Saturday, June 05, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 5

கொள்ளையருடன் போரிட்ட குட்டிச் சிறுவன்

நமது பாதுகாப்பு, பெரும் கேள்விக்குரியது. கமாண்டோ படை வீரர்கள் முதல் நமது தெருவில் ரோந்து சுற்றும் கூர்க்கா வரை நம்மைச் சுற்றி எவ்வளவோ பேர் இருந்தாலும் நாம் பத்திரமாக இருக்கிறோமா என்ற கேள்வி, ஒரு கத்தியைப் போல நமது தலைக்கு மேல் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. வெளியே சென்றவர், வீடு திரும்புவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வீட்டில் இருப்பவராவது பாதுகாப்புடன் இருப்பாரா என்றால் அந்தக் கேள்விக்கும் விடையில்லை. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் தற்போதைய எதார்த்தம். இதற்கு நாம் தயாராக இருக்கிறோமா?

நிச்சயமாக இல்லை. மறைமுகமாக நம்மைக் கொள்ளையடிப்பவர்களைக் கொஞ்சம் தள்ளிவைப்போம். நேரடியாகவே எவ்வளவு சம்பவங்கள் நடக்கின்றன! பிக்பாக்கெட், சங்கிலி பறிப்பில் தொடங்கி, பெரிய பெரிய கொலை-கொள்ளை வரைக்கும் குற்றப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. திரைப்படங்களில் இத்தகைய ஆட்கள், கதாநாயகர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். குற்றப் பின்னணியுள்ள பலர், அரசியல் அதிகாரங்களையும் கைப்பற்றி விடுகிறார்கள். நாம் மிக மோசமான சூழலில் இருக்கிறோம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இங்கு வாழ்வதற்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியது, மிக இன்றியமையாதது. சிறுவன் விவேக், இதற்கு நமக்கு வழிகாட்டுகிறான்.

யார் இந்த விவேக்?

அசாம் மாநிலம், கவுகாத்தியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் விவேக் புர்கயஸ்தா, கொடூரமான கொள்ளைக் கும்பலுடன் போராடி, அவர்களின் முயற்சியை முறியடித்துள்ளான். இந்தியாவின் வடகிழக்கில் உள்ள புகழ்பெற்ற மாநிலமான அசாம், தனக்கெனத் தனி மொழி, நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்களைக் கொண்ட பாரம்பரியம் மிக்க மாநிலமாகும். இங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும் மாணவன், விவேக்.

2003-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி. நள்ளிரவு 1.30 மணி. விவேக் வீட்டில் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். விவேக் வீட்டில் அவனும் அவன் தம்பியும் ஓர் அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்கள், வேறோர் அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது விருந்தினர் அறையில் திடீரென ஒரு சத்தம் கேட்டது. விவேக்கின் அம்மா விழித்துக்கொண்டார். ஆயுதம் தாங்கிய ஐந்து பேர், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு, அவர்களின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டிருந்தார்கள். அந்தக் கொள்ளையர்கள், விவேக்கின் அம்மாவைக் கத்தியால் குத்திவிட்டார்கள். அம்மாவைக் காப்பாற்றச் சென்ற அப்பாவுக்கும் கத்திக் குத்து விழுந்தது. அங்கு குழப்பமும் களேபரமுமாய் இருந்தது.

இந்தச் சந்தடியில் விவேக் விழித்துக்கொண்டு அந்த விருந்தினர் அறைக்கு ஓடினான். அப்புறம் என்ன நடந்தது? விவேக்கே சொல்கிறான்:

"கொள்ளையர்களில் ஒருவன், என் நெஞ்சில் கத்தியால் குத்த வந்தான். நான் வெறுங்கையை நீட்டித் தடுத்தேன்; என்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றேன். அதனால் காயமுற்றேன். ஆனால், பதிலுக்கு நானும் தாக்கினேன். இந்தச் சத்தங்களைக் கேட்டு, பக்கத்து வீட்டிலும் எதிர்வீட்டிலும் இருந்தவர்கள், எங்களைக் காப்பாற்ற ஓடிவந்தார்கள். அவர்களைக் கண்டதும் கொள்ளையர்கள் தப்பித்து ஓடப் பார்த்தார்கள். என்னைத் தாக்கிய கொள்ளையனும் தப்பிக்கப் பார்த்தான். நான் அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அவன் எவ்வளவோ முயன்றும் நான் விடவில்லை. இதற்குள் பக்கத்து வீட்டார்கள், மேலும் இரண்டு கொள்ளையர்களைப் பிடித்துவிட்டார்கள். என் பெற்றோர்களோ ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். தீனமாக அவறினார்கள். நானும் காயப்பட்டிருந்தேன். எனினும் பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து என் பெற்றோரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கே....அங்கே....அய்யோ, என் அப்பா இறந்துவிட்டார். நல்லவேளையாக என் அம்மா பிழைத்துவிட்டார். என் அப்பா இறந்தாலும் அவருடைய கனவுகளை நான் நிறைவேற்றுவேன். நான் ஒரு நல்ல மனிதனாக உருவாவதே என் அப்பாவுக்குச் செய்யும் சிறந்த அஞ்சலி."


விவேக்கின் இந்தத் தீரச் செயலுக்காக, அவனுக்கு பாபு கயதானி விருது வழங்கப்பட்டுள்ளது.

இப்போது விவேக்கின் உலகம், பள்ளிக்கூட முதல்வரான அவன் அம்மாவைச் சுற்றித்தான் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரு விமானப் பொறியாளனாக வேண்டும் என்பது விவேக்கின் கனவு. ஆகாயத்தின் கீழே ஒரு பட்டாம்பூச்சியாக அவன் பறக்க, அவனை வாழ்த்துவோம். அவனைப் போலச் சவால்களைச் சந்திக்க நம்மை தயார்ப்படுத்திக்கொள்வோம். உறுதிகொண்ட நெஞ்சத்தோடு இந்த உலகை வலம் வருவோம்.


வாரசுரபி - ஜூலை 2, 2004

No comments: