என் நூல்கள் சில...

குட்டி புத்தா

இருள் பொட்டலத்தைப் பிரிக்கப் பிரிக்க, உள்ளிருந்து பகல் எட்டிப் பார்க்கிற நேரம். இண்டு இடுக்கு விடாமல் எதையோ தேடிக்கொண்டிருக்கிறது தென்றல். அந்த அரச மரத்தை மட்டும் விட்டு வைக்குமா என்ன! தன்னிடம் இல்லை என அம்மரம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தலை முதல் கால்வரை சோதனை போட்டது. மரத்தடியில் சாய்ந்து நின்ற எந்திரத் துப்பாக்கி லேசாக ஆடியது. அப்போது ஒரு சிட்டுக் குருவி சர்ரென்று பறந்து வந்தது. அந்தத் துப்பாக்கியின்மேல் அமர்ந்தது. ஏற்கெனவே ஆடிக்கொண்டிருந்த துப்பாக்கி சரிந்து விழுந்தது. கிலியுடன் "கிரீச் கிரீச்' எனக் கத்தியபடி குருவி பறந்தோடியது. துப்பாக்கி விழுந்த சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தான் பண்டார.

எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அருகில் எவரையும் காணவில்லை. காற்றில் விழுந்திருக்கும் என நினைத்து நிமிர்த்தி வைத்தான். முகாமுக்குள்தான் இரவு தூங்கிக் கொண்டிருந்தான். உள்ளே புழுக்கம் தாங்காமல் நள்ளிரவில் வெளியே வந்து மரத்தடியில் படுத்தான். முகாமைச் சுற்றிலும் சக இராணுவத்தினர் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர்.
காலைநேரப் பயிற்சிக்கான சைரன் ஒலித்தது. பண்டார அவசர அவசரமாக எழுந்தான். முகம் கழுவித் தலûவாரி உடுப்பை அணிந்தான். "புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி!' என்று மனத்துக்குள்ளேயே சொல்லி வணங்கினான்.
அது அம்மா புஞ்சிநோனா சொல்லிக் கொடுத்தது. அவளுக்குப் பண்டாரவைப் பெரிய புத்த பிக்குவாக்க ஆசை. அநுராதபுரத்து மகாவிகாரைக்கு அவனை அழைத்துச் சென்றாள். அவனுக்கோ வயது 6. மொட்டை அடித்துக் காவி உடுத்தி... பார்க்க அழகான பொம்மைபோல் இருந்தான். தன் கண்ணே பட்டுவிடப் போகிறது என்று கண்ணூறு கழித்து "என் குட்டிப் புத்தா!' என்று கூறி அழுத்தமாக முத்தமிட்டாள். கையோடு அவனை விகாரையிலும் சேர்த்தாள்.
புத்த பிக்குகள் வந்தார்கள். புத்தர் பெருமான் பற்றியும் அவருடைய போதனைகள் பற்றி அவனுக்குக் கதை கதையாகச் சொன்னார்கள். சிங்கள இனத்தின் சிறப்புப் பற்றியும் சிங்கள மொழியின் மேன்மை பற்றியும் விளக்கினார்கள். பண்டாரவுக்கு இருப்பு கொள்ளவில்லை. சேர்ந்த பத்தாம் நாள் தன் வீட்டுக்கு ஓட்டம் பிடித்தான். "என்னாச்சு பண்டார?' திகைப்புடன் கேட்டாள், புஞ்சிநோனா ""உன்னை விட்டு இருக்க முடியலை அம்மே'' என்றவனை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
""பண்டார! ஏய் பண்டார!''
சட்டென்று நினைவு திரும்பியவன் வாசலுக்கு ஓடினான். அவனுடைய உற்ற நண்பனும் ஊரில் பண்டாரவின் வீட்டுக்கு எதிர்வீட்டுப் பிள்ளையுமான சமந்தா, கோபத்துடன் நின்றிருந்தான். ""மணி யொலிச்சு எவ்வளவு நேரமாச்சு! இன்னும் இங்கயே நிக்கிறாய்! முட்டாள்!'' என்று பண்டாரவைத் திட்டினான். இருவரும் அணிவகுப்பு நடக்கிற இடத்துக்கு ஓடினார்கள்.
கேணல் றெகான் தளுவத்தை, கடுகடுத்தபடி நின்றிருந்தார்.
""உன்ரை பேர் என்ன?''
""பண்டார''
""முழுப்பேரைச் சொல்லு?''
""ஆர். டி. பண்டாரநாயக்க - ரத்தினஸ்ரீ தொடங்கொட பண்டாரநாயக்கா.''
""எந்தப் பிரிவு?''
""நுவரேலியா - 39 ஆம் பட்டாலியன்''
""ஏன் தாமதம்?''
""அது... அது வந்து... ராத்திரி கனநேரம் விழிச்சிருந்தேன்....''
""பொறுப்பில்லாத பதில். ஒரு இராணுவ வீரன் இப்படித்தான் பேசுவதா? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உன்னையெல்லாம் படையில் சேர்த்தார்களே, அந்த ஆள்சேர்ப்புக் குழுவினர்! அவர்களைச் சொல்லவேணும். இத்தனை பேரைச் சேர்த்திட்டோம் என்று கணக்கு காட்டத்தானே உன்னை மாதிரி தூங்கு மூஞ்சிகளையும் சோம்பேறிகளையும் சொரணையற்ற சிங்களர்களையும் பிடித்துக் கொண்டு வருகிறார்கள்! போ! போய்த் தொலை!'' கேணல் சிங்கமென உறுமினார்.
பண்டார மனத்துக்குள் வெதும்பினான். "நானா வாறேன் வாறேன் என்று குதித்தேன்?' "புத்தம் சரணம்' என்று இருந்தவனை இழுத்து வந்து உடுப்பை மாட்டித் துவக்குப் பிடிக்க வைத்துவிட்டு இப்போது இப்படிப் பேசு கிறார்களே!'
அந்த நாள் அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. புதன் கிழமை காலை 11 மணி. வெள்ளைக் கோடுபோட்ட நீலச் சட்டையும் கருப்பு கால்சட்டையும் அணிந்திருந்தான். புஞ்சிநோனா அவித்த புட்டு கமகமத்தது. மீன் குழம்போடு சேர்த்து ஒரு வெட்டு வெட்டத் தொடங்கினான். அம்மா அவசர அவசரமாக ஓடி வந்தாள். "பண்டாராக் குட்டி! எங்காவது போய் ஒளிஞ்சுகொள். பிள்ளை பிடிக்க வாறாங்களாம்' என்றாள்.
ஊரெல்லாம் இதே பேச்சாய் இருந்தது. புஞ்சிநோனா எதிர்வீட்டுக் குசுமாவிடம் விசாரித்தாள். "பக்கத்தூருக்கு இராணுவ அதிகாரிகள் வந்து இளவயசு ஆண்பிள்ளை களை எல்லாம் கையோடு கூட்டிப்போய் விடுகிறார்கள்' எனக் குசுமா சொன்னாள். "நம்மூருக்கும் வரப்போகிறார்களாம்' என்ற அவள், ""பண்டாரவைப் பார்த்துக்கோ. நான் என் சமந்தாவை எங்காவது ஒளிச்சு வைக்கிறேன்'' என்றபடி உள்ளே போனாள்.
புஞ்சிநோனாவுக்கு அடிவயிற்றில் இருந்து ஒரு பந்து எழும்பி வந்து தொண்டையை அடைத்தது. ஏற்கனவே அவள் கணவன் ரத்தின ஸ்ரீ தொடங்கொட, இராணுவத்தில் இருந்தான். 15 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கிலங்கையில் நடந்த சண்டையில் பலியானான். அப்போது பண்டாரவுக்கு 3 வயது. அதிலிருந்து இராணுவத்தின் மீதே அவளுக்கு வெறுப்பு. இப்பொழுது பண்டார வையும் இழக்க அவள் தயாரில்லை. ""பண்டார! சீக்கிரம் போய் ஒளிஞ்சுகொள். நான் கூப்பிடும்வரை வெளியே வராதே!' என்றாள். உடனே பண்டார, கொல்லைப் பக்கம் ஓடி ஈரப்பலா மரத்தின் மேலேறி மறைவாக அமர்ந்தான்.
வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு வயது வந்த ஆண்களைத் தேடி அதிகாரிகள் வந்தனர். புஞ்சிநோனா வின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவு திறந்தது.
"உங்கள் வீட்டில் ஒரு 18 வயதுப் பையன் இருக்கிறான் இல்லையா?'
"இல்லை....இல்லையே!'
புஞ்சிநோனா சொல்லிக்கொண்டி ருக்கும் போதே வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள், சுவரில் இருந்த பண்டாரவின் புகைப்படத்தைப் பார்த்தனர். "இவன் எங்கே?' என்றனர். "இவன்... இவன் வெளியூரில் தங்கிப் படிக்கிறான்' என்றாள். அதற்குள் வாசலில் கிடந்த ஆண்கள் அணியும் செருப்பை அதிகாரி பார்த்துவிட்டார்.
"நீங்கள் உங்கள் பிள்ளை - இருவர் மட்டும்தானே இங்கே இருக்கிறீர்கள்?'
"ஆமாம். இல்லை, அதான் அவன் வெளியூரில் இருக்கிறான் என்றேனே! நான் மட்டும்தான் இருக்கிறேன்'
"அப்படியானால் இந்தச் செருப்பு யாரு டையது?'
"அது... அதுவந்து...' என்று புஞ்சிநோனா இழுக்கும்போதே "வீடு முழுக்கத் தேடுங்கள்' என்று உத்தரவிட்டார், அதிகாரி.
ஈரப்பலா மரக்கிளையில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் பண்டார. அரை மணி ஆயிற்று. ஒரு மணி ஆயிற்று. யாரையும் காணோம். பசிவேறு வயிற்றைக் கிள்ளியது. பாதிச் சாப்பாட்டில் எழுந்து ஓடிவந்துவிட்டான். பக்கத்து மரக் கிளையில் ஒரு கொத்து நெல்லிக்காய் தொங்கியது. எச்சில் ஊற, சற்றே முன்நகர்ந் தான். மற்றொரு சிறுகிளையைப் பற்றிக் கொண்டு அந்த நெல்லிக் கொத்தைப் பறிக்க முயன்றான். "சரக்' என ஒரு சத்தம் கேட்டது. அடுத்த நொடி, ஒருகையில் கிளையும் மற்றொரு கையில் நெல்லிக் கொத்துமாக அவன் கீழே கிடந்தான்.
அப்போது பார்த்து அதிகாரிகள் வந்தனர். "வானத்திலிருந்து குதித்த தேவனே, வாரும்!' என அதிகாரி கிண்டலடித்தார். பண்டாரவுக்கு நல்ல முதுகு வலி. ஓடக்கூட முடியவில்லை. "பையன் முகத்தில் இராணுவ வீரனுக்கு உரிய கம்பீரம் தெரிகிறது இல்லையா?' என்று சக அதிகாரியிடம் வினவினார், அவர். சக அதிகாரியோ, இவனை யாரென்று நினைத்தீர்? மாவீரர் ரத்தினஸ்ரீ தொடங்கொடயின் மகனாக்கும். நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தவர் ஆயிற்றே அவர்'. என்றார்.
புஞ்சிநோனா, மகனைத் தூக்கினாள். உடுப்பில் ஒட்டியிருந்த தூசிகளைத் தட்டினாள். அவனைத் தன் முதுகுக்குப்பின் ஒளித்துக்கொண்டு "நாங்க செஞ்ச தியாகமெல்லாம் போதும். எனக்கு என் மகன் வேணும். அவனைத் தரமாட்டேன்' என்றாள்.
"உங்கள் மகனுக்கு மாதம் இருபத் தையாயிரம் ரூபாய் கொடுப்போம். அரசாங்க வீடு கொடுப்போம். உங்கள் குடுமபத்துக்கு மருத்துவ வசதி இலவசம். உங்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கும்.'
"உயிர் இருந்தால் தானே அனுபவிக்க முடியும். போருக்குப் போனால் என் மகன் இறப்பான். என் மகன் இறந்தால் நானும் இறப்பேன்.'
"நல்லதை நினையுங்கள் அம்மா... இப்படியே எல்லாரும் ஒதுங்கி ஒதுங்கிப் போனால் நாட்டை யார் காப்பாற்றுவது?'
"புத்தர் காப்பாற்றுவார்'
"ஒரு போர்வீரரின் மனைவியா நீங்கள்? உங்களை ஒரு சிங்களச்சி என்று சொல்லவே வெட்கமாய் இருக்கிறது!'
"நான் முதலில் ஒரு தாய். பிறகுதான் சிங்களச்சி'
"முரண்டு பிடிக்காதீங்க அம்மா. இது நெருக்கடி காலம். வயசுப் பிள்ளைகளும் உடம்பில் தெம்புள்ள அத்தனை ஆண்களும் போர்ப்பணிக்கு வந்தாக வேண்டும். அவங் கவங்களுக்கு ஏற்றதுபோல் வேலை கொடுப்போம். மறுக்காதீங்க. இது அரச ஆணை.'
புஞ்சிநோனா கையில் ஒரு காகிதத்தைத் திணித்துவிட்டுப் பண்டாரவின் கைப்பிடித்து இழுத்துப்போய் வாகனத்தில் ஏற்றினார்கள். பண்டார, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டும் விசும்பிக்கொண்டும் போனான். "குட்டிப் புத்தா' "குட்டிப் புத்தா' என அலறியபடி ஓடிவந்த புஞ்சிநோனா வழியிலேயே மயங்கி விழுந்தாள். வாகனம் புறப்பட்டது. அதனுள் சமந்தாவும் இருந்தான்.
பூட்ஸ் கால்களின் சீரான ஒலி "சர்ரக் சரக்' "சர்ரக் சரக்' எனக் கேட்டது. வழக்கம் போல அணிவகுப்பு முடிந்து சற்று நேரத்துக் கெல்லாம் காலை உணவு ஆயிற்று. கேணல் றெகான், அனைத்து வீரர்களையும் அழைத் தார்.
படையைப் பல பிரிவுகளாகக் கேணல் றெகான் ஏற்கெனவே பிரித்திருந்தார். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை நியமித்தார். பண்டாரவும் சமந்தாவும் 39ஆம் பட்டாலியனில் இருந்தனர். அப்பிரிவின் தலைவனாகச் சமந்தா தேர்வுபெற்றான். யார் யார் எந்தெந்தப் பகுதியை எப்போது தாக்கவேண்டும் என்று கேணல் உரை நிகழ்த்தினார்.
துப்பாக்கிகளையும் ஆயுதத் தளவாடங் களையும் சுமந்துகொண்டு படையணி நகரந்தது. பண்டாரவின் கைகளிலும் ஓர் எந்திரத் துப்பாக்கி மின்னியது. புத்தம் புதிய துப்பாக்கி. சீனாவிலிருந்து வந்திறங்கியதாகக் கேணல் சொன்னார்.
பண்டார அந்தத் துப்பாக்கியைப் பார்த்தான். பயிற்சியின்போது முதன் முதலாகத் துப்பாக்கியை இயக்கியது ஞாபகம் வந்தது. துப்பாக்கியை எப்படிப் பிடிப்பது ? குறிபார்ப்பது? விசையை இழுப்பது?... என எல்லாம் சொல்லிக் கொடுத்தனர். ஒரு நாள் தனியாய் இருக்கும் பொழுது, "இது எவ்வளவு கனம் இருக்கும்? ஒரு கையால் இதைத் தூக்க முடியுமா?' என்ற ஐயம் வந்தது. தூக்கித்தான் பார்போமே என்று தூக்கினான். கனம் தாங்காமல் கை தாழ்ந்தது. மீண்டும் தூக்கினான். மீண்டும் தாழ்ந்தது, சூரியனைப் பார்க்கக் கண் கூசியது. தலை குனிந்து மீண்டும் வேகமாகத் தூக்கினான். கை வழுக்கி, துப்பாக்கியின் விசையை அழுத்தி விட்டது. அடுத்த நொடி வான்நோக்கி ஒரு குண்டு பாய்ந்தது. அல்பாயுசுள்ள ஒரு புறா அங்கே பறந்து கொண்டிருந்தது. மறுகணம் அது கீழே விழுந்தது.
இக்காட்சியைத் தூரத்திலிருந்து வீரர் சிலர் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு கையில் துப்பாக்கி பிடித்து, கண்ணை மூடிக்கொண்டு, பறக்கும் புறாவைச் சுட்டு வீழ்த்திய பண்டாரவின் வீரம் சில மணிகளில் படை முழுக்கப் பரவியது. பண்டார, "இல்லை, இல்லை' என எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. "மாவீரன் பண்டார' என முழங்கிவிட்டுச் சென்றனர்.
படையணி நகரந்தது. இஸ்ரேலில் இருந்து வருவித்த அதிநவீன விமானங்கள் முன்னால் பறந்தன. தொலைதூரம் சென்று தாக்கக்கூடிய பீரங்கிகள் முன்வரிசையில் சென்றன. சிங்கள இராணுவ வீரர்களிடம் கேணல், அவ்வப்போது வீரம் கொப்பளிக்கப் பேசினார். அவர்களும் வேகமாக நடக்கத் தொடங்கினர்.
இலக்குகளை நெருங்கினார்கள். பீரங்கி எட்டும் தூரத்தில் நின்று குண்டு வீசத் தொடங்கினார்கள். குண்டு விழுந்த இடத்தில் எல்லாம் ஒரு பெருந்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. எதிரிகளும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இருபுறமும் அங்கங்கே வீரர்கள் செத்து விழுந்தனர். துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பதுங்கிப் பதுங்கி முன்னேறினர். இறுதியில் எதிரிகள் பின் வாங்கித் தலைமறைவாயினர். அன்றைய தினம் சிங்களப் படை 4 கி.மீ. பரப்பைக் கைப்பற்றியதாக இலங்கை வானொலி கூறியது. 60 எதிரிகளும் இராணுவத்தினர் 12 பேரும் மாண்டதாகச் செய்தியில் சொன்னார்கள். ""8 எதிரிகளும் 34 நம்மாட்களும் தானே செத்தது?'' என்று கேட்டான் பண்டார. ""கண்டுக்காதே!'' என்றான் சமந்தா.
அன்று இரவு. சிங்கள வீரர்கள் பலரும் ஒரு பெரிய முகாமில் அமர்ந்து பேசத் தொடங்கினர். அப்போது திடீரென்று காவலை மீறி ஒரு பையன் முகாமினுள் நுழைந்தான். இராணுவத்தினர் சுடும் முன்பு அவன்தன் அடிவயிற்றில் இருந்த பொத்தானை அமுக்கினான். அந்த முகாம் தூள்தூளாகச் சிதிறியது.
நூற்றுக்கும் மேலான இராணுவ வீரர்கள் இறந்து விட்டதாகவும் நிறைய வெடிபொருட்கள் அழிந்தன என்றும் தெரிந்தது.
அரச மரத்தடியில் இருந்து பண்டார ஓடிவந்தான். முகாம் இருந்த இடத்தைப் பார்த்தான். இரத்தமும் சதையும் நாலாபுறமும் சிதறிக் கிடந்தன. கண்ணில் நீர்வழிய ஒவ்வொரு சடலச் சிதறலையும் பார்த்தபடி நடந்தான். தேடித் தேடிக் கடைசியில் சமந்தாவைக் கண்டான். ஒரு காலும் கையும் தூக்கி வீசப்பட்டிருந்தன. முகம்பாதி சிதைந்திருந்தது. பண்டார மயங்கி விழுந்தான்.
சவப்பெட்டிகளில் சடலங்களை வைத்து மூடினார்கள். அவற்றை அவரவர் ஊருக்கு அனுப்பினார்கள். திக்பிரமை பிடித்ததுபோல் பண்டார, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். கேணலிட மிருந்து அழைப்பு வந்தது. அடுத்த நாள் போருக்கு 39 ஆம் பட்டாலியன் தலைவராகப் பண்டாரவைக் கேணல் தேர்ந்தெடுத்திருந்தார். ""நீ திறமையுடையவன். பொறுப்புணர்ந்து செயல்படு. உன் நண்பன் சமந்தாவையும் நம் வீரர்கள் பலரையும் கொன்றிருக்கிறார்கள். பழிக்குப் பழி வாங்கப் போ. சிங்களன் மானமுள்ளவன் என்று நிரூபி. போ போர் முனைக்கு'' என்றார். பண்டார மறுத்தான். ""போயே தீரவேண்டும்'' என்றார் கேணல்.
அடுத்த நாள் விடிகாலை, படையணி நகர்ந்தது. பண்டாரவின் 39 ஆம் பட்டாலியன் முன்னே சென்றது. ""வானில் பறந்த புறாவைக் கண்ணை மூடிக்கொண்டு சுட்டு வீழ்த்திய மாவீரன்'' எனப் படைவீரர்கள் பேசிக்கொண்டனர். பெரும் பாலான வீரர்கள் புதிதாகச் சேர்ந்தவர்கள். அவர்கள் பண்டாரவைக் கண்டு வியந்தனர்.
திடீரெனப் படையணியின் முன் ஒரு குண்டு வந்து விழுந்தது. எங்கிருந்து வந்தது என்று கணிக்காமல் பண்டார நாலாபுறமும் சுட்டான். அவனுக்கு வலதுபுறம் வந்த வீரர்கள் ஒரு கண்ணி வெடியை மிதித்துவிட அடுத்தநொடி தூக்கி எறியப்பெற்றனர். அடுத்து ஒரு துப்பாக்கிக் குண்டு அவன் காதை உரசிச் சென்றது.
பண்டாரவின் கண்ணெதிரே சமந்தா வின் சிதைந்த உடல் தெரிந்தது. அவன் தந்தை ரத்தினஸ்ரீ தொடங்கொடயின் சவப்பெட்டி தோன்றியது. அவன் கண்முன்னே ஒரு சிதை தகதகவென எரிந்தது. "மகனே குட்டிப் புத்தா' என்ற புஞ்சிநோனாவின் கதறல் கேட்டது.
தலைமயிரை உரசியபடி ஒரு குண்டு பாய்ந்தது. அவ்வளவுதான். பண்டார திரும்பினான். ஒரே ஓட்டம். அச்சம் உச்சந்தலையைப் பிடித்து ஆட்டியது. ""ஓ'' எனக் கத்திக்கொண்டே ஓடினான். தலை தெறிக்க ஓடினான். ""புத்தரே! புத்தரே'' என அரற்றியபடி ஓடினான்.
""ஐயோ! பண்டார ஓடுகிறானே! மாவீரன் பண்டார ஓடுகிறானே!'' என்று மற்ற வீரர்களும் ஓடத் தொடங்கினர். துப்பாக்கிக் குண்டுகள் துரத்தத் துரத்த நாலாபுறமும் ஓடினர். சிறிது நேரத்தில் மொத்தப் படையும் சிதறியது. அந்த மண்ணில் அலங்கோலமாகப் பதிந்திருந்த காலடிச் சுவடுகளின் மீது பீரங்கியின் நீண்ட சக்கரங்கள் உருளத் தொடங்கின.