Thursday, January 01, 2004

‘இதோ, தமிழிலக்கியப் பொற்காலம்’

மூவாயிரம் ஆண்டுக்கு மேல் தொடரும் தமிழிலக்கிய வரலாற்றில் சங்க காலம் (கி.மு. 300 கி.பி. 100), சோழர் காலம் (கி.பி. 900-1200) ஆகியவற்றைப் பொற்காலம் என்று இலக்கிய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன அக்காலங்களில் தோன்றிய நூல்களின் சிறப்பாலும் படைப்பாளருக்கு இருந்த சமூக மதிப்பாலும் இக்கருத்தை முன் வைத்தனர்.

அக்காலங்களைக் காட்டிலும் நடப்புக் காலம். ஒரு பொற்காலத்துக்கு உரிய அடையாளங்களோடு திகழ்கிறது. 1901-இல் தொடங்கி, தற்போது நடைபெறும் 2002 வரையான காலப்பகுதியில் தமிழிலக்கியம் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது, இந்த வீச்சு. வரும் ஆண்டுகளிலும் இருக்கும் என்று நம்பலாம். இப்பெரும் பாய்ச்சல், தமிழிலக்கிய நெடும்பாதையில் இதற்கு முன் எக்காலத்திலும் நிகழ்ந்ததில்லை.

எண்ணிக்கை
இக்காலத்தில் படைப்பாளர் எண்ணிக்கையும் படைப்புகளின் எண்ணிக்கையும் மிகுந்து பெருகின. 1901க்கு முந்தைய தமிழ்ப்படைப்புகள் அனைத்தையும் ஒருதட்டிலும் 1901 முதல் வெளிவந்த தமிழ்ப்படைப்புகள் அனைத்தையும் மற்றொரு தட்டிலும் வைத்தால் பிந்தைய தட்டு, முந்தைய தட்டைவிட அதிக கனத்துடன் இருக்கும். எண்ணிக்கையில் மட்டுமின்றி தரத்திலும் அவற்றுள் பல சிறந்துள்ளன.

அமைப்புகள்
தமிழ்-இலக்கிய அமைப்புகள், சங்கம்-கழகம், மன்றம் போன்றவை பல்கிப் பெருகியதும் இக்காலத்தில்தான். 1901-இல் மதுரையில் பாண்டித்துரைத் தேவர், நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினார்.

அது முதல் இக்காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழ் அமைப்புகள் தோன்றி, மொழி, இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றின. குடியாட்சி: 1901-க்கு முன் தமிழ்நாட்டில் முடியாட்சி மட்டுமே இருந்தது. 1901-க்குப் பின்தான் தமிழ்நாடு, முதன் முதலாகக் குடியாட்சியைச் சந்தித்தது. இப்புற* சுதந்திரம், படைப்பாளரிடையே அகச் சுதந்திர வாயிலை அகலத் திறந்தது,

அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி & பண்பாட்டுத்துறை ஒன்றை உருவாக்கி, அதற்கெனத் தனி அமைச்சரை நியமித்தது, 1901-க்கு முந்தைய தமிழக ஆட்சி வரலாற்றில் எங்கும் காணமுடியாத ஒரு நிகழ்வு. அரசு விருதுகள், அரசவைக் கவிஞர், உலகத் தமிழ் மாநாடுகள், போன்றவை நிறுவனமயமான தமிழ் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

இலக்கிய வடிவங்கள்:

1901-க்கு முன் பெரும்பாலும் செய்யுளின் ஆதிக்கமே இருந்தது. ஆனால், நடப்புக் காலத்தில் உரைநடை தன் பெருஞ்செல்வாக்கை நிலை நாட்டியது. சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம். கடித இலக்கியம், பயண இலக்கியம்... போன்ற பற்பல கிளைகள் தமிழ் இலக்கியத்தில் தோன்றி, தனித் தனித் துறைகளாக வலுப்பெற்றது நடப்புக் காலத்தில்தான்.

நாட்டுப்புறப் பாடல்களும் ‘வட்டார வழக்கில் அமைந்த படைப்புகளும் இலக்கிய அங்கீகாரம் பெற்றது இக்காலத்திலே. புதுக்கவிதை. ஹைக்கூ போன்றவையும் மேற்கத்திய சித்தாந்தங்களை உள்ளடக்கிய நவீன படைப்புகளும் வளர்ந்து வருவது நிகழ்காலத்தில்தான்.

கருப்பொருள்:

1901க்கு முந்தைய படைப்புகளின் கருப்பொருள்களை அகம்-புறம் என எளிதில் அடக்கி விடலாம். ஆனால் இன்று, பெண்மனம், ஒடுக்கப்பட்டோர். போராளிகள், விளிம்புநிலை மக்கள், எய்ட்ஸ் விழிப்புணர்வு, அரவானியர்... எனப் பலவற்றைக் கருப்பொருள்களாகக் கொண்ட படைப்புகள் வருகின்றன. படிமம், குறி*டு, வடிவம், படைப்புக் களம், வெளிப்பாட்டு உத்தி... என, முற்றிலும் புதிய படைப்புகள் வெளிவருகின்றன, படைப்பில் சோதனை முயற்சிகளும் நடைபெறுகின்றன.

ஆய்வுகள்:
1901 முந்தைய ஆய்வுப் பணிகள், பெரும்பாலும் உரையாசிரியராலேயே நிகழ்ந்தன. அவையும் விளக்க முறையிலும் பாராட்டு முறையிலுமே நடந்தன. ஆனால், அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளும் பெண்ணியம்-மார்க்சியம், தலித்தியம் போன்ற சித்தாந்த அடிப்படை ஆய்வுகளும் நடப்புக் காலத்தில்தான் தோன்றின. கல்வி வளர்ச்சி பெற்று ( தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் 75%) கல்லூரி, பல்கலைக்கழகம் வழியே நிறுவன முறை ஆய்வுகள் ஆழ வேரூன்றியதும் இக்காலத்திலே: இதழ்கள், அமைப்புகள், தனிமனிதர் மூலம் நூல் திறனாய்வு வலுப்பெற்றதும் நடப்புக் காலத்தில்தான்.

ஊடகம்:
அச்சு எந்திர வரவுக்குப் பின், மெல்ல எழுந்த நூல் பதிப்பு முயற்சி, நடப்புக் காலத்தில் அசாதாரண வேகம் பெற்றது. பல்லாயிரக்கணக்கான இதழ்கள் தோன்றி, தமிழ் மொழி - இலக்கியத்தைச் சிகர நிலைக்கு இட்டுச் சென்றன. இன்றும் பன்நூறு இதழ்கள், பல பட நிறுவனங்கள், பத்திற்கும் மேலான தொலைக்காட்சி அலைவரிசைகள், வானொலியின் பல்வேறு வட்டார அலை வரிசைகள், இணைய வானொலி... போன்றவை தமது தீனிக்காகப் படைப்பாளர்களைத் தொடர்ந்து பேசவும் எழுதவும் தூண்டுகின்றன பிழைதிருத்தம், உள்ளீடு... போன்றவற்றுக்குப் பல மென்பொருள்கள் தோன்றியுள்ளன. அறிவியல் மொழிக்கான மதிப்பைத் தமிழ் இப்போதுதான் பெறுகிறது. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என்ற ஊடகங்களின் வரவும் வளர்ச்சியும் தமிழுக்கு சஞ்சீவித் தன்மையை ஏற்படுத்திவிட்டன.

குறுந்தட்டுகளிலும், இணையத்திலும் சேமிக்கப் பெறும் தமிழிலக்கியத்தை இனி எந்தக் கறையானும் கடல்கோளும் அழித்துவிட முடியாது. தமிழுக்குள்ள இத்தகைய பாதுகாப்பு, நடப்புக் காலத்திற்கு முன் எப்போதுமே இருந்ததில்லை.

மொழிபெயர்ப்பு:
பிற மொழியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிக்கும் ஏராளமான மொழி பெயர்ப்புகள் நடப்புக் காலத்தில் நிகழ்ந்துள்ளன, 1954 இல் தொடங்கிய ‘சாகித்ய அகாதமி’ அமைப்பு, இதுவரை தமிழுக்கு 260 நூல்களையும், தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு 90 நூல்களையும் மொழி பெயர்த்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் ஆசியவியல் நிறுவனமும் பல மொழி பெயர்ப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இவை தவிர, தனித்தனியாகப் பதிப்பகங்களும் தமிழ் அமைப்புகளும் மொழி பெயர்ப்பாளர்களும் பல மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகின்றனர். இதன் பயனாகத் திருக்குறள், சங்க இலக்கியம் தொட்டு, தற்கால இலக்கியம் வரை உலக நாடுகளுக்கு அறிமுகம் ஆகியுள்ளன. உலக இலக்கியங்களும் பிற மாநில இலக்கியங்களும் தமிழ் மண்ணுக்கு அறிமுகமாகியுள்ளன.
1901க்கு முந்தைய மொழிபெயர்ப்புகள் பலவும் வடமொழியையே முலமாகக் கொண்டவை. ஆனால் நடப்புக் காலத்தில் பல மொழிகளிலிருந்தும் தமிழுக்கு ஆக்கங்கள் வருகின்றன.

இலக்கியம்-மக்கள் நெருக்கம்:
இலக்கியம் என்பது முற்காலத்தில் அரசவைக்கும் மேட்டுக் குடிக்கும் உரியதாக இருந்தது. பாரதி தொடங்கி, பலரும் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சென்றனர், பொது விழாக்களில் கவியரங்கம், பட்டி மன்றம் ஆகியவை இயல்பான உறுப்புகளாகி விட்டன. பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பேச்சு-கட்டுரை-கவிதை-நாடகப் போட்டிகள் நடத்தப் பெறுகின்றன. பல்வேறு அமைப்புகளும் மாதம்தோறும் இலக்கியக் கூட்டங்கள், கவியரங்குகள் ஏற்பாடு செய்கின்றன.
திரைப்படப் பாடல்களுக்கும், உரையாடல்களுக்கும் கோடிக்கணக்கான சுவைஞர் உள்ளனர். எனவே இலக்கியத்துக்கும் மக்களுக்கும் நல்ல நெருக்கம் வளருகிறது. முடியாட்சிக் காலத்தில் கூண்டுக் கிளியாக இருந்த தமிழிலக்கியம், குடியாட்சியில் குயில் தோப்பாக வளமையுற்றுள்ளது.

இலக்கிய ஆட்சியாளர்கள்:
முற்காலத்தில் அரசர்கள் கவிஞர்களாய் இருந்துள்ளார்கள். ஆனால். தற்காலக் குடியாட்சி முறையில்
கவிஞர்களாய் இருக்கும் வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்து, தங்கள் தலைவர்களாய் அறிவிக்கிறார்கள்.
ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனதும், மு.கருணாநிதி தமிழகத்தின் முதல் அமைச்சராய் 4 முறைதேர்வுபெற்றதும், சி.என். அண்ணாதுரை, கவிதை நடைப்பேச்சால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதும். நெடுஞ்செழியன், குமரி அனந்தன், காளிமுத்து, வலம்புரி ஜான் எனத் தொடரும் இலக்கியவாதிகளும், தமிழக அரசியலை அணி செய்துள்ளார்கள். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவும் ஒரு கதாசிரியர் என்பது குதிப்பிடத்தக்கது. இது, இலக்கியவாதிகள் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையே காட்டுகிறது.

குறைபாடுகள்:
நடப்புக் காலத்தில் தமிழில் பிறமொழிக் கலப்பு அதிகமாகிவிட்டது. தமிழ் படித்தவர்களும் படைப்பாளிகள் பலரும் பொருளாதாரத்துக்கு வேறொரு தொழிலைச் செய்ய வேண்டி இருக்கிறது. தமிழ் மக்களிடம் இலக்கிய நூல் வாங்கும் பழக்கம் அதிகம் வளராததால் ஆயிரம் படிகள் அச்சிட்டு அதை விற்கவே போராடும் எழுத்தாளர் பலர் உள்ளனர்.

எழுத்தாளரிடையே குழு மனப்பான்மை அதிகரித்துவிட்டது. படைப்பை விட்டுப் படைப்பாளியை விமர்சிக்கும் போக்கு நிலவுகிறது. எழுத்தாளர் பலரிடையே சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி நீண்டு விட்டது. பிழைப்புக்காக எதையும் எழுதும் துணிவு(!) சிலரிடம் உள்ளது.

இந்தக் குறைகள் களையப் பெற்றால் ‘இதோ, தமிழிலக்கியப் பொற்காலம்’ என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

- அண்ணா கண்ணன்
(கோகுலம் கதிர் மாத இதழ் - செப்டம்பர் 2002

No comments: