Sunday, June 06, 2004

வீர தீரச் சிறுவர்கள் - 6

காலிழந்தும் உயிர்காத்தாள்

வாழ்க்கை, எத்தனையோ அபாயங்கள் நிறைந்தது. தன்னளவில் அது மிக எளிதாக இருந்தாலும் மனிதர்கள் அதை மிகவும் சிக்கலானதாக்கி விடுகிறார்கள். "மண்ணெண்ணெய் குடித்த 10 மாதக் குழந்தை சாவு" என்ற தலைப்பில் 6-7-04 அன்று தினத்தந்தியில் ஒரு செய்தி வெளியானது. திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் வசிக்கும் தங்கமணி என்பவரின் 10 மாதக் குழந்தை, அடுப்படியில் தரையில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து, பால் பாட்டில் என்று நினைத்துக் குடித்துவிட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் பயனின்றி, குழந்தை இறந்துவிட்டது. இது, யாருடைய குற்றம்? குழந்தை இருக்கும் இடத்தில் நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதைப் பலரும் உணருவதேயில்லை.

குழந்தைக்கு எட்டும் உயரத்தில் கத்தி, பிளேடு, கத்திரிக்கோல், கண்ணாடிப் பொருள்கள், பினாயில், மருந்துகள், கூர்மையான பொருள்கள், நச்சுத்தன்மை வாய்ந்தவை........ எனப் பலவற்றையும் வைக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, குழந்தைகளை எந்நேரமும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். குழந்தைக்குப் பக்கத்தில் பூச்சி பொட்டுகள் வரலாம். கல்லும் முள்ளும் கிடக்கலாம். குழந்தை, அறைக்கு வெளியே சென்றுவிட்டாலோ அதற்கு இன்னும் ஆபத்துகள் அதிகம். தெருவோரங்களில் விளையாடும் குழந்தைகளை அதிக விழிப்போடு கவனிக்கவேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே குழந்தைகள் சென்றுவிடவும் கூடும். வாகனங்கள் தம் கட்டுப்பாட்டினை இழந்து குழந்தையின் மீது மோதிவிடவும் கூடும். என்னதான் நடக்காது இந்த உலகிலே. பெரியவர்களே சமாளிக்க முடியாத இத்தகைய தருணத்தில் ஒரு சின்னக் குழந்தை என்ன செய்துவிட முடியும்?

இப்படித்தான் ஒரு சம்பவம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள குட்டிச்சால் என்ற கிராமத்தில் நடந்தது. அங்குள்ள மஹீன்-ரம்லா தம்பதியரின் இளைய மகள் , ராம்சீனா. பருத்திப்பள்ளி அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறாள். 2003-ஆம்
ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி. வீட்டின் முன் உள்ள தோட்டத்தில் ராம்சீனாவும் மற்ற குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை நோக்கிப் படுவேகமாக ஒரு கார் வந்தது. அந்தக் காரில் பிரேக்குகள் வேலை செய்யவில்லை. காரின் ஓட்டுநர், எவ்வளவோ முயன்றும் காரை நிறுத்த முடியவில்லை. அவரின் கட்டுப்பாட்டில் கார் இல்லை. விளையாடிக்கொண்டிருந்த அனைவரும் தப்பிக்க ஓடினார்கள். கார், வீட்டின் மதில் சுவர் மீது மோத வந்தது. அதைத் தவிர்க்க ஓட்டுநர், காரை மிக வேகமாகத் திருப்பினார். ராம்சீனாவின் அக்கா மகளான மூன்று வயது ரிசானா, அந்த வழியில் நின்றுகொண்டிருந்தாள். ரிசானாவிற்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.

இப்போது ராம்சீனா, ஓர் அற்புதமான வேலை செய்தாள். அவள், ரிசானாவை நோக்கி ஓடினாள். அதற்குள் அந்தக் கார், ரிசானாவை ஏறக்குறைய நெருங்கிவிட்டது. ராம்சீனா, ரிசானாவைத் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டாள். அவள் அப்படிச் செய்யாவிடில் அந்தக் கார், ரிசானா மீது நிச்சயமாக ஏறியிருக்கும். இந்தக் களேபரத்தில் ராம்சீனா கீழே விழுந்தாள். அவள் கால்களின் மீது கார் ஏறிவிட்டது. கால்களிலிருந்து குருதி கொட்டத் தொடங்கியபோது, ராம்சீனா நினைவிழந்தாள். அவளை உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகுதான் ராம்சீனா கண்விழித்தாள். அவளுடைய ஒரு கால் நீக்கப்பட்டு விட்டதாக அவளிடம் தெரிவித்தார்கள்.

ஒரு காலினை இழந்தது குறித்து ராம்சீனா என்ன நினைக்கிறாள்?

"காலினை நீக்கியது, எனக்கு ஒரு பெரிய வலியாகத் தெரியவில்லை. இப்போது எனக்கு ஒரு செயற்கைக் கால் இருக்கிறது. என்னால் நடக்க முடியும். நடனமாடவும் முடியும். என் ஆசிரியர்களும் நண்பர்களும் என்னை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டுகிறார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்குப் படிப்பதும் வயலின் வாசிப்பதும் ரொம்பப் பிடிக்கும். எதிர்காலத்தில் நான் ஒரு மருத்துவராவேன். ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் உதவ வேண்டியது என் கடமை"
என்கிறாள், ராம்சீனா.

ராம்சீனாவுக்கு 2003-ஆம் ஆண்டுக்கான கீதா சோப்ரா விருது வழங்கப்பெற்றது.

இக்கட்டான நிலையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு மூன்று வயதுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ராம்சீனாவின் தீரச் செயல், உண்மையிலேயே மகத்தானதுதான்.

வாகன ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் தம் வாகனத்தை அவ்வப்போது சரிபார்த்து, பழுது நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நாம் நமது எல்லைக்குட்பட்ட வரையில் அனைத்தையும் சரிவர வைத்துக்கொண்டால்தான் இந்த உலகம் ஒழுங்காக இயங்கும். ஒரு சிறிய தவறின் விலை, ராம்சீனாவின் துணிவுமிக்க கால். இனி, ஒருக்காலும் இப்படி நடக்கக்கூடாது.


வாரசுரபி - ஜூலை 9, 2004

No comments: