரிவித்துள்ளது.
தமிழில் பெரும்புலமை பெற்றவர்கள் இக்காலத்தில் மிகவும் அருகிவிட்டார்கள். பண்டைய நூல்கள் பலவற்றைப் பெயரளவில் அறிந்திருப்பதே இப்பொழுது வியப்பைத் தருவதாய் உள்ளது. ஆயினும் நாட்டார் அவர்கள், தமிழின் பழைய நூல்களை மிகவும் ஆழ்ந்து கற்றுள்ளார். சிக்கலான பாடல்களுக்கும் பொருளுணர்த்தியுள்ளார். முக்கியமாகத் தனி ஆசிரியரிடம் கல்வி பயிலாமல் தாமே முயன்று தமிழ் பயின்றுள்ளார். கடும் உழைப்பாளியான இவர், எளிய வாழ்க்கை நடத்தியுள்ளார். நாள்தோறும் நாட்குறிப்பும் எழுதியுள்ளார். அதில் பல முக்கிய நிகழ்வுகளைக் குறித்துள்ளார். மாணவர்களிடம் அன்புடன் பழகி, கற்றலின் மேல் ஆர்வம் மிகச் செய்துள்ளார்.
நமக்கு முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.
நாட்டாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியதன் மூலம், தமிழக அரசு ஒரு நற்பணியைச் செய்துள்ளது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு பதிப்பக வல்லோர், நாட்டாரின் படைப்புகளை மக்கள் அறியச் செய்திடல் வேண்டும். நாட்டாரின் உழைப்பையும் உயர் கருத்துகளையும் தமிழ்ச் சமுதாயம் சிந்திக்க வேண்டும்.