இந்திய தேசிய காங்கிரசுக்குப் புத்துணர்ச்சியூட்டி அது, ஆட்சிபீடம் ஏறக் காரணமாய் இருப்பவர் சோனியா காந்தி. 1996க்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தையும் வலிமையான தலைமையையும் இழந்த கட்சி; வங்காளத்திலிருந்து தமிழ்நாடு வரை துண்டு துண்டாக உடைந்த கட்சி; குழு மோதல்களுக்கும் உட்கட்சிப் பூசலுக்கும் பெயர்பெற்ற கட்சி....... என்ற பின்புலத்திýருந்த காங்கிரசைத் தலைநிமிரச் செய்திருக்கிறார், சோனியா.
யார் இந்த சோனியா?
அரசியல் என்றாலே அஞ்சி ஓடியவர்; நாத்தனார்- --மாமியார் சண்டையில் அல்லாடியவர்; திருமணமாகி வெகுகாலம் கழித்தே இந்தியக் குடியுரிமையைப் பெற்றவர்; விதவை; பதிபக்தி இல்லாதவர்; வெளிநாட்டுக்காரி; போஃபர்ஸ் ஊழலில் தொடர்புடையவராகக் கூறப்பட்ட குவோட்டரோச்சி; இந்திய நிலவரங்களைப் புரிந்து கொள்ளாதவர்; பேசத் தெரியாமல் உரையைப் படிப்பவர், சிலைக் கடத்தலுக்கு உதவியவர்..... என ஏராளமான குற்றச்சாட்டுகளை, பொதுவாழ்வுக்கு வந்த குறைந்த காலத்திலேயே சுமந்துகொண்டிருக்கிறார்.
உண்மையில் யார் இந்த சோனியா?
இத்தாலியில் டுரின் என்ற நகரத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது, ஓவசஞ்சோ கிராமம். இங்கு 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் பிறந்தார், சோனியா மெய்னோ என்கிற சோனியா காந்தி.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கச் சென்றபோது, அங்கு தன்னைவிட இரண்டு வயது மூத்த இராஜீவ் காந்தியைச் சோனியா சந்தித்தார். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 1968-இல் இராஜிவை மணந்து, பாரம்பரியமிக்க இந்திய அரச குடும்பத்தின் உறுப்பினரானார், சோனியா.
அதன்பிறகு சுமார் 30 ஆண்டுக்காலம், இந்தியாவில் ஏராளமான வெகுமுக்கிய அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றபோதும் அதில் சோனியா, அக்கறையோ ஆர்வமோ காட்டவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டும் இருந்தார்.
இந்தியன் ஏர்லைன்ஸில் விமான ஓட்டியாக இருந்தார், இராஜிவ், அவருடைய சகோதரர் சஞ்சய் காந்தி 1980 இல் விமான விபத்தில் மரணமடைந்தார். அப்போது தம் தாயார் இந்திராகாந்திக்கு உதவும் பொருட்டு இராஜிவ், அரசியலுக்கு வந்தார். சோனியா, இதனால் கடும் அதிருப்திக்கும் வருத்தத்திற்கும் உள்ளானார். இதைக் குறித்து அவர் கூறியபோது, "முதல்முறையாக இராஜிவுக்கும் எனக்கும் இடையே சிக்கல் உருவானது. அவருக்காகவும் எங்களுக்காகவும் எங்கள் குழந்தைகளுக்காகவும், அனைத்திற்கும் மேலாக எங்கள் சுதந்திரத்துக்காகவும் ஒரு பெண்புலிபோல நான் அவருடன் மோதினேன்' என்கிறார்.
அதிகம் வெளியே வராதவர், சோனியா காந்தி. 1984-இல் அவருடைய மாமியார் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது, மக்களின் கவனம் சோனியா மீதும் சிறிது திரும்பியது. ஆனால், சோனியா, ஒரு குடும்பப் பெண்ணாக மட்டுமே காலம் கழித்தார்.
இராஜிவ், 1991 மே 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார் "சிறந்த தலைவர் இல்லாததால் கட்சியின் செல்வாக்கும் புகழும் இறங்கி வருகிறது. எனவே நீங்கள் வந்து பொறுப்பேற்க வேண்டும்' எனக் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால், சோனியா, ஓர் அடிப்படை உறுப்பினராகக் கூட கட்சியில் சேரவில்லை.
ஆயினும், 1997 இல் சோனியா, காங்கிரஸில் உறுப்பினரானார். 1998-இல் அதன் தலைவர் ஆனார். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, இராஜிவ் காந்திக்குப் பிறகு, நேரு குடும்பத்திலிருந்து வந்த 5ஆம் தலைவர், சோனியா காந்தி. 1999-இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சோனியா வெற்றி பெற்று, ஒரு பாராளுமன்ற உறுப்பினரானதோடு தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.
தமக்கு எதிரான தமது எதிர்க்கட்சியினரின் "வெளிநாட்டுக்காரர்' என்ற பிரச்சாரத்தைச் சோனியா பெரிதும் அலட்சியம் செய்தார். அவர் 1968 இல் இந்தியாவில் தன் புகுந்த வீட்டுக்குள் நுழைந்தபோதும் 1983 இல்தான் இந்தியக் குடியுரிமை பெற்றார். இந்த நீண்ட இடைவெளிக்கு என்ன காரணம் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். வெளிநாட்டினர், இந்தியாவில் உயர் பதவி வகிக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்றும் முயன்றனர்.
2004 தேர்தலில் "அந்நியர்' என்பது ஒரு தேர்தல் விவாதமாகவும் இருந்தது. ஆனால், மக்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. ஏற்கனவே, அன்னி பெசன்ட், அன்னை தெரசோ போன்றோரை. நாம் அந்நியர் என்று பார்க்கவில்லையே என்று மக்கள் நினைத்தனர்.
அரசியலின் மீது சோனியாவுக்கு இருந்த வெறுப்பைப் பற்றித் தாரிக் அலி எழுதும் போது, "இந்திய அரசியலில் ஈடுபடுவதை விட என் குழந்தைகள் பிச்சை எடுக்கலாம்' எனச் சோனியா கூறியுள்ளதாக எழுதினார்.
ஆனால், இப்போது ராகுல்காந்தி, அமேதி தொகுதியின் உறுப்பினராகப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். பிரியங்கா காந்தி, காங்கிரஸின் நட்சத்திரப் பிரச்சாரகர் ஆகிவிட்டார். எதிர்காலத்தில் அவர், இன்னோர் இந்திராகாந்தியாக வருவார் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
இப்போது நாட்டின் முன் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. சிறியது முதல் பெரியது வரை, பஞ்சாயத்திலிருந்து பாராளுமன்றம் வரை, அன்றாடம் தோன்றிவரும் சிக்கல்களை சோனியா எப்படிச் சமாளிக்கப் போகிறார்?
அயோத்திச் சிக்கல், காஷ்மீர், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, நதிநீர் இணைப்பு, காவிரிச் சிக்கல், தெலுங்கானா, நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், மனித உரிமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், இலஞ்ச ஊழல்..... போன்றவை சோனியாவின் முன் உள்ள சவால்கள்.
குறைவான அரசியல் அனுபவம், ஆட்சி அனுபவமின்மை போன்றவற்றால் சோனியா, மற்றவர்களின் உதவியை நாடவேண்டியிருக்கும். அந்த ஆலோசகர்களின் கைப்பாவையாக அவர் ஆகிவிடாமல் சுய சிந்தனையுடன் முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம்.
கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து, மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்து, ஆரோக்கியமான அரசியலை அவர் நடைமுறைப்படுத்துவார் என்று எதிர்பார்ப்போம். பொது வாழ்வுக்கு வந்து மிகக் குறைந்த காலத்திலேயே சுதாரித்துக் கொண்டவர்; தம் தகுதிகளை வளர்த்துக்கொண்டவர்; தக்க ஆலோசகர்களையும் விசுவாசிகளையும் கொண்டிருப்பவர், நவீன இந்தியாவின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் கனவுகளையும் நிறைவேற்றுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment