முதியோர், கனிகளை ஒத்தோர். அவர்களுக்குள் ஏராளமான அனுபவ விதைகள் உள்ளன. அந்த விதைகளுக்குள் கற்பக மரங்கள் கருக்கொண்டுள்ளன. முதியோரைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது, சமுதாயத்தின் கடமை.
அக்டோபர் 1, உலக முதியோர் நாள். இதையொட்டி இன்றைய முதியோரின் நிலை குறித்து அறிய முதியோர் மருத்துவத்துறை வல்லுநர் டாக்டர் வ.செ.நடராஜனைச் சந்தித்தோம்.
இவர், இந்தியாவிலேயே முதன்முதலாக முதியோருக்காக, 1978ஆம் ஆண்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் தனிப்பிரிவைத் தொடங்கியவர். இதற்காக 1994இல் டாக்டர் பி.சி.ராய் தேசிய விருது பெற்றார். முதியோர் மருத்துவம் தொடர்பாக 12 நூல்களும் 55 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் படைத்துள்ளார். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்மையில் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இவருடனான இந்த நேர்காணல், முதியோருக்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம்.
?: இன்றைய முதியோரின் நிலை எப்படி இருக்கிறது?
நடராஜன்: 60 வயதுக்கு மேலானவரை முதியோர் என்கிறோம். இன்று இந்தியர்களின் சராசரி ஆயுள், 62 வயது. நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தச் சராசரி, நாற்பதற்கும் கீழே இருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரட்டிப்பாயிருக்கிறது.
இன்று முதியோர், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். அக்காலத்தில் சாதாரண நோய் நொடியிலேயே முதியோர் இறக்கும் நிலைமை இருந்தது. இன்று 60 வயதில் மாரடைப்பு வந்தாலும் அவரைக் காப்பாற்ற முடிகிறது. எலும்பு முறிந்தால் குணமாக்க முடிகிறது. மனிதன், இறப்பைப் பற்றிக் கவலைப்படாத காலம் வந்துவிட்டது. வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது.
இந்தியாவில் 100 கோடி பேரில் முதியோர், 7 கோடிபேர். இன்னும் 5 ஆண்டில் இது, 14 கோடியாகும் வாய்ப்பிருக்கிறது. இந்தியர்களின் சராசரி ஆயுள் வளர்ந்தாலும் 100 வயதுக்கு மேல் இருப்போர் மிகவும் குறைவு.
?: முதியோருக்கு இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?
நடராஜன்: முதியோரில் 70 சதம் பேர் கிராமத்தில் வசிக்கிறார்கள். நகரத்தில் மட்டுமில்லை; கிராமத்திலும் கூட்டுக் குடும்பம் உடைந்து விட்டது. மூன்றில் ஒரு பங்கு முதியோர், வீட்டுக்கு வெளியே வாழ்கிறார்கள். வேலை வாய்ப்பு, குடும்பப் பிரச்சினை, இடவசதிக் குறைவு, பணமின்மை ஆகிய காரணங்களால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
கண் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாமல், தன் வேலையைத் தானே செய்யும் ஆரோக்கியமில்லாமல் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். 12 சதம் முதியோர், முழுமையாக மற்றவரின் உதவியில் வாழ்கிறார்கள்.
முதியோரைப் பாதிக்கும் மிக முக்கிய பிரச்சினை, வறுமை. 40 சதம் முதியோருக்கு எந்தவித வருவாயும் இல்லை. கிராமத்தில் உள்ள முதியோருக்கு ஓய்வூதியமோ, வைப்பு நிதியோ கிடையாது. வாரந்தோறும் மேல்மருவத்தூரில் பார்க்கிறேன். முதியோர் பலருக்குக் கஞ்சி, கீரை, தேநீர் மட்டுமே கிடைக்கின்றன. இதுவே சாப்பாடு. கோயில் திருவிழா ஏதேனும் வந்தால்தான் நல்ல உணவு கிடைக்கும்.
முதியோருக்கு மன அழுத்தம், அதிகமாகி விட்டது. மற்றவர்கள், தங்களைக் கவனிக்க வில்லை, தம் பேச்சைக் கேட்கவில்லை என்ற உணர்வால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
ஆண்களைவிடப் பெண்கள், சராசரியாக இரண்டு ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழ்கிறார்கள். இதனால் பெண் விதவை எண்ணிக்கை கூடுகிறது. மூன்று பெண் விதவைக்கு ஓர் ஆண்விதவை (3:1) என்ற விகிதம் இருக்கிறது.
?: முதியோருக்கு என்னென்ன நோய்கள் வருகின்றன?
நடராஜன்: முதுமை, நோய்களின் மேய்ச்சல் காடு எனப்படும். முதியோருக்கு சத்துணவுக் குறைவு, கண்புரைநோய், நெஞ்சில் சளி, கை-கால் புண், கொப்புளம், தோல்நோய்கள், காசநோய், மூட்டுவலி, ரத்தஅழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, மலச்சிக்கல், எலும்பு வலுவிழத்தல் போன்றவை வருகின்றன.
ஒரு நோய்க்குச் சிகிச்சைபெற வந்தாலும் அவரிடம் பல நோய்களைக் கண்டுபிடிக்கிறோம். பல நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களுக்கும் மருந்து தரமாட்டோம். மருந்து, முதுமையின் விரோதி. மருந்தின்றிக் குணப்படுத்தப் பார்ப்போம்.
?: மருந்தின்றி என்னென்ன நோய்களைக் குணப்படுத்தலாம்?
நடராஜன்: மூட்டுவலியென்று வந்தால் உடல் பருமனைக் குறைக்கச் சொல்வோம்.
அதிக ரத்தஅழுத்தத்தைக் குறைக்க, உப்பைப் குறைக்க வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
நீரிழிவுக்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் தேவை.
சத்துணவுப் பற்றாக்குறையிருந்தால் ராகி, கீரை, காளான், கோதுமை, ஏதாவது பழம், 2 கோப்பை பால் உட்கொள்ளவேண்டும்.
?: என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம்?
நடராஜன்: வேகமாக நடக்கலாம். 3 முதல் 5 கி.மீ அல்லது 45 நிமிடத்திலிருந்து ஒரு மணிநேரம் நடக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல், ஆசனம் ஆகியவையும் பயன்தரும்.
பெண்கள், பாய்விரித்துத் தரையில் படுத்து உடற்பயிற்சி செய்யலாம்.
பக்கவாதம் வந்தோர்- நடக்க முடியாதோர் ஆகியோர், உட்கார்ந்தே உடற்பயிற்சி செய்யலாம். அரைமணி நேரம் தொடர்ந்து செய்யமுடியாவிடில் விட்டுவிட்டுச் செய்யலாம். காலை-மாலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.
?: முதியோர் மருத்துவம் என்பது என்ன?
நடராஜன்: குழந்தை மருத்துவத்தைப்போல முதியோர் மருத்துவம், ஒரு தனித்துறை. 1914இல் டாக்டர் நாய்ஸ்சர் என்பவர், இதைத் தொடங்கினார். உடல்நிலை மட்டுமின்றி மனநிலை, குடும்பநிலை, சமூகநிலை என அனைத்தையும் ஆராய்ந்து அதற்கேற்பச் சிகிச்சை அளிக்கவேண்டும். இது ஒரு தனிக் கலை.
?: முதியோருக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?
நடராஜன்: நடுத்தர வயதில் பணம் சேமித்துவிட வேண்டும். சிக்கனமாக இருக்கவேண்டும். பிள்ளைகளுக்குத் தாம்தூம் என்று கல்யாணம் செய்யக்கூடாது. பையனையோ பெண்ணையோ எந்தப் பெற்றோரும் நம்பாதீர்கள். உங்கள் சொத்தை நம்புங்கள். சொத்துக்காகவாவது சொந்தம் இருக்கும். கடைசி வரையில் சொத்தைப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டாம். நகைகளை எல்லாம் லாக்கரில் (பாதுகாப்புப் பெட்டகம்) வையுங்கள். நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளருங்கள். பொழுதும் போகும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
?: முதியோரைத் தத்தெடுக்கலாமே?
நடராஜன்: ஆம். அவசியம் செய்யவேண்டும். “ஹெல்ப் ஏஜ் இந்தியா’’ அமைப்பில் அப்படி ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். ஒரு முதியவருக்குப் பத்தாண்டு ஆகும் செலவைப் பெற்றுப் பாதுகாத்து வருகிறார்கள். பள்ளி - கல்லூரி மாணவர்கள், முதியோர் இல்லம் சென்று உதவிசெய்ய வேண்டும். முதியோருக்கு உதவுதல், ஓர் இயக்கமாக வளரவேண்டும்.
நேர்காணல்: அண்ணா கண்ணன்