Tuesday, June 01, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 1

சிறுத்தையை விரட்டிய குட்டி

பண்டைக் காலத்தில் தமிழ்ப்பெண் ஒருத்தி, புலியை முறத்தினால் விரட்டினாள் என்று கேள்விப்பட்டுள்ளோம். இன்றும்கூட கழுத்துச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிய திருடனை விரட்டிப் பிடித்த பெண்; ஈவ்-டீசிங் செய்தவனைச் செருப்பால் அடித்தவர்... என நிறைய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இத்தகைய வீர தீரச் செயல்கள் பரவலாக நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு 2003, நிஷா என்ற பெண், வரதட்சனை கேட்டுத் துன்புறுத்திய மணமகன் வீட்டாரைக் காவல் நிலையத்துக்கு அனுப்பியதை நாம் அறிவோம்.

வளர்ந்த பெண்கள் மட்டுமல்லாது, சிறுவர்களிடமும் வீரம் வளர்ந்து வருகிறது. "இளங்கன்று பயமறியாது" என்பதற்கேற்ப "வளரும் பயிர் முளையிலேயே தெரியும்" என நாம் மகிழுமாறு எண்ணற்ற இளங்குருத்துகள் தோன்றி, நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அவர்களுள் ஒருவரே குஜராத்தைச் சேர்ந்த குட்டி. இரண்டு பச்சிளம் குழந்தைகளைச் சிறுத்தையிடமிருந்து காப்பாற்றிய தீரச் சிறுமி. 13 வயதே நிறைந்த, கூச்சமும் கோழைத்தன்மையும் உடைய இந்தச் சிறுமியா இதைச் செய்தது? ஆம். மன வலிமை இருந்தால் மற்ற வலிமைகள் எல்லாம் தானே வந்து சேரும் என்பதற்கு இதோ குட்டியே சிறந்த சான்று.

அந்த அற்புத நிகழ்ச்சி எப்படி நடந்தது?

2002 மார்ச் 22 ஆம் தேதி. குஜராத் மாநிலம் தோஹத் மாவட்டத்தைச் சேர்ந்த கதலியா கிராமத்தில் குட்டி வசிக்கிறார். சபர்கந்தா மாவட்டம், தட்கல் கிராமத்தில் குட்டியின் அண்ணன் பாபுபாய் வசிக்கிறார். குட்டி, அண்ணனைக் காண, தட்கல் கிராமத்துக்கு வந்தார்.

அண்ணனுக்கு அழகான இரண்டு குழந்தைகள். ஒருவன், இரண்டு வயதான விபுல்; மற்றொருத்தி பிறந்து ஆறே மாதமான பாயல். தட்கல் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ஒரு பண்ணை உண்டு. அங்கு அண்ணனின் இரு குழந்தைகளோடு குட்டி தூங்கிக்கொண்டிருந்தாள். அப்பொழுது மணி, இரவு 10.30.

கிராமத்துக்கு அருகிலிருந்து இரை தேடியபடி ஒரு சிறுத்தை, பதுங்கிப் பதுங்கி வந்தது. மனித வாசனையை நுகர்ந்து பண்ணைக்குள் நுழைந்துவிட்டது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் அருகிலும் வந்துவிட்டது.

முதலில் அது, ஆறு மாதக் குழந்தை பாயலைத் தாக்கியது. அப்படியே விபுலையும் அடித்தது. விபுலை மெல்ல அந்த இடத்திலிருந்து இழுத்துக்கொண்டு ஓடப் பார்த்தது. விபுல், மரணபீதியில் தன் உயிரைக் காப்பாற்ற வேண்டி ஓலமிட்டான். அவன் அலறலைக் கேட்டு, குட்டி விழித்துக் கொண்டாள். தன் கண்ணெதிரே விபுலை, சிறுத்தை இழுத்துச் செல்வதைக் கண்டாள். துணிவுடன் சிறுத்தைக்கு எதிராக விபுலைத் தன் பக்கமாக இழுக்கத் தொடங்கினாள். இந்தப் போராட்டத்தில் சிறுத்தை, விபுலை விட்டுவிட்டு குட்டியைத் தாக்கத் தொடங்கியது. குட்டியின் இடது கையைக் கடித்தும் விட்டது. ஆனாலும் குட்டி, பயந்துவிடவில்லை. தொடர்ந்து போராடினாள்.

அதே நேரம் குட்டியின் அண்ணன் பாபுபாயும் மற்றவர்களும் அங்கு விரைந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் சிறுத்தை, தப்பித்து ஓடியது. இரண்டு குழந்தைகளையும் குட்டியையும் உடனே குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றார்கள். நல்ல வேளையாக அவர்கள் மூவரும் பிழைத்துவிட்டார்கள்.

"குட்டி மட்டும் தீரத்தோடு போராடியிருக்காவிட்டால் நாங்கள் எங்கள் குழந்தைகளை இழந்திருப்போம்" என்று பாபுபாயும் அவர் மனைவி சுர்தாபென்னும் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

ஆனால் குட்டி, இப்போதும் அதிகம் பேசவில்லை. "அது, பாயலைத் தாக்கியது. அது என்ன மிருகம் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், விபுல் உரக்க அழுததைக் கேட்டேன். அவன் தலையிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அவனைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்" என்று மட்டுமே கூறினாள்.

குட்டியின் இந்தத் துணிச்சலான செயலை, குஜராத் மாநில நாளிதழ்களும் பருவ இதழ்களும் பெரிய அளவில் வெளியிட்டன. குஜராத் மாநிலக் குழந்தைகள் நலக்கழகம், இச் செய்தியை அறிந்தது. இந்தியக் குழந்தைகள் நலக் கழகத்தின் தீரர் விருதுக்குக் குட்டியின் பெயரைப் பரிந்துரைத்தது.

குட்டிக்கு இந்தியப் பிரதமர் கைகளால் டெல்லியில் கீதா சோப்ரா விருது வழங்கப் பட்டது. அகமதாபாத் நகரிலும் குட்டிக்குப் பாராட்டு விழா நடந்தது. குட்டி, இந்தியச் சிறுவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.


வாரசுரபி - ஜூன் 4, 2004

No comments: