Monday, March 01, 2004

வருக "கிராப்பு' தலை பெண்கள்!

அண்மையில் இலக்கியக் கூட்டமொன்று தொடங்கு முன் அரங்கின் முன் நண்பர்களுடன் குசலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். தற்செயலாகத் திரும்பினேன். "கிராப்பு' தலை, முழுக்கால் குழாய், சட்டையுடன் இளைஞர் ஒருவர் வந்துகொண்டிருந்தார். "அவரை எங்கோ பார்த்திருக்கிறோமே' என்று சிந்தித்தேன். அப்போது அவர் புன்னகைத்தார். அந்தச் சிரிப்பு, அவரை எனக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது. ஆறடி இல்லாவிட்டாலும் மூன்றடிக் கூந்தலுடன் முன்பு தோற்றமளித்த வாசகி அவர்.

பேச்சிலும் வாசிப்பிலும் சிந்தனையிலும் நிறைய மாற்றம் தெரிந்தது. "என்ன, ஆளே மாறிவிட்டீர்களே!' என்றபோது "ஏன், மாறக்கூடாதா?' என்று மடக்கினார்.

அதன்பிறகும் பல கூட்டங்களிலும் பொது இடங்களிலும் நான் தொடர்ந்து கவனித்த ஒன்று: பெண்கள், ஆண் தோற்றம் அடைந்து வருகிறார்கள் என்பது. முழுக்கால் குழாயும் சட்டையும் அணிவது, சென்னை போன்ற மாநகரங்களில் சர்வ சாதாரணம் தான். நெற்றியில் பொட்டு இல்லாமையும் வளையல் - தோடு - சங்கிலி போன்ற ஆபரணங்களைத் தவிர்ப்பதையும்கூட நான் பெரிய மாற்றமாகச் சொல்லிவில்லை. நான் சொல்ல வருவது பெண்களின் "கிராப்பு' அல்லது "பாப்' பற்றி.

தலைமுடி குறையக் குறைய, பெண்களின் ஆளுமைத் திறன் அதிகரித்திருப்பதாக நாம் கருதலாமா? இப்படி எண்ணியவுடன் அந்தக் கால அஞ்சல் தலைளகளில் சிரித்த எலிசபெத் மகாராணி என் மனக்கண்ணில் தோன்றினார். மேலைநாட்டுப் பெண்மணிகள் வரிசையாகத் தோன்றிக்கொண்டே இருந்தார்கள். இங்கும் இந்திராகாந்தி, பிரியங்கா, கிரன் பேடி, மாயாவதி, அருந்ததி ராய், ரோகிணி, லட்சுமி, சௌகார் ஜானகி, மாலதி மைத்ரி, தேன்மொழி... என மிக நீண்ட பட்டியலில் பெண்கள் அணிவகுத்தார்கள்.

தமிழ்நாட்டுப் பெண்களைப் பொறுத்தவரை, சாமிக்கு நேர்ந்து கொண்டாலோ, பெரிய அளவில் பேன்கள் இருந்தாலோதான் தலையில் கத்தி-கத்திரியை வைக்க விடுவார்கள். சிறிய வயதிலிருந்தே நீண்ட கூந்தல் வளர்ப்பதை ஒரு பெரிய வேலையாகச் செய்வோரே அதிகம். விட்டால் தானாக வளர்ந்துவிட்டுப் போகிறது. அதற்கு எதற்கு "அந்த எண்ணெய் இந்த ஷாம்பு' என்று இவ்வளவு ஆர்ப்பாட்டம்? அதைப் பராமரிப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துச் சொன்னால் "பொம்பளைப் புள்ளைக்கித் தலையில நிறைய முடி இருந்தாத்தான் அழகு. பேசாமப் போங்க' என்று நம் வாயை அடைப்பார்கள்.

"ஆறடிக் கூந்தல் அள்ளி முடித்து' எனச் சொல்லி வைத்துவிட்டார்கள். நம் கவிஞர்களோ கூந்தலை மேகத்தோடும் கருப்பாக உள்ள அனைத்தோடும் ஒப்பிட்டு விட்டார்கள். பாஞ்சாலியோ, துச்சாதனன் - துரியோதனன் இரத்தத்தைப் பூசிய பிறகே கூந்தலை முடிவேன் எனச் சபதம் செய்தாள். அந்த இடைப்பட்ட காலத்தில் பாஞ்சாலி மிகவும் சிரமப்பட்டிருக்கவேண்டும்.

அதன் பிறகு பெரும்பாலும் பெண்கள், கூந்தலைப் பணயம் வைக்க எண்ணியதில்லை. சாமிக்கே நேர்ந்தாலும் கணவருக்கோ - பிள்ளைக்கோ மொட்டை அடித்து விடுவதாகத்தான் வேண்டுவது வழக்கம். இப்போது திருப்பதியில் நிறையத் தலைகள் தெரிகின்றனவே என்கிறீர்களா? அந்த அளப்பரிய தியாகத்தை என்னென்பது!?

"வைத்தால் கூந்தல், வழித்தால் மொட்டை' என்ற நிலையில்தான் தமிழ்ப் பெண்கள் இருந்தார்கள். இந்தக் "கிராப்பு', "பாப்' வகையறாக்கள், முழுக்க முழுக்க மேலைநாட்டு இறக்குமதிதான். இன்றைக்கும் பெரும்பான்மைப் பெண் குழந்தைகள் பாப் வெட்டுவது, இயல்பாகிவிட்டது. அழகு நிலையங்கள் பெருகி வரும் இக்காலத்தில் பெண்களின் தலையலங்காரம், அடிக்கடி மாறி வருகிறது. அதிலும் "கிராப்பு' வெட்டிக்கொண்ட பெண்களின் அழகு, கொஞ்சமும் குறையவில்லை. குறையாததோடு, நவீன அழகையும் அவர்களுக்குத் தருகிறது.

கூந்தலில் பிசுக்கு நீக்கிக் குளிப்பது, குளித்தபின் உலர வைப்பது, கூந்தலைப் பின்னுவது, அதில் மலர் அலங்காரம், சிடுக்கு-பேன் தொல்லை.... என ஏராளமான சிக்கல்கள் உள்ளன. மேலும் சிறப்பாகப் பின்னிவிட-பராமரிக்க வேறொருவர் உதவியும் தேவையாய் இருக்கிறது.

எதற்காக இத்தனை பாடு? அதிகமாக முடியிருப்பதால் சூரிய ஒளி நேரடியாகத் தலையில் படாமல் தலைமுடி, ஒரு கேடயமாகப் பயன்படுகிறது என்போர் உண்டு. இந்தக் கோடையில் வியர்வை பொங்கி, தலையில் அரிப்பெடுத்து, "சொரிந்தால் முடி கலையும், அழகு குலையுமென்று சொரியவும் முடியாமல் திண்டாடும் பெண்களுக்கு என்ன வழி?'

விலகி விலகி முத்தமிட்டுக்கொள்ளும் கத்திரிக்கோலின் இரு முனைகளும் கூந்தலின்மேல் சிறிய நடனம் புரியட்டுமே! அழகு என்பது கூந்தலில் மட்டும் இருப்பதில்லை; அது பெண்ணின் துணிவு மிகுந்த மனத்திலிருந்து பிறக்கிறது என்பது உலகத்திற்குப் புரியட்டுமே!!!

No comments: