Saturday, April 03, 2004

கவிதாயினி சுகிர்தராணி

ஆணும் பெண்ணும் தொட்டுப் பேசுவது, இந்நாட்டில் வழக்கமில்லை. ஒருத்தி இதைச் செய்யலாம். இதைச் செய்யக்கூடாது என்று தீர்மானமான வரையறைகள் இங்குண்டு. ‘வீதி வரை மனைவி’ என்பதுபோல எல்லாவற்றுக்கும் எல்லை விதித்திருக்கிறது, சமூகம். கீழை நாடுகளின் இந்த வளையத்துக்குள்ளான வாழ்க்கையில் மேலைநாடுகளின் சர்வ சுதந்திர மனப்பான்மை, அண்மைக்காலத்தில் வலிமை யான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உடை, உணவு, மதம், விளையாட்டு, நாகரிகம்... என அனைத்திலும் மேற்கத்திய படையெடுப்பு, கீழை நாடுகளில் ஒரு மறைமுகப் போரை நிகழ்த்தி வருகிறது. இதில் சாதக- பாதக அம்சங்கள் கலந்தே உள்ளன. அதன் ஒரு பகுதிதான், கணவனல்லாத ஆடவனைத் தொடலாம்; முத்தமிடலாம்; நட்புறவு கொள்ளலாம் என்ற பெண்ணின் சிந்தனை.

தன் முதல் நூலுக்கு “கைப்பற்றி என் கனவுகேள்’’ எனத் தலைப்பிட்டுள்ளார், சுகிர்தராணி, இங்கேயே அவர், தொடுவதை அனுமதிக்கிறார்.

“மரந்துளிர்ந்த சாலையோரம்
கைப்பற்றி என் கனவுகேள்.
மனமொடிந்த பொழுதெல்லாம்
திகட்டும் வரை
உன் தோள்கொடு.
விளக்கணைந்த பின்னிரவில்
இமைமீறும் என் கண்ணீரை
சுட்டுவிரலால் துடைத்துவிடு.
மறுதலித்த வாழ்க்கைக்கு
என் பிரதியென
உன்முகம் காட்டு.
இத்தனைக்கும் சம்மதமெனில்
தயவுசெய்து
தப்பர்த்தம் கொள்ளாதே
புணர்ச்சிக்கு
அழைக்கிறேனென்று’’

‘புணர்ச்சி’ என்ற சொல்லை ஒரு பெண் வெளிப்படையாகச் சொல்வதே மிகப் பெரிய சமூக மாற்றத்தின் அறிகுறி. சுகிர்தராணி அதையும் தாண்டிச் செல்கிறார்.

“என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்’’

இந்த வரிகளை ஒரு பெண் எழுதுவதற்கு மிகுந்த துணிச்சல் தேவை. ‘பாலியலைஎழுதும் உரிமை, பெண்களுக்கு உண்டு’ என்ற முழக்கம், இந்த வரிகளுக்குப் பின்னே கேட்கிறது.

பாலியலை மட்டுமின்றி, பார்க்கப்படாத பல பக்கங்களை மிக நேர்த்தியாக இவர், பதிவு செய்கிறார்.
“வீட்டினில்
வலுவிழந்த கெடுபிடிகள்.
வெளிச்செல்கையில்
பார்வைகள் துரத்தாத நிம்மதி.
சலனத்தைத் தூண்டாத
அந்த மூன்று நாட்கள்.
விளம்பரம்
உள்ளாடைகளின்
அவசியம் புரியாத
அவயவங்கள்.
செளகரியம்தான்
நரையோடியும்
பூப்படையாமல் இருப்பது’’
“கருவிழந்த கவிதை’’ என்ற இக்கவிதை, இயற்கையின் தவறால் பெண்மை படும்பாட்டை மெளனமாய் இயம்புகிறது.

ஆண்தான், காதலை வெளிப்படையாய்ச் சொல்வான். அவன்தான் காதலிக்காகத் தன்னை எந்த நிலைக்கும் தாழ்த்திக்கொள்ளத் தயாராய் இருப்பான். பெண், கொஞ்சம் பாதுகாப்பான- உயர்ந்த இடத்திலேயே நிற்பாள். இதையும் சுகிர்தராணி உடைக்கிறார்.
“உன்னை
மனசுக்குள் பொத்திய
பஞ்சாரமாய்கூட வேண்டாம்
உன்
நினைவுகளைத் தேக்கிய
பன்னாடையாய்
என்னை இருக்கவிடு’’

காதலுக்குரிய வசீகரமான உவமைகளைத் தவிர்த்து, ‘பன்னாடை’ என்ற சொல்லைப் பயன்படுத்திய இவர், மிகுந்த கவனிப்புக்குரியவர்.

சுகிர்தராணியின் கேள்விகள், அதிக வீரியத்தோடும் ஆழத்தோடும் நம் மனங்களை அறைகின்றன.
“இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
வேடிக்கைப் பார்ப்பதாய்
பாவனை செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?’’
என்ற கவிதை, காதலுக்குரிய பண்புநலனை வலியுறுத்துகிறது.

உயிர்வாதைக்குப் பிறகு,
“இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணிவிலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என்மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?’’
என்ற இந்தக் கேள்வி, சமூகமுரணை வெளிப்படுத்துகிறது.

வேலூர் மாவட்டம், இலாலாப்பேட்டையில் வசிக்கும் சுகிர்தராணி, பள்ளிக்கூட ஆசிரியராய்ப் பணியாற்றுகிறார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று, இளம் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளார். கோவை தேவமகள் இலக்கிய விருது பெற்றவர். தேர்ந்தெடுக்கப்பெற்ற கூர்மையான சொற்கள், இவரது கவிதைமொழிக்கு வலுச்சேர்க்கின்றன.

“இமைகள் திறந்திருந்தும்
வாழ்க்கையைத் தொடுவதில்
தோற்றுப் போகிறேன்’’
என எழுதியுள்ளார். எனினும், கவிதையைத் தொடுவதில் வெற்றிபெற்றுள்ளார்.

1 comment:

Unknown said...

வரம்புகளை மீறிய:-கவிதை
நரம்புகளின் நர்த்தனம்
விடை தேடச் சொல்லும் வினாக்குறிகளாய்
ஒவ்வொரு எழுத்துகளும்
உளி போல் பதிந்து
கோடரி போல் பிளந்து
காய வைக்கிறது-பழமைக்
காயத்தின்
காயங்களை

எழுதுக
ஏங்குகிறேன்
வாசிக்க
வசிக்க