Wednesday, May 11, 2005

பெண் எம்.எல்.ஏ. யசோதா

Image hosted by Photobucket.com
சந்திப்பு: அண்ணாகண்ணன்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி உயிர்நீத்த இடம், திருப்பெரும்புதூர். அந்தத் தொகுதியில் இருந்து மூன்றாம் முறையாகக் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. ஆகி இருப்பவர், யசோதா(57).

சட்டப் பேரவைக் காங்கிரஸ் தலைவியாக யசோதாவைக் கட்சித் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவியாகவும் பதவி வகிக்கும் யசோதாவை 'ராணி'யின் சார்பில் சந்தித்தோம். எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்.

"நான் மாட மாளிகையிலோ, செல்வச் சீமான் வீட்டிலோ பிறக்கவில்லை. மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள். அப்பா, தேசமுத்து. அம்மா, கோவிந்தம்மாள். 2 ஆணும் 8 பெண்ணும் பிறந்தோம். நான் 9ஆவது குழந்தை.

சென்னை, எழும்பூரில் பிறந்த நான், அங்குள்ள மாநிலப் பெண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதோடு என் படிப்பு நின்றது. படிக்கும்போது பேச்சுப் போட்டிகளில் கலந்து பரிசு பெற்றேன். அப்போது தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் கையால் முதல் பரிசு பெற்றேன்.

என் அப்பா, தந்தை பெரியாரின் பக்தர். பெரியாரின் கூட்டத்துக்கு என்னையும் அழைத்துச் செல்வார். சிறப்புப் பேச்சாளர் வரும்வரை என்னைப் பேசச் சொல்வார்கள். சிலநேரம் பாட்டும் பாடுவேன்.

1964 முதல் தீவிரமாக அரசியல் கூட்டத்துக்குச் செல்லத் தொடங்கினேன். அப்போது எனக்கு 18 வயது. சென்னை, மாநகராட்சியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன்.

காங்கிரஸ் கூட்டத்திற்கு அடிக்கடி சென்றுகொண்டிருந்ததால் வேலையில் சிக்கல் வந்தது. 1967ஆம் ஆண்டு, வேலையா? அரசியலா? என்ற நெருக்கடி ஏற்பட்டது. நான் வேலையை விட்டு விலகி, காங்கிரஸில் சேர்ந்தேன்.

தமிழ்நாடு முழுவதும் சென்று பேசினேன். மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் ஆனேன்.

காங்கிரஸ் சார்பில் முதல்முறையாக 1980 தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் துணைக் கொறடாவாகவும் இருந்தேன்.

1984 தேர்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றேன். சட்டப் பேரவையின் காங்கிரஸ் துணைத் தலைவி ஆனேன். அப்போது தலைவராக இருந்த சுப்பிரமணியம், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், நான் இடைக்காலத் தலைவியாகவும் பொறுப்பு வகித்தேன்.

இப்போது 2001 தேர்தலிலும் அதே தொகுதியில் வென்று சட்டப்பேரவை, காங்கிரஸ் கட்சித் தலைவியாக இருக்கிறேன்.

1980இல் தொடங்கி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவியாகவும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்துள்ளேன்.

பெருந்தலைவர் காமராசர் தன் பிறந்த நாளில் 'கேக்' வெட்டுவார். அதில் பெரிய துண்டை வாங்கி, குடிசைப் பகுதி மக்களுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பேன்.

காமராசருக்கு மேடையில் நிறைய கதர் துண்டு போடுவார்கள். ஒரு சமயம் நான் அவற்றைக் கேட்டேன். 'ஆம்பளைக்குத்தான் துண்டு வேணும். பொம்பளைக்கு எதுக்கு?' என்று தலைவர் கேட்டார். 'முகம் வியர்த்தால் முந்தானையிலா துடைச்சுக்கறது?' என்றேன். உடனே கொடுத்துவிட்டார்.

மழைக்காலத்திலும் அறுவடைக் காலத்திலும் அதிகமாய் அரசியல் கூட்டங்கள் இருக்காது. அப்போதெல்லாம் 'முழக்கம் இல்லையா?' எனக் காமராசர் கேட்பார். பிறகு தலைவரே 'சரி சரி! சத்தியமூர்த்தி பவனுக்குப் போய் ராமண்ணாவைப் பார்' என்பார். அங்கு போனால் ரூ.200, ரூ.300 எனக் கவரில் போட்டு வைத்திருப்பார்கள்.

1975இல் சென்னை, பம்மலில் பொதுக்கூட்டம் நடந்தது. காமராசர் வரும்வரை நான் பேசினேன்.
தலைவர் வந்ததும் எல்லோரும் 'பேச்சை நிறுத்து' என்றார்கள். காமராசரோ 'இல்லை; யசோதா பேசட்டும்' என்றார். நான் பேசியதை ரசித்துக் கேட்டார்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 2 முறை அரசு விழாவுக்கு என்னை அழைத்தார்.

மதுராந்தகத்தில் பேசும்போது 'இந்த ஏரியின் கரை முற்காலத்தில் உடைந்தபோது ராமபிரான் 'எனக்குக் கோவில் கட்டுங்கள். உங்களுக்குக் கரையைக் கட்டித் தருகிறேன்' என்றார். இந்த ராமச்சந்திரனோ, எதையும் கேட்காமல் ஏழைகளுக்கு எல்லாம் செய்கிறார்' என்றேன்.

மதுராந்தகத்தில் ஞானசவுந்தரி என்ற பெண் இறந்தது பற்றி நான் சட்டப் பேரவையில் கடுமையாகப் பேசினேன். அது குறித்துக் கலைஞர் என்னைப் பாராட்டினார்.

நான் இதுவரை 10 முறை சிறைக்குச் சென்றுள்ளேன். சிறையில் இருக்கும் போதும் சக அரசியல் கைதிகளுக்குப் பேசவும் பாடவும் பயிற்சி கொடுப்பேன். தேசியக் கொடியை எப்படி மடிப்பது? அதனுள் மலர்களை எப்படி வைப்பது? என்று பயிற்சி முகாமே நடத்துவேன்.

மறைந்த பிரதமர் இந்திரா சாந்தி என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். 1981இல் மரகதம் சந்திரசேகர் உடன் டெல்லிக்குச் சென்றேன். அப்போது இந்திரா காந்தியைச் சந்தித்தோம். சட்டசபையில் நான் காரசாரமாகப் பேசியதை அறிந்த அவர் 'எங்கே அந்தச் சண்டைக் கோழி?' என்று என்னைக் குறிப்பிட்டுக் கேட்டார்.

ராஜிவ் காந்தி நல்ல உயரம். நானோ, குள்ளம். அவருக்குப் பொன்னாடை அணிவிக்கும்போது 'யசோதாஜி! நீங்கள் வேண்டுமானால் நாற்காலி மீது ஏறிக்கொள்ளுங்கள்' என்று அன்பாகவும் கிண்டலாகவும் சொன்னார்.

1991 தேர்தலில் எனக்கு முதலில் 'சீட்' கிடைக்கவில்லை. இதை அறிந்த ராஜிவ் காந்தி, எழும்பூர் தொகுதியில் நிற்க இருந்தவரை மாற்றிவிட்டு என்னை வேட்பாளராக அறிவித்தார்.

அந்த மே 21ஆம் தேதிக்கு முதல் நாள் 'உங்கள் தொகுதியில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன். 'நாளை மதியம் 12 மணிக்கு விமான நிலைய விருந்தினர் அறைக்கு வந்து என்னைப் பாருங்கள்' என்றார். ஆனால், அதற்கு முன்பே அவர் மனித வெடிகுண்டுக்குப் பலியாகிவிட்டார்.

1989இல் ஜானகி அம்மையார் இடைக்கால முதலமைச்சராய் ஆனார். அப்போது ஒரு தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தேன். பெரும் மோதல் உருவானது. சட்டப் பேரவைக்குள்ளேயே என் கை உடைக்கப்பட்டது.

என் தொகுதிக்கு உட்பட்ட பெண்ணலூரில் மின்சார நிலையம் கொண்டுவந்தேன். ரூ.22 இலட்ச மதிப்பில் விவசாயக் கிடங்கைத் திருப்பெரும்புதூருக்குக் கொண்டுவந்தேன். இந்த நன்மைகள் தொடரும். என்றும் தொகுதி மக்களுக்கும் கூட்டணித் தலைவர்களுக்கும் விசுவாசமாய் இருப்பேன்" என்றார் யசோதா.

"எத்தனையோ மேடைகளைச் சந்தித்து இருக்கிறீர்கள். அவற்றில் மறக்கமுடியாத மேடைகள் எவை?" என்று யசோதாவிடம் கேட்டோம்.

"பெண்ணாடத்தில் ஒரு கூட்டத்தில் பேசினேன். அதில் பெரிய கலாட்டா. கட்சிக்காரர்கள் போலீஸ் வேனில் ஏற்றி என்னைத் தப்பிக்க வைத்தார்கள்.
கடைசியில் கட்சி சார்பில்லாத ஒருவரின் வீட்டில், குவித்து வைத்திருந்த நெல் மூட்டைக்குள் ஒளித்து வைத்தார்கள். இரவு முழுக்க அங்கேயே இருந்தேன். அதன் பிறகு தப்பித்து விருத்தாசலம் வந்தேன்.

கிருஷ்ணகிரியில் பேசும்போது ஒருவர், கத்தியால் என்னைக் குத்த வந்தார். நான் மேடையில் இருந்த சோடா பாட்டிலைக் கையில் எடுத்தேன். அருகில் வந்தால் தலையில் அடித்துவிடலாம் என்று இருந்தேன். அதற்குள் பின்னால் இருந்த ஒருவர் அவரைப் பிடித்துவிட்டார்.

இராமநாதபுரத்தில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆரைத் தாக்கிக் கடுமையாகப் பேசினேன். மேடையை நோக்கிக் கற்கள் பறந்து வந்தன. 'எவன்டா கல்லு விடறது? ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாங்கடா' என்று ஆவேசமாய்ச் சொல்லிவிட்டேன்.

நிறையபேர் ஈட்டி, வேல்கம்பு எடுத்துக்கொண்டு நான் இருந்த ஓட்டலுக்கு வந்தார்கள். அதற்குள் நான் ரெயில் நிலையத்துக்கு வந்துவிட்டேன். அந்தக் கூட்டம், ரெயில் நிலையத்துக்கும் வந்து ரெயிலில் பெட்டி பெட்டியாகத் தேடியது. 'கார்டு' அறையில் தேடவில்லை. அங்குதான் நான் இருந்தேன். அதனால் உயிர் தப்பித்தேன்" என்றார் யசோதா எம்.எல்.ஏ.


(நன்றி: ராணி - 15-7-2001)

No comments: