Wednesday, March 16, 2005

நானும் வலம்புரி ஜானும்


1997 டிசம்பர் மாதம் என்று நினைக்கிறேன். 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' என்ற என் இரண்டாவது கவிதை நூலுக்கு அணிந்துரை பெறவேண்டி வலம்புரி ஜானை அணுகினேன். போய்த் தொகுப்பைக் கொடுத்தேன். நான்கைந்து நாள் கழித்து வரச் சொன்னார். அதன்படி போனேன். அணிந்துரை எழுதி வைத்திருந்தார். அதை என்னிடம் கொடுக்கும் முன் என் எதிரில் ஒருமுறை வாசித்துக் காட்டினார்.


அவருடைய அணிந்துரையில் ஒரு பகுதி:
'கவிஞர் அண்ணாகண்ணன் உயிரின் மூலம் ஒன்று என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். அவர் வயதிற்கு இந்த உணர்தல் வாழ்த்திற்கு அல்ல; வணக்கத்திற்கே உரியது. அவ்வளவு எளிதாக அழித்துவிட இயலாத அவரின் பெயரை அவரின் கவிதைகள், கல்வெட்டில் கண்விழிக்க வைக்கின்றன.வெண்பாவிற்குப் 'பழைய ஏற்பாடு' என்று பொட்டு வைப்பதும் 'கவிதைக்குமாரன்' என்ற நெகிழவைக்கிற நெசவும் 'ஒட்டுமாமரத்தின் எட்டாம் கிளை' என்கிற பிரபஞ்சப் பிழிவும் என்னை வியக்க வைத்தன.
புதிய சிந்தனைகள், சிந்திக்கிற புதிய விதம், எல்லையற்ற சந்தர்ப்ப வானம், கவிஞரின் வியர்வை சிந்துகிற உழைப்பு இவற்றைப் பார்க்கிற போது கவிஞர் அண்ணாகண்ணன் தமிழ்க் கவிதைகளை உலகத் தரத்திற்கு உயர்த்துகிற ஒருவராக வருவாரோ என்கிற எண்ணமே மேலோங்குகிறது.
உலக இலக்கியத்திற்கு அழுத்தமான, அர்த்தமுள்ள இந்தப் பங்களிப்பால் நெகிழ்ந்து நிற்கிறேன்'
என்றெல்லாம் எழுதிக் கையொப்பமிட்டுத் தந்தார். நூலில் அச்சேற்றும் போது 'கவிஞானி வலம்புரி ஜான்' என்று வெளியிடச் சொன்னார். 'இதற்கு நிச்சயம் நூலக ஆணை கிடைத்துவிடும்' எனச் சொன்னார்.


'இப்பொழுது என்ன செய்கிறீர்கள்?' எனக் கேட்டார். 'சுதந்திரமான இதழாளராக ஏழெட்டு இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன்' என்றேன். 'என்னிடம் வந்துவிடுகிறீர்களா?' என்று கேட்டார். 'என்ன செய்யவேண்டும்?' எனக் கேட்டேன்.'வாருங்கள், சொல்கிறேன்' என்றார். சென்றேன். அவர், 'முதலில் ஒரு கடிதத்தைச் சொல்கிறேன்; எழுதுங்கள்' என்றார். எழுதிக் கொடுத்தேன். 'கையெழுத்து அழகாக இருக்கிறது' என்று பாராட்டினார். முக்கிய வேலை அதுதான் என்று புரிந்தது.


அதன் பிறகு நாள்தோறும் சூளைமேட்டில் இருந்த அவரின் இல்லத்திற்குச் சென்றேன். அவர், சில இதழ்களில் தொடர் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கெல்லாம் அவர் சொல்லச் சொல்ல எழுதித் தரவேண்டும். அவர் சொல்லும் வேகத்திற்கு எழுதவேண்டும். ஒரு தலைப்பை அல்லது கருவை எடுத்துவிட்டால் போதும். நூல் பிடித்தமாதிரி சரசரவெனச் சொல்லுவார். அது, கதையோ, கட்டுரையோ, வாழ்த்துச் செய்தியோ, பரிந்துரைக் கடிதமோ..எதுவாக இருந்தாலும் அதில் ஒரு நீரோட்டத்தின் போக்கு இருக்கும்.


சில நாள்கள் காரில் செல்லும்போதே சொல்வார். கார் ஆடும் ஆட்டத்தில் என் 'அ' எழுதவருவேன். அதற்குள் அ முதல் அக்கன்னா வரை பேனா தானாகவே எழுதிக்கொள்ளும். இந்தச் சிக்கலைத் தவிர்க்க, அவர் சொல்லச் சொல்லக் கிறுக்கெழுத்தில் எழுதிக்கொள்வேன். பிறகு அழகான கையெழுத்தில் எழுதிக்கொடுப்பேன். ஜானுக்கு மிகவும் மகிழ்ச்சி. சில நேரங்களில் எழுதவேண்டும் என்று சொல்லமாட்டார். பக்கத்தில் இருப்பவரோடு பேசிக்கொண்டிருப்பார். நான் அந்த உரையாடலைக் கவனித்துக்கொண்டிருப்பேன்.


1998இன் முதல் மூன்று மாதங்களுக்குள் ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை சிலருடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். நான் உடனிருந்து கவனித்து மனத்திற்குள் குறித்துக்கொண்டேன். அடுத்த நாள், அது தொடர்பாக அவருக்கு ஏதோ ஒரு விவரம் வேண்டியிருந்தது. அதைக் குறித்துப் பலமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார். என்னிடம் சாதாரணமாக அதைப் பற்றிச் சிந்திப்பதைச் சொன்னார். நான் அந்தக் குறிப்பிட்ட உரையாடலை, ஒரு சொல் மாறாமல் அப்படியே திருப்பிச் சொன்னேன். அவர் வியந்துபோய் என் கை குலுக்கினார். 'இன்னும் அஞ்சு வருசத்துல நீங்க பெரியாளா ஆயிடுவீங்க' என உடனே சொன்னார்.


கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் நான் அமுதசுரபியின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்றேன். இது ஏதோ நான் பெரிய ஆள் ஆகிவிட்டதற்கான சான்று கிடையாது. இது தொடர்பாக வேறொரு நிகழ்வைச் சொல்லவேண்டும்.


1999ஆம் ஆண்டு என்று நினைவு. என் நண்பரின் உறவுப்பெண், கனடாவிலிருந்து சென்னைக்கு ஒருமுறை வந்தார். என் கவிதை நூலைப் படித்த அவர், என்னைப் பாராட்டி விட்டு, 'எதிர்காலத்தில் பெரிய ஆளா ஆயிட்டா எங்களையெல்லாம் மறந்துடாதீங்க' என்று சிரித்தபடி சொன்னார்.


நான் அவரிடம் சிரிக்காமல் சொன்னேன்: 'நான் இப்பவும் பெரிய ஆள்தான். நான் எப்பொழுதோ பெரிய ஆள் ஆகிவிட்டேன். நான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை இந்த உலகம் புரிந்துகொள்வதற்கு வேண்டுமானால் காலம் பிடிக்கலாம்'. உடனே அந்தப் பெண்மணி, 'நீங்கள் பெரிய ஆள் என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ளும் போது எங்களை மறந்துவிடாதீர்கள்' என்று மீண்டும் சிரித்தபடி சொன்னார்.


இதை எதற்குச் சொன்னேன் என்றால் வலம்புரி ஜானுக்கு, நான் பெரிய ஆள் ஆவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அவருடைய நம்பிக்கையை நான் தொடர்ந்து அதிகப்படுத்தி வந்தேன்.


இதழ்களுக்குக் கிறுக்கெழுத்தில் எழுதி அனுப்பி, அதில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என அங்கிருந்து தொலைபேசி அழைப்பு வருவது நான் வந்ததும் நின்றது.


அவருக்கு வரும் கடிதங்களுக்கு என்னைப் பதில் எழுதச் சொன்னார். முக்கிய கடிதங்களுக்கு மட்டும் என்ன பதில் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்வேன். மற்றபடி பொதுவான கடிதங்களுக்கு நானே பதில் எழுதிவிடுவேன். அவர் கையொப்பம் இட்டு அனுப்பிவிடுவார்.


அதன்பிறகு அவர் படிக்கவேண்டிய புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். நூல் வெளியீட்டு விழாவுக்குப் போகும் முன் அந்த நூலைக் குறித்து என்னிடம் கேட்டுக்கொள்வார். நான் முக்கியமான சில இடங்களை அடையாளமிட்டுக் கொடுப்பேன். அவரும் காரில் போகும்போதே புத்தகத்தை ஒருமுறை புரட்டிவிடுவார்.


எந்த நிகழ்ச்சியானாலும் வலம்புரி ஜான் மேடையேறிவிட்டால் களைகட்டிவிடும். அடுக்குத் தொடர்களும் எதுகை மோனைகளும் அவர் பேச்சில் கொஞ்சி விளையாடும். திராவிடக் கட்சிகளின் பேச்சாளர்களைப் போல் வெற்று எதுகை மோனைகளாய் இருக்காது. ஆழ்ந்த பொருளுடன் அவர் அவற்றைக் கையாளுவார். எழுத்திலும் இப்படியே. 'நூலகங்களும் நூலாம்படைகளும்' என்பது அவர் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு.


ஜான் தொடாத துறையே இல்லை எனலாம். அரசியல், இலக்கியம் தவிர, சோதிடம், வாஸ்து, அதிருஷ்டக் கற்கள்... என எதைப் பற்றியும் பேசக் கூடியவர். சோதிடத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. வடபழனியில் அவர் தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. தலைப்பு: 'இந்த ஆண்டு குரு பெயர்ச்சி நல்லதா? தீயதா?'


சமையல் நிகழ்ச்சியிலும்கூட அவர் வருவார். பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஒட்டலின் சமையற்காரர், ஒரு கேக் செய்து காண்பித்தார். அதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு இவர் சென்றார். 'அனைவரையும் மீண்டும் மீண்டும் கேக்க வைப்பதால் இதற்குக் கேக் எனப் பெயர் வந்தது' என்பதுபோல் பேசினார்.


நான் இருந்தபோது அவர், தமிழ் மாநில காங்கிரஸில் இருந்தார். கண்ணதாசனைப் போல் இவர் மீதும் கட்சித் தாவல் குற்றச்சாட்டு உண்டு. இவருடைய பேச்சுத் திறனுக்காக, முதலில் எல்லாக் கட்சிகளுமே இவரை விரும்பின. ஆனால், ஒரு கட்சிக்குள் நுழைவதற்கு வேண்டுமானால் பேச்சும் எழுத்தும் உதவலாம். அதன் தலைமையை நெருங்குவதற்கும் அவர் மனத்தில் இடம் பிடிப்பதற்கும் பேச்சு மட்டும் போதாது.


ஆயினும் வலம்புரி ஜான், எம்.ஜி.ஆர். மனத்தில் இடம் பிடித்தார். அவர் ஆதரவுடன் இரண்டு முறைகள் மக்களவை உறுப்பினர் ஆனார். 9 ஆண்டுகள் அவர், எம்.பி.யாக இருந்தார். அதைக் கொண்டு பலருக்கு அவர் உதவியிருக்கிறார். மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டுமா? பொறியியல் கல்லூரியில் இடம் வேண்டுமா? அரசு எந்திரத்திடம் வேலை ஆகவேண்டுமா? எல்லாவற்றுக்கும் பதவியில் இருப்பவரின் ஒரு சிபாரிசுக் கடிதம் இருந்தால் நல்லது. இந்தக் காலத்தில் வெறும் கடிதம் மட்டும் போதாது. காந்தி நோட்டும் நிறைய வேண்டும்; அந்தச் சிபாரிசு கடிதம் கொடுப்பதற்கே சில்லறை செலவாகும். ஆனால் ஜான், உண்மையிலேயே வறுமையில் இருப்பவரை மேலும் துன்பப்படுத்தமாட்டார். தன்னால் முடிந்தவரை உதவுவார்.


இக்கால அரசியல்வாதிகள் எல்லோருக்குமே ஒரு பொதுக் குணம் உண்டு. 'சும்மா புகழாதீங்க' என்பார்கள். ஆனால், உள்ளுக்குள் அவர்களை அடிக்கடி புகழவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். திட்டமிட்டுத் தன்னை முன்னிறுத்துவதும் உண்டு. பட்டிமன்றங்களில் பேச வாய்ப்புக் கேட்டு வருவார்கள். அவர்களிடம் நடுவராய் இருப்பவர், சொல்வார். 'நல்லாப் பேசுங்க. அப்பப்போ என்னைப் பார்த்து, நீங்க அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர் என்று நாலு வார்த்தை சொல்லுங்க' என்று கூறுவது உண்டு.


இதே போல், தொலைக்காட்சி நிகழ்ச்சியாகட்டும்; அமைப்புகளும் அரசும் வழங்கும் விருதுகள் ஆகட்டும் எல்லாவற்றுக்கும் ஒரு பின்நிகழ்வு உண்டு.
பரபரப்புத்தான் அரசியல்வாதிக்குப் பிடிக்கும். அவன் பொதுக்கூட்டத்தில் பேசப்போனால் அங்கே ஒரு பிரச்சினை வெடிக்கவேண்டும். தானாகக் கல் விழவேண்டும். இல்லாவிட்டால் அதற்காக இவனே நாலு பேரை ஏற்பாடு செய்து பேச்சாளர் மேல் கல் எறியச் சொல்வான். அதைக் கையோடு புகைப்படம் எடுக்கச் சொல்வான். அடுத்த நாள் நாளிதழ்களில் படத்துடன் செய்தி வரும். செல்வாக்கை வளர்த்துக்கொள்ள இப்படிப்பட்ட உத்திகள் வெகுவாகப் பயன்படும்.


எனக்கு இதுபோன்ற உத்தி பிடிக்காது. தந்திரங்களும் செல்வாக்குகளும் இடும் போட்டிக்கு முன்னால் தகுதி பின்னடைவதை என்னால் சகிக்கமுடிவதில்லை.


வலம்புரி ஜான் அரசியல்வாதிதான்; ஆனால், நல்ல மனிதர். அவரிடம் தந்திரங்களே கிடையாது என்று சொல்லமுடியாது. ஆனால், சிறந்த குணங்கள் பல அவரிடம் இருந்தன.
'மூப்பனார் பிறந்த நாளுக்காக ஒரு மலர் தயாராகிறது. அதில் மூப்பனாரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதுங்கள். அப்படி எழுதி அனுப்பினால், அது மூப்பனாரின் கண்ணில் படும். அவர் உங்களைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதுவார்' என்றார் ஜான். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே நான் எழுதவில்லை.


அவர் எனக்குத் தந்த ஊதியம் மிகவும் குறைவாக இருந்தது. என் நேரமும் அதிகம் செலவானது. காலை 6,7க்குத் தொடங்கினால் இரவு 10,11கூட ஆகிவிடும். இதனால் என் சொந்தப் படைப்பியக்கம் தடைப்பட்டது. இப்படி என் நேரத்தை இழப்பதை நான் கட்டோடு விரும்பவில்லை.


அந்த நேரத்தில் வாலி, புதிய பார்வை இதழில் நானும் இந்த நூற்றாண்டும் என்று ஒரு தொடர் எழுதிவந்தார். அதில் ஓர் இடத்தில் யாரோ ஒருவர், அவரை இன்னொரு கவிஞரிடம் உதவியாளராய்ச் சேரச் சொன்னதாகவும் அவர் மறுத்ததாகவும் எழுதியிருந்தார். நான், என்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டேன். 'நான் செய்வது சரியா? நான் இந்தப் பாதையிலா செல்வது?'


'நீங்க என்கூடத் தொடர்ந்து இருங்க. உங்களுக்கு ஒரு நல்ல அரசாங்க வேலை வாங்கித் தருகிறேன்' என்றார், ஒருமுறை. அவருக்கு நல்ல மனம் இருந்தது. ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. இப்படியான ஆசை காட்டி, ஏமாற்றப்பட்ட பலரை நான் அறிவேன்.


உதவியாளராய்ச் சேர்ந்த மூன்றே மாதங்களில் எனக்கு அந்த வேலை பிடிக்காமல் போனது. நான் அந்த வேலையை விட்டு விலகினேன். இறுதியாக ஓரிரு நாள்கள் ஊதியம் வரவேண்டியிருந்தது. ஆயினும் பரவாயில்லை என்று விட்டுவிட்டேன். ஓர் அஞ்சல் அட்டையில் என் முடிவை எழுதிப் போட்டுவிட்டு, நான் அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கினேன்.


மேலும் சிறிது காலம் கழிந்தது. நான் அமுதசுரபிக்கு வந்த பிறகு, அவரைத் தொடர்பு கொண்டேன். 2004 தீபாவளி மலருக்கு அவரிடம் ஒரு கவிதை பெற்று வெளியிட்டேன்.


மிகவும் உடல்நலம் குன்றி இருக்கிறார்; இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன என்று நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன். இதழ்களில் பார்த்தேன். இன்று(14-3-2005) சென்னை, போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தேன். நல்ல திடகாத்திரமான மனிதர், அவர். மிகவும் இளைத்திருந்தார். நான் கொண்டு போன பழவகைகளைக் கொடுத்தேன்.


அவர் கழுத்தில் ஒரு கை கொடுத்துத் தூக்கி விடச் சொன்னார். தூக்கி விட்டேன். அமர்ந்தபடியே என்னிடம் பேசினார். "நீங்கள் நிச்சயம் குணமடைவீர்கள்" என்றேன். ஆமோதித்தார். அவர் கையில் சுருக்கங்களுக்கு இடையில் ஒரு கொடி பச்சைக் குத்தியிருந்தது தெரிந்தது. "அது என்ன?" என்றேன். "எம்.ஜி.ஆர். காலத்தில் குத்திக்கொண்ட அ.தி.மு.க. கொடி" என்றார்.


"புத்தகம் எதுவும் வேண்டுமா?" என்று கேட்டேன். "என்னால் இப்பொழுது படிக்க முடியாது" என்றார்.


"நீங்கள் எழுதியவை பல இன்னும் நூலாக வேண்டி இருக்கின்றன இல்லையா?" என்றேன்.

"ஆமாம். வலம்புரி ஜான் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எனத் தொகுக்கத் தொடங்கினேன். அதற்குள் இந்தச் சிக்கல் வந்துவிட்டது" என்று வருந்தினார்.


பிறகு "அமுதசுரபி எப்படி நடக்கிறது?" என்று கேட்டார். "நன்றாக நடக்கிறது. நீங்கள் குணமாகி வந்து எழுதுங்கள்" என்றேன்.


"என்ன சாப்பிடுகிறீர்கள்?" என்றேன்."வழக்கம் போலத்தான். இனிப்பு, ரொம்ப காலமாகவே சாப்பிடுவதில்லை; இப்போது உப்பும் கொஞ்சம் குறைத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் டாக்டர்" என்றார்.


"நீங்கள் எவ்வளவோ இளைஞர்களை வானளாவத் தூக்கி விட்டிருக்கிறீர்கள். இயற்கை உணவை வலியுறுத்தியிருக்கிறீர்கள். யோகாசனத்தைப் பரப்பியிருக்கிறீர்கள்" என்று சிலவற்றை நினைவுகூர்ந்தேன்.


"அறுபதைக் கடந்துவிட்டீர்களா?" என்றேன். "இந்த அக்டோபர் 14 வந்தால் 60 வயது தொடங்குகிறது" என்றார்.


"உங்களுக்கு மணிவிழா எடுத்துவிடுவோம். அதில் நீங்கள் வந்து ஒரு நீண்ட உரை ஆற்றவேண்டும்" என்றேன். "நல்ல உள்ளங்கள், எங்கெங்கோ இருக்கிறீர்கள். வந்து பேசுவேன்" என்றார்.


விடைபெறும் முன் அவர் மனைவியிடம் பேசினேன். "அவர் பி பாசிட்டிவ் குருதி வகையைச் சேர்ந்தவர்; அந்தக் குருதி வகையைச் சேர்ந்தவரின் சிறுநீரகத்தைத்தான் பொருத்தவேண்டும். யாருடையதைப் பொருத்தவேண்டும் என்று மருத்துவர்களே முடிவு செய்வார்கள்" என்றார்.


"என்ன செலவு ஆகும்?" என்று கேட்டேன்.

"ஐந்து லட்சம் ஆகும்" என்றார்.


"தேவையான பணம் சேர்ந்துவிட்டதா? இன்னும் தேவைப்படுகிறதா?" என்று கேட்டேன். "இன்னும் தேவைப்படுகிறது" என்றார்.


"என்னால் முடிந்த சிறுதொகையை வைத்துக்கொள்ளுங்கள்" என்றேன். முதலில் மறுத்தவர், பின்னர் பெற்றுக்கொண்டார்.


வலம்புரி ஜான் பிழைத்துவிடுவார் என்று உற்சாகத்தோடு திரும்பினேன்.

No comments: