Friday, January 02, 2004

ஜனரஞ்சகக் கதையின் இலக்கணங்கள்

நான், வெகுமக்கள் இதழ் ஒன்றில் பணியாற்றிய போது, சிறுகதைகளை ஒரு கட்டம் வரைக்கம் தேர்வுசெய்யும் பொறுப்பினை என்னிடம் அளித்தார்கள். அதற்கு முன்பு சிறுகதைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதற்கு எனக்குச் சில குறிப்புகள் கொடுத்தார்கள். நான் எழுத் தாளன் - கவிஞன் என்றாலும் தங்களுக்கு என்ன தேவை எனத் தெரிவிக்கவே அந்தக் குறிப்புகள்.

1. எந்தக் கதையையும் முழுதும் படிக்காதீர்கள். நேரம் போதாது. முதலில் கொஞ்சம், நடுவில் கொஞ்சம், கடைசியில் கொஞ்சம் படித்தால் போதும். கதை தேறுமா தேறாதா என்பது தெரிந்துவிடும்.

2. மிகவும் அழுகைக் கதையாக, சோகம் -விரக்தி-இறுக்கமாக இருந்தால் கதையை எடுக்கக்கூடாது.

3. வயதானவர்கள் மட்டுமே இடம் பெறும் கதைகள் வேண்டாம். இனம் பெண் பாத்திரங்கள் அவசியம் தேவை. இல்லாவிடில் கதைக்குப் படம் வரைவதில் சிக்கல் இருக்கும்.

4. இதழில் 3-4 பக்கங்களுக்கு மேல் வரும் கதைகளை விட்டுவிடலாம்.

5. அந்தந்த நேரத்திற்கு ஏற்ப, கதைகளை எடுக்கவேண்டும். ரம்ஜான் வருகிறது என்றால் அதற்கேற்ப, கிறிஸ்துமஸ் என்றால் அதற் கேற்ப, தேர்தல், காதலர்தினம், குஜராத் பூகம்பம்... என எந்த நேரத்திற்கு ஏற்ற கதையாக இருக்கவேண்டும். (வியப்பு யாதெனில், இதழில் மனநிலை புரிந்து வாசகர்களே எழுத்தாளர்களே நேரத்திற் கேற்ற கதைகளை முன்கூட்டியே அனுப்பி விடுவார்கள்.

6. நன்றாக இருந்தாலும் தொடர்ந்து ஒருவரின் கதைகளை எடுக்கக்கூடாது. இந்து-முஸ்லிம்-கிறித்தவர், ஆண்-பெண், பிரபல எழுத்தாளர். கிராமம் சார்ந்தது - நகரம் என் மாறி மாறிக் கதைகளை எடுக்கவேண்டும்.

7. கதையில் அதிகப் பாத்திரங்கள் இருக்கக்டாது. 3-4 பிரதான பாத்திரங்களுக்கு மேல் இருந்தால் வேண்டாம்.

8. கதை, படித்தவுடன் புரியவேண்டும். இருண்மையாக, குழப்பமாக, தெளிவில் லாமல் இருந்தால் வேண்டாம்.

தேர்ந்தெடுத்த பிறகு கதையைத் திருத்தி தேவைப்பட்டால் வெட்டி, ஒட்டி, இதழுக்கேற்ப தயாரிக்க வேண்டும். இதற்கும் நிறைய குறிப்புகள் உண்டு.

1. மிக நீண்ட வசனங்களைக் குறைக்க வேண்டும்.

2. கவர்ச்சிகரமாகத் தலைப்பு வைக்க வேண்டும்.

3. தேவைப்பட்டால் பாத்திரங்களின் பெயர்களையே ஊரையோ சம்பவங்களை யோ கூட மாற்றலாம்.

4. தேவைக் அதிகமாக இருந்தால் கதையைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெட்டிவிடவேண்டும்.

இப்படியாகப் பல குறிப்புகள் கொடுப்ப துண்டு.

கதையைத் தேர்ந்தெடுத்துத் திருத்திய பின் அதற்கேற்ப ஓவியரை அழைத்து ஒரு காட்சியைச் சொல்லிப் படம் வரையச் சொல்லவேண்டும். அந்தக் காட்சியில் யார் யார் இருக்கிறார்கள், எங்கே, என்ன செய்கிறார்கள், என்ன உடை-மனநிலையில் இருக்கிறார்கள்... என எல்லாம் சொல்ல வேண்டும். அப்போதுதான் கதைக்குப் பொருத்தமான படம் கிடைக்கும். கதையை ஓவியரிடம் அனுப்பிப் படம் வாங்க, நேரமாகிவிடும்.

இளம் பெண், கதையில் மிகச் சிறிய இடத்தில் வந்தாலும் படத்தில் அவர்தான் பெரிய இடத்தில் இருப்பார். விதவிதமாகக் கவர்ச்சியாக வரையும் ஓவியர்களின் திறமை, பெரியது.
இதழில் ஒரு கதை இடம் பெறுவதற்குப் பல காரணங்கள் இருக்கும். வேண்டியவர், நண்பர் என்ற முறையில் சிலர், பிரபல மானவர் என்ற வகையில் சிலர், இதழின் பல்சுவைத் தன்மையையும் பன்முகத்தையும் காட்டுவதற்காகச் சிலர்... இதழில் இடம் பெறுவார்கள். வேறு காரணாங்களும் உண்டு.

கதைகள், பொதுவாகத் தேர்வுக் குழுவி னரின் பார்வைக்குச் செல்வது வழக்கம். அதில் பலர் பிடிக்காமலே கருத்துத் தெரிவிப்பார்கள். ஒரே கதையை மிகச் சிறப்பானது என்பார் ஒருவர், பிரசுரிக்கத் தகுதியில்லை என்பார் மற்றொருவர்.

இந்தப் படிகளையெல்லாம் கடந்து தான் வெகுஜன இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின்றன. எனவே அதனால் பெருமகிழ்ச்சி அடைய ஒன்றுமில்லை. கதை வெளிவராததால் வருத்தமடையவும் தேவையில்லை.

எழுத்தாளரின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல், கருத்துரிமையை மதித்தல், படைப்பு தன்ளைவில் நியாயமாய் இருத்தல், கச்சிதம், தீவிரம், உண்மை.... போன்ற ஏராளமான அம்சங்களுக்கு வெகுஜன இதழில் சாத்தியமில்லை.

இவை தவிர, ஜனரஞ்சகச் சிறுகதைக் கான வேறு இலக்கணங்களும் உண்டு. அவற்றில் முதன்மையானது. பெரும்பா லானவர்களின் கருத்துக்கு ஏற்பவே அவை இருக்கும். பெரும்பாலோர் ஆதரிக்கும் விஷயத்தை கதை எதிர்க்காது எதிர்ப்பதை ஆதரிக்காது. அப்படிச் செய்தால் அது வெகுமக்கள் எதிர்பார்க்கும் கதை ஆகாது.

பாத்திரங்களின் பெய்கள் வடமொழியாகவும் உரையாடல்கள் ஆங்கிலச் சொற்களோடும் இருக்கும். (பாத்திரங்களுக்குப் புதிய புதிய வடமொழிப் பெயர்களைக் கண்டுபிடக்க, நமது எழுத்தாளர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.) இதில் யதார்த்தம் என்று வேறு சொல்லிக்கொள்வார்கள். யதார்த்தத்தில் எத்தனையோ வகைகள் உண்டு. வட்டார வழக்குகள் உண்டு. தனக்குப் பிடித்ததை எழுதிவிட்டு அல்லது மக்களுக்குப் பிடிக்கும் என்ற நினைப்பில் எழுதிவிட்டு சப்பைக் கட்டு கட்டுவார்கள்.

கதையின் எடுப்பு, தொடுப்புகளில் என்ன வித்தயாசம் செய்தாலும் முடிவுகளில் வெகஜன எழுத்தாளர்கள் பெரிதும் வெகு மக்கள் முடிவுகளையே எடுப்பார்கள். வெகுமக்கள் வரும்பும் அனைத்தையும் இவர்களின் பாத்திரங்களும் விரும்பும்.

1,2,3,4... என்ற முறையிலேயே இவர்கள் சிந்தித்துப் பழக்கப்பட்டவர்கள். ஒரு மாற்றத்துக்கு 4,3,2,1 என்றோ, 3,4,1,2. என முறைமாற்றியோ சிந்திக்க மாட்டார்கள். சோதனை முயற்சிகளை வெகுமக்கள் எழுத்தாளரிடம் எதிர்பார்க்க முடியாது.

தற்காலச் செய்திகளை, நிகழ்ச்சிகளை முன்னிறுத்தி ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், கதை, பழைய விஷயங்களையே பேசும். இதுவரை பயன்படுத்தாத கரு, களம், பாத்திரங்களின் மீதான தேடல் இருக்காது.

பேரிதழ்களில் எழுத வருவோருக்குப் புகழ் வேட்கை மிக அதிகம். ஆனால், அதை மூடி மறைப்பார்கள். தன் படைப்பு சிதைக்கப் பட்டாலும் தன் பெயர் வெளிவந்தால் போதும் எனச் சமரசம் செய்துகொள்வார்கள்.

சிற்றிதழாளர்களிடமும் இத்தகைய குணங்கள் இருக்கின்றன. இந்த அம்சங்களின்படி அவர்களும் பேரிதழழூ மனோ பாவம் கொண்டவர்களே.

பேரிதழில் பணியாற்றினாலும் - எழுதினாலும் இந்த அம்சங்கள் இல்லாதவர் கள், சிற்றிதழ் மனோபாவம் உடையவர்களே.

எழுத்தாளர்கள், தம் எழுத்தின் மீது பிரேமையும் கர்வமும் கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்து, கவிஞர்கள் தான்தான் பெரிய ஆளு என்பதுபோல் பேசுவார்கள். இப்போது அநேக எழுத்தாளர்கள் இப்படிக் கூறத் தொடங்கியுள்ளார்கள்.

எழுத்தையும் பணம் கூட்டவும் புகழ் ஈட்டவும் பந்தா காட்டவும் பயன்படுத்துவோர், அது குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இதைப் பெரிய திறமையாகவும் சிறப்பாகவும் சொல்லத் தொடங்கினால் அவர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சிற்றிதழ், பேரிதழ் என்ற வரையறை களைவிட்டுவிட்டு, தன் நெஞ்சறிவது பொய்யற்க என்ற அளவிலாவது எழுத்தாளர்கள் இயங்கட்டும்.

No comments: