கவிதையை எப்படி வெளிப்படுத்துவது என்று தேர்ந்தவர்கள், அடுத்து, கவிதையை எதற்குப் பயன்படுத்துவது என்று சிந்திப்பார்கள்.
கவிதையைக் கொண்டு பணம் ஈட்டலாமா? புகழ் பெறலாமா? துதி பாடலாமா? புதிய தடம் பதிக்கலாமா? எனப் பலர் யோசிப்பார்கள். ஆனால், ஆண்டாள் பிரியதர்ஷினியோ, கவிதையைப் போராளிக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்.
“அமங்கலி விதவை வைப்பாட்டி சின்னவீடு
தாசிவேசி ஓடுகாலி முதிர்கன்னி மலடி
வாயாடி வாழாவெட்டி தாலியறுத்தவள்
இந்த வார்த்தைகளைப்
போகியாக எரிப்போம்’’
என்று மொழிக்கு வெள்ளையடிக்க முன்கை நீட்டுகிறார்.
“ஆண்கள் அடையாளப் பிரியர்கள்’’ எனக் கட்டமிடும் இவர், “குங்குமத் தீற்றலிலும் சரட்டிலும் வெள்ளி வளையத்திலும் உயிரைப் பொதிந்துவைப்பது’’ குறித்து வருந்துகிறார்.
“பார்வதிதேவி வேலைக்குப் போனாளா?’’ என்ற கவிதையில், பணிபுரியும் தாயின் பாடுகளை இதயம்கசியப் பதிவு செய்கிறார்.
“ரெண்டும்
பாறாங்கல்லாய்க் கனக்கிறது.
ஆயிரம் நெருப்பு ஊசிகளால்
நரம்பை உருக்கும்
உயிர்வேதனை...
தளதளவெனப் பொங்கி
பிளவுஸை நனைத்து
புடவையில் வழிந்து
வயிற்றில் இறங்குகிறது
ம்...ம்...ம்....ஹா...
பால்வாசனை’’
என்ற காட்சி விரிகையில் தாய்மையின் கதறலைக் உணர முடிகிறது.
“பார்வதி தேவியாய்
ஞானப்பால் தர ஆசைதான்
பார்வதிதேவி
வேலைக்குப் போனாளா என்ன?’’
என்ற இவரின் கேள்வி புனைவின் மீது எழுந்துநிற்கும் சமுதாயத்தின் புரடியில் தட்டுகிறது.
“கழுத்துக்கு கீழ்தான்
பெண்ணின் பயன்பாடா?
ஆம் எனில்
முயக்கத்துக்கு
முண்டங்கள் போதுமே?
பெண்ணுக்குத்
தலையும் உண்டு.
மகளே... என் மகளே...
நீ தலையில் வாழவேண்டும்’’ என்கிறபோது வருங்காலத் தலைமுறைக்கும் இவர் வழிகாட்டுகிறார்.
“வாழ்க்கைச் சந்தையில்
காமதேனுக்கள் ஏலம்...
காளைக் கொம்பின்
நீளத்துக்கொரு விலை
கூர்மைக்கொரு விலை’’
வாலின் வலிமைக்கொரு விலை என்று வரதட்சணை வாங்குவோரைக் குத்திக் கிழிக்கிறார்.
“என் எதிர்கால வாரிசுக்கு
ஆங்கில எழுத்து
இருபத்தாறும் போதாது
இனிஷியலுக்கு’’
என பாலியல் தொழிலாளி ஒருத்தி பாடுவதாக எழுதியதில் அர்த்தப்பொதிவு அதிகமுள்ளது.
“கட்டம் கட்டிப் பேப்பரிலே
படத்தோடு காலைவரும்
பிடிபட்ட அழகிகள்
இடமிருந்து வலம்.. என்று
இடம்மாறி வந்த
இராமன்களை
யார் கட்டம் கட்டுவார்?’’
என்ற இவர் கேள்விக்கு யார் பதில் சொல்லக் கூடும்.
“மூன்றெழுத்துக் கல்லெறிந்து
சூரியமுகம் சிதைக்கிறார்கள்’’ எனக் கற்பின் மீது கல்லெறிகிற இவர்,
“புதுக்கங்கு எரிகிறது. எரிக்கிறது
ராமனுக்காக. ராமன்களை...’’
எனத் தீப்பந்தம் கொளுத்துகிறார்.
கவிதாயினியாய் இருந்தாலும் குடும்பப் பொறுப்பை விடமுடியாதே.
“ மனசுக்குள் கவிதை வடித்து
அடுப்படியில்சோறு வடித்தேன்’’ என்ற சூழலால் இலக்கிய இழப்புகள் ஏராளம்.
நல்லபல படைப்புகளை இவர் தந்துள்ளார். ஆனால்...
“கவிஞன் மூடிக்குள்
காமுகன் இருக்கலாம்
எழுத்தாளன் மூடிக்குள்
எத்தனும் சிரிக்கலாம்
கற்பு தேவதைக்குள்
மாதவி முகிழ்க்கலாம்’’ என்ற பாடல் மாதவியைக் கற்புதேவதை இல்லை என்கிறது. இது ஏற்புடையதில்லை. இவருடைய மூன்றெழுத்துக் கல் இங்கே முரண்படுகிறது.
நான், 1997இல் “உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு’’ என்ற தலைப்பில் கவிதை நூலைப் படைத்தேன். அதில் நவீன பெண்களின் நான்கு குணங்கள் என இவற்றை அறிவித்தேன். இவரது “தோகையெல்லாம் துப்பாக்கிகள்’’ என்ற நூலில்
“அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
எல்லாம் பழங்காலம் - இனி
உச்சம் ஞானம் திடம் உயிர்ப்பு
எங்கள் புதுக்கோலம்’’ என்று உள்ளது.
இது தற்செயலான ஒற்றுமையாகவே இருக்கலாம்.
இவரின் அப்பா, கவிஞர் நெல்லை ஆ. கணபதி. கணவர், கவிஞர் பால. இரமணி என இலக்கியச் சூழலில் வாழ்வது, ஒரு நற்பேறுதான். நெல்லையைச் சேர்ந்த ஆண்டாள், இளம் முனைவர் பட்டம் பெற்றவர். கவிதை தவிர, சிறுகதை-குறுநாவல்-நாவல்-கட்டுரை-மொழி பெயர்ப்பு எனப் பல வடிவங்களிலும் படைத்துக் காட்டியுள்ளார்.
இவரது கவிதைகளில் கதைத்தன்மையும் நேரடி அணுகுமுறையும் இருக்கின்றன. சொற்களில் சூடும் காரமும் மிகுந்துள்ளன. தவறு செய்கிற எல்லோரையும் விசாரணைக் கூண்டில் ஏற்றுகிற வீரம் இருக்கிறது. இவரைப் பெண்பால் பாரதி என்று சொல்வது பொருத்தமுடையது.
ஓர் எச்சரிக்கை. எளிதில் தீப்பற்றும் பொருள்களை இவர் அருகில் எடுத்துச் செல்ல வேண்டாம்.
- அண்ணா கண்ணன்
No comments:
Post a Comment