மே மாதம் 18-ஆம் தேதி, செல்வி ஜெ.ஜெயலலிதா, நமது மூன்றாண்டுக் கால உத்தரவுகள் பலவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அத்துடன் சில திட்டங்களை மேம்படுத்தினார்.
பொது விநியோக முறையில் "எச்' முத்திரை நீக்கம், அரிசி வாங்க கூப்பன் முறை ரத்து, குடும்ப அட்டை இல்லாதவருக்குப் புது அட்டை, விவசாயிகளுக்கும் குடிசை வாசிகளுக்கும் மீண்டும் இலவச மின்சாரம், அனைத்து விவசாய பம்பு செட்டுகளுக்கும் குடிசைகளுக்கும் மின்சார மீட்டர் முறை வாபஸ், சத்துணவுத் திட்டத்தில் கூடுதலாக முட்டை, அனைத்துப் பள்ளி மாணவர் களுக்கும் விடுமுறை நாளிலும் பஸ் பாஸ், அரசு ஊழியர் - ஆசிரியர் - தலைவர்கள் - பத்திரிகைகள - தொலைக்காட்சிகள் மீதான வழக்குகள் திரும்பப் பெறுதல், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறுதல் ஆகிய உத்தரவுகள், அவர் அறிக்கையில் முக்கிய இடம் பெற்றிருந்தன.
ஜெ. ஆட்சியில் அனைத்துமே மோசமான முடிவுகள் என்று சொல்லிவிட முடியாது. அநியாயக் கொள்ளை அடித்த தனியார் மணல் குவாரிதாரர்களிடமிருந்து அவற்றை மீட்டு அரசே நடத்தச் செய்தது, லாட்டரிகளைத் தடை செய்தது, கந்து வட்டியை ஒழித்தது, பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்தது... என அவர் ஆட்சியில் சில நல்ல உத்தரவுகளும் உண்டு. இவற்றில் அவர் கை வைக்காதது மிகச் சிறந்த முடிவு.
ஆனால், டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யும் முடிவு, ஜெ. ஆட்சிக்குக் களங்கம் கற்பித்து வருகிறது. ஏற்கெனவே இருந்த அரசுகள், மதுவிற்கு அனுமதித்த போதும் அரசே ஏற்று நடத்தும் துணிச்சலை(!)ப் பெற்றதில்லை. தி.மு.க. அரசு, மதுவிலக்கை நீக்கியபோது இராஜாஜி, கொட்டும் மழையில் தி.மு.க. தலைவரைச் சந்தித்து அதை நிறுத்தக் கோரினார். ஆனால் அவர் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அப்போது முதல் மதுவிலக்கு நீக்கப்படுவதும் மீண்டும் அமுலாவதும் மாறி மாறி வந்தது. கள்ளச் சாராயத்தைக் காரணம் காட்டி மது விற்பனை நேரடியாக, வெளிப்படையாகக் கிடைக்கச் செய்தனர். மாநில அரசின் நிதி நிலையின் காரணமாகவும் மது விற்பனை நடந்தது. ஆனால், அரசே ஏற்று நடத்தும் ஒரு மோசமான முன்னுதாரணம் முன்னெப்போதும் இருந்ததில்லை.
"கள்ளுண்ணாமை'யை வலியுறுத்தும் வள்ளுவர், நமது பாடத் திட்டங்களில் உள்ளார். மதுவை எதிர்த்த காந்திஜி, நம் தேசத் தந்தை. அவருடைய படம், அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் உள்ளது. ரூபாய் நோட்டிலும் அவர் படத்தை அச்சிட்டுள்ளோம். அவர் படம் போட்ட பணத்தாளைக் கொடுத்து, அவர் எதிர்த்த பொருளை வாங்கிக் குடிக்கிறார்கள், நமது மக்கள். இதற்கு நமது அரசே உடந்தை யாகவும் இருந்து வாய்ப்புகளை ஏற்படுத்தியும் தருகிறது.
"மது, நாட்டுக்கு வீட்டுக்கு உடலுக்கு கேடு' என எல்லா டாஸ்மாக் அறிவிப்புப் பலகையிலும் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய கேட்டினை அரசு ஏன் செய்யவேண்டும்? மக்களுக்கு நல்வழி காட்டவேண்டிய அரசு, தார்மீக நெறிகளைப் போதிக்காவிட்டாலும் தீய வழிகளை காட்டாமலாவது இருக்கலாமே.
அரசுக்கு வருவாய் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். சிக்கல் இருக்குமிடத்தில் தீர்வு இல்லாமற் போகாது. தரிசு நில மேம்பாடு என்பது ஜெ. அரசின் சிறந்த திட்டங்களுள் ஒன்று. சிறந்த திட்டங்களை நேர்மையாக நடை முறைப்படுத்தினால் சிக்கல்களைத் தீர்க்கலாம். உடனடியாகத் தீர்க்க முடிய வில்லை என்பதற்காக, தீய வழிகளில் பொருள் திரட்டி ஆட்சியை நடத்துவது அடிப்படை நெறிகளுக்கு மாறானது.
கேளிக்கை, உயர்ரக இறக்குமதிகளுக்கு அதிக வரி விதித்தால் அதை அத்தகைய மக்கள் தாங்கக்கூடும் கொஞ்சம் சிந்தித்தால் பல வகைகளில் பணம் திரட்டலாம்.
சிறப்பான ஆட்சி என்பது எல்லாவற்றையும் இலவசமாக அளித்துவிடல் இல்லை; மக்களைச் சுயசார்பு கொண்டவர்களாக, தன்னிறைவு பெற்றவர்களாக, முழுமையான நாகரிகம் மிக்கவர்களாக மாற்றுவதே. ஒரு மக்கள் நல அரசு, இதற்குத்தான் முயற்சி எடுக்க வேண்டும்.
"உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சி' என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லும் ஜெ, அந்த ஏழை-எளிய சகோதரிகள், மதுவினால் படும் துயரங்களை எண்ணிப் பார்க்கவேண்டும். மதுவினால் அணைந்த குடும்ப விளக்குகளும் இருண்ட வீடுகளும் எண்ணிலடங்காதவை.
ஒவ்வொரு நாளும் மது அரக்கனால் நரக வேதனை அனுப விக்கும் கோடிக்கணக்கான அன்புச் சகோதரிகளை ஜெ. ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டாமா? அடி-உதை பட்டு, காலி சாராய பாட்டில்களை விலைக்குப், போட்டு, சில்லரைக் காசுகளைக் கொண்டு வந்து உலை கொதிக்க உதவும் சிறுவர்களை சிறிது சிந்திக்க வேண்டாமா? இருந்தும் இல்லாத ஆடையுடனும் புத்தியுடனும் தெருவோரம், சாக்கடைக்கருகில் வீழ்ந்து கிடக்கும் "குடிமக்களின்' நாராச சொற்களுக்கு ஒரு விடிவுகாலம் வேண்டாமா? இந்த இழிந்த வாழ்விலிருந்து அவர்கள் மீள ஒரு வழிகாட்டவேண்டாமா?
இப்போதாவது அரசு சிந்திக்க வேண்டும். மதுக்கடைகளை அரசும் நடத்தக்கூடாது; தனியாரும் நடத்தக்கூடாது. கள்ளச் சாராயத்தையும் ஒழிக்கவேண்டும். மதுக்கடைகளைத் திறந்த பாவத்திற்குப் பரிகாரமாக அரசு, அந்த மதுக்கடை இருந்த இடங்களில் எல்லாம் போதை மீட்பு & மறுவாழ்வு மையங்களை அமைக்கவேண்டும்.
அப்போதுதான் தொண்டர்கள், அம்மா என்றழைக்கும் அந்தச் சொல்லுக்கு அர்த்தம் இருக்கும்.
No comments:
Post a Comment