Saturday, May 01, 2004

கவிஞர் முத்துலிங்கம்

காமம் இல்லாமல் இலக்கியமா?

“அன்புக்கு நான் அடிமை - தமிழ்ப்
பண்புக்கு நான் அடிமை ’’


“இது நாட்டைக் காக்கும் கை - உன்
வீட்டைக் காக்கும் கை’’
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை - இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை ’’


“மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ!!’’


உள்பட 1,500 திரைப்பாடல்களை எழுதிக் குவித்தவர், கவிஞர் முத்துலிங்கம். கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.


இந்தப் பாட்டிலக்கியப் பாவலரை “அமுதசுரபி’’ சார்பாகச் சந்தித்தோம்.



?: உங்கள் இளமைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்.

மு: சிவகங்கை மாவட்டம், கடபங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தேன். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தேன். பாடத்தில் மனப்பாடப் பகுதியாக, கம்பராமாயணத்தி லிருந்து ஆறு பாடல்கள் வைத்திருந்தார்கள். அதன் சொல்ஓசையில் ஈர்க்கப்பட்டு கம்ப ராமாயணம் முழுவதையும் படித்தேன். அர்த்தம் தெரிந்து படிக்கவில்லை. சந்தத்துக்காகவே படித்தேன். அந்த வாசிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை... எனத் தொடர்ந்தது.
என் 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினேன். அதைக் கல்கிக்கு அனுப்பினேன். ஆனால், திரும்பி வந்தது. திரும்பி வந்த அந்தக் கவிதை 44ஆண்டுகள் கழித்து கலைமகளில் அண்மையில் வெளியானது.

?: திரைத்துறைக்கு எப்போது வந்தீர்கள்?

மு: 1966இல் முரசொலியில் உதவி ஆசிரிய ராய்ச் சேர்ந்தேன். தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார். எம்.ஜி.ஆர் ரசிகனா யிருந்த நான், முரசொலியிலிருந்து விலகி அலை யோசையில் சேர்ந்தேன். அது, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழாக இருந்தது. அங்கிருந்தபோது பாலமுருகன் என்ற கதாசிரியரை பாடல் எழுத வாய்ப்பு கேட்டுச் சந்தித்தேன். அவர், டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். மாதவன் தயாரித்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தில் “தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’’ என்ற பாட்டை எழுதினேன்.
அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அலையோசையி லிருந்து விலகினேன். அதுதெரிந்து, எம்.ஜி.ஆர் கூப்பிட்டார். “விஷயம் கேள்விப்பட்டேன். பணம் கொடுக்கிறேன். வாங்கிக்கங்க’’ என்றார். “பணம்வேண்டாம். வேலை கொடுங்க’’ என்றேன். வற்புறுத்தினார். “உங்க அன்பு போதும்’’ என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் “கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’’ என்ற பாட்டில் தொடங்கினேன். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினேன்.
“இது நாட்டைக் காக்கும் கை - உன்
வீட்டைக் காக்கும் கை’’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை என்னையும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது. அவர் தம் சொந்தத் திறமையாலேயே ஆட்சிக்கு வந்தார். ராமருக்கு அணில்போல வேண்டுமானால் என் பங்கு இருக்கலாம்.

?: படத் தயாரிப்புக் குழுவினர் பாடல் வரிகளை மாற்றச் சொல்வது குறித்து....?

மு: இயக்குநர், இசையமைப்பாளர்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பதுதான் எங்கள் வேலை. அதற்குத்தான் பணம் கொடுக்கிறார்கள். வெளியே எழுதும் கவிதை இலக்கியம் வேறு. சினிமாவுக்கு எழுதும் பாட்டிலக்கியம் வேறு. எல்லாக் கவிஞர்களாலும் டியூனுக்கு எழுதிவிட முடியாது. இது, ஒரு தனிக் கலை. பெரிய இலக்கியக் கவிஞர்கள்-பலருக்கு வழிகாட்டி- முன்னோடி என்று சொல்லப் படுகிறவர்கள்கூட இதில் தோற்றுப்போயிருக் கிறார்கள்.

?: திரைப்படத் தயாரிப்புக் குழுவினரின் அன்றைய எதிர்பார்ப்பும் இன்றைய எதிர்பார்ப்பும் எப்படி உள்ளன?

மு: அன்று, பாட்டில் கருத்துகள்-கவிதை நயங்கள் இருக்கவேண்டும் என்பது இயக்குநர் - இசையமைப்பாளர் தயாரிப்பாளர்களின் எண்ணமாய் இருந்தது. இப்படத்தின் மூலம் ஏதேனும் ஒரு படிப்பினை ஊட்டவேண்டும் என்ற நினைப்பும் இருந்தது. இப்போது, அந்த நினைப்பெல்லாம் இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கேற்ப என்ன செய்தால் சரியாக இருக்குமோ அதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய கவிஞர்கள், நன்றாக எழுதக் கூடியவர்களே. ஆனால், அப்படி எழுதுவதற்கான காட்சிகள் படத்தில் இருப்பதில்லை.
அன்று, இசையமைப்பாளர்கள், வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இன்று, வாத்தியக் கருவிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் சில பாடல்கள் ரசனைக் குறைவாக கலாசாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. அது, கவிஞர்கள் குற்றமல்ல. இயக்குநர்; இசையமைப்பாளரின் பொறுப்பு.
ஆனால், இளையராஜா இசையமைப்பில் இப்படிப்பட்ட ரசனைக் குறைவான பாடல்கள் இடம்பெறாது.

?: இன்று, பாலுணர்வைத் தூண்டும் பாடல்கள் அதிகமாகிவிட்டதே?

மு: காமம் இல்லாமல் இலக்கியமும் இல்லை. கோயில் சிற்பங்களும் இல்லை. காமக் கலையின் பல நுணுக்கங்களை வெளிப்படுத்தவே ஒரிசாவில் ‘கோனாரக்’ சூரியக் கோயிலைக் கட்டியுள்ளார்கள். காமத்தை வெளிப்படுத்து வதில் ஒன்றும் தவறில்லை. அதை, இலைமறை காயாகச் சொல்லவேண்டும்.
“பாவையுடல் பாற்கடலில்
பள்ளிகொள்ள நான்வரவா?’’ எனப் புலமைப்பித்தனின் பாடலில் வரும். “தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழைகொண்ட மேகம்’’ என்ற பாடலின் சரண வரிகள், அவை. அர்த்தம் என்னவோ காமம்தான். ஆனால், ஆழ்வார் பாசுரம்போல் இருக்கிறது.
இப்போது அப்படியா எழுதுகிறார்கள்?

?: அரசவைக் கவிஞராக உங்கள் அனுபவம் எப்படி?

மு. காங்கிரஸ் ஆட்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, முதல் அரசவைக் கவிஞர் ஆனார். இராஜாஜி முதல்வரான பிறகு, அப்பதவியை நீக்கினார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கண்ணதாசனையும் புலமைப்பித்தனையும் அரசவைக் கவிஞர்கள் ஆக்கினார். அதற்குப் பிறகு நான் மட்டுமே அப்பதவியில் இருந்தேன். கலைஞர், ஆட்சிக்கு வந்ததும் ‘நானே ஒரு கவிஞன். என் ஆட்சியில் இன்னொரு கவிஞன் எதற்கு?’ எனக்கேட்டு அப்பதவியை ரத்து செய்தார். சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே அப்பெருமை கிடைத்தது. அரசவைக் கவிஞர் என்பது இலாகா இல்லாத அமைச்சரைப் போல. அவருக்கு கார், தொலைபேசி, உதவியாளர் ஆகிய வசதிகள் உண்டு. அது ஒரு அலங்காரப் பதவி மட்டுமே.

? எம்.ஜி.ஆருடன் உங்கள் அனுபவங்கள்?

மு. நிறைய இருக்கு. ஒருமுறை, சத்யா ஸ்டூடியோவில் ‘மீனவ நண்பன்’ படப்பிடிப்பில் அவரைப் பார்த்தேன். அப்போது எலலாப் பாடல் காட்சிகளையும் எடுத்து முடித்திருந்தார்கள். பாடலுக்குவேறு காட்சி இல்லையே என்று இயக்குநர் ஸ்ரீதரும் தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரும் சொன்னார்கள். கனவுப் பாடலாகப் போடுங்க என்றார்.
அப்படி எழுதியதுதான் ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல். தன்னை நம்பியவருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம், அது.
வேறொரு முறை ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில் பாட்டின் பல்லவி ஏற்கப்பட்டது. வேறு சரணம் வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். வாகினி ஸ்டூடியோவில் சுருட்டுப்பிடித்தபடி நடந்துகொண்டே யோசித்தேன். சுருட்டுப் பிடித்தவாறு நான் எழுதிய 200க்கும்மேலான பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. அப்படி அங்கே ஓரத்தில் இருந்த மூங்கில் தட்டிகளைப் பிடித்துக்கொண்டு சிறிது தூரம் நடந்தேன். அதைப் பார்த்த தயாரிப்பாளர் என்ன இவன்? மரத்தைப் பிடிக்கிறான் மட்டையைப் பிடிக்கிறான்; சரணத்தைப் பிடிக்கலையே என்றார். அதைக் கேட்டதும் “எதையும் பிடிக்காத ஆளைவைத்து எழுதிக்கோங்க’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வ நாதனும் இயக்குநர் கே. சங்கரும் வந்து என்னிடம் அரை மணி நேரம் பேசினார்கள். திரையுலக நிலவரங்களை எடுத்துச் சொன்னார்கள். அதன்பிறகு எழுதிக் கொடுத்தேன். எம்.ஜி.ஆருக்கு அப்பாடல் மிகவும் பிடித்திருந்தது.

?. திரையுலகில் நீங்கள் அதிக சிரமப்பட்டீர்களா?

ப. யாராக இருந்தாலும் சிரமப்படாமல் எந்தத்துறையிலும் வெற்றிபெறமுடியாது. திறமை -முயற்சி - நம்பிக்கை- உழைப்பு இந் நான்கும் இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றி பெறமுடியும்.
எதிர்காலம் எல்லாருக்கும் உண்டு. அது எப்போது எந்த நேரத்தில் யார்மூலம் வரும்? அதுதான் தெரியாது.