என் நூல்கள் சில...

வீர தீரச் சிறுவர்கள் - 7 மாமனிதரே ரியாஸ்(9)!

தகவல் தொடர்பின் பிரமாண்டமான வளர்ச்சியால் உலகம் ஒரு சிற்றூராகச் சுருங்கிவிட்டது . உலகம் மட்டுமன்று ; மனித மனங்களும் மிகவும் சுருங்கிவிட்டன. அடுத்தவர்களுக்கு உதவுவது, அதுவும் பிரதிபலன் பார்க்காமல் உதவுவது, மிக அரிதாகிவிட்டது. நம்மிடம் இருக்கும் மிகச் சாதாரண பொருட்களைத் தருவதற்கே நாம் எவ்வளவு யோசிக்கிறோம்! நம்மிடம் உதவி நாடி வந்தவரிடம், விளக்கு வைத்த பிறகு கொடுக்கக்கூடாது, செவ்வாய் - வெள்ளிக் கிழமைகளில் தரக்கூடாது , ராகு காலம் - எமகண்டத்தில் முடியாது ......எனப் பெரியவர்கள் சொல்லியிருப்பதாக மரபு மூட்டையை அவிழ்த்துக் கடை விரிக்கிறோம். நமது சாலையோரம் நீளும் எண்ணற்ற கரங்களை நெற்றிக்கண் திறந்து சிடுசிடுப்போடு புறந்தள்ளுகிறோம். தெரு முனையில் வரும் ' அம்மா தாயே ' என்ற அழைப்பு, நம் வீட்டை எட்டும் முன் நம் கதவுகளையும் ஜன்னல்களையும் அவசரமாக மூடுகிறோம். பாதையெங்கிலும் அடிக்கடி நடக்கும் விபத்துகளை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கலாமே தவிர, அதில் மூக்கை நுழைத்து , ஆபத்தை விலைக்கு வாங்கலாமோ!

நமது சமூகத்தின் சிந்தனை இப்படியாய் இருக்க, வலியப் போய் உதவும் மனிதர்களை, அழிந்துவரும் உயிரினங்களுள் சேர்க்கவேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் தமக்குப் பொருளிழப்பு ஏற்பட்டாலும் உதவுவோர், இன்னும் ஒரு படி மேல். இவர்களுள்ளும் தம் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் உதவுவோர், நமது வணக்கத்திற்கு உரியவர்கள். அவர்களால்தான் இன்னும் இந்தப் பூமியில் மழை பெய்கிறது. அந்த மிக அரிய மனிதர்களுள் ஒருவர், ரியாஸ் அகமது.

ஒன்பது வயதே நிறைந்த ரியாசை நாம் ' அவர் ' என அழைப்பதே பொருந்தும். ஏன்? அந்த வீர நிகழ்வைக் கொஞ்சம் சிந்திப்போம்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள். உத்திரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி ஒருவரின் மகன் ரியாஸ், தம் நண்பர்களுடன் ரெயில் தண்டவாளங்களின் மீது நடந்துவந்துகொண்டிருந்தார். நிம்பூ பூங்காவிலிருந்து அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்புவதற்கு அதுதான் அவர்களின் வழக்கமான சுருக்கு வழி. தாலிபாக் பாலத்திற்கு அருகில் வந்தபோது அவர்கள் எதிரே இருவர் வருவதைப் பார்த்தனர். ஒருவர் , நன்கு வளர்ந்த மனிதர்; மற்றொருத்தி, ஒரு குட்டிப் பெண். அவர்களும் வேறொரு தண்டவாளத்தின் மீது நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னே கொச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் , விரைந்து வந்தது. அதன் பிறகு நடந்ததை ரியாசே விளக்குகிறார்.

" அவர்கள் அபாயத்தில் இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். ரெயில் வருவதைப் பார்த்ததும் நாங்கள் அவர்களை எச்சரிக்கும் விதமாகக் கூச்சல் போட்டோம். ஆனால், அவர்கள் எங்களைக் கவனிக்கவில்லை. அந்தப் பெண் , என்னைவிடச் சிறியவளாய் இருந்தாள். அவள் இறந்துவிடக் கூடாது என நினைத்தேன். நான், அவர்களை நோக்கி வெகு வேகமாக ஓடினேன். அப்போது ரெயில், அவர்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. நான் அவர்களை நெருங்கி, அந்தச் சிறுமியை என் பக்கமாக இழுத்தேன். ஆனால், என் கால்கள், தண்டவாளங்களுக்கிடையே சிக்கிக்கொண்டன. ரெயில், எங்கள் மீது பயங்கரமாக மோதியது. நாங்கள் கீழே விழுந்தோம். ரெயில், எங்கள் மீது ஏறி, அரைத்துக்கொண்டு ஓடியது. நாங்கள் மூவரும் தண்டவாளத்தில் வெவ்வேறு இடங்களில் வீசி எறியப்பட்டோம். என்னால் அந்தச் சிறுமியைப் பார்க்க முடியவில்லை. அந்த மனிதர், சற்று தொலைவில் விழுந்து கிடந்தார். அவர் கால்களிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. என் உடலிலிருந்தும் மிக அதிகமாக ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. சிறிது தொலைவு சென்ற பிறகு, ரெயில் நின்றது. மிகப் பெரிய கூட்டம், எங்களைச் சூழ்ந்து நின்றது. ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. அவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒருவர் என்னைத் தூக்கினார். ஒரு போலிஸ்காரரும் உதவிக்கு வந்தார். நாங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோம். "

அங்கு ரியாசின் இரண்டு கைகளும் ஒரு காலும் நீக்கப்பட்டன. ரெயிலில் அடிபட்ட அந்தப் பெரியவர், சபீர் அலி, தன் இரண்டு கால்களையும் இழந்தார். அவருடைய மகள் , ஷாசியா, ஆறு வயது சித்திரச் சிறுமி, மரணமடைந்தாள். இன்று ரியாஸ் , எல்லோரும் பரிதாபப்படும் ஒரு நிலையில் இருக்கிறார். தம் ஒவ்வோர் அசைவிற்கும் அடுத்தவரின் உதவியை நாடும் துயர் மிகுந்த கட்டத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவர் முகத்தில் ஒரு புன்னகை மிளிர்கிறது. ரியாஸ், சிறப்பாக உருது பேசக்கூடியவர். எதைப் பற்றியும் உற்சாகமாக உரையாட அவர் தயாராயிருக்கிறார், அவருடைய உடல் ஊனத்தைத் தவிர. ரியாசிற்குச் சகோதர சகோதரிகள், எட்டுப் பேர் இருக்கிறார்கள். ரியாஸ், பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஏனெனில், உருது பேசத் தெரிந்தாலும் அவருக்கு எழுதத் தெரியாது. தனிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்று, எதிர்காலத்தில் ஒரு மருத்துவர் ஆவேன் என்கிறார், ரியாஸ். தன் நிலைக்காக, ஒருபோதும் வருந்தவில்லை என்கிற ரியாசுக்கு உத்தரபிரதேச அரசு, விருது வழங்கிப் பாராட்டியது. மத்திய அரசு, ரியாசுக்கு சஞ்சய் சோப்ரா விருது வழங்கிக் கௌரவித்தது.

ஆனால், ரியாஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?
" அந்தச் சிறுமியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவள் மட்டும் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் நான் மிக மிக மகிழ்ந்திருப்பேன். "

ஆஹா ரியாஸ், மாமனிதரே, உமக்கு எமது தலைவணக்கம். உலக மானுடர்களே, இதோ இந்த ஒன்பது வயது வீரப் பிறவியைத் திரும்பிப் பாருங்கள். தம் இரு கைகளையும் ஒரு காலையும் இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத இந்த அக்கினிக் குஞ்சுக்கு உம் வீர வணக்கத்தைச் செலுத்துங்கள்.

இந்தத் தருணத்தில் நாம் சிலவற்றைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சுருக்கு வழி, சோம்பல், அலட்சியம், அவசரம்....எனப் பற்பல காரணங்களைக் கூறி, நாம் தண்டவாளங்களில் நடப்பது, மரணத்திற்கு வரவேற்புப் பத்திரம் வாசிப்பது போன்றது. முழு மரணம் நிகழாமல், உடல் ஊனம் மட்டும் நிகழ்ந்துவிட்டால் அது இன்னும் மோசமானது. தண்டவாளத்தில் நடப்பது மட்டுமில்லை; மூடப்பட்ட ரெயில்வே கேட்டுகளின் இடுக்குகள் வழியாக நுழைந்து செல்வது, நின்றுகொண்டிருக்கும் ரெயில்களின் சக்கரங்களுக்கிடையே புகுந்து செல்வது, ஓடும் ரெயிலில் ஏறுவது, இறங்குவது, படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பது, ரெயில் கூரைகளில் பயணிப்பது, ஓடும் ரெயிலிலிருந்து கைகளையும் தலையையும் வெளியே நீட்டுவது....என எண்ணற்ற முறைகேடுகள் நாளும் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தையும் நிறுத்தி, முறையான வழிகளைக் கடைபிடிக்க வேண்டியது, இன்றியமையாதது.

ரியாஸ் கூட, ரெயில் பாதை வழியாக வந்திருக்கக் கூடாது. ஆனால், அவர் வந்திருக்காவிட்டால் சபீர் அலியைக்கூட காப்பாற்றியிருக்க முடியாது. இந்த நிகழ்வு, ஓர் எதிர்மறை எடுத்துக்காட்டாக நம் எண்ணங்களில் நிற்கவேண்டும். ஒரு நொடியில் உயிரையும் உறுப்புகளையும் சிதைத்த அந்த நிகழ்வு, இனி நிகழாதிருக்க உறுதி பூணுவோம். ரெயில், ஒரு யோகியைப் போல, தனக்கான நேர்ப்பாதையில் தீர்க்கமாகப் பயணிக்கிறது. அதன் பாதையில் நாம் குறுக்கிடலாமா? அதன் தவத்தைக் கலைக்கலாமா? மனிதன் தடம் மாறலாமா? தண்டவாளத்திலிருந்து சற்றே அன்று; நிறையவே விலகியிரும் பிள்ளாய்!

என் நூல்கள் சில...

வீர தீரச் சிறுவர்கள் - 6

காலிழந்தும் உயிர்காத்தாள்

வாழ்க்கை, எத்தனையோ அபாயங்கள் நிறைந்தது. தன்னளவில் அது மிக எளிதாக இருந்தாலும் மனிதர்கள் அதை மிகவும் சிக்கலானதாக்கி விடுகிறார்கள். "மண்ணெண்ணெய் குடித்த 10 மாதக் குழந்தை சாவு" என்ற தலைப்பில் 6-7-04 அன்று தினத்தந்தியில் ஒரு செய்தி வெளியானது. திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் வசிக்கும் தங்கமணி என்பவரின் 10 மாதக் குழந்தை, அடுப்படியில் தரையில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து, பால் பாட்டில் என்று நினைத்துக் குடித்துவிட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் பயனின்றி, குழந்தை இறந்துவிட்டது. இது, யாருடைய குற்றம்? குழந்தை இருக்கும் இடத்தில் நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதைப் பலரும் உணருவதேயில்லை.

குழந்தைக்கு எட்டும் உயரத்தில் கத்தி, பிளேடு, கத்திரிக்கோல், கண்ணாடிப் பொருள்கள், பினாயில், மருந்துகள், கூர்மையான பொருள்கள், நச்சுத்தன்மை வாய்ந்தவை........ எனப் பலவற்றையும் வைக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, குழந்தைகளை எந்நேரமும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். குழந்தைக்குப் பக்கத்தில் பூச்சி பொட்டுகள் வரலாம். கல்லும் முள்ளும் கிடக்கலாம். குழந்தை, அறைக்கு வெளியே சென்றுவிட்டாலோ அதற்கு இன்னும் ஆபத்துகள் அதிகம். தெருவோரங்களில் விளையாடும் குழந்தைகளை அதிக விழிப்போடு கவனிக்கவேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே குழந்தைகள் சென்றுவிடவும் கூடும். வாகனங்கள் தம் கட்டுப்பாட்டினை இழந்து குழந்தையின் மீது மோதிவிடவும் கூடும். என்னதான் நடக்காது இந்த உலகிலே. பெரியவர்களே சமாளிக்க முடியாத இத்தகைய தருணத்தில் ஒரு சின்னக் குழந்தை என்ன செய்துவிட முடியும்?

இப்படித்தான் ஒரு சம்பவம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள குட்டிச்சால் என்ற கிராமத்தில் நடந்தது. அங்குள்ள மஹீன்-ரம்லா தம்பதியரின் இளைய மகள் , ராம்சீனா. பருத்திப்பள்ளி அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறாள். 2003-ஆம்
ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி. வீட்டின் முன் உள்ள தோட்டத்தில் ராம்சீனாவும் மற்ற குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை நோக்கிப் படுவேகமாக ஒரு கார் வந்தது. அந்தக் காரில் பிரேக்குகள் வேலை செய்யவில்லை. காரின் ஓட்டுநர், எவ்வளவோ முயன்றும் காரை நிறுத்த முடியவில்லை. அவரின் கட்டுப்பாட்டில் கார் இல்லை. விளையாடிக்கொண்டிருந்த அனைவரும் தப்பிக்க ஓடினார்கள். கார், வீட்டின் மதில் சுவர் மீது மோத வந்தது. அதைத் தவிர்க்க ஓட்டுநர், காரை மிக வேகமாகத் திருப்பினார். ராம்சீனாவின் அக்கா மகளான மூன்று வயது ரிசானா, அந்த வழியில் நின்றுகொண்டிருந்தாள். ரிசானாவிற்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.

இப்போது ராம்சீனா, ஓர் அற்புதமான வேலை செய்தாள். அவள், ரிசானாவை நோக்கி ஓடினாள். அதற்குள் அந்தக் கார், ரிசானாவை ஏறக்குறைய நெருங்கிவிட்டது. ராம்சீனா, ரிசானாவைத் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டாள். அவள் அப்படிச் செய்யாவிடில் அந்தக் கார், ரிசானா மீது நிச்சயமாக ஏறியிருக்கும். இந்தக் களேபரத்தில் ராம்சீனா கீழே விழுந்தாள். அவள் கால்களின் மீது கார் ஏறிவிட்டது. கால்களிலிருந்து குருதி கொட்டத் தொடங்கியபோது, ராம்சீனா நினைவிழந்தாள். அவளை உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகுதான் ராம்சீனா கண்விழித்தாள். அவளுடைய ஒரு கால் நீக்கப்பட்டு விட்டதாக அவளிடம் தெரிவித்தார்கள்.

ஒரு காலினை இழந்தது குறித்து ராம்சீனா என்ன நினைக்கிறாள்?

"காலினை நீக்கியது, எனக்கு ஒரு பெரிய வலியாகத் தெரியவில்லை. இப்போது எனக்கு ஒரு செயற்கைக் கால் இருக்கிறது. என்னால் நடக்க முடியும். நடனமாடவும் முடியும். என் ஆசிரியர்களும் நண்பர்களும் என்னை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டுகிறார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்குப் படிப்பதும் வயலின் வாசிப்பதும் ரொம்பப் பிடிக்கும். எதிர்காலத்தில் நான் ஒரு மருத்துவராவேன். ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் உதவ வேண்டியது என் கடமை"
என்கிறாள், ராம்சீனா.

ராம்சீனாவுக்கு 2003-ஆம் ஆண்டுக்கான கீதா சோப்ரா விருது வழங்கப்பெற்றது.

இக்கட்டான நிலையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு மூன்று வயதுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ராம்சீனாவின் தீரச் செயல், உண்மையிலேயே மகத்தானதுதான்.

வாகன ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் தம் வாகனத்தை அவ்வப்போது சரிபார்த்து, பழுது நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நாம் நமது எல்லைக்குட்பட்ட வரையில் அனைத்தையும் சரிவர வைத்துக்கொண்டால்தான் இந்த உலகம் ஒழுங்காக இயங்கும். ஒரு சிறிய தவறின் விலை, ராம்சீனாவின் துணிவுமிக்க கால். இனி, ஒருக்காலும் இப்படி நடக்கக்கூடாது.


வாரசுரபி - ஜூலை 9, 2004

என் நூல்கள் சில...

வீர தீரச் சிறுவர்கள் : 5

கொள்ளையருடன் போரிட்ட குட்டிச் சிறுவன்

நமது பாதுகாப்பு, பெரும் கேள்விக்குரியது. கமாண்டோ படை வீரர்கள் முதல் நமது தெருவில் ரோந்து சுற்றும் கூர்க்கா வரை நம்மைச் சுற்றி எவ்வளவோ பேர் இருந்தாலும் நாம் பத்திரமாக இருக்கிறோமா என்ற கேள்வி, ஒரு கத்தியைப் போல நமது தலைக்கு மேல் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. வெளியே சென்றவர், வீடு திரும்புவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வீட்டில் இருப்பவராவது பாதுகாப்புடன் இருப்பாரா என்றால் அந்தக் கேள்விக்கும் விடையில்லை. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் தற்போதைய எதார்த்தம். இதற்கு நாம் தயாராக இருக்கிறோமா?

நிச்சயமாக இல்லை. மறைமுகமாக நம்மைக் கொள்ளையடிப்பவர்களைக் கொஞ்சம் தள்ளிவைப்போம். நேரடியாகவே எவ்வளவு சம்பவங்கள் நடக்கின்றன! பிக்பாக்கெட், சங்கிலி பறிப்பில் தொடங்கி, பெரிய பெரிய கொலை-கொள்ளை வரைக்கும் குற்றப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. திரைப்படங்களில் இத்தகைய ஆட்கள், கதாநாயகர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். குற்றப் பின்னணியுள்ள பலர், அரசியல் அதிகாரங்களையும் கைப்பற்றி விடுகிறார்கள். நாம் மிக மோசமான சூழலில் இருக்கிறோம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இங்கு வாழ்வதற்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியது, மிக இன்றியமையாதது. சிறுவன் விவேக், இதற்கு நமக்கு வழிகாட்டுகிறான்.

யார் இந்த விவேக்?

அசாம் மாநிலம், கவுகாத்தியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் விவேக் புர்கயஸ்தா, கொடூரமான கொள்ளைக் கும்பலுடன் போராடி, அவர்களின் முயற்சியை முறியடித்துள்ளான். இந்தியாவின் வடகிழக்கில் உள்ள புகழ்பெற்ற மாநிலமான அசாம், தனக்கெனத் தனி மொழி, நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்களைக் கொண்ட பாரம்பரியம் மிக்க மாநிலமாகும். இங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும் மாணவன், விவேக்.

2003-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி. நள்ளிரவு 1.30 மணி. விவேக் வீட்டில் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். விவேக் வீட்டில் அவனும் அவன் தம்பியும் ஓர் அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்கள், வேறோர் அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது விருந்தினர் அறையில் திடீரென ஒரு சத்தம் கேட்டது. விவேக்கின் அம்மா விழித்துக்கொண்டார். ஆயுதம் தாங்கிய ஐந்து பேர், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு, அவர்களின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டிருந்தார்கள். அந்தக் கொள்ளையர்கள், விவேக்கின் அம்மாவைக் கத்தியால் குத்திவிட்டார்கள். அம்மாவைக் காப்பாற்றச் சென்ற அப்பாவுக்கும் கத்திக் குத்து விழுந்தது. அங்கு குழப்பமும் களேபரமுமாய் இருந்தது.

இந்தச் சந்தடியில் விவேக் விழித்துக்கொண்டு அந்த விருந்தினர் அறைக்கு ஓடினான். அப்புறம் என்ன நடந்தது? விவேக்கே சொல்கிறான்:

"கொள்ளையர்களில் ஒருவன், என் நெஞ்சில் கத்தியால் குத்த வந்தான். நான் வெறுங்கையை நீட்டித் தடுத்தேன்; என்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றேன். அதனால் காயமுற்றேன். ஆனால், பதிலுக்கு நானும் தாக்கினேன். இந்தச் சத்தங்களைக் கேட்டு, பக்கத்து வீட்டிலும் எதிர்வீட்டிலும் இருந்தவர்கள், எங்களைக் காப்பாற்ற ஓடிவந்தார்கள். அவர்களைக் கண்டதும் கொள்ளையர்கள் தப்பித்து ஓடப் பார்த்தார்கள். என்னைத் தாக்கிய கொள்ளையனும் தப்பிக்கப் பார்த்தான். நான் அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அவன் எவ்வளவோ முயன்றும் நான் விடவில்லை. இதற்குள் பக்கத்து வீட்டார்கள், மேலும் இரண்டு கொள்ளையர்களைப் பிடித்துவிட்டார்கள். என் பெற்றோர்களோ ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். தீனமாக அவறினார்கள். நானும் காயப்பட்டிருந்தேன். எனினும் பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து என் பெற்றோரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கே....அங்கே....அய்யோ, என் அப்பா இறந்துவிட்டார். நல்லவேளையாக என் அம்மா பிழைத்துவிட்டார். என் அப்பா இறந்தாலும் அவருடைய கனவுகளை நான் நிறைவேற்றுவேன். நான் ஒரு நல்ல மனிதனாக உருவாவதே என் அப்பாவுக்குச் செய்யும் சிறந்த அஞ்சலி."


விவேக்கின் இந்தத் தீரச் செயலுக்காக, அவனுக்கு பாபு கயதானி விருது வழங்கப்பட்டுள்ளது.

இப்போது விவேக்கின் உலகம், பள்ளிக்கூட முதல்வரான அவன் அம்மாவைச் சுற்றித்தான் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரு விமானப் பொறியாளனாக வேண்டும் என்பது விவேக்கின் கனவு. ஆகாயத்தின் கீழே ஒரு பட்டாம்பூச்சியாக அவன் பறக்க, அவனை வாழ்த்துவோம். அவனைப் போலச் சவால்களைச் சந்திக்க நம்மை தயார்ப்படுத்திக்கொள்வோம். உறுதிகொண்ட நெஞ்சத்தோடு இந்த உலகை வலம் வருவோம்.


வாரசுரபி - ஜூலை 2, 2004

என் நூல்கள் சில...

வீர தீரச் சிறுவர்கள் : 4

மரணக் குழியிலிருந்து...

செய்தித் தாள்களில் நாம் அடிக்கடி ஒரு செய்தியைப் பார்க்கிறோம். ஆழ்குழாய்க் கிணற்றுக்காகத் தோண்டிய குழியில் விழுந்து குழந்தை பலி, மாணவன் உயிர்ப்போராட்டம், குழிக்கருகில் மற்றொரு குழிதோண்டி அதன் வழியாகச் சென்று மீட்க முயற்சி, தீயணைப்புப் படையினர் இரவு பகலாக முயல்கின்றனர். இத்தகைய செய்திகள் அடுத்தடுத்து வந்தாலும் இறுதியில் மாணவன், பிணமாக மீட்பு என்ற செய்தியே நிலையாகிவிட்டது. மாநகரங்களில் தண்ணீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடுவதால் ஆழ்துளைக் கிணறுகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அறவே இல்லை. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இவற்றை வருமுன் தடுக்கவேண்டும். நமது துரதிருஷ்டம், அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் வந்த பின் காக்கவாவது நமக்குத் தெரியவேண்டும். தெரியாவிட்டால் 14 வயது தொடக்குரா மகேஷிடமிருந்தாவது தெரிந்துகொள்ளவேண்டும்.

இந்தத் தொடக்குரா மகேஷ், அப்படி என்ன செய்துவிட்டான்.

அப்படிக் கேளுங்கள்!

ஆந்திராவின் வேமுரு மண்டல் நகரில் மகேஷ், ஒரு குழந்தைத் தொழிலாளி. பல்வேறு கட்டடங்கள் கட்டுவதில் எடுபிடி ஆளாகப் பணியாற்றி வந்தான். அப்படித்தான் ஒரு தேவாலயம் கட்டும் பணியிலும் ஈடுபட்டிருந்தான். அப்போது என்ன நடந்தது?

மகேஷே சொல்லுகிறான்.

"நான் கட்டடத்தின் வேறொரு பகுதியில் வேலைசெய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஓர் ஆழ்துளைக் குழியில் ஒரு சிறுவன் விழும் சத்தம் கேட்டது. நான் உடனே அங்கு ஓடி வந்தேன். அங்கிருந்த யாரும் அந்தச் சிறுவனைக் காக்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன். பிறகு, தானாகவே அந்தச் சிறுவனுக்கு உதவ முடிவுசெய்தேன்.

அது 12 அடி ஆழக் குழி. விழுந்த சிறுவன் நரேந்திர குமாரோ 4 வயதுப் பையன். அவனைத் தைரியமாக இருக்கும்படி மேலிருந்து குரல் கொடுத்தேன். அங்கிருந்த மக்களிடம் என் கால்களை ஒரு கயிற்றால் கட்டி, குழிக்குள் என்னைத் தலைகீழாக இறக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் அப்படியே செய்தார்கள். ஆழ்குழாய்க் குழிக்குள் முதலில் என் தலை நுழைந்தது. மெல்ல மெல்ல ஆழத்துக்குப் போனேன்.

உள்ளே போகப் போக கும்மிருட்டாய் இருந்தது. எதுவுமே தெரியவில்லை. ஆனால் அந்தச் சிறுவன் அழுவதை என்னால் கேட்க முடிந்தது. அந்த ஓசையை அடையாளமாக வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல இறங்கினேன். மணல்கட்டிகளும் கற்களும் தூசும் என்மேல் விழுந்தபடி இருந்தன. நான் என் கண்களைத் திறக்கவே முடியவில்லை. மூச்ச விடக்கூட சிரமமாய் இருந்தது. ஆனால், நான் மெல்ல இறங்கிக்கொண்டே இருந்தேன்.

இறுதியாக, 45 நிமிடங்களுக்குப் பிறகு, நான் அந்தச் சிறுவனை அடைந்துவிட்டேன். அவனுக்கு நம்பிக்கையூட்டி, அவனுடைய இடுப்பு வாரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அதன்பிறகு மேலேயிருந்து கயிற்றைப் பிடித்திருந்தவர்களுக்கு நான் ஒரு சமிக்ஞை கொடுத்தேன். அவர்கள் புரிந்துகொண்டு கயிற்றை மேலே தூக்கினார்கள். நாங்கள் இருவரும் பத்திரமாக மேலே வந்து சேர்ந்தோம். கடவுளுக்கு நன்றி. அந்தச் சிறுவன் இப்போது உயிருடன் இருக்கிறான். நலமாகவும் இருக்கிறான். அதை நினைக்கும் போது இப்போதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது."


தொடக்குரா மகேஷைப் பார்த்தீர்களா? எப்பேர்ப்பட்ட தீரச்செயல்! இதற்கு எவ்வளவு துணிவும் மனோவலிமையும் வேண்டும்!

இந்தத் தீரச் செயலுக்காக மகேஷுக்கு தேசிய தீரச் செயல் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது பெற்றவர்களுக்கு அவர்களின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும், அதன்படி மகேஷ், ஓர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்துவிட்டான். முதலில் அவன் பெற்றோர்களால் அவனைப் படிக்கவைக்க முடியவில்லை. இப்போது இந்தத் தீரச் செயலால் அரசே அவனைப் படிக்க வைக்கிறது.

"எதிர்காலத்தில் இந்தியா இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குப் பணியாற்றுவேன்" என்கிறான் மகúஷ். நம்பிக்கை அதிகமாகிறது. இத்தகைய இளைஞர்களின் கைகளில் இந்தியா, பாதுகாப்பாய் இருக்கும்.


வாரசுரபி - ஜூன் 25, 2004

என் நூல்கள் சில...

வீர தீரச் சிறுவர்கள் : 3

திருடனைப் பிடித்த ஹென்னா

ஹென்னா பிறந்தது என்னவோ, இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில்தான். அவள் தந்தை லெப்டினன்ட் கர்னல் பக்ஷி, அப்போது அந்த ஊரில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இப்போது அவர் அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவிற்கு இடம் மாறியுள்ளார். அம்பாலாவில் உள்ள கர்த்தரும் மேரியும் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்புப் படிக்கிறான், ஹென்னா ஆமாம், ஆறாம் வகுப்புப் படிக்கும் ஹென்னாதான் ஆறடி உயரமுள்ள முரட்டுத் திருடனைப் பிடித்துக் கொடுத்தாள்.

இது எப்படி நடந்தது?

1999 ஆம் ஆண்டு. ஆகஸ்டு 3 ஆம் தேதி. நள்ளிரவு. டைபாய்டு காய்ச்சலின் காரணமாக ஹென்னா, பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள். வீட்டில் இருந்தது மட்டுமின்றி பகலில் தூங்கத் தொடங்கினாள். அது தொடர்ந்தது. அதனால் இரவில் அடிக்கடி விழிப்பு வந்துவிடும். ஹென்னாவின் அறையிலேயே அவள் தம்பியும் தூங்குவான். அவன் தூக்கம் கெடக்கூடாது என்பதற்காக ஹென்னா மிக அமைதியாக இருப்பாள். சிறு சத்தமும் எழாமல் இருக்கச் செய்வாள்.

சாதாரணமாகவே இரவில் விழிக்கிற ஹென்னாவுக்கு அன்று இரவு ஏதோ ஒரு சத்தமும் கேட்டது. ஹென்னா, ""படக்கென்று'' விழித்துக்கொண்டாள்.

ஓர் ஒல்லியான, உயரமான மனிதன், அவர்களின் அறைக்குள் நுழைவதைக் கண்டாள். பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது. அவன், ஹென்னாவின் அப்பா இல்லை, வேற்று ஆள் என்று. அவன், ஹென்னா அறையினுள் நுழைந்து கதவை உட்புறத்திலிருந்து சாத்தினான். ஹென்னா, தூங்குவது போல் பாவனை செய்தால். அவர்களின் படுக்கைக்கு அருகே ஒர் இரும்பு அலமாரி இருந்தது. அதற்குள் அவள் அம்மாவின் நகைகள் இருந்தன. அந்தத் திருடன், நேராக அந்த இரும்பு அலமாரியை நெருங்கினான். அதைத் திறக்கச் சில முறைகள் முயன்றான். ஆனால் அவனால் திறக்க முடியவில்லை.

பிறகு அவன், அந்த அறைக் கதவைத் திறந்து வெளிவந்து பக்ஷியின் படுக்கையறைக்குள் நுழைந்தான். அது ஹென்னா படுத்திருந்த அறைக்கு அடுத்த அறை. அந்தத் திருடன், பக்ஷியை நெருங்கினான். அவர் தூங்குகிறாரா என்று சோதித்தான். பக்ஷியை நோக்கி அவன் குனிந்தபோது, ஹென்னா 'திருடன்' 'திருடன்' 'ஓடி வாங்க', 'ஓடி வாங்க' என்று கூச்சலிட்டாள். அவன் பயந்துவிட்டான் போலும். அறைக் கதவை நோக்கி ஓடி வந்தான். அங்கேதான் ஹென்னா நின்றிருந்தாள். அவளை ஒரே தள்ளாய்த் தள்ளிவிட்டான். ஹென்னா கீழே விழுந்தாள். ஆனால், உடனே எழுந்துவிட்டாள். முன்னால் ஓடிக்கொண்டிருந்த அவனைத் துரத்தினாள். கொஞ்சம் நெருங்கியதும் ஒரே தாவு தாவி அவன் கால்களைப் பிடித்துவிட்டாள்.

அப்போது அவர்கள் இருவரும் வீட்டின் வெளிவாசல் கதவுக்கருகே இருந்தார்கள். ஹென்னா தன் முழு ஆற்றலையும் பயன்படுத்தி அவன் கால்களை இறுகப் பிடித்திருந்தாள். அந்தத் திருடனும் அவள் பிடியிலிருந்து விடுபட்டுத் தப்பிக்கக் கடுமையாக முயன்றான். அந்த நேரத்தில் பக்ஷி வந்து அவன் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டார்.

அந்தத் திருடனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள் அவன் பிடிபட்டதைக் கண்டதும் வீட்டுக்கு வெளியே காத்திருந்த அவன் கூட்டாளிகள் ஓடிவிட்டார்கள். ஆனால் காவலர்கள் பிறகு அவர்களையும் பிடித்துவிட்டார்கள்.

அந்தத் திருடன் ஏற்கெனவே இரண்டு முறைகள், பக்ஷி வீட்டிலிருந்து பணம் திருடியதையும் சில அலுவலக ஆவணங்களைத் திருடியதையும் ஒப்புக்கொண்டான். அந்த ஆவணங்கள், மீண்டும் கைப்பற்றப்பட்டன. அந்தத் திருடன் 3 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதும் அந்தக் கூட்டம், நூற்றுக்கு மேலான திருட்டுகளில் தொடர்புடையது என்பதும் பின்னர் தெரிந்தது. இந்தத் தீரச் செயலுக்காக ஹென்னாவுக்கு, 1999 ஆம் ஆண்டின் தீரக் குழந்தைகளுக்கான கீதா சோப்ரா விருது வழங்கப்பட்டது.

ஹென்னாவின் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் ஹென்னாவை வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால் ஹென்னாவின் தம்பியோ. "இதுக்கு அதிருஷ்டம் தான் காரணம். திருடன் வந்தபோது நான் மட்டும் விழித் திருந்தால் அவனை நிச்சயம் பிடித்திருப்பேன்" என்கிறான். அடடே அக்காவுக்கு உள்ள வீரம், தம்பியிடமும் இருக்கிறதே.

ஹென்னா, சக்தி நிறைந்த சிறுமி. நன்றாக நாட்டியமும் ஆடுவாள். அவளுக்குக் குதிரைச் சவாரி, கூடைப் பந்து, நீச்சல் ஆகியவை பிடிக்கும். குழந்தைத் தொழிலாளர்களை முழுமையாகத் தடைசெய்யவேண்டும் என்றும் விரும்புகிறாள்.

பெரியவளானதும் ஹென்னா என்ன ஆக விரும்புகிறாள்?

"நான் பெரியவள் ஆனதும் இந்திய விமானப் படைவில் போர் விமானம் ஓட்டுவேன். தலைசிறந்த விமான ஓட்டி என்று பேரெடுப்பேன்" என்கிறாள், ஹென்னா.

இந்த வானுயர்ந்த இலக்கை ஹென்னா நிச்சயமாக எட்டுவாள்.


வாரசுரபி, ஜூன் 18 2004

என் நூல்கள் சில...

வீர தீரச் சிறுவர்கள் : 2

சிறுமிகளைக் காத்த சிறுமிகள்

சிறுவர்கள், அம்மா-அப்பா விளையாட்டு விளையாடுவதுண்டு. வீட்டில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் என்னென்ன செய்கிறார்களோ, அவை அனைத்தையும் அப்படியே திருப்பிச் செய்வதை நாம் பார்க்கலாம். "அம்மாடி பங்கஜம்" என்று அழைத்தாலும் சரி, "ஏ கூறு கெட்டவளே" என்றாலும் சரி, அப்படியே இங்கு எதிரொலிக்கும். மனைவி, "ஏனுங்க" என்றாலும் "இந்தா" என்றாலும் அதுவும் எதிரொலிக்கும். போலச் செய்தல் என்ற இயல்புடையவர்கள் என்பதால் சிறுவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால், சிறுவர்களை வைத்துப் பெரியவர்கள் விளையாடுவதை நாம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

கழுதைகளுக்குக் கல்யாணம், ஆல மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம், காக்காய்க்கும் குருவிக்கும் கல்யாணம்... என்று தொடங்கி, பெருமாள் திருக்கல்யாணம் வரைக்கும் நம் மக்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதில் ஏனோ அலாதி ஆர்வம் இருக்கிறது. கல்யாணம்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதுபோல் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். நல்ல கணவன் கிடைக்கவேண்டுமெனப் பாவை நோன்பு இருந்து, திருப்பாவை பாடும் கன்னிப் பெண்களுக்கும் பஞ்சமில்லை. இதற்காகக் கோயில் கோயிலாகச் செல்வதும் மரம் மரமாகச் சுற்றுவதும் ஜோதிடர்களிடமும் சாமியார்களிடமும் சென்று கைரேகை, ஜாதகம், நாடி ஜோதிடம்... என்று என்னென்ன உண்டோ அத்தனை ஜோதிடங்களையும் ஒரு கை பார்த்து விடுகிறார்கள். திருமண வயதில் திருமணத்திற்கு இவ்வளவு கஷ்டப்படுவதால் சிறு வயதிலேயே திருமணத்தை முடித்துவிட்டு, சிக்கல்களிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். பிற்காலத்தில் காதல், கத்தரிக்காய் என ஏதாவது பிரச்சினை வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் சிலர், சிறுவர் மணம் புரிந்துவிடுகிறார்கள்.

சிறுவர் மணத்தால் கைம்பெண்களின் எண்ணிக்கை கூடியது. விரல் சூப்பும் பருவத்தில், உலகம் தெரியாத வயதில், திருமணம் செய்து வைப்பது அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்குவதாகும். இதனால்தான் அரசு, இதைத் தடை செய்தது. அரசு தடை செய்யும் அனைத்தும் நின்று விடுவதில்லை என்பதற்கு அநேக எடுத்துக்காட்டுகள் உண்டு. அவற்றுள் ஒன்று, பாலர் திருமணம்.

தீங்கு நிகழும் போது அதைத் தடுக்க, தெய்வம், மனித உருவில் தோன்றும் என்பது மக்களின் நம்பிக்கை. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, அரியானாவைச் சேர்ந்த ஐந்து சிறுமிகள், இரண்டு பாலர் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியதுதான்.

இந்தத் தீரச் செயல் எப்படி நடந்தது?

டில்லிக்கு அருகிலுள்ள அரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் உள்ளது, அரிசிங்கபுரம் என்ற கிராமம். இங்கு கடாரியா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த போபால் சிங் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் ஓர் ஏழை விவசாயி. இவருக்குச் சுமன் என்ற 12 வயதுப் பெண்ணும் புஷ்பா என்ற 6 வயது மகளும் உண்டு. அதே ஊரில் தர்மபால், ராஜ்பால் என இரு சகோதரர்கள் இருந்தார்கள். இந்த இருவரிடமும் போபால் சிங், பணம் கடன் வாங்கியிருந்தார். கடன், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. வட்டி, குட்டி போட்டு, அந்த குட்டி, ஜட்டி போட்டு, பிறகு வேட்டியே கட்டிவிட்டது.

போபால் சிங்கால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? நெருக்குதல் அதிகமானது. இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணவேண்டிய கட்டாயம், போபால் சிங்குக்கு ஏற்பட்டது. கடைசியில் அவர்களுக்கிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதாவது கடன் கொடுத்த சகோதரர்களுக்கு, பணத்திற்குப் பதிலாக, போபால் சிங்கின் இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிடுவது. இதுதான் அந்த ஒப்பந்தம். பழங்காலத்தில் அடிமைகளை ஏலத்திற்கு விட்ட கொடுமையைப் போல் அல்லவா இது இருக்கிறது.

2003 ஏப்ரல் 18 அன்று "திருமணம்' செய்வதாக நாள் குறித்தார்கள். மணமகன் வீட்டார், அரிசிங்கபுரத்திற்கு வந்துவிட்டார்கள். இன்னும் சில மணி நேரத்தில் திருமணம் நடக்க இருந்தது. ஊராருக்குச் செய்தி தெரிந்திருந்தது. ஆனால், இது அவர்களுக்கு ஒரு பெரிய குற்றமாகத் தெரியவில்லை.

அதே ஊரில் நீலம் குமாரி (10), சரிதா தியாகி (17), சுனிதாதேவி சிக்தோயா (14), சுவாதி தியாகி (14), சுஷ்மா ராணி (16) என்ற ஐந்து சிறுமிகள் இருந்தார்கள். இவர்களுள் நீலம் மட்டும் ஐந்தாம் வகுப்பு மாணவி. மற்ற நால்வரும் ஒன்பதாம் வகுப்புப் படிப்பவர்கள். இவர்கள் ஐவரும் இந்தத் திருமணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ந்துபோனார்கள். திருமணம் நிகழுமிடத்திற்கு ஓடினார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி... மணமகன்கள் 26 வயதிலும் 30 வயதிலும் இருந்தார்கள். மணப்பெண்களை விட 3 முதல் 4 மடங்கு கூடுதலான வயது. மணப்பெண்களை வற்புறுத்தி, கட்டாயக் கல்யாணம் நடப்பதைப் புரிந்து கொண்டார்கள். இந்தக் கொடுமையை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உந்துதல் அவர்களுக்குள் ஏற்பட்டது.

இது குறித்துச் சரிதா தியாகியே தொடர்ந்து சொல்வதைக் கேளுங்கள்..


"நாங்கள் உடனே எங்கள் பள்ளிக்கூட ஆசிரியரைச் சந்தித்தோம். அவர் எங்களைக் கிராமத் தலைவரிடம் புகார் கூறச் சொன்னார். அதைத் தொடர்ந்து நாங்கள் தற்போதைய கிராமத் தலைவரிடமும் முன்னாள் கிராமத் தலைவரிடமும் புகார் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவ முன்வரவில்லை.

திருமண மண்டபத்தில் பண்டிதர்கள் (திருமணத்தை நடத்துவோர்), மந்திரங்களை ஓதி, சமயச் சடங்குகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அப்போது (திரைப்படப் பாணியில்) நாங்கள் இரண்டு ஆதரவாளர்களுடன் பந்தலுக்குள் நுழைந்து, பண்டிதர்களிடம் நிலைமையை விளக்கினோம். திருமணத்தை நிறுத்த வலியுறுத்தினோம். அவர்கள் முரட்டுத்தனமாக "இதிலெல்லாம் நீங்கள் தலையிடக்கூடாது" என்றனர். எல்லோரும் எங்களை நோக்கிக் கூச்சலிட்டார்கள். நீங்க எல்லாம் ஈ மாதிரி, உங்களால ஒன்னும் பண்ண முடியாது என்றார்கள். மணமகன்களோ, "தாங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 50,000 கொடுத்திருப்பதாகவும் அதனால் திருமணத்தை நிறுத்த முடியாது" என்றும் கூறினார்கள். ஆனால், நாங்கள் திருமணத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்தோம். எதிர்பாராத விதமாக போபால் சிங்கின் மனைவியும் அவர் அண்ணன் சேவா சிங்கும் எங்களை ஆதரித்தார்கள். கிராமத்தினர் சிலரும் திருமணத்திற்கு வந்தவர்களுள் சிலரும் கூட எங்கள் பக்கம் பேசினார்கள். நாங்கள் அந்த மணப்பெண்களை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். அன்றைய தினம் திருமணம் ரத்தானது. அவர்கள் எங்களிடம் வந்து மிரட்டினார்கள். நின்ற திருமணத்தை மறுநாள் நடத்துவதென முடிவெடுத்தார்கள்.நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தோம். இதுகுறித்து எழுதுவதாகச் சொன்ன ஒரு பத்திரிகை நிருபருக்கும் தகவல் கொடுத்தோம்.

இந்த நேரத்தில் போபால் சிங் ஒரு வேலை செய்தார். காவல் நிலையத்திற்குச் சென்று, தன் அண்ணன், தன் மகள்களின் திருமணத்தில் இடையூறு செய்வதாக ஒரு பொய்ப்புகார் கொடுத்தார். காவலர்கள், சேவா சிங்கைக் கைது செய்யத் திருமண மண்டபத்திற்கு வந்தனர். 5 சிறுமிகளும் முன்பு கொடுத்த புகாரில் உண்மையிருப்பதை அந்த வட்டாரக் காவல் துறை இணை ஆணையர் ஆர். எஸ். டூன் உணர்ந்தார். குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் 4,5,6 பிரிவுகளின் படி போபால் சிங்கின் மேல் வழக்குத் தொடரப்பட்டது. அவர் உடனே கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்."


இரண்டு சிறுமிகளின் வாழ்வில் நடக்கவிருந்த அநீதியையும் சீரழிவையும் தடுத்தமைக்காக, 5 சிறுமிகளும் பெரிதும் பாராட்டப்பட்டார்கள். 2003 -ஆம் ஆண்டு தீரச் செயல் புரிந்தவர்களுக்கான விருது, இந்த ஐவருக்கும் வழங்கப்பட்டது.

இதில் ஒரு நல்ல திருப்பம் என்ன தெரியுமா?

குழந்தைத் திருமணத்திலிருந்து காப்பாற்றப்பட்ட இரண்டு சிறுமிகளும், காப்பாற்றிய ஐந்து சிறுமிகள் படிக்கும் அதே பள்ளியில் படிக்கிறார்கள்.

"பாதகஞ் செய்பவரைப் பார்த்தால் - நீ
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா "


என்ற பாரதியின் பாடலுக்கு எடுத்துக்காட்டாக இவர்கள் நடந்திருக்கிறார்கள். மற்ற சிறுவர்களும் இவர்களைப் பின்தொடர்ந்து நடக்கவேண்டும்.வாரசுரபி, ஜுன் 11 2004

என் நூல்கள் சில...

வீர தீரச் சிறுவர்கள் : 1

சிறுத்தையை விரட்டிய குட்டி

பண்டைக் காலத்தில் தமிழ்ப்பெண் ஒருத்தி, புலியை முறத்தினால் விரட்டினாள் என்று கேள்விப்பட்டுள்ளோம். இன்றும்கூட கழுத்துச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிய திருடனை விரட்டிப் பிடித்த பெண்; ஈவ்-டீசிங் செய்தவனைச் செருப்பால் அடித்தவர்... என நிறைய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இத்தகைய வீர தீரச் செயல்கள் பரவலாக நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு 2003, நிஷா என்ற பெண், வரதட்சனை கேட்டுத் துன்புறுத்திய மணமகன் வீட்டாரைக் காவல் நிலையத்துக்கு அனுப்பியதை நாம் அறிவோம்.

வளர்ந்த பெண்கள் மட்டுமல்லாது, சிறுவர்களிடமும் வீரம் வளர்ந்து வருகிறது. "இளங்கன்று பயமறியாது" என்பதற்கேற்ப "வளரும் பயிர் முளையிலேயே தெரியும்" என நாம் மகிழுமாறு எண்ணற்ற இளங்குருத்துகள் தோன்றி, நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அவர்களுள் ஒருவரே குஜராத்தைச் சேர்ந்த குட்டி. இரண்டு பச்சிளம் குழந்தைகளைச் சிறுத்தையிடமிருந்து காப்பாற்றிய தீரச் சிறுமி. 13 வயதே நிறைந்த, கூச்சமும் கோழைத்தன்மையும் உடைய இந்தச் சிறுமியா இதைச் செய்தது? ஆம். மன வலிமை இருந்தால் மற்ற வலிமைகள் எல்லாம் தானே வந்து சேரும் என்பதற்கு இதோ குட்டியே சிறந்த சான்று.

அந்த அற்புத நிகழ்ச்சி எப்படி நடந்தது?

2002 மார்ச் 22 ஆம் தேதி. குஜராத் மாநிலம் தோஹத் மாவட்டத்தைச் சேர்ந்த கதலியா கிராமத்தில் குட்டி வசிக்கிறார். சபர்கந்தா மாவட்டம், தட்கல் கிராமத்தில் குட்டியின் அண்ணன் பாபுபாய் வசிக்கிறார். குட்டி, அண்ணனைக் காண, தட்கல் கிராமத்துக்கு வந்தார்.

அண்ணனுக்கு அழகான இரண்டு குழந்தைகள். ஒருவன், இரண்டு வயதான விபுல்; மற்றொருத்தி பிறந்து ஆறே மாதமான பாயல். தட்கல் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ஒரு பண்ணை உண்டு. அங்கு அண்ணனின் இரு குழந்தைகளோடு குட்டி தூங்கிக்கொண்டிருந்தாள். அப்பொழுது மணி, இரவு 10.30.

கிராமத்துக்கு அருகிலிருந்து இரை தேடியபடி ஒரு சிறுத்தை, பதுங்கிப் பதுங்கி வந்தது. மனித வாசனையை நுகர்ந்து பண்ணைக்குள் நுழைந்துவிட்டது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் அருகிலும் வந்துவிட்டது.

முதலில் அது, ஆறு மாதக் குழந்தை பாயலைத் தாக்கியது. அப்படியே விபுலையும் அடித்தது. விபுலை மெல்ல அந்த இடத்திலிருந்து இழுத்துக்கொண்டு ஓடப் பார்த்தது. விபுல், மரணபீதியில் தன் உயிரைக் காப்பாற்ற வேண்டி ஓலமிட்டான். அவன் அலறலைக் கேட்டு, குட்டி விழித்துக் கொண்டாள். தன் கண்ணெதிரே விபுலை, சிறுத்தை இழுத்துச் செல்வதைக் கண்டாள். துணிவுடன் சிறுத்தைக்கு எதிராக விபுலைத் தன் பக்கமாக இழுக்கத் தொடங்கினாள். இந்தப் போராட்டத்தில் சிறுத்தை, விபுலை விட்டுவிட்டு குட்டியைத் தாக்கத் தொடங்கியது. குட்டியின் இடது கையைக் கடித்தும் விட்டது. ஆனாலும் குட்டி, பயந்துவிடவில்லை. தொடர்ந்து போராடினாள்.

அதே நேரம் குட்டியின் அண்ணன் பாபுபாயும் மற்றவர்களும் அங்கு விரைந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் சிறுத்தை, தப்பித்து ஓடியது. இரண்டு குழந்தைகளையும் குட்டியையும் உடனே குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றார்கள். நல்ல வேளையாக அவர்கள் மூவரும் பிழைத்துவிட்டார்கள்.

"குட்டி மட்டும் தீரத்தோடு போராடியிருக்காவிட்டால் நாங்கள் எங்கள் குழந்தைகளை இழந்திருப்போம்" என்று பாபுபாயும் அவர் மனைவி சுர்தாபென்னும் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

ஆனால் குட்டி, இப்போதும் அதிகம் பேசவில்லை. "அது, பாயலைத் தாக்கியது. அது என்ன மிருகம் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், விபுல் உரக்க அழுததைக் கேட்டேன். அவன் தலையிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அவனைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்" என்று மட்டுமே கூறினாள்.

குட்டியின் இந்தத் துணிச்சலான செயலை, குஜராத் மாநில நாளிதழ்களும் பருவ இதழ்களும் பெரிய அளவில் வெளியிட்டன. குஜராத் மாநிலக் குழந்தைகள் நலக்கழகம், இச் செய்தியை அறிந்தது. இந்தியக் குழந்தைகள் நலக் கழகத்தின் தீரர் விருதுக்குக் குட்டியின் பெயரைப் பரிந்துரைத்தது.

குட்டிக்கு இந்தியப் பிரதமர் கைகளால் டெல்லியில் கீதா சோப்ரா விருது வழங்கப் பட்டது. அகமதாபாத் நகரிலும் குட்டிக்குப் பாராட்டு விழா நடந்தது. குட்டி, இந்தியச் சிறுவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.


வாரசுரபி - ஜூன் 4, 2004