Monday, August 15, 2005

காந்தளகம் - 20 ஆண்டுகள்

புத்தக மதிப்புரை
ஈழத் தமிழ் இலக்கியம்
சக்தி வசந்தன்

------------------------------------------
நூல் : காந்தளகம் 20 ஆண்டுகள்
ஆசிரியர் : கவிஞர் அண்ணா கண்ணன்
வெளியீடு : காந்தளகம்,
824, அண்ணா சாலை,
சென்னை-600 002.
பக்கம்: 192

-------------------------------------------
எந்தத் தொழிலையும் வெறும் தொழிலாகவும் வியாபாரமாகவும் மட்டும் செய்யவும் முடியும். அதே தொழிலை செய்யும் விதத்தால், வெளிப்பாட்டுத் தரத்தால் ஒரு கலையாகவும், தவமாகவும், வேள்வியாகவும் இயற்றவும் முடியும்.

சென்னையிலுள்ள 'காந்தளகம்' என்ற பதிப்பகம், இரண்டாவது வகைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. அதன் சாதனைச் சரித்திரத்தைத்தான், இந்தக் 'காந்தளகம்-20 ஆண்டுகள்' என்ற அழகிய நூல் பல கோணங்களில் படமாக்கி உள்ளது.

'காந்தளகம்' துவக்கத்தில் ஈழ மண்ணில் வேரூன்றியது. பின் 1980-ல் தமிழ்நாட்டில் கிளை பரப்பி-கடந்த இருபது ஆண்டுகளில்-அந்தக் கிளையே ஒரு பெருமரமாக வளர்ந்தோங்கி வாகை சூடி நிற்கிறது.

''ஈழத்திற்கோர் இலக்கியப் பாலம் அமைத்தது காந்தளகம்'' என்பது உண்மைதான். நம் வடலூர் வள்ளலாரிடம் வாதிட்ட ஈழத்து ஆறுமுக நாவலரின் படைப்புகளிலிருந்து, இன்றுள்ள செ.யோகநாதனின் படைப்புகள்வரை பலவற்றை அது வெளியிட்டு 'ஈழத்தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளது. இலக்கியத் துறையில் மட்டுமல்ல, கணினி, வர்த்தகம், வரலாறு போன்ற துறைகளிலும், அது குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது.

வரலாற்றுத் துறையில் அது செய்துள்ள ஒரு சிறப்புமிக்கப் பணி, தமிழில் 'தேசப் பட'மென்றும் 'அட்லஸ்' என்றும் கூறப்படும் பூகோளப் படங்களை 'நிலவரை' என்ற புறநானூற்றுப் பெயரில் பகுதி பகுதியாக-வெகு நுட்பமாகத் தயாரித்துள்ளதாகும்.

அதேபோல் ''மின்னம்பலத்தில் ஒரு நூல் அம்பல''மாக www.tamilnool.com என்ற ஒரு தளத்தை உருவாக்கி, தமிழ் நூல்கள் அனைத்தையும் துறைவாரியாகப் பிரித்ததும், 'காந்தளக'த்தின் தனிப் பெரும் சாதனைகளில் ஒன்றாகும்.

இதேபோல் தமிழ் இலக்கியத்தையும் கலாசாரத்தையும் கணினி அஞ்ஞானத்தையும் ஒரு புதிய நூற்றாண்டில் கொண்டு வந்து நிறுத்தி நிலைப்படுத்திய அருந்தொண்டை, அது பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது என்ற செய்தி வியப்பளிக்கிறது.

அந்த வகையில் இதன் படைப்பாளியான மறவன் புலவு திரு.க.சச்சிதானந்தன் அவர்கட்கு, உலகத் தமிழர் அனைவருமே கடமைப்பட்டவராவார்கள்.

அவரது சாதனைகளில் பங்கு கொண்டோரிலிருந்து பார்த்து அனுபவித்தவர்கள் வரை பலரும் அவரது 'காந்தளக'த்தைப் பற்றி கூறியுள்ளக் கருத்துகளின் இனிய தொகுப்புதான் இந்த நூல்.

நூல் அமைப்பில் அச்சிலும், கட்டமைப்பிலும், தரத்திலும், திறத்திலும் 'காந்தளகம்' எப்போதுமே மற்றவர்கட்கு ஒரு முன்னோடியாக விளங்கும். அந்த ஓட்டத்தின் அழகை இதிலும் நம்மால் பார்க்க முடிகிறது. பயனுள்ள நூல்.

No comments: