சிறுமிகளைக் காத்த சிறுமிகள்
சிறுவர்கள், அம்மா-அப்பா விளையாட்டு விளையாடுவதுண்டு. வீட்டில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் என்னென்ன செய்கிறார்களோ, அவை அனைத்தையும் அப்படியே திருப்பிச் செய்வதை நாம் பார்க்கலாம். "அம்மாடி பங்கஜம்" என்று அழைத்தாலும் சரி, "ஏ கூறு கெட்டவளே" என்றாலும் சரி, அப்படியே இங்கு எதிரொலிக்கும். மனைவி, "ஏனுங்க" என்றாலும் "இந்தா" என்றாலும் அதுவும் எதிரொலிக்கும். போலச் செய்தல் என்ற இயல்புடையவர்கள் என்பதால் சிறுவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது.
ஆனால், சிறுவர்களை வைத்துப் பெரியவர்கள் விளையாடுவதை நாம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
கழுதைகளுக்குக் கல்யாணம், ஆல மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம், காக்காய்க்கும் குருவிக்கும் கல்யாணம்... என்று தொடங்கி, பெருமாள் திருக்கல்யாணம் வரைக்கும் நம் மக்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதில் ஏனோ அலாதி ஆர்வம் இருக்கிறது. கல்யாணம்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதுபோல் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். நல்ல கணவன் கிடைக்கவேண்டுமெனப் பாவை நோன்பு இருந்து, திருப்பாவை பாடும் கன்னிப் பெண்களுக்கும் பஞ்சமில்லை. இதற்காகக் கோயில் கோயிலாகச் செல்வதும் மரம் மரமாகச் சுற்றுவதும் ஜோதிடர்களிடமும் சாமியார்களிடமும் சென்று கைரேகை, ஜாதகம், நாடி ஜோதிடம்... என்று என்னென்ன உண்டோ அத்தனை ஜோதிடங்களையும் ஒரு கை பார்த்து விடுகிறார்கள். திருமண வயதில் திருமணத்திற்கு இவ்வளவு கஷ்டப்படுவதால் சிறு வயதிலேயே திருமணத்தை முடித்துவிட்டு, சிக்கல்களிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். பிற்காலத்தில் காதல், கத்தரிக்காய் என ஏதாவது பிரச்சினை வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் சிலர், சிறுவர் மணம் புரிந்துவிடுகிறார்கள்.
சிறுவர் மணத்தால் கைம்பெண்களின் எண்ணிக்கை கூடியது. விரல் சூப்பும் பருவத்தில், உலகம் தெரியாத வயதில், திருமணம் செய்து வைப்பது அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்குவதாகும். இதனால்தான் அரசு, இதைத் தடை செய்தது. அரசு தடை செய்யும் அனைத்தும் நின்று விடுவதில்லை என்பதற்கு அநேக எடுத்துக்காட்டுகள் உண்டு. அவற்றுள் ஒன்று, பாலர் திருமணம்.
தீங்கு நிகழும் போது அதைத் தடுக்க, தெய்வம், மனித உருவில் தோன்றும் என்பது மக்களின் நம்பிக்கை. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, அரியானாவைச் சேர்ந்த ஐந்து சிறுமிகள், இரண்டு பாலர் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியதுதான்.
இந்தத் தீரச் செயல் எப்படி நடந்தது?
டில்லிக்கு அருகிலுள்ள அரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் உள்ளது, அரிசிங்கபுரம் என்ற கிராமம். இங்கு கடாரியா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த போபால் சிங் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் ஓர் ஏழை விவசாயி. இவருக்குச் சுமன் என்ற 12 வயதுப் பெண்ணும் புஷ்பா என்ற 6 வயது மகளும் உண்டு. அதே ஊரில் தர்மபால், ராஜ்பால் என இரு சகோதரர்கள் இருந்தார்கள். இந்த இருவரிடமும் போபால் சிங், பணம் கடன் வாங்கியிருந்தார். கடன், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. வட்டி, குட்டி போட்டு, அந்த குட்டி, ஜட்டி போட்டு, பிறகு வேட்டியே கட்டிவிட்டது.
போபால் சிங்கால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? நெருக்குதல் அதிகமானது. இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணவேண்டிய கட்டாயம், போபால் சிங்குக்கு ஏற்பட்டது. கடைசியில் அவர்களுக்கிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதாவது கடன் கொடுத்த சகோதரர்களுக்கு, பணத்திற்குப் பதிலாக, போபால் சிங்கின் இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிடுவது. இதுதான் அந்த ஒப்பந்தம். பழங்காலத்தில் அடிமைகளை ஏலத்திற்கு விட்ட கொடுமையைப் போல் அல்லவா இது இருக்கிறது.
2003 ஏப்ரல் 18 அன்று "திருமணம்' செய்வதாக நாள் குறித்தார்கள். மணமகன் வீட்டார், அரிசிங்கபுரத்திற்கு வந்துவிட்டார்கள். இன்னும் சில மணி நேரத்தில் திருமணம் நடக்க இருந்தது. ஊராருக்குச் செய்தி தெரிந்திருந்தது. ஆனால், இது அவர்களுக்கு ஒரு பெரிய குற்றமாகத் தெரியவில்லை.
அதே ஊரில் நீலம் குமாரி (10), சரிதா தியாகி (17), சுனிதாதேவி சிக்தோயா (14), சுவாதி தியாகி (14), சுஷ்மா ராணி (16) என்ற ஐந்து சிறுமிகள் இருந்தார்கள். இவர்களுள் நீலம் மட்டும் ஐந்தாம் வகுப்பு மாணவி. மற்ற நால்வரும் ஒன்பதாம் வகுப்புப் படிப்பவர்கள். இவர்கள் ஐவரும் இந்தத் திருமணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ந்துபோனார்கள். திருமணம் நிகழுமிடத்திற்கு ஓடினார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி... மணமகன்கள் 26 வயதிலும் 30 வயதிலும் இருந்தார்கள். மணப்பெண்களை விட 3 முதல் 4 மடங்கு கூடுதலான வயது. மணப்பெண்களை வற்புறுத்தி, கட்டாயக் கல்யாணம் நடப்பதைப் புரிந்து கொண்டார்கள். இந்தக் கொடுமையை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உந்துதல் அவர்களுக்குள் ஏற்பட்டது.
இது குறித்துச் சரிதா தியாகியே தொடர்ந்து சொல்வதைக் கேளுங்கள்..
"நாங்கள் உடனே எங்கள் பள்ளிக்கூட ஆசிரியரைச் சந்தித்தோம். அவர் எங்களைக் கிராமத் தலைவரிடம் புகார் கூறச் சொன்னார். அதைத் தொடர்ந்து நாங்கள் தற்போதைய கிராமத் தலைவரிடமும் முன்னாள் கிராமத் தலைவரிடமும் புகார் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவ முன்வரவில்லை.
திருமண மண்டபத்தில் பண்டிதர்கள் (திருமணத்தை நடத்துவோர்), மந்திரங்களை ஓதி, சமயச் சடங்குகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அப்போது (திரைப்படப் பாணியில்) நாங்கள் இரண்டு ஆதரவாளர்களுடன் பந்தலுக்குள் நுழைந்து, பண்டிதர்களிடம் நிலைமையை விளக்கினோம். திருமணத்தை நிறுத்த வலியுறுத்தினோம். அவர்கள் முரட்டுத்தனமாக "இதிலெல்லாம் நீங்கள் தலையிடக்கூடாது" என்றனர். எல்லோரும் எங்களை நோக்கிக் கூச்சலிட்டார்கள். நீங்க எல்லாம் ஈ மாதிரி, உங்களால ஒன்னும் பண்ண முடியாது என்றார்கள். மணமகன்களோ, "தாங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 50,000 கொடுத்திருப்பதாகவும் அதனால் திருமணத்தை நிறுத்த முடியாது" என்றும் கூறினார்கள். ஆனால், நாங்கள் திருமணத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்தோம். எதிர்பாராத விதமாக போபால் சிங்கின் மனைவியும் அவர் அண்ணன் சேவா சிங்கும் எங்களை ஆதரித்தார்கள். கிராமத்தினர் சிலரும் திருமணத்திற்கு வந்தவர்களுள் சிலரும் கூட எங்கள் பக்கம் பேசினார்கள். நாங்கள் அந்த மணப்பெண்களை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். அன்றைய தினம் திருமணம் ரத்தானது. அவர்கள் எங்களிடம் வந்து மிரட்டினார்கள். நின்ற திருமணத்தை மறுநாள் நடத்துவதென முடிவெடுத்தார்கள்.நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தோம். இதுகுறித்து எழுதுவதாகச் சொன்ன ஒரு பத்திரிகை நிருபருக்கும் தகவல் கொடுத்தோம்.
இந்த நேரத்தில் போபால் சிங் ஒரு வேலை செய்தார். காவல் நிலையத்திற்குச் சென்று, தன் அண்ணன், தன் மகள்களின் திருமணத்தில் இடையூறு செய்வதாக ஒரு பொய்ப்புகார் கொடுத்தார். காவலர்கள், சேவா சிங்கைக் கைது செய்யத் திருமண மண்டபத்திற்கு வந்தனர். 5 சிறுமிகளும் முன்பு கொடுத்த புகாரில் உண்மையிருப்பதை அந்த வட்டாரக் காவல் துறை இணை ஆணையர் ஆர். எஸ். டூன் உணர்ந்தார். குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் 4,5,6 பிரிவுகளின் படி போபால் சிங்கின் மேல் வழக்குத் தொடரப்பட்டது. அவர் உடனே கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்."
இரண்டு சிறுமிகளின் வாழ்வில் நடக்கவிருந்த அநீதியையும் சீரழிவையும் தடுத்தமைக்காக, 5 சிறுமிகளும் பெரிதும் பாராட்டப்பட்டார்கள். 2003 -ஆம் ஆண்டு தீரச் செயல் புரிந்தவர்களுக்கான விருது, இந்த ஐவருக்கும் வழங்கப்பட்டது.
இதில் ஒரு நல்ல திருப்பம் என்ன தெரியுமா?
குழந்தைத் திருமணத்திலிருந்து காப்பாற்றப்பட்ட இரண்டு சிறுமிகளும், காப்பாற்றிய ஐந்து சிறுமிகள் படிக்கும் அதே பள்ளியில் படிக்கிறார்கள்.
"பாதகஞ் செய்பவரைப் பார்த்தால் - நீ
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா "
என்ற பாரதியின் பாடலுக்கு எடுத்துக்காட்டாக இவர்கள் நடந்திருக்கிறார்கள். மற்ற சிறுவர்களும் இவர்களைப் பின்தொடர்ந்து நடக்கவேண்டும்.
வாரசுரபி, ஜுன் 11 2004
No comments:
Post a Comment