Tuesday, September 21, 2004

குட்டி புத்தா

இருள் பொட்டலத்தைப் பிரிக்கப் பிரிக்க, உள்ளிருந்து பகல் எட்டிப் பார்க்கிற நேரம். இண்டு இடுக்கு விடாமல் எதையோ தேடிக்கொண்டிருக்கிறது தென்றல். அந்த அரச மரத்தை மட்டும் விட்டு வைக்குமா என்ன! தன்னிடம் இல்லை என அம்மரம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தலை முதல் கால்வரை சோதனை போட்டது. மரத்தடியில் சாய்ந்து நின்ற எந்திரத் துப்பாக்கி லேசாக ஆடியது. அப்போது ஒரு சிட்டுக் குருவி சர்ரென்று பறந்து வந்தது. அந்தத் துப்பாக்கியின்மேல் அமர்ந்தது. ஏற்கெனவே ஆடிக்கொண்டிருந்த துப்பாக்கி சரிந்து விழுந்தது. கிலியுடன் "கிரீச் கிரீச்' எனக் கத்தியபடி குருவி பறந்தோடியது. துப்பாக்கி விழுந்த சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தான் பண்டார.

எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அருகில் எவரையும் காணவில்லை. காற்றில் விழுந்திருக்கும் என நினைத்து நிமிர்த்தி வைத்தான். முகாமுக்குள்தான் இரவு தூங்கிக் கொண்டிருந்தான். உள்ளே புழுக்கம் தாங்காமல் நள்ளிரவில் வெளியே வந்து மரத்தடியில் படுத்தான். முகாமைச் சுற்றிலும் சக இராணுவத்தினர் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர்.
காலைநேரப் பயிற்சிக்கான சைரன் ஒலித்தது. பண்டார அவசர அவசரமாக எழுந்தான். முகம் கழுவித் தலûவாரி உடுப்பை அணிந்தான். "புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி!' என்று மனத்துக்குள்ளேயே சொல்லி வணங்கினான்.
அது அம்மா புஞ்சிநோனா சொல்லிக் கொடுத்தது. அவளுக்குப் பண்டாரவைப் பெரிய புத்த பிக்குவாக்க ஆசை. அநுராதபுரத்து மகாவிகாரைக்கு அவனை அழைத்துச் சென்றாள். அவனுக்கோ வயது 6. மொட்டை அடித்துக் காவி உடுத்தி... பார்க்க அழகான பொம்மைபோல் இருந்தான். தன் கண்ணே பட்டுவிடப் போகிறது என்று கண்ணூறு கழித்து "என் குட்டிப் புத்தா!' என்று கூறி அழுத்தமாக முத்தமிட்டாள். கையோடு அவனை விகாரையிலும் சேர்த்தாள்.
புத்த பிக்குகள் வந்தார்கள். புத்தர் பெருமான் பற்றியும் அவருடைய போதனைகள் பற்றி அவனுக்குக் கதை கதையாகச் சொன்னார்கள். சிங்கள இனத்தின் சிறப்புப் பற்றியும் சிங்கள மொழியின் மேன்மை பற்றியும் விளக்கினார்கள். பண்டாரவுக்கு இருப்பு கொள்ளவில்லை. சேர்ந்த பத்தாம் நாள் தன் வீட்டுக்கு ஓட்டம் பிடித்தான். "என்னாச்சு பண்டார?' திகைப்புடன் கேட்டாள், புஞ்சிநோனா ""உன்னை விட்டு இருக்க முடியலை அம்மே'' என்றவனை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
""பண்டார! ஏய் பண்டார!''
சட்டென்று நினைவு திரும்பியவன் வாசலுக்கு ஓடினான். அவனுடைய உற்ற நண்பனும் ஊரில் பண்டாரவின் வீட்டுக்கு எதிர்வீட்டுப் பிள்ளையுமான சமந்தா, கோபத்துடன் நின்றிருந்தான். ""மணி யொலிச்சு எவ்வளவு நேரமாச்சு! இன்னும் இங்கயே நிக்கிறாய்! முட்டாள்!'' என்று பண்டாரவைத் திட்டினான். இருவரும் அணிவகுப்பு நடக்கிற இடத்துக்கு ஓடினார்கள்.
கேணல் றெகான் தளுவத்தை, கடுகடுத்தபடி நின்றிருந்தார்.
""உன்ரை பேர் என்ன?''
""பண்டார''
""முழுப்பேரைச் சொல்லு?''
""ஆர். டி. பண்டாரநாயக்க - ரத்தினஸ்ரீ தொடங்கொட பண்டாரநாயக்கா.''
""எந்தப் பிரிவு?''
""நுவரேலியா - 39 ஆம் பட்டாலியன்''
""ஏன் தாமதம்?''
""அது... அது வந்து... ராத்திரி கனநேரம் விழிச்சிருந்தேன்....''
""பொறுப்பில்லாத பதில். ஒரு இராணுவ வீரன் இப்படித்தான் பேசுவதா? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உன்னையெல்லாம் படையில் சேர்த்தார்களே, அந்த ஆள்சேர்ப்புக் குழுவினர்! அவர்களைச் சொல்லவேணும். இத்தனை பேரைச் சேர்த்திட்டோம் என்று கணக்கு காட்டத்தானே உன்னை மாதிரி தூங்கு மூஞ்சிகளையும் சோம்பேறிகளையும் சொரணையற்ற சிங்களர்களையும் பிடித்துக் கொண்டு வருகிறார்கள்! போ! போய்த் தொலை!'' கேணல் சிங்கமென உறுமினார்.
பண்டார மனத்துக்குள் வெதும்பினான். "நானா வாறேன் வாறேன் என்று குதித்தேன்?' "புத்தம் சரணம்' என்று இருந்தவனை இழுத்து வந்து உடுப்பை மாட்டித் துவக்குப் பிடிக்க வைத்துவிட்டு இப்போது இப்படிப் பேசு கிறார்களே!'
அந்த நாள் அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. புதன் கிழமை காலை 11 மணி. வெள்ளைக் கோடுபோட்ட நீலச் சட்டையும் கருப்பு கால்சட்டையும் அணிந்திருந்தான். புஞ்சிநோனா அவித்த புட்டு கமகமத்தது. மீன் குழம்போடு சேர்த்து ஒரு வெட்டு வெட்டத் தொடங்கினான். அம்மா அவசர அவசரமாக ஓடி வந்தாள். "பண்டாராக் குட்டி! எங்காவது போய் ஒளிஞ்சுகொள். பிள்ளை பிடிக்க வாறாங்களாம்' என்றாள்.
ஊரெல்லாம் இதே பேச்சாய் இருந்தது. புஞ்சிநோனா எதிர்வீட்டுக் குசுமாவிடம் விசாரித்தாள். "பக்கத்தூருக்கு இராணுவ அதிகாரிகள் வந்து இளவயசு ஆண்பிள்ளை களை எல்லாம் கையோடு கூட்டிப்போய் விடுகிறார்கள்' எனக் குசுமா சொன்னாள். "நம்மூருக்கும் வரப்போகிறார்களாம்' என்ற அவள், ""பண்டாரவைப் பார்த்துக்கோ. நான் என் சமந்தாவை எங்காவது ஒளிச்சு வைக்கிறேன்'' என்றபடி உள்ளே போனாள்.
புஞ்சிநோனாவுக்கு அடிவயிற்றில் இருந்து ஒரு பந்து எழும்பி வந்து தொண்டையை அடைத்தது. ஏற்கனவே அவள் கணவன் ரத்தின ஸ்ரீ தொடங்கொட, இராணுவத்தில் இருந்தான். 15 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கிலங்கையில் நடந்த சண்டையில் பலியானான். அப்போது பண்டாரவுக்கு 3 வயது. அதிலிருந்து இராணுவத்தின் மீதே அவளுக்கு வெறுப்பு. இப்பொழுது பண்டார வையும் இழக்க அவள் தயாரில்லை. ""பண்டார! சீக்கிரம் போய் ஒளிஞ்சுகொள். நான் கூப்பிடும்வரை வெளியே வராதே!' என்றாள். உடனே பண்டார, கொல்லைப் பக்கம் ஓடி ஈரப்பலா மரத்தின் மேலேறி மறைவாக அமர்ந்தான்.
வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு வயது வந்த ஆண்களைத் தேடி அதிகாரிகள் வந்தனர். புஞ்சிநோனா வின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவு திறந்தது.
"உங்கள் வீட்டில் ஒரு 18 வயதுப் பையன் இருக்கிறான் இல்லையா?'
"இல்லை....இல்லையே!'
புஞ்சிநோனா சொல்லிக்கொண்டி ருக்கும் போதே வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள், சுவரில் இருந்த பண்டாரவின் புகைப்படத்தைப் பார்த்தனர். "இவன் எங்கே?' என்றனர். "இவன்... இவன் வெளியூரில் தங்கிப் படிக்கிறான்' என்றாள். அதற்குள் வாசலில் கிடந்த ஆண்கள் அணியும் செருப்பை அதிகாரி பார்த்துவிட்டார்.
"நீங்கள் உங்கள் பிள்ளை - இருவர் மட்டும்தானே இங்கே இருக்கிறீர்கள்?'
"ஆமாம். இல்லை, அதான் அவன் வெளியூரில் இருக்கிறான் என்றேனே! நான் மட்டும்தான் இருக்கிறேன்'
"அப்படியானால் இந்தச் செருப்பு யாரு டையது?'
"அது... அதுவந்து...' என்று புஞ்சிநோனா இழுக்கும்போதே "வீடு முழுக்கத் தேடுங்கள்' என்று உத்தரவிட்டார், அதிகாரி.
ஈரப்பலா மரக்கிளையில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் பண்டார. அரை மணி ஆயிற்று. ஒரு மணி ஆயிற்று. யாரையும் காணோம். பசிவேறு வயிற்றைக் கிள்ளியது. பாதிச் சாப்பாட்டில் எழுந்து ஓடிவந்துவிட்டான். பக்கத்து மரக் கிளையில் ஒரு கொத்து நெல்லிக்காய் தொங்கியது. எச்சில் ஊற, சற்றே முன்நகர்ந் தான். மற்றொரு சிறுகிளையைப் பற்றிக் கொண்டு அந்த நெல்லிக் கொத்தைப் பறிக்க முயன்றான். "சரக்' என ஒரு சத்தம் கேட்டது. அடுத்த நொடி, ஒருகையில் கிளையும் மற்றொரு கையில் நெல்லிக் கொத்துமாக அவன் கீழே கிடந்தான்.
அப்போது பார்த்து அதிகாரிகள் வந்தனர். "வானத்திலிருந்து குதித்த தேவனே, வாரும்!' என அதிகாரி கிண்டலடித்தார். பண்டாரவுக்கு நல்ல முதுகு வலி. ஓடக்கூட முடியவில்லை. "பையன் முகத்தில் இராணுவ வீரனுக்கு உரிய கம்பீரம் தெரிகிறது இல்லையா?' என்று சக அதிகாரியிடம் வினவினார், அவர். சக அதிகாரியோ, இவனை யாரென்று நினைத்தீர்? மாவீரர் ரத்தினஸ்ரீ தொடங்கொடயின் மகனாக்கும். நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தவர் ஆயிற்றே அவர்'. என்றார்.
புஞ்சிநோனா, மகனைத் தூக்கினாள். உடுப்பில் ஒட்டியிருந்த தூசிகளைத் தட்டினாள். அவனைத் தன் முதுகுக்குப்பின் ஒளித்துக்கொண்டு "நாங்க செஞ்ச தியாகமெல்லாம் போதும். எனக்கு என் மகன் வேணும். அவனைத் தரமாட்டேன்' என்றாள்.
"உங்கள் மகனுக்கு மாதம் இருபத் தையாயிரம் ரூபாய் கொடுப்போம். அரசாங்க வீடு கொடுப்போம். உங்கள் குடுமபத்துக்கு மருத்துவ வசதி இலவசம். உங்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கும்.'
"உயிர் இருந்தால் தானே அனுபவிக்க முடியும். போருக்குப் போனால் என் மகன் இறப்பான். என் மகன் இறந்தால் நானும் இறப்பேன்.'
"நல்லதை நினையுங்கள் அம்மா... இப்படியே எல்லாரும் ஒதுங்கி ஒதுங்கிப் போனால் நாட்டை யார் காப்பாற்றுவது?'
"புத்தர் காப்பாற்றுவார்'
"ஒரு போர்வீரரின் மனைவியா நீங்கள்? உங்களை ஒரு சிங்களச்சி என்று சொல்லவே வெட்கமாய் இருக்கிறது!'
"நான் முதலில் ஒரு தாய். பிறகுதான் சிங்களச்சி'
"முரண்டு பிடிக்காதீங்க அம்மா. இது நெருக்கடி காலம். வயசுப் பிள்ளைகளும் உடம்பில் தெம்புள்ள அத்தனை ஆண்களும் போர்ப்பணிக்கு வந்தாக வேண்டும். அவங் கவங்களுக்கு ஏற்றதுபோல் வேலை கொடுப்போம். மறுக்காதீங்க. இது அரச ஆணை.'
புஞ்சிநோனா கையில் ஒரு காகிதத்தைத் திணித்துவிட்டுப் பண்டாரவின் கைப்பிடித்து இழுத்துப்போய் வாகனத்தில் ஏற்றினார்கள். பண்டார, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டும் விசும்பிக்கொண்டும் போனான். "குட்டிப் புத்தா' "குட்டிப் புத்தா' என அலறியபடி ஓடிவந்த புஞ்சிநோனா வழியிலேயே மயங்கி விழுந்தாள். வாகனம் புறப்பட்டது. அதனுள் சமந்தாவும் இருந்தான்.
பூட்ஸ் கால்களின் சீரான ஒலி "சர்ரக் சரக்' "சர்ரக் சரக்' எனக் கேட்டது. வழக்கம் போல அணிவகுப்பு முடிந்து சற்று நேரத்துக் கெல்லாம் காலை உணவு ஆயிற்று. கேணல் றெகான், அனைத்து வீரர்களையும் அழைத் தார்.
படையைப் பல பிரிவுகளாகக் கேணல் றெகான் ஏற்கெனவே பிரித்திருந்தார். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை நியமித்தார். பண்டாரவும் சமந்தாவும் 39ஆம் பட்டாலியனில் இருந்தனர். அப்பிரிவின் தலைவனாகச் சமந்தா தேர்வுபெற்றான். யார் யார் எந்தெந்தப் பகுதியை எப்போது தாக்கவேண்டும் என்று கேணல் உரை நிகழ்த்தினார்.
துப்பாக்கிகளையும் ஆயுதத் தளவாடங் களையும் சுமந்துகொண்டு படையணி நகரந்தது. பண்டாரவின் கைகளிலும் ஓர் எந்திரத் துப்பாக்கி மின்னியது. புத்தம் புதிய துப்பாக்கி. சீனாவிலிருந்து வந்திறங்கியதாகக் கேணல் சொன்னார்.
பண்டார அந்தத் துப்பாக்கியைப் பார்த்தான். பயிற்சியின்போது முதன் முதலாகத் துப்பாக்கியை இயக்கியது ஞாபகம் வந்தது. துப்பாக்கியை எப்படிப் பிடிப்பது ? குறிபார்ப்பது? விசையை இழுப்பது?... என எல்லாம் சொல்லிக் கொடுத்தனர். ஒரு நாள் தனியாய் இருக்கும் பொழுது, "இது எவ்வளவு கனம் இருக்கும்? ஒரு கையால் இதைத் தூக்க முடியுமா?' என்ற ஐயம் வந்தது. தூக்கித்தான் பார்போமே என்று தூக்கினான். கனம் தாங்காமல் கை தாழ்ந்தது. மீண்டும் தூக்கினான். மீண்டும் தாழ்ந்தது, சூரியனைப் பார்க்கக் கண் கூசியது. தலை குனிந்து மீண்டும் வேகமாகத் தூக்கினான். கை வழுக்கி, துப்பாக்கியின் விசையை அழுத்தி விட்டது. அடுத்த நொடி வான்நோக்கி ஒரு குண்டு பாய்ந்தது. அல்பாயுசுள்ள ஒரு புறா அங்கே பறந்து கொண்டிருந்தது. மறுகணம் அது கீழே விழுந்தது.
இக்காட்சியைத் தூரத்திலிருந்து வீரர் சிலர் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு கையில் துப்பாக்கி பிடித்து, கண்ணை மூடிக்கொண்டு, பறக்கும் புறாவைச் சுட்டு வீழ்த்திய பண்டாரவின் வீரம் சில மணிகளில் படை முழுக்கப் பரவியது. பண்டார, "இல்லை, இல்லை' என எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. "மாவீரன் பண்டார' என முழங்கிவிட்டுச் சென்றனர்.
படையணி நகரந்தது. இஸ்ரேலில் இருந்து வருவித்த அதிநவீன விமானங்கள் முன்னால் பறந்தன. தொலைதூரம் சென்று தாக்கக்கூடிய பீரங்கிகள் முன்வரிசையில் சென்றன. சிங்கள இராணுவ வீரர்களிடம் கேணல், அவ்வப்போது வீரம் கொப்பளிக்கப் பேசினார். அவர்களும் வேகமாக நடக்கத் தொடங்கினர்.
இலக்குகளை நெருங்கினார்கள். பீரங்கி எட்டும் தூரத்தில் நின்று குண்டு வீசத் தொடங்கினார்கள். குண்டு விழுந்த இடத்தில் எல்லாம் ஒரு பெருந்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. எதிரிகளும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இருபுறமும் அங்கங்கே வீரர்கள் செத்து விழுந்தனர். துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பதுங்கிப் பதுங்கி முன்னேறினர். இறுதியில் எதிரிகள் பின் வாங்கித் தலைமறைவாயினர். அன்றைய தினம் சிங்களப் படை 4 கி.மீ. பரப்பைக் கைப்பற்றியதாக இலங்கை வானொலி கூறியது. 60 எதிரிகளும் இராணுவத்தினர் 12 பேரும் மாண்டதாகச் செய்தியில் சொன்னார்கள். ""8 எதிரிகளும் 34 நம்மாட்களும் தானே செத்தது?'' என்று கேட்டான் பண்டார. ""கண்டுக்காதே!'' என்றான் சமந்தா.
அன்று இரவு. சிங்கள வீரர்கள் பலரும் ஒரு பெரிய முகாமில் அமர்ந்து பேசத் தொடங்கினர். அப்போது திடீரென்று காவலை மீறி ஒரு பையன் முகாமினுள் நுழைந்தான். இராணுவத்தினர் சுடும் முன்பு அவன்தன் அடிவயிற்றில் இருந்த பொத்தானை அமுக்கினான். அந்த முகாம் தூள்தூளாகச் சிதிறியது.
நூற்றுக்கும் மேலான இராணுவ வீரர்கள் இறந்து விட்டதாகவும் நிறைய வெடிபொருட்கள் அழிந்தன என்றும் தெரிந்தது.
அரச மரத்தடியில் இருந்து பண்டார ஓடிவந்தான். முகாம் இருந்த இடத்தைப் பார்த்தான். இரத்தமும் சதையும் நாலாபுறமும் சிதறிக் கிடந்தன. கண்ணில் நீர்வழிய ஒவ்வொரு சடலச் சிதறலையும் பார்த்தபடி நடந்தான். தேடித் தேடிக் கடைசியில் சமந்தாவைக் கண்டான். ஒரு காலும் கையும் தூக்கி வீசப்பட்டிருந்தன. முகம்பாதி சிதைந்திருந்தது. பண்டார மயங்கி விழுந்தான்.
சவப்பெட்டிகளில் சடலங்களை வைத்து மூடினார்கள். அவற்றை அவரவர் ஊருக்கு அனுப்பினார்கள். திக்பிரமை பிடித்ததுபோல் பண்டார, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். கேணலிட மிருந்து அழைப்பு வந்தது. அடுத்த நாள் போருக்கு 39 ஆம் பட்டாலியன் தலைவராகப் பண்டாரவைக் கேணல் தேர்ந்தெடுத்திருந்தார். ""நீ திறமையுடையவன். பொறுப்புணர்ந்து செயல்படு. உன் நண்பன் சமந்தாவையும் நம் வீரர்கள் பலரையும் கொன்றிருக்கிறார்கள். பழிக்குப் பழி வாங்கப் போ. சிங்களன் மானமுள்ளவன் என்று நிரூபி. போ போர் முனைக்கு'' என்றார். பண்டார மறுத்தான். ""போயே தீரவேண்டும்'' என்றார் கேணல்.
அடுத்த நாள் விடிகாலை, படையணி நகர்ந்தது. பண்டாரவின் 39 ஆம் பட்டாலியன் முன்னே சென்றது. ""வானில் பறந்த புறாவைக் கண்ணை மூடிக்கொண்டு சுட்டு வீழ்த்திய மாவீரன்'' எனப் படைவீரர்கள் பேசிக்கொண்டனர். பெரும் பாலான வீரர்கள் புதிதாகச் சேர்ந்தவர்கள். அவர்கள் பண்டாரவைக் கண்டு வியந்தனர்.
திடீரெனப் படையணியின் முன் ஒரு குண்டு வந்து விழுந்தது. எங்கிருந்து வந்தது என்று கணிக்காமல் பண்டார நாலாபுறமும் சுட்டான். அவனுக்கு வலதுபுறம் வந்த வீரர்கள் ஒரு கண்ணி வெடியை மிதித்துவிட அடுத்தநொடி தூக்கி எறியப்பெற்றனர். அடுத்து ஒரு துப்பாக்கிக் குண்டு அவன் காதை உரசிச் சென்றது.
பண்டாரவின் கண்ணெதிரே சமந்தா வின் சிதைந்த உடல் தெரிந்தது. அவன் தந்தை ரத்தினஸ்ரீ தொடங்கொடயின் சவப்பெட்டி தோன்றியது. அவன் கண்முன்னே ஒரு சிதை தகதகவென எரிந்தது. "மகனே குட்டிப் புத்தா' என்ற புஞ்சிநோனாவின் கதறல் கேட்டது.
தலைமயிரை உரசியபடி ஒரு குண்டு பாய்ந்தது. அவ்வளவுதான். பண்டார திரும்பினான். ஒரே ஓட்டம். அச்சம் உச்சந்தலையைப் பிடித்து ஆட்டியது. ""ஓ'' எனக் கத்திக்கொண்டே ஓடினான். தலை தெறிக்க ஓடினான். ""புத்தரே! புத்தரே'' என அரற்றியபடி ஓடினான்.
""ஐயோ! பண்டார ஓடுகிறானே! மாவீரன் பண்டார ஓடுகிறானே!'' என்று மற்ற வீரர்களும் ஓடத் தொடங்கினர். துப்பாக்கிக் குண்டுகள் துரத்தத் துரத்த நாலாபுறமும் ஓடினர். சிறிது நேரத்தில் மொத்தப் படையும் சிதறியது. அந்த மண்ணில் அலங்கோலமாகப் பதிந்திருந்த காலடிச் சுவடுகளின் மீது பீரங்கியின் நீண்ட சக்கரங்கள் உருளத் தொடங்கின.

Tuesday, August 31, 2004

புதுப் புதுப் போராட்டங்கள்

சென்னையில் தயாராகி, அமெரிக்காவில் வெளியாவது, தி தமிழ் டைம்ஸ் என்ற மாத இதழ். கவிஞர் ஜெயபாஸ்கரன், இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் என்னிடம் கவிதை கொடுங்கள் என்றுதான் கேட்டார் (இவருக்காவது நான் கவிஞன் என்பது நினைவில் உள்ளதே!). அண்மையில் நடைபெற்ற விநோத போராட்டங்கள் என் மனத்தைக் கவர்ந்ததால் 'இதைப் பற்றி எழுதட்டுமா?' எனக் கேட்டேன். 'அமெரிக்க மக்களுக்கு இங்கு நடப்பவற்றைத் தெரிவிக்க, இது நல்ல வாய்ப்பு. இந்தக் கட்டுரையையே கொடுங்கள்' என்றார். அது, இதோ:

போராட்டங்களால் உலகமே ஆட்டம் காணும் காலம், இது. கருப்பையினுள் நுழையும்இலட்சக்கணக்கான உயிரணுக்களுள் ஓர் அணுதான் கருவுறுகிறது. அதற்கே அந்தஅணு, ஒரு போராட்டம் நடத்தவேண்டி இருக்கிறது. வெளியே வந்த பிறகும் குழந்தை,தன் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது. தான் கேட்டது கிடைக்கும் வரை அது, கையை அசைத்து - காலை உதைத்து- படுத்துப் புரண்டு- வீரிட்டு அலறிப் பிடிவாதம் பிடிக்கிறது. தன் நோக்கம் நிறைவேறும் வரை யாரோடும் பேசாமல், எதையும் சாப்பிடாமல் - குடிக்காமல் சண்டித்தனம் செய்கிறது. கடைசியில் வேறு வழியில்லை என்று பெரியவர்கள்தாம் இறங்கி வரவேண்டி இருக்கிறது. இப்படி,குழந்தையின் குருதியிலேயே போராட்ட உணர்வு கலந்திருப்பதால் வளர்ந்த பிறகு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே மனிதன் போராடத் தொடங்குகிறான்.

இப்படி எல்லோரும் போராடும் போது போராட்டம் என்பதே சாதாரணமான ஒன்றாய்ஆகிவிட்டது. 'எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்' என்பது போல் ஒப்புக்கு நடக்கும் போராட்டங்கள் நாம் அறியாதவையா என்ன? தொடங்கும் இடத்தில்500 பேரும் முடியும் இடத்தில் 50 பேருமாகப் பேரணி நடப்பதால்தானே இடையில்கழன்றுவிடுவோரைத் தடுக்க, கண்காணிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்? 50 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் எனப் பேசி, ஆள் பிடித்து நடக்கும் பிரமாண்டப் பேரணிகளும்பொதுக்கூட்டங்களும் இந்த மண்ணுக்கு என்ன புதிதா? இவ்வாறு இல்லாமல் உண்மையாகநடந்தால் 36 அமைப்புகள் ஒருங்கிணைந்த குடையமைப்பில் 36 பேர்தானே இருப்பார்கள்?


ஆள் திரட்டி, படை பலம் காட்ட முடியாதவர்கள், வெவ்வேறு புதிய உத்திகளில்போராட்டங்களை அறிவிக்கிறார்கள். மற்றவர்களின் கவனத்தை உடனே திருப்புவது எப்படி என்பதே இந்தப் புதிய போராட்டக்காரர்களின் நோக்கம். ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு விதமான கோரிக்கைகள். ஒவ்வொரு கோரிக்கைக்கும் வெவ்வேறு வகையானபோராட்டங்கள்.


கழுதையிடம் மனு

ஆகஸ்டு 12ஆம் தேதி, புதுவையில் கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. புதுவை சாரத்தில் உள்ள நில அளவைப் பதிவேடுகள் துறை அலுவலகம் முன் இது நடந்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர். விஸ்வநாதன், பட்டா வழங்கக் கோரி, கழுதையிடம் மனு அளித்தார். அதிகாரியிடம் மனு அளித்தும் பயன் இல்லை; அவர் காகிதத்தைத் தின்று விடுகிறார் என்பதைக் குறிப்பாக உணர்த்தியுள்ளார்கள்.


மதுக் கடைக்குப் பூட்டு

அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய புதிய போராட்டங்களை அறிவிப்பதில் முன்னணியில் உள்ளது. மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, பிரசாரம் செய்யும் அக்கட்சி, மதுக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை ஆகஸ்டு 23ஆம் தேதி நடத்தியுள்ளனர். பா.ம.க. மகளிர் அணியினர், கிராமப்புறத்தில் உள்ள மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடுவதான இப்போராட்டம் சாதுரியமானது. பெண்கள் தொடர்புடைய அனைத்தும் உணர்வெழுச்சியை(சென்டிமெண்ட்)த் தூண்டக் கூடியவை.


மணி அடிக்கும் போராட்டம்

தமிழக அரசு, மக்கள் நலனைக் கவனிக்காமல் தூங்குகிறது; அதை எழுப்புவதற்காக என்று சொல்லி மணி அடிக்கும் போராட்டத்தைக் கடந்த மாதம் பா.ம.க. நடத்தியது. சென்னையில் தூய ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் அக்கட்சியினர் சிலர் மணி அடித்தனர்.


அஞ்சல் அட்டைப் போராட்டம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்டு 11 ஆம் தேதி, அஞ்சல் அட்டைப் போராட்டம் நடத்தினர். தங்களிடமிருந்து தவணை முறையில் பெற்ற தொகையை நிலம் வாங்கப் பயன்படுத்திய கூட்டுறவு சங்கத்தைக் கண்டித்தும் தங்கள் தொகையைப் பாதுகாக்க வேண்டியும் அஞ்சல் அட்டைகளை நிர்வாகிக்கு அனைத்து ஊழியர்களும் அனுப்பிவைத்தனர். சாதாரண அஞ்சல் அட்டை என்று எண்ணவேண்டாம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை நிரூபிப்பதோடு போராட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் ஈடுபடச் செய்வதற்கு, இப்போராட்டம் உதவியுள்ளது.


சைக்கிள் பேரணி

விழுப்புரத்தில் காவல் துறை தடை உத்தரவு 30(2) நடைமுறையில் உள்ளதால் அங்கு பேரணிகள் நடத்தக் காவல் துறை அனுமதிக்கவில்லை. அதை மீறி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட தி.மு.க.வினர் 300 பேர், ஆகஸ்டு 10 அன்று சைக்கிள் பேரணி சென்றனர். தடையை மீறிச் சென்றதால் போக்குவரத்திற்குப் பெரும் இடையூறு ஏற்பட்டதாக 300 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மிதிவண்டியில் செல்வது, சாதாரணமானது என்றாலும் ஒரு நோக்கம் கருதிச் செல்வதும் கூட்டமாகச் செல்வதும் போராட்ட மதிப்பைப் பெறுகின்றன. இன்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, ஊழலை ஒழிக்க என ஏதேனும் காரணம் சொல்லி, நெடுந்தூர மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளும் பலரை நம்மால் பார்க்க முடியும்.


தீக்குளிக்க முயற்சி

கோவை ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆகஸ்டு 9ஆம் தேதி, காணாமல் போன தம் கணவரை மீட்டுத் தரக் கோரி, விஜயலெட்சுமி என்பவர் தீக்குளிக்க முயன்றார். அன்றைய நாள், அங்கு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த இவர், பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் புட்டியை எடுத்து, உடலில் ஊற்றினார். மற்றவர்கள் பதற்றத்தோடு பார்க்கும் போதே தீப்பெட்டியை எடுத்து, குச்சியைக் கிழிக்கப் போனார். அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அதைத் தட்டிவிட்டனர். அவரின் மனுவைப் பெற்ற காவல் துறையினர், தற்கொலை முயற்சிக்காக விஜயலெட்சுமியைக் கைது செய்தனர். இது, தெளிவாக மற்றவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் ஒரு உத்தி தான். கைதான தலைவரை விடுவிக்க வேண்டும், தலைவர் மரணம் எனப் பல நேரங்களில் தீக்குளிப்பது, தமிழ்நாட்டில் சாதாரண ஒன்று. பிறகு, தீக்குளித்த தொண்டருக்கு உதவித் தொகை வழங்கும் அடுத்த காட்சியும் அரங்கேறும்.


உள்ளிருப்புப் போராட்டம்

கல்வி, வணிக மயமாவதைத் தடுக்கக் கோரி, அனைத்துக் கல்லூரி மாணவர்கள், பள்ளிக் கல்வி இயக்ககம் முன் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். சாதாரணமாகக் கூடி நின்று குரலெழுப்பும் போராட்டம் தான் அது. அப்போது காவல் துறையினர், மாணவர்கள் சிலரைத் தாக்கினர். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் பற்பல கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஆகஸ்டு 13ஆம் தேதி, இராணி மேரி மகளிர் கல்லூரி மாணவியர்கள், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அரசையும் காவல் துறையையும் கண்டித்து, தங்கள் வளாகத்திற்கு உள்ளேயே உட்கார்ந்து, உரக்கக் குரல் எழுப்பினர். பெண்கள், பொதுவாக இத்தகைய போராட்டங்களையே தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பானது.


நிர்வாணப் போராட்டம்

ஆனால், உக்கிரமமான சூழ்நிலையில் பெண்கள், புலியென மாறி விடுவார்கள் என்பதற்கு மணிப்பூர் பெண்களே சான்று. ஜூலை 10ஆம் தேதி இரவு மணிப்பூரில் மனோரமாதேவி என்ற 32 வயதுப் பெண், இந்திய இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, கொல்லப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இரவு நேரத்தில் வந்து இக்கொடூர செயலைச் செய்ததற்கு, இராணுவம் சொன்ன காரணம், மனோரமா, தீவிரவாத இயக்கம் ஒன்றின் கமாண்டோ என்பதே. இராணுவத்திற்குக் கேள்வி முறை இல்லாமல் அதிகாரம் வழங்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் எனப் பெண்கள் அமைப்பினர் உள்பட, மணிப்பூர் மாநிலம் முழுதும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, பெண்கள், ஜூலை 15 அன்று , நிர்வாணப் போராட்டம் நடத்தினர். உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் அசாம் ரைபிள்ஸ் அலுவலகம் முன்பு, பத்திற்கும் மேலான பெண்கள், கூக்குரல் எழுப்பினர். ' இந்திய இராணுவமே, எங்கள் சதைகளை எடுத்துக்கொள்; மனோரமாக்களை விட்டுவிடு ' , ' இந்திய இராணுவமே, எங்களைக் கற்பழி ' என்றெல்லாம் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தமக்கு முன்பாகப் பிடித்திருந்தனர்.


கூண்டோடு விடுப்பு

மணிப்பூரில் நிர்வாணப் போராட்டம் தவிர, ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர் அனைவரும் கூண்டோடு விடுப்பு எடுத்துள்ளனர். வெகு சிலரைத் தவிர, பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் அரசு எந்திரம் முழுதும் ஸ்தம்பித்துவிட்டது.


தீப்பந்த ஊர்வலம்

மக்களின் தீவிரப் போராட்டத்தால் இம்பால் நகராட்சிப் பகுதியில் மட்டும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதாக அரசு அறிவித்தது. இதனால் நிறைவடையாத மக்கள், மணிப்பூர் மாநிலம் முழுதிலிருந்தும் இச்சட்டத்தை நீக்க வலியுறுத்தி, ஆகஸ்டு 12ஆம் தேதி இரவு, தீப்பந்த ஊர்வலம் நடத்தினர்.


மனிதச் சங்கிலி

ஆகஸ்டு 15ஆம் தேதி அன்று, மனோரமா நிகழ்வையொட்டி 32 அமைப்புகள் இணைந்து , மாநிலம் முழுதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தின.

ஆபாச விளம்பரங்களைக் கண்டித்து, சென்னை புரசைவாக்கத்தில் மாணவ- மாணவியரின் மனிதச் சங்கிலிப் போராட்டம், ஆகஸ்டு 10ஆம் தேதி நடந்தது. இதில் புரசை எம்.சி.டி. முத்தையா செட்டியார் ஆண்கள் , பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவியர் பங்கேற்றனர். வேறு சில அமைப்பினரும் இதில் கலந்துகொண்டனர். ஒருவரோடு ஒருவர் கைகொடுத்து, இதை எதிர்க்கிறோம் எனக் குறிப்பாக உணர்த்துவதற்கு மனிதச் சங்கிலி உதவும். ஆட்கள் குறைவாக இருந்தாலும் அதிகமானோர் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவதற்கு இது, சிறந்த உத்தி.


கூண்டுக்குள் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

இப்படி, பெரிய பெரிய கோரிக்கைகளுக்காகத்தான் போராட்டம் நடக்க வேண்டுமா, என்ன! தென்கொரியாவில் நாய்க்கறி தின்பதற்கு எதிராகக் கடந்த மாதம், சோங்னாம் நகரில் ஒரு பேரணி நடந்தது. அதில் நாய்களை அடைத்து வைக்கும் கூண்டு ஒன்றிற்குள் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் அமர்ந்துகொண்டார். நாய் போன்ற முகமூடி ஒன்றையும் அணிந்துகொண்டார். நாய்களையும் இப்படித்தான் அடைத்து வைக்கிறீர்கள் என்பதை அவர் குறிப்பாக உணர்த்தினார்.


சிறை நிரப்பும் போராட்டம்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரனை விடுதலை செய்யக் கோரி, அக்கட்சித் தொண்டர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் தலைநகர் இராஞ்சியில் ஆகஸ்டு 7 ஆம் தேதி, இது நடந்தது. கட்சிக் கொடிகள், பதாகைகள், கட்சியின் சின்னமான வில்- அம்பு ஆகியவற்றோடு தொண்டர்கள் கைதாயினர். இத்தகைய போராட்டம், தமிழ்நாட்டில் பல முறைகள் நடந்துள்ளன.


நடைப் பயணம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, நெல்லை முதல் சென்னை வரை 42 நாளில் 1,025 கி.மீ. தூரம் நடந்து வருகிறார். ஆகஸ்டு 5ஆம் தேதி நெல்லையில் தொடங்கிய இது, செப். 15 அன்று சென்னையில் முடிகிறது. நதிநீர் இணைப்பு, காவிரிச் சிக்கலில் தமிழக நலனைப் பாதுகாத்தல், பொது வாழ்வில் சீர்கேடு நீக்குதல், சாதி- மத உணர்வுகளைத் தடுத்தல், வன்முறை மனப்பாங்கை இளைஞர்கள் கைவிடுதல் ஆகியவற்றோடு அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நடைப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். ஏராளமான நடைப்பயணங்கள் , தமிழகத்திலும் வெளியிலும் நடைபெற்றுள்ளன. ஒரு புதிய தொடக்கத்திற்கு அடையாளமாக, குத்துவிளக்கு ஏற்றுவோர், பலர். வைகோ, தாம் புறப்படும் முன் வேப்பமரக் கன்றை நட்டார்.


உடல் முழுதும் நாமம்

சரிவர ஊதியம் கொடுக்கவில்லை, நீதி கிடைக்கவில்லை என்போர், உடல் முழுதும் நாமம் போட்டுக்கொண்டு தெருவில் ஊர்வலம் வந்துள்ளனர். ஏமாற்றிவிட்டார் என்பதை நெற்றியில் நாமம் போட்டுவிட்டார் எனச் சொல்வோம். அதனைச் சிலர், நடைமுறையில் காட்டியுள்ளனர்.


வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம்

பேச்சுச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு உள்ளது, கருத்துரிமை மறுக்கப்படுகிறது என்போர், வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம் நடத்துவதுண்டு. பொதுவாக, எதிர்ப்புக் காட்ட, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடக்கும். இன்னும் சிலர், சட்டையில் கருப்புக் கொடியைக் குத்திக்கொண்டு பணியாற்றுவதுண்டு.


தற்கொலை மிரட்டல்

தன் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, உயர்ந்த கட்டடம், மரம், தொலைபேசி அலைக் கோபுரம்..போன்றவற்றில் ஏறி நின்று, குதித்துவிடப் போவதாக மிரட்டுவது. பொதுவாக, இவர்கள் கொஞ்ச நேரம் அலைக்கழித்து விட்டுக் கீழே இறங்கிவிடுவர். முன்னேறிய நாடுகளில், இவர்கள் மிரட்டத் தொடங்கிய உடனேயே சுற்றிலும் வலையை விரித்து விடுவார்கள். இந்தியாவில் ஏறியோர், தாமாக இறங்கினால்தான் உண்டு.


தண்டவாளத்தில் தலை

டால்மியாபுரத்திற்குக் கல்லக்குடி எனப் பெயர் மாற்ற வேண்டும் எனக் கோரி, தி.மு.க.வினர், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழு குழுவாகச் சென்று தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தனர். மு.கருணநிதி, இந்தப் போராட்டத்தின் மூலம் முக்கிய தலைவர்களுள் ஒருவராகிவிட்டார்.


பலகையைத் தார் பூசி அழி

1967 இந்தி எதிர்ப்புக் காலக்கட்டத்தில் இந்தி எழுத்துகள் அடங்கிய பெயர்ப் பலகைகளைத் தார் பூசி அழித்தனர். இத்தகைய போராட்டத்தை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பா.ம.க.வினர் மீண்டும் நடத்தினர். சுவரொட்டிகளின் மீது சாணி அடித்ததன் தொடர்ச்சியே இது.
விதவிதமான கோரிக்கைகளுக்காக, விதவிதமான போராட்டங்கள் நடப்பது, உலகெங்கும் வழக்கம்தான். இந்தப் போராட்டங்களைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: அரசு அல்லது சமூகம், செய்யச் சொல்வதைச் செய்யாதிருப்பது; செய்யக் கூடாதென்பதைச் செய்வது. முன்னதற்கு, வேலை நிறுத்தம், வரிசெலுத்தாமை, வாக்களிக்காமை , கடையடைப்பு, ஒத்துழையாமை போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள். பின்னதற்கு, சட்ட நகல் எரிப்பு, நிர்வாண ஓட்டம், கொலை, கொள்ளை, ரெயில் கவிழ்ப்பு...போன்றவை சான்றுகளாகும்.
எதற்காகப் போராடுகிறோம் என்பதை விட, எப்படிப் போராடுகிறோம் என்பதே முக்கியம். இதையே இத்தகைய விநோத போராட்டங்கள், அடிக்கோடு போட்டு அறிவிக்கின்றன.

Monday, June 07, 2004

வீர தீரச் சிறுவர்கள் - 7 மாமனிதரே ரியாஸ்(9)!

தகவல் தொடர்பின் பிரமாண்டமான வளர்ச்சியால் உலகம் ஒரு சிற்றூராகச் சுருங்கிவிட்டது . உலகம் மட்டுமன்று ; மனித மனங்களும் மிகவும் சுருங்கிவிட்டன. அடுத்தவர்களுக்கு உதவுவது, அதுவும் பிரதிபலன் பார்க்காமல் உதவுவது, மிக அரிதாகிவிட்டது. நம்மிடம் இருக்கும் மிகச் சாதாரண பொருட்களைத் தருவதற்கே நாம் எவ்வளவு யோசிக்கிறோம்! நம்மிடம் உதவி நாடி வந்தவரிடம், விளக்கு வைத்த பிறகு கொடுக்கக்கூடாது, செவ்வாய் - வெள்ளிக் கிழமைகளில் தரக்கூடாது , ராகு காலம் - எமகண்டத்தில் முடியாது ......எனப் பெரியவர்கள் சொல்லியிருப்பதாக மரபு மூட்டையை அவிழ்த்துக் கடை விரிக்கிறோம். நமது சாலையோரம் நீளும் எண்ணற்ற கரங்களை நெற்றிக்கண் திறந்து சிடுசிடுப்போடு புறந்தள்ளுகிறோம். தெரு முனையில் வரும் ' அம்மா தாயே ' என்ற அழைப்பு, நம் வீட்டை எட்டும் முன் நம் கதவுகளையும் ஜன்னல்களையும் அவசரமாக மூடுகிறோம். பாதையெங்கிலும் அடிக்கடி நடக்கும் விபத்துகளை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கலாமே தவிர, அதில் மூக்கை நுழைத்து , ஆபத்தை விலைக்கு வாங்கலாமோ!

நமது சமூகத்தின் சிந்தனை இப்படியாய் இருக்க, வலியப் போய் உதவும் மனிதர்களை, அழிந்துவரும் உயிரினங்களுள் சேர்க்கவேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் தமக்குப் பொருளிழப்பு ஏற்பட்டாலும் உதவுவோர், இன்னும் ஒரு படி மேல். இவர்களுள்ளும் தம் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் உதவுவோர், நமது வணக்கத்திற்கு உரியவர்கள். அவர்களால்தான் இன்னும் இந்தப் பூமியில் மழை பெய்கிறது. அந்த மிக அரிய மனிதர்களுள் ஒருவர், ரியாஸ் அகமது.

ஒன்பது வயதே நிறைந்த ரியாசை நாம் ' அவர் ' என அழைப்பதே பொருந்தும். ஏன்? அந்த வீர நிகழ்வைக் கொஞ்சம் சிந்திப்போம்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள். உத்திரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி ஒருவரின் மகன் ரியாஸ், தம் நண்பர்களுடன் ரெயில் தண்டவாளங்களின் மீது நடந்துவந்துகொண்டிருந்தார். நிம்பூ பூங்காவிலிருந்து அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்புவதற்கு அதுதான் அவர்களின் வழக்கமான சுருக்கு வழி. தாலிபாக் பாலத்திற்கு அருகில் வந்தபோது அவர்கள் எதிரே இருவர் வருவதைப் பார்த்தனர். ஒருவர் , நன்கு வளர்ந்த மனிதர்; மற்றொருத்தி, ஒரு குட்டிப் பெண். அவர்களும் வேறொரு தண்டவாளத்தின் மீது நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னே கொச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் , விரைந்து வந்தது. அதன் பிறகு நடந்ததை ரியாசே விளக்குகிறார்.

" அவர்கள் அபாயத்தில் இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். ரெயில் வருவதைப் பார்த்ததும் நாங்கள் அவர்களை எச்சரிக்கும் விதமாகக் கூச்சல் போட்டோம். ஆனால், அவர்கள் எங்களைக் கவனிக்கவில்லை. அந்தப் பெண் , என்னைவிடச் சிறியவளாய் இருந்தாள். அவள் இறந்துவிடக் கூடாது என நினைத்தேன். நான், அவர்களை நோக்கி வெகு வேகமாக ஓடினேன். அப்போது ரெயில், அவர்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. நான் அவர்களை நெருங்கி, அந்தச் சிறுமியை என் பக்கமாக இழுத்தேன். ஆனால், என் கால்கள், தண்டவாளங்களுக்கிடையே சிக்கிக்கொண்டன. ரெயில், எங்கள் மீது பயங்கரமாக மோதியது. நாங்கள் கீழே விழுந்தோம். ரெயில், எங்கள் மீது ஏறி, அரைத்துக்கொண்டு ஓடியது. நாங்கள் மூவரும் தண்டவாளத்தில் வெவ்வேறு இடங்களில் வீசி எறியப்பட்டோம். என்னால் அந்தச் சிறுமியைப் பார்க்க முடியவில்லை. அந்த மனிதர், சற்று தொலைவில் விழுந்து கிடந்தார். அவர் கால்களிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. என் உடலிலிருந்தும் மிக அதிகமாக ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. சிறிது தொலைவு சென்ற பிறகு, ரெயில் நின்றது. மிகப் பெரிய கூட்டம், எங்களைச் சூழ்ந்து நின்றது. ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. அவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒருவர் என்னைத் தூக்கினார். ஒரு போலிஸ்காரரும் உதவிக்கு வந்தார். நாங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோம். "

அங்கு ரியாசின் இரண்டு கைகளும் ஒரு காலும் நீக்கப்பட்டன. ரெயிலில் அடிபட்ட அந்தப் பெரியவர், சபீர் அலி, தன் இரண்டு கால்களையும் இழந்தார். அவருடைய மகள் , ஷாசியா, ஆறு வயது சித்திரச் சிறுமி, மரணமடைந்தாள். இன்று ரியாஸ் , எல்லோரும் பரிதாபப்படும் ஒரு நிலையில் இருக்கிறார். தம் ஒவ்வோர் அசைவிற்கும் அடுத்தவரின் உதவியை நாடும் துயர் மிகுந்த கட்டத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவர் முகத்தில் ஒரு புன்னகை மிளிர்கிறது. ரியாஸ், சிறப்பாக உருது பேசக்கூடியவர். எதைப் பற்றியும் உற்சாகமாக உரையாட அவர் தயாராயிருக்கிறார், அவருடைய உடல் ஊனத்தைத் தவிர. ரியாசிற்குச் சகோதர சகோதரிகள், எட்டுப் பேர் இருக்கிறார்கள். ரியாஸ், பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஏனெனில், உருது பேசத் தெரிந்தாலும் அவருக்கு எழுதத் தெரியாது. தனிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்று, எதிர்காலத்தில் ஒரு மருத்துவர் ஆவேன் என்கிறார், ரியாஸ். தன் நிலைக்காக, ஒருபோதும் வருந்தவில்லை என்கிற ரியாசுக்கு உத்தரபிரதேச அரசு, விருது வழங்கிப் பாராட்டியது. மத்திய அரசு, ரியாசுக்கு சஞ்சய் சோப்ரா விருது வழங்கிக் கௌரவித்தது.

ஆனால், ரியாஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?
" அந்தச் சிறுமியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவள் மட்டும் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் நான் மிக மிக மகிழ்ந்திருப்பேன். "

ஆஹா ரியாஸ், மாமனிதரே, உமக்கு எமது தலைவணக்கம். உலக மானுடர்களே, இதோ இந்த ஒன்பது வயது வீரப் பிறவியைத் திரும்பிப் பாருங்கள். தம் இரு கைகளையும் ஒரு காலையும் இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத இந்த அக்கினிக் குஞ்சுக்கு உம் வீர வணக்கத்தைச் செலுத்துங்கள்.

இந்தத் தருணத்தில் நாம் சிலவற்றைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சுருக்கு வழி, சோம்பல், அலட்சியம், அவசரம்....எனப் பற்பல காரணங்களைக் கூறி, நாம் தண்டவாளங்களில் நடப்பது, மரணத்திற்கு வரவேற்புப் பத்திரம் வாசிப்பது போன்றது. முழு மரணம் நிகழாமல், உடல் ஊனம் மட்டும் நிகழ்ந்துவிட்டால் அது இன்னும் மோசமானது. தண்டவாளத்தில் நடப்பது மட்டுமில்லை; மூடப்பட்ட ரெயில்வே கேட்டுகளின் இடுக்குகள் வழியாக நுழைந்து செல்வது, நின்றுகொண்டிருக்கும் ரெயில்களின் சக்கரங்களுக்கிடையே புகுந்து செல்வது, ஓடும் ரெயிலில் ஏறுவது, இறங்குவது, படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பது, ரெயில் கூரைகளில் பயணிப்பது, ஓடும் ரெயிலிலிருந்து கைகளையும் தலையையும் வெளியே நீட்டுவது....என எண்ணற்ற முறைகேடுகள் நாளும் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தையும் நிறுத்தி, முறையான வழிகளைக் கடைபிடிக்க வேண்டியது, இன்றியமையாதது.

ரியாஸ் கூட, ரெயில் பாதை வழியாக வந்திருக்கக் கூடாது. ஆனால், அவர் வந்திருக்காவிட்டால் சபீர் அலியைக்கூட காப்பாற்றியிருக்க முடியாது. இந்த நிகழ்வு, ஓர் எதிர்மறை எடுத்துக்காட்டாக நம் எண்ணங்களில் நிற்கவேண்டும். ஒரு நொடியில் உயிரையும் உறுப்புகளையும் சிதைத்த அந்த நிகழ்வு, இனி நிகழாதிருக்க உறுதி பூணுவோம். ரெயில், ஒரு யோகியைப் போல, தனக்கான நேர்ப்பாதையில் தீர்க்கமாகப் பயணிக்கிறது. அதன் பாதையில் நாம் குறுக்கிடலாமா? அதன் தவத்தைக் கலைக்கலாமா? மனிதன் தடம் மாறலாமா? தண்டவாளத்திலிருந்து சற்றே அன்று; நிறையவே விலகியிரும் பிள்ளாய்!

Sunday, June 06, 2004

வீர தீரச் சிறுவர்கள் - 6

காலிழந்தும் உயிர்காத்தாள்

வாழ்க்கை, எத்தனையோ அபாயங்கள் நிறைந்தது. தன்னளவில் அது மிக எளிதாக இருந்தாலும் மனிதர்கள் அதை மிகவும் சிக்கலானதாக்கி விடுகிறார்கள். "மண்ணெண்ணெய் குடித்த 10 மாதக் குழந்தை சாவு" என்ற தலைப்பில் 6-7-04 அன்று தினத்தந்தியில் ஒரு செய்தி வெளியானது. திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் வசிக்கும் தங்கமணி என்பவரின் 10 மாதக் குழந்தை, அடுப்படியில் தரையில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து, பால் பாட்டில் என்று நினைத்துக் குடித்துவிட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் பயனின்றி, குழந்தை இறந்துவிட்டது. இது, யாருடைய குற்றம்? குழந்தை இருக்கும் இடத்தில் நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதைப் பலரும் உணருவதேயில்லை.

குழந்தைக்கு எட்டும் உயரத்தில் கத்தி, பிளேடு, கத்திரிக்கோல், கண்ணாடிப் பொருள்கள், பினாயில், மருந்துகள், கூர்மையான பொருள்கள், நச்சுத்தன்மை வாய்ந்தவை........ எனப் பலவற்றையும் வைக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, குழந்தைகளை எந்நேரமும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். குழந்தைக்குப் பக்கத்தில் பூச்சி பொட்டுகள் வரலாம். கல்லும் முள்ளும் கிடக்கலாம். குழந்தை, அறைக்கு வெளியே சென்றுவிட்டாலோ அதற்கு இன்னும் ஆபத்துகள் அதிகம். தெருவோரங்களில் விளையாடும் குழந்தைகளை அதிக விழிப்போடு கவனிக்கவேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே குழந்தைகள் சென்றுவிடவும் கூடும். வாகனங்கள் தம் கட்டுப்பாட்டினை இழந்து குழந்தையின் மீது மோதிவிடவும் கூடும். என்னதான் நடக்காது இந்த உலகிலே. பெரியவர்களே சமாளிக்க முடியாத இத்தகைய தருணத்தில் ஒரு சின்னக் குழந்தை என்ன செய்துவிட முடியும்?

இப்படித்தான் ஒரு சம்பவம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள குட்டிச்சால் என்ற கிராமத்தில் நடந்தது. அங்குள்ள மஹீன்-ரம்லா தம்பதியரின் இளைய மகள் , ராம்சீனா. பருத்திப்பள்ளி அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறாள். 2003-ஆம்
ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி. வீட்டின் முன் உள்ள தோட்டத்தில் ராம்சீனாவும் மற்ற குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை நோக்கிப் படுவேகமாக ஒரு கார் வந்தது. அந்தக் காரில் பிரேக்குகள் வேலை செய்யவில்லை. காரின் ஓட்டுநர், எவ்வளவோ முயன்றும் காரை நிறுத்த முடியவில்லை. அவரின் கட்டுப்பாட்டில் கார் இல்லை. விளையாடிக்கொண்டிருந்த அனைவரும் தப்பிக்க ஓடினார்கள். கார், வீட்டின் மதில் சுவர் மீது மோத வந்தது. அதைத் தவிர்க்க ஓட்டுநர், காரை மிக வேகமாகத் திருப்பினார். ராம்சீனாவின் அக்கா மகளான மூன்று வயது ரிசானா, அந்த வழியில் நின்றுகொண்டிருந்தாள். ரிசானாவிற்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.

இப்போது ராம்சீனா, ஓர் அற்புதமான வேலை செய்தாள். அவள், ரிசானாவை நோக்கி ஓடினாள். அதற்குள் அந்தக் கார், ரிசானாவை ஏறக்குறைய நெருங்கிவிட்டது. ராம்சீனா, ரிசானாவைத் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டாள். அவள் அப்படிச் செய்யாவிடில் அந்தக் கார், ரிசானா மீது நிச்சயமாக ஏறியிருக்கும். இந்தக் களேபரத்தில் ராம்சீனா கீழே விழுந்தாள். அவள் கால்களின் மீது கார் ஏறிவிட்டது. கால்களிலிருந்து குருதி கொட்டத் தொடங்கியபோது, ராம்சீனா நினைவிழந்தாள். அவளை உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகுதான் ராம்சீனா கண்விழித்தாள். அவளுடைய ஒரு கால் நீக்கப்பட்டு விட்டதாக அவளிடம் தெரிவித்தார்கள்.

ஒரு காலினை இழந்தது குறித்து ராம்சீனா என்ன நினைக்கிறாள்?

"காலினை நீக்கியது, எனக்கு ஒரு பெரிய வலியாகத் தெரியவில்லை. இப்போது எனக்கு ஒரு செயற்கைக் கால் இருக்கிறது. என்னால் நடக்க முடியும். நடனமாடவும் முடியும். என் ஆசிரியர்களும் நண்பர்களும் என்னை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டுகிறார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்குப் படிப்பதும் வயலின் வாசிப்பதும் ரொம்பப் பிடிக்கும். எதிர்காலத்தில் நான் ஒரு மருத்துவராவேன். ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் உதவ வேண்டியது என் கடமை"
என்கிறாள், ராம்சீனா.

ராம்சீனாவுக்கு 2003-ஆம் ஆண்டுக்கான கீதா சோப்ரா விருது வழங்கப்பெற்றது.

இக்கட்டான நிலையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு மூன்று வயதுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ராம்சீனாவின் தீரச் செயல், உண்மையிலேயே மகத்தானதுதான்.

வாகன ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் தம் வாகனத்தை அவ்வப்போது சரிபார்த்து, பழுது நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நாம் நமது எல்லைக்குட்பட்ட வரையில் அனைத்தையும் சரிவர வைத்துக்கொண்டால்தான் இந்த உலகம் ஒழுங்காக இயங்கும். ஒரு சிறிய தவறின் விலை, ராம்சீனாவின் துணிவுமிக்க கால். இனி, ஒருக்காலும் இப்படி நடக்கக்கூடாது.


வாரசுரபி - ஜூலை 9, 2004

Saturday, June 05, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 5

கொள்ளையருடன் போரிட்ட குட்டிச் சிறுவன்

நமது பாதுகாப்பு, பெரும் கேள்விக்குரியது. கமாண்டோ படை வீரர்கள் முதல் நமது தெருவில் ரோந்து சுற்றும் கூர்க்கா வரை நம்மைச் சுற்றி எவ்வளவோ பேர் இருந்தாலும் நாம் பத்திரமாக இருக்கிறோமா என்ற கேள்வி, ஒரு கத்தியைப் போல நமது தலைக்கு மேல் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. வெளியே சென்றவர், வீடு திரும்புவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வீட்டில் இருப்பவராவது பாதுகாப்புடன் இருப்பாரா என்றால் அந்தக் கேள்விக்கும் விடையில்லை. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் தற்போதைய எதார்த்தம். இதற்கு நாம் தயாராக இருக்கிறோமா?

நிச்சயமாக இல்லை. மறைமுகமாக நம்மைக் கொள்ளையடிப்பவர்களைக் கொஞ்சம் தள்ளிவைப்போம். நேரடியாகவே எவ்வளவு சம்பவங்கள் நடக்கின்றன! பிக்பாக்கெட், சங்கிலி பறிப்பில் தொடங்கி, பெரிய பெரிய கொலை-கொள்ளை வரைக்கும் குற்றப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. திரைப்படங்களில் இத்தகைய ஆட்கள், கதாநாயகர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். குற்றப் பின்னணியுள்ள பலர், அரசியல் அதிகாரங்களையும் கைப்பற்றி விடுகிறார்கள். நாம் மிக மோசமான சூழலில் இருக்கிறோம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இங்கு வாழ்வதற்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியது, மிக இன்றியமையாதது. சிறுவன் விவேக், இதற்கு நமக்கு வழிகாட்டுகிறான்.

யார் இந்த விவேக்?

அசாம் மாநிலம், கவுகாத்தியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் விவேக் புர்கயஸ்தா, கொடூரமான கொள்ளைக் கும்பலுடன் போராடி, அவர்களின் முயற்சியை முறியடித்துள்ளான். இந்தியாவின் வடகிழக்கில் உள்ள புகழ்பெற்ற மாநிலமான அசாம், தனக்கெனத் தனி மொழி, நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்களைக் கொண்ட பாரம்பரியம் மிக்க மாநிலமாகும். இங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும் மாணவன், விவேக்.

2003-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி. நள்ளிரவு 1.30 மணி. விவேக் வீட்டில் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். விவேக் வீட்டில் அவனும் அவன் தம்பியும் ஓர் அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்கள், வேறோர் அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது விருந்தினர் அறையில் திடீரென ஒரு சத்தம் கேட்டது. விவேக்கின் அம்மா விழித்துக்கொண்டார். ஆயுதம் தாங்கிய ஐந்து பேர், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு, அவர்களின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டிருந்தார்கள். அந்தக் கொள்ளையர்கள், விவேக்கின் அம்மாவைக் கத்தியால் குத்திவிட்டார்கள். அம்மாவைக் காப்பாற்றச் சென்ற அப்பாவுக்கும் கத்திக் குத்து விழுந்தது. அங்கு குழப்பமும் களேபரமுமாய் இருந்தது.

இந்தச் சந்தடியில் விவேக் விழித்துக்கொண்டு அந்த விருந்தினர் அறைக்கு ஓடினான். அப்புறம் என்ன நடந்தது? விவேக்கே சொல்கிறான்:

"கொள்ளையர்களில் ஒருவன், என் நெஞ்சில் கத்தியால் குத்த வந்தான். நான் வெறுங்கையை நீட்டித் தடுத்தேன்; என்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றேன். அதனால் காயமுற்றேன். ஆனால், பதிலுக்கு நானும் தாக்கினேன். இந்தச் சத்தங்களைக் கேட்டு, பக்கத்து வீட்டிலும் எதிர்வீட்டிலும் இருந்தவர்கள், எங்களைக் காப்பாற்ற ஓடிவந்தார்கள். அவர்களைக் கண்டதும் கொள்ளையர்கள் தப்பித்து ஓடப் பார்த்தார்கள். என்னைத் தாக்கிய கொள்ளையனும் தப்பிக்கப் பார்த்தான். நான் அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அவன் எவ்வளவோ முயன்றும் நான் விடவில்லை. இதற்குள் பக்கத்து வீட்டார்கள், மேலும் இரண்டு கொள்ளையர்களைப் பிடித்துவிட்டார்கள். என் பெற்றோர்களோ ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். தீனமாக அவறினார்கள். நானும் காயப்பட்டிருந்தேன். எனினும் பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து என் பெற்றோரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கே....அங்கே....அய்யோ, என் அப்பா இறந்துவிட்டார். நல்லவேளையாக என் அம்மா பிழைத்துவிட்டார். என் அப்பா இறந்தாலும் அவருடைய கனவுகளை நான் நிறைவேற்றுவேன். நான் ஒரு நல்ல மனிதனாக உருவாவதே என் அப்பாவுக்குச் செய்யும் சிறந்த அஞ்சலி."


விவேக்கின் இந்தத் தீரச் செயலுக்காக, அவனுக்கு பாபு கயதானி விருது வழங்கப்பட்டுள்ளது.

இப்போது விவேக்கின் உலகம், பள்ளிக்கூட முதல்வரான அவன் அம்மாவைச் சுற்றித்தான் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரு விமானப் பொறியாளனாக வேண்டும் என்பது விவேக்கின் கனவு. ஆகாயத்தின் கீழே ஒரு பட்டாம்பூச்சியாக அவன் பறக்க, அவனை வாழ்த்துவோம். அவனைப் போலச் சவால்களைச் சந்திக்க நம்மை தயார்ப்படுத்திக்கொள்வோம். உறுதிகொண்ட நெஞ்சத்தோடு இந்த உலகை வலம் வருவோம்.


வாரசுரபி - ஜூலை 2, 2004

Friday, June 04, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 4

மரணக் குழியிலிருந்து...

செய்தித் தாள்களில் நாம் அடிக்கடி ஒரு செய்தியைப் பார்க்கிறோம். ஆழ்குழாய்க் கிணற்றுக்காகத் தோண்டிய குழியில் விழுந்து குழந்தை பலி, மாணவன் உயிர்ப்போராட்டம், குழிக்கருகில் மற்றொரு குழிதோண்டி அதன் வழியாகச் சென்று மீட்க முயற்சி, தீயணைப்புப் படையினர் இரவு பகலாக முயல்கின்றனர். இத்தகைய செய்திகள் அடுத்தடுத்து வந்தாலும் இறுதியில் மாணவன், பிணமாக மீட்பு என்ற செய்தியே நிலையாகிவிட்டது. மாநகரங்களில் தண்ணீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடுவதால் ஆழ்துளைக் கிணறுகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அறவே இல்லை. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இவற்றை வருமுன் தடுக்கவேண்டும். நமது துரதிருஷ்டம், அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் வந்த பின் காக்கவாவது நமக்குத் தெரியவேண்டும். தெரியாவிட்டால் 14 வயது தொடக்குரா மகேஷிடமிருந்தாவது தெரிந்துகொள்ளவேண்டும்.

இந்தத் தொடக்குரா மகேஷ், அப்படி என்ன செய்துவிட்டான்.

அப்படிக் கேளுங்கள்!

ஆந்திராவின் வேமுரு மண்டல் நகரில் மகேஷ், ஒரு குழந்தைத் தொழிலாளி. பல்வேறு கட்டடங்கள் கட்டுவதில் எடுபிடி ஆளாகப் பணியாற்றி வந்தான். அப்படித்தான் ஒரு தேவாலயம் கட்டும் பணியிலும் ஈடுபட்டிருந்தான். அப்போது என்ன நடந்தது?

மகேஷே சொல்லுகிறான்.

"நான் கட்டடத்தின் வேறொரு பகுதியில் வேலைசெய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஓர் ஆழ்துளைக் குழியில் ஒரு சிறுவன் விழும் சத்தம் கேட்டது. நான் உடனே அங்கு ஓடி வந்தேன். அங்கிருந்த யாரும் அந்தச் சிறுவனைக் காக்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன். பிறகு, தானாகவே அந்தச் சிறுவனுக்கு உதவ முடிவுசெய்தேன்.

அது 12 அடி ஆழக் குழி. விழுந்த சிறுவன் நரேந்திர குமாரோ 4 வயதுப் பையன். அவனைத் தைரியமாக இருக்கும்படி மேலிருந்து குரல் கொடுத்தேன். அங்கிருந்த மக்களிடம் என் கால்களை ஒரு கயிற்றால் கட்டி, குழிக்குள் என்னைத் தலைகீழாக இறக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் அப்படியே செய்தார்கள். ஆழ்குழாய்க் குழிக்குள் முதலில் என் தலை நுழைந்தது. மெல்ல மெல்ல ஆழத்துக்குப் போனேன்.

உள்ளே போகப் போக கும்மிருட்டாய் இருந்தது. எதுவுமே தெரியவில்லை. ஆனால் அந்தச் சிறுவன் அழுவதை என்னால் கேட்க முடிந்தது. அந்த ஓசையை அடையாளமாக வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல இறங்கினேன். மணல்கட்டிகளும் கற்களும் தூசும் என்மேல் விழுந்தபடி இருந்தன. நான் என் கண்களைத் திறக்கவே முடியவில்லை. மூச்ச விடக்கூட சிரமமாய் இருந்தது. ஆனால், நான் மெல்ல இறங்கிக்கொண்டே இருந்தேன்.

இறுதியாக, 45 நிமிடங்களுக்குப் பிறகு, நான் அந்தச் சிறுவனை அடைந்துவிட்டேன். அவனுக்கு நம்பிக்கையூட்டி, அவனுடைய இடுப்பு வாரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அதன்பிறகு மேலேயிருந்து கயிற்றைப் பிடித்திருந்தவர்களுக்கு நான் ஒரு சமிக்ஞை கொடுத்தேன். அவர்கள் புரிந்துகொண்டு கயிற்றை மேலே தூக்கினார்கள். நாங்கள் இருவரும் பத்திரமாக மேலே வந்து சேர்ந்தோம். கடவுளுக்கு நன்றி. அந்தச் சிறுவன் இப்போது உயிருடன் இருக்கிறான். நலமாகவும் இருக்கிறான். அதை நினைக்கும் போது இப்போதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது."


தொடக்குரா மகேஷைப் பார்த்தீர்களா? எப்பேர்ப்பட்ட தீரச்செயல்! இதற்கு எவ்வளவு துணிவும் மனோவலிமையும் வேண்டும்!

இந்தத் தீரச் செயலுக்காக மகேஷுக்கு தேசிய தீரச் செயல் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது பெற்றவர்களுக்கு அவர்களின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும், அதன்படி மகேஷ், ஓர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்துவிட்டான். முதலில் அவன் பெற்றோர்களால் அவனைப் படிக்கவைக்க முடியவில்லை. இப்போது இந்தத் தீரச் செயலால் அரசே அவனைப் படிக்க வைக்கிறது.

"எதிர்காலத்தில் இந்தியா இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குப் பணியாற்றுவேன்" என்கிறான் மகúஷ். நம்பிக்கை அதிகமாகிறது. இத்தகைய இளைஞர்களின் கைகளில் இந்தியா, பாதுகாப்பாய் இருக்கும்.


வாரசுரபி - ஜூன் 25, 2004

Thursday, June 03, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 3

திருடனைப் பிடித்த ஹென்னா

ஹென்னா பிறந்தது என்னவோ, இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில்தான். அவள் தந்தை லெப்டினன்ட் கர்னல் பக்ஷி, அப்போது அந்த ஊரில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இப்போது அவர் அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவிற்கு இடம் மாறியுள்ளார். அம்பாலாவில் உள்ள கர்த்தரும் மேரியும் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்புப் படிக்கிறான், ஹென்னா ஆமாம், ஆறாம் வகுப்புப் படிக்கும் ஹென்னாதான் ஆறடி உயரமுள்ள முரட்டுத் திருடனைப் பிடித்துக் கொடுத்தாள்.

இது எப்படி நடந்தது?

1999 ஆம் ஆண்டு. ஆகஸ்டு 3 ஆம் தேதி. நள்ளிரவு. டைபாய்டு காய்ச்சலின் காரணமாக ஹென்னா, பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள். வீட்டில் இருந்தது மட்டுமின்றி பகலில் தூங்கத் தொடங்கினாள். அது தொடர்ந்தது. அதனால் இரவில் அடிக்கடி விழிப்பு வந்துவிடும். ஹென்னாவின் அறையிலேயே அவள் தம்பியும் தூங்குவான். அவன் தூக்கம் கெடக்கூடாது என்பதற்காக ஹென்னா மிக அமைதியாக இருப்பாள். சிறு சத்தமும் எழாமல் இருக்கச் செய்வாள்.

சாதாரணமாகவே இரவில் விழிக்கிற ஹென்னாவுக்கு அன்று இரவு ஏதோ ஒரு சத்தமும் கேட்டது. ஹென்னா, ""படக்கென்று'' விழித்துக்கொண்டாள்.

ஓர் ஒல்லியான, உயரமான மனிதன், அவர்களின் அறைக்குள் நுழைவதைக் கண்டாள். பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது. அவன், ஹென்னாவின் அப்பா இல்லை, வேற்று ஆள் என்று. அவன், ஹென்னா அறையினுள் நுழைந்து கதவை உட்புறத்திலிருந்து சாத்தினான். ஹென்னா, தூங்குவது போல் பாவனை செய்தால். அவர்களின் படுக்கைக்கு அருகே ஒர் இரும்பு அலமாரி இருந்தது. அதற்குள் அவள் அம்மாவின் நகைகள் இருந்தன. அந்தத் திருடன், நேராக அந்த இரும்பு அலமாரியை நெருங்கினான். அதைத் திறக்கச் சில முறைகள் முயன்றான். ஆனால் அவனால் திறக்க முடியவில்லை.

பிறகு அவன், அந்த அறைக் கதவைத் திறந்து வெளிவந்து பக்ஷியின் படுக்கையறைக்குள் நுழைந்தான். அது ஹென்னா படுத்திருந்த அறைக்கு அடுத்த அறை. அந்தத் திருடன், பக்ஷியை நெருங்கினான். அவர் தூங்குகிறாரா என்று சோதித்தான். பக்ஷியை நோக்கி அவன் குனிந்தபோது, ஹென்னா 'திருடன்' 'திருடன்' 'ஓடி வாங்க', 'ஓடி வாங்க' என்று கூச்சலிட்டாள். அவன் பயந்துவிட்டான் போலும். அறைக் கதவை நோக்கி ஓடி வந்தான். அங்கேதான் ஹென்னா நின்றிருந்தாள். அவளை ஒரே தள்ளாய்த் தள்ளிவிட்டான். ஹென்னா கீழே விழுந்தாள். ஆனால், உடனே எழுந்துவிட்டாள். முன்னால் ஓடிக்கொண்டிருந்த அவனைத் துரத்தினாள். கொஞ்சம் நெருங்கியதும் ஒரே தாவு தாவி அவன் கால்களைப் பிடித்துவிட்டாள்.

அப்போது அவர்கள் இருவரும் வீட்டின் வெளிவாசல் கதவுக்கருகே இருந்தார்கள். ஹென்னா தன் முழு ஆற்றலையும் பயன்படுத்தி அவன் கால்களை இறுகப் பிடித்திருந்தாள். அந்தத் திருடனும் அவள் பிடியிலிருந்து விடுபட்டுத் தப்பிக்கக் கடுமையாக முயன்றான். அந்த நேரத்தில் பக்ஷி வந்து அவன் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டார்.

அந்தத் திருடனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள் அவன் பிடிபட்டதைக் கண்டதும் வீட்டுக்கு வெளியே காத்திருந்த அவன் கூட்டாளிகள் ஓடிவிட்டார்கள். ஆனால் காவலர்கள் பிறகு அவர்களையும் பிடித்துவிட்டார்கள்.

அந்தத் திருடன் ஏற்கெனவே இரண்டு முறைகள், பக்ஷி வீட்டிலிருந்து பணம் திருடியதையும் சில அலுவலக ஆவணங்களைத் திருடியதையும் ஒப்புக்கொண்டான். அந்த ஆவணங்கள், மீண்டும் கைப்பற்றப்பட்டன. அந்தத் திருடன் 3 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதும் அந்தக் கூட்டம், நூற்றுக்கு மேலான திருட்டுகளில் தொடர்புடையது என்பதும் பின்னர் தெரிந்தது. இந்தத் தீரச் செயலுக்காக ஹென்னாவுக்கு, 1999 ஆம் ஆண்டின் தீரக் குழந்தைகளுக்கான கீதா சோப்ரா விருது வழங்கப்பட்டது.

ஹென்னாவின் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் ஹென்னாவை வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால் ஹென்னாவின் தம்பியோ. "இதுக்கு அதிருஷ்டம் தான் காரணம். திருடன் வந்தபோது நான் மட்டும் விழித் திருந்தால் அவனை நிச்சயம் பிடித்திருப்பேன்" என்கிறான். அடடே அக்காவுக்கு உள்ள வீரம், தம்பியிடமும் இருக்கிறதே.

ஹென்னா, சக்தி நிறைந்த சிறுமி. நன்றாக நாட்டியமும் ஆடுவாள். அவளுக்குக் குதிரைச் சவாரி, கூடைப் பந்து, நீச்சல் ஆகியவை பிடிக்கும். குழந்தைத் தொழிலாளர்களை முழுமையாகத் தடைசெய்யவேண்டும் என்றும் விரும்புகிறாள்.

பெரியவளானதும் ஹென்னா என்ன ஆக விரும்புகிறாள்?

"நான் பெரியவள் ஆனதும் இந்திய விமானப் படைவில் போர் விமானம் ஓட்டுவேன். தலைசிறந்த விமான ஓட்டி என்று பேரெடுப்பேன்" என்கிறாள், ஹென்னா.

இந்த வானுயர்ந்த இலக்கை ஹென்னா நிச்சயமாக எட்டுவாள்.


வாரசுரபி, ஜூன் 18 2004

Wednesday, June 02, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 2

சிறுமிகளைக் காத்த சிறுமிகள்

சிறுவர்கள், அம்மா-அப்பா விளையாட்டு விளையாடுவதுண்டு. வீட்டில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் என்னென்ன செய்கிறார்களோ, அவை அனைத்தையும் அப்படியே திருப்பிச் செய்வதை நாம் பார்க்கலாம். "அம்மாடி பங்கஜம்" என்று அழைத்தாலும் சரி, "ஏ கூறு கெட்டவளே" என்றாலும் சரி, அப்படியே இங்கு எதிரொலிக்கும். மனைவி, "ஏனுங்க" என்றாலும் "இந்தா" என்றாலும் அதுவும் எதிரொலிக்கும். போலச் செய்தல் என்ற இயல்புடையவர்கள் என்பதால் சிறுவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால், சிறுவர்களை வைத்துப் பெரியவர்கள் விளையாடுவதை நாம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

கழுதைகளுக்குக் கல்யாணம், ஆல மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம், காக்காய்க்கும் குருவிக்கும் கல்யாணம்... என்று தொடங்கி, பெருமாள் திருக்கல்யாணம் வரைக்கும் நம் மக்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதில் ஏனோ அலாதி ஆர்வம் இருக்கிறது. கல்யாணம்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதுபோல் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். நல்ல கணவன் கிடைக்கவேண்டுமெனப் பாவை நோன்பு இருந்து, திருப்பாவை பாடும் கன்னிப் பெண்களுக்கும் பஞ்சமில்லை. இதற்காகக் கோயில் கோயிலாகச் செல்வதும் மரம் மரமாகச் சுற்றுவதும் ஜோதிடர்களிடமும் சாமியார்களிடமும் சென்று கைரேகை, ஜாதகம், நாடி ஜோதிடம்... என்று என்னென்ன உண்டோ அத்தனை ஜோதிடங்களையும் ஒரு கை பார்த்து விடுகிறார்கள். திருமண வயதில் திருமணத்திற்கு இவ்வளவு கஷ்டப்படுவதால் சிறு வயதிலேயே திருமணத்தை முடித்துவிட்டு, சிக்கல்களிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். பிற்காலத்தில் காதல், கத்தரிக்காய் என ஏதாவது பிரச்சினை வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் சிலர், சிறுவர் மணம் புரிந்துவிடுகிறார்கள்.

சிறுவர் மணத்தால் கைம்பெண்களின் எண்ணிக்கை கூடியது. விரல் சூப்பும் பருவத்தில், உலகம் தெரியாத வயதில், திருமணம் செய்து வைப்பது அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்குவதாகும். இதனால்தான் அரசு, இதைத் தடை செய்தது. அரசு தடை செய்யும் அனைத்தும் நின்று விடுவதில்லை என்பதற்கு அநேக எடுத்துக்காட்டுகள் உண்டு. அவற்றுள் ஒன்று, பாலர் திருமணம்.

தீங்கு நிகழும் போது அதைத் தடுக்க, தெய்வம், மனித உருவில் தோன்றும் என்பது மக்களின் நம்பிக்கை. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, அரியானாவைச் சேர்ந்த ஐந்து சிறுமிகள், இரண்டு பாலர் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியதுதான்.

இந்தத் தீரச் செயல் எப்படி நடந்தது?

டில்லிக்கு அருகிலுள்ள அரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் உள்ளது, அரிசிங்கபுரம் என்ற கிராமம். இங்கு கடாரியா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த போபால் சிங் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் ஓர் ஏழை விவசாயி. இவருக்குச் சுமன் என்ற 12 வயதுப் பெண்ணும் புஷ்பா என்ற 6 வயது மகளும் உண்டு. அதே ஊரில் தர்மபால், ராஜ்பால் என இரு சகோதரர்கள் இருந்தார்கள். இந்த இருவரிடமும் போபால் சிங், பணம் கடன் வாங்கியிருந்தார். கடன், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. வட்டி, குட்டி போட்டு, அந்த குட்டி, ஜட்டி போட்டு, பிறகு வேட்டியே கட்டிவிட்டது.

போபால் சிங்கால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? நெருக்குதல் அதிகமானது. இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணவேண்டிய கட்டாயம், போபால் சிங்குக்கு ஏற்பட்டது. கடைசியில் அவர்களுக்கிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதாவது கடன் கொடுத்த சகோதரர்களுக்கு, பணத்திற்குப் பதிலாக, போபால் சிங்கின் இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிடுவது. இதுதான் அந்த ஒப்பந்தம். பழங்காலத்தில் அடிமைகளை ஏலத்திற்கு விட்ட கொடுமையைப் போல் அல்லவா இது இருக்கிறது.

2003 ஏப்ரல் 18 அன்று "திருமணம்' செய்வதாக நாள் குறித்தார்கள். மணமகன் வீட்டார், அரிசிங்கபுரத்திற்கு வந்துவிட்டார்கள். இன்னும் சில மணி நேரத்தில் திருமணம் நடக்க இருந்தது. ஊராருக்குச் செய்தி தெரிந்திருந்தது. ஆனால், இது அவர்களுக்கு ஒரு பெரிய குற்றமாகத் தெரியவில்லை.

அதே ஊரில் நீலம் குமாரி (10), சரிதா தியாகி (17), சுனிதாதேவி சிக்தோயா (14), சுவாதி தியாகி (14), சுஷ்மா ராணி (16) என்ற ஐந்து சிறுமிகள் இருந்தார்கள். இவர்களுள் நீலம் மட்டும் ஐந்தாம் வகுப்பு மாணவி. மற்ற நால்வரும் ஒன்பதாம் வகுப்புப் படிப்பவர்கள். இவர்கள் ஐவரும் இந்தத் திருமணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ந்துபோனார்கள். திருமணம் நிகழுமிடத்திற்கு ஓடினார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி... மணமகன்கள் 26 வயதிலும் 30 வயதிலும் இருந்தார்கள். மணப்பெண்களை விட 3 முதல் 4 மடங்கு கூடுதலான வயது. மணப்பெண்களை வற்புறுத்தி, கட்டாயக் கல்யாணம் நடப்பதைப் புரிந்து கொண்டார்கள். இந்தக் கொடுமையை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உந்துதல் அவர்களுக்குள் ஏற்பட்டது.

இது குறித்துச் சரிதா தியாகியே தொடர்ந்து சொல்வதைக் கேளுங்கள்..


"நாங்கள் உடனே எங்கள் பள்ளிக்கூட ஆசிரியரைச் சந்தித்தோம். அவர் எங்களைக் கிராமத் தலைவரிடம் புகார் கூறச் சொன்னார். அதைத் தொடர்ந்து நாங்கள் தற்போதைய கிராமத் தலைவரிடமும் முன்னாள் கிராமத் தலைவரிடமும் புகார் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவ முன்வரவில்லை.

திருமண மண்டபத்தில் பண்டிதர்கள் (திருமணத்தை நடத்துவோர்), மந்திரங்களை ஓதி, சமயச் சடங்குகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அப்போது (திரைப்படப் பாணியில்) நாங்கள் இரண்டு ஆதரவாளர்களுடன் பந்தலுக்குள் நுழைந்து, பண்டிதர்களிடம் நிலைமையை விளக்கினோம். திருமணத்தை நிறுத்த வலியுறுத்தினோம். அவர்கள் முரட்டுத்தனமாக "இதிலெல்லாம் நீங்கள் தலையிடக்கூடாது" என்றனர். எல்லோரும் எங்களை நோக்கிக் கூச்சலிட்டார்கள். நீங்க எல்லாம் ஈ மாதிரி, உங்களால ஒன்னும் பண்ண முடியாது என்றார்கள். மணமகன்களோ, "தாங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 50,000 கொடுத்திருப்பதாகவும் அதனால் திருமணத்தை நிறுத்த முடியாது" என்றும் கூறினார்கள். ஆனால், நாங்கள் திருமணத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்தோம். எதிர்பாராத விதமாக போபால் சிங்கின் மனைவியும் அவர் அண்ணன் சேவா சிங்கும் எங்களை ஆதரித்தார்கள். கிராமத்தினர் சிலரும் திருமணத்திற்கு வந்தவர்களுள் சிலரும் கூட எங்கள் பக்கம் பேசினார்கள். நாங்கள் அந்த மணப்பெண்களை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். அன்றைய தினம் திருமணம் ரத்தானது. அவர்கள் எங்களிடம் வந்து மிரட்டினார்கள். நின்ற திருமணத்தை மறுநாள் நடத்துவதென முடிவெடுத்தார்கள்.நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தோம். இதுகுறித்து எழுதுவதாகச் சொன்ன ஒரு பத்திரிகை நிருபருக்கும் தகவல் கொடுத்தோம்.

இந்த நேரத்தில் போபால் சிங் ஒரு வேலை செய்தார். காவல் நிலையத்திற்குச் சென்று, தன் அண்ணன், தன் மகள்களின் திருமணத்தில் இடையூறு செய்வதாக ஒரு பொய்ப்புகார் கொடுத்தார். காவலர்கள், சேவா சிங்கைக் கைது செய்யத் திருமண மண்டபத்திற்கு வந்தனர். 5 சிறுமிகளும் முன்பு கொடுத்த புகாரில் உண்மையிருப்பதை அந்த வட்டாரக் காவல் துறை இணை ஆணையர் ஆர். எஸ். டூன் உணர்ந்தார். குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் 4,5,6 பிரிவுகளின் படி போபால் சிங்கின் மேல் வழக்குத் தொடரப்பட்டது. அவர் உடனே கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்."


இரண்டு சிறுமிகளின் வாழ்வில் நடக்கவிருந்த அநீதியையும் சீரழிவையும் தடுத்தமைக்காக, 5 சிறுமிகளும் பெரிதும் பாராட்டப்பட்டார்கள். 2003 -ஆம் ஆண்டு தீரச் செயல் புரிந்தவர்களுக்கான விருது, இந்த ஐவருக்கும் வழங்கப்பட்டது.

இதில் ஒரு நல்ல திருப்பம் என்ன தெரியுமா?

குழந்தைத் திருமணத்திலிருந்து காப்பாற்றப்பட்ட இரண்டு சிறுமிகளும், காப்பாற்றிய ஐந்து சிறுமிகள் படிக்கும் அதே பள்ளியில் படிக்கிறார்கள்.

"பாதகஞ் செய்பவரைப் பார்த்தால் - நீ
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா "


என்ற பாரதியின் பாடலுக்கு எடுத்துக்காட்டாக இவர்கள் நடந்திருக்கிறார்கள். மற்ற சிறுவர்களும் இவர்களைப் பின்தொடர்ந்து நடக்கவேண்டும்.



வாரசுரபி, ஜுன் 11 2004

Tuesday, June 01, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 1

சிறுத்தையை விரட்டிய குட்டி

பண்டைக் காலத்தில் தமிழ்ப்பெண் ஒருத்தி, புலியை முறத்தினால் விரட்டினாள் என்று கேள்விப்பட்டுள்ளோம். இன்றும்கூட கழுத்துச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிய திருடனை விரட்டிப் பிடித்த பெண்; ஈவ்-டீசிங் செய்தவனைச் செருப்பால் அடித்தவர்... என நிறைய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இத்தகைய வீர தீரச் செயல்கள் பரவலாக நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு 2003, நிஷா என்ற பெண், வரதட்சனை கேட்டுத் துன்புறுத்திய மணமகன் வீட்டாரைக் காவல் நிலையத்துக்கு அனுப்பியதை நாம் அறிவோம்.

வளர்ந்த பெண்கள் மட்டுமல்லாது, சிறுவர்களிடமும் வீரம் வளர்ந்து வருகிறது. "இளங்கன்று பயமறியாது" என்பதற்கேற்ப "வளரும் பயிர் முளையிலேயே தெரியும்" என நாம் மகிழுமாறு எண்ணற்ற இளங்குருத்துகள் தோன்றி, நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அவர்களுள் ஒருவரே குஜராத்தைச் சேர்ந்த குட்டி. இரண்டு பச்சிளம் குழந்தைகளைச் சிறுத்தையிடமிருந்து காப்பாற்றிய தீரச் சிறுமி. 13 வயதே நிறைந்த, கூச்சமும் கோழைத்தன்மையும் உடைய இந்தச் சிறுமியா இதைச் செய்தது? ஆம். மன வலிமை இருந்தால் மற்ற வலிமைகள் எல்லாம் தானே வந்து சேரும் என்பதற்கு இதோ குட்டியே சிறந்த சான்று.

அந்த அற்புத நிகழ்ச்சி எப்படி நடந்தது?

2002 மார்ச் 22 ஆம் தேதி. குஜராத் மாநிலம் தோஹத் மாவட்டத்தைச் சேர்ந்த கதலியா கிராமத்தில் குட்டி வசிக்கிறார். சபர்கந்தா மாவட்டம், தட்கல் கிராமத்தில் குட்டியின் அண்ணன் பாபுபாய் வசிக்கிறார். குட்டி, அண்ணனைக் காண, தட்கல் கிராமத்துக்கு வந்தார்.

அண்ணனுக்கு அழகான இரண்டு குழந்தைகள். ஒருவன், இரண்டு வயதான விபுல்; மற்றொருத்தி பிறந்து ஆறே மாதமான பாயல். தட்கல் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ஒரு பண்ணை உண்டு. அங்கு அண்ணனின் இரு குழந்தைகளோடு குட்டி தூங்கிக்கொண்டிருந்தாள். அப்பொழுது மணி, இரவு 10.30.

கிராமத்துக்கு அருகிலிருந்து இரை தேடியபடி ஒரு சிறுத்தை, பதுங்கிப் பதுங்கி வந்தது. மனித வாசனையை நுகர்ந்து பண்ணைக்குள் நுழைந்துவிட்டது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் அருகிலும் வந்துவிட்டது.

முதலில் அது, ஆறு மாதக் குழந்தை பாயலைத் தாக்கியது. அப்படியே விபுலையும் அடித்தது. விபுலை மெல்ல அந்த இடத்திலிருந்து இழுத்துக்கொண்டு ஓடப் பார்த்தது. விபுல், மரணபீதியில் தன் உயிரைக் காப்பாற்ற வேண்டி ஓலமிட்டான். அவன் அலறலைக் கேட்டு, குட்டி விழித்துக் கொண்டாள். தன் கண்ணெதிரே விபுலை, சிறுத்தை இழுத்துச் செல்வதைக் கண்டாள். துணிவுடன் சிறுத்தைக்கு எதிராக விபுலைத் தன் பக்கமாக இழுக்கத் தொடங்கினாள். இந்தப் போராட்டத்தில் சிறுத்தை, விபுலை விட்டுவிட்டு குட்டியைத் தாக்கத் தொடங்கியது. குட்டியின் இடது கையைக் கடித்தும் விட்டது. ஆனாலும் குட்டி, பயந்துவிடவில்லை. தொடர்ந்து போராடினாள்.

அதே நேரம் குட்டியின் அண்ணன் பாபுபாயும் மற்றவர்களும் அங்கு விரைந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் சிறுத்தை, தப்பித்து ஓடியது. இரண்டு குழந்தைகளையும் குட்டியையும் உடனே குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றார்கள். நல்ல வேளையாக அவர்கள் மூவரும் பிழைத்துவிட்டார்கள்.

"குட்டி மட்டும் தீரத்தோடு போராடியிருக்காவிட்டால் நாங்கள் எங்கள் குழந்தைகளை இழந்திருப்போம்" என்று பாபுபாயும் அவர் மனைவி சுர்தாபென்னும் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

ஆனால் குட்டி, இப்போதும் அதிகம் பேசவில்லை. "அது, பாயலைத் தாக்கியது. அது என்ன மிருகம் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், விபுல் உரக்க அழுததைக் கேட்டேன். அவன் தலையிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அவனைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்" என்று மட்டுமே கூறினாள்.

குட்டியின் இந்தத் துணிச்சலான செயலை, குஜராத் மாநில நாளிதழ்களும் பருவ இதழ்களும் பெரிய அளவில் வெளியிட்டன. குஜராத் மாநிலக் குழந்தைகள் நலக்கழகம், இச் செய்தியை அறிந்தது. இந்தியக் குழந்தைகள் நலக் கழகத்தின் தீரர் விருதுக்குக் குட்டியின் பெயரைப் பரிந்துரைத்தது.

குட்டிக்கு இந்தியப் பிரதமர் கைகளால் டெல்லியில் கீதா சோப்ரா விருது வழங்கப் பட்டது. அகமதாபாத் நகரிலும் குட்டிக்குப் பாராட்டு விழா நடந்தது. குட்டி, இந்தியச் சிறுவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.


வாரசுரபி - ஜூன் 4, 2004

Thursday, May 20, 2004

கிங்கரன் மனிதப் பண்ணை

அந்த ஞாயிற்றுக்கிழமை விடிந்துகொண்டிருந்தது. இருள் எனும் மருமக் கதையின் இறுதி அத்தியாயம். யார் வீட்டிலோ மசாலாவில் நர மாமிசத்தைப் புரட்டுகிறார்கள். எழும்போதே காபாலிகனுக்கு நாவூறியது. ஒரு முறை நன்றாக மூச்சிழுத்து வாசம் பிடித்தான். நாகர் தீவின் தேசிய உணவாயிற்றே அது.

உடனே நண்பன் கிங்கரனைப் பார்க்கக் கிளம்பினான், கபாலிகன். வங்கியில் கடன் பெற்று ஒரு மனிதப் பண்ணை வைத்திருந்தான், கிங்கரன். நல்ல லாபம். பாதிக் கடன் அடைத்து விட்டான். காபாலிகனுக்கு என்று கேட்டால் நல்ல மனிதனாக, கொஞ்சம் விலை குறைவாகவே கொடுப்பான். கடன் சொன்னாலும் கோபிக்கமாட்டான்.

“கிங்கரன் மனிதப் பண்ணை’’ என்ற பலகையை நெருங்க நெருங்க, மனிதக் கழிவுகளின் நாற்றம் அடித்தது. கூடவே ‘சலசல’ பேச்சும் கேட்டது. ஒரே விதமான கூண்டுகளில் நிருவாணமாகப் பல நிறங்களில் விதவிதமான மனிதர்கள் “அம்மா’’, “அப்பா’’, “அய்யோ’’, “ஆண்டவா’’, “காப்பாத்து’’, “மொதல்ல நீதான் சாகப்போறே’’, “இல்லை நீதான்’’ எனக் கலவையான குரல்கள்.

“வாடா காபாலி’’ என்ற கிங்கரன், “இதுங்களை வச்சு நாலு காசு சம்பாதிக்கலாம்னு நினைச்சா, பயத்துலயே பாதி சாகுதுங்க. நோய் நொடின்னு கொஞ்சம் போயிடுது. தீனிச் சண்டையில மீதியும் போயிடும் போலிருக்கு’’ என்றான்.

“தீனிச் சண்டையா?’’

“ஆமா. ஒரு கூண்டுக்குள்ள தீனி வச்சா, தலைக்குக் கொஞ்சமா தின்னும்னு பேரு. ஆனா, இதுங்களோ ஒண்ணை ஒண்ணு அடிச்சுகிட்டு தானும் தின்னாம அடுத்ததையும் தின்னவுடாம பண்ணுதுங்க.’’

“சரி சரி. நல்லா கொழுத்ததா பார்த்து ஒண்ணு கொடு. காசு அப்புறம் தரேன்.’’

“நீ ஒண்ணு செய். நேரா நம்ம கறிக்கடைக்குப் போய் வாங்கிக்க. காலையிலதான் ஒரு வண்டி அனுப்பி வச்சேன்.’’

“சரிடா’’

காபாலிகன் கிளம்பினான். கறித் தெருவுக்குள் நுழைந்தபோது ஒரு மனித மண்டையோட்டை எத்தி, நாலைந்து நாகச் சிறுவர்கள், உதைபந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். காபாலி, கறிக்கடைக்கு வந்தான். ‘உரித்த மனிதன் 35 பொற்காசு’ ‘உயிருடன் 30 பொற்காசு’ என்ற பலகையைக் கடந்து உள்ளே போனான்.

இரும்புக் கொக்கிகளில் தோலுரித்த மனிதர்கள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். கறிக்கடையில் இருந்த பயங்கரன், சுறுசுறுப்பாகச் சுழன்றவண்ணம் இருந்தான். வட்டமான மரப்பீடத்தில் ஒரு கொழுத்த மனிதனைக் கிடத்தி, கொடுவாளைத் தூக்கிக் கழுத்தில் இறக்கினான். ‘ஹக்’ என்று ஒரு சத்தம். குத்திட்ட அவன் கண்களில் பல்லாயிரம் ஆண்டைய மரணபீதி தெரிந்தது. கழுத்திலிருந்து குருதி பீரிட்டது. கிடுக்கியில் மாட்டியிருந்த அவன் கை-கால்கள், தரையிறங்கும் விமானம் போல் மெல்லமெல்ல ஓய்ந்தன. பீரிட்ட குருதியை வாளியில் பிடித்துவிட்டு சரசரவெனத் தோலை உரித்தான். கை, கால், மார்பு, இரைப்பை, குடல்... என ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்து அதனதன் தொட்டிகளில் போட்டான்.

குழந்தைகள் அதிக விலைக்குப் போயின. நாகர் தீவின் நான்கு திசைகளையும் நோக்கி, உலகின் மிகத் தீனமான குரலில் அவை முறையிட்டன. எந்தக் கடவுளின் காதிலும் அவை விழவில்லை.

காபாலிகனைப் பார்த்ததும் பயங்கரன் கேட்டான்: “வாங்க வாங்க. என்ன வேணும் பாருங்க. எல்லாம் சுடச்சுட இருக்கு’’.

“எனக்கு உயிரோடு ஒண்ணு கொடு. நான் வீட்டுக்குப் போய் சுத்தம் பண்ணிக்கிறேன்.’’

“எப்படி எடுத்துப் போவீங்க? நான் கடைப் பையன்கிட்ட கொடுத்து அனுப்பவா?’’

“அப்படியே செய்’’ சொன்ன காபாலிகன், பக்கத்திலிருந்த மூத்தார் சூலனைப் பார்க்கச் சென்றான். அவர் சிலகாலமாக நரமாமிசம் உள்பட எந்த மாமிசமும் சாப்பிடவில்லை. காய் -பழம்-கீரை என்று சாப்பிடுவதாகக் கேள்விப்பட்டான். வியப்பு தாங்கவில்லை.

அந்த மூத்தாரைக் காபாலிகனுக்கு நன்றாகத் தெரியும். அவரிடமிருந்து அவன் கற்றவை ஏராளம். எந்த மனித உடலுக்கு என்ன சுவை? எந்த உறுப்பில் சுவை அதிகம்? அந்த உடலை வேகவைப்பதா - சுட்டுத் தின்பதா? தொட்டுக் கொள்ள எது சிறந்தது?... என விரிவாகச் சொல்லித் தந்தவர் அவரே. இப்போது ஏன் இப்படி?...

அவர் வீட்டுக்குள் காபாலி நுழைந்தபோது, அவர் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அவனுக்கு மீண்டும் நாவூறியது. நிச்சயமாக நல்ல சரக்கு அது.

வணங்கிவிட்டுக் கேட்டான்.

“என்ன வீட்டிலேயே மனிதனை வளர்த்துப் பெரிதாக்கி விற்கப்போகிறீர்கள், அப்படித்தானே? நல்ல குட்டிதான்.’’

“இல்லை காபாலி. இவள் என் செல்ல மகள்.’’

“ஆஹஹ்ஹா. நல்ல வேடிக்கை. இதுவரைக்கும் உங்க வயிற்றுக்குள் எத்தனை மகள்கள் போனார்கள் என்று கணக்கே கிடையாதே.’’

“இப்போது நான் அப்படியில்லை, தெரியாதா?’’

“ஏன்?’’

“அது உயிர்க் கொலை’’

“இதென்ன திடீர் ஞானோதயம்?’’

“ஞானம்தான்’’

“உயிர்ப்படைப்பே ஒரு சுழற்சிதான். தன்னைவிடச் சிறியவற்றை ஒவ்வோர் உயிரினமும் தின்னுகின்றது. மண்ணிலிருந்து புழு வருகிறது. புழுவைக் கோழி தின்னுகிறது. கோழியை மனிதன் தின்னுகிறான். மனிதனை நாம் தின்பதில் என்ன தவறு?’’

“ஒன்றை ஒன்று தின்ன, உயிர்ச் சுழற்சி என்கிறாயே. ஒன்றை ஒன்று காப்பாற்ற உயிர்ச் சுழற்சி என்று நினைத்துப் பார்த்தாயா?’’

“இது நம் இனத்தின் அடையாளம். மனிதக் கறி தின்பவன்தான் சொரணையுள்ள நாகன்’’

“பகுத்தறிவாளன் இப்படி எண்ணமாட்டான். உயிர்க்கொலை ஒரு கொடிய பாவம்’’

“கொன்றால் பாவம் தின்றால் போச்சு’’

“நீ என்னைக் கொன்று தின்னேன். பாவம்தான் போய்விடுமே’’

“அய்யோ, அப்படிச் சொல்லாதீங்க’’

“நானும் இந்தக் குழந்தையும் வேறில்லை’’

அவர் இறக்கிவிட்ட குழந்தை, தத்தித் தத்தி நடந்து வந்தது. காபாலிக்கு மீண்டும் நாவூறியது. அவன் முத்தம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கண்டான்.

Saturday, May 15, 2004

முதியோரைத் தத்தெடுப்போம்!

முதியோர், கனிகளை ஒத்தோர். அவர்களுக்குள் ஏராளமான அனுபவ விதைகள் உள்ளன. அந்த விதைகளுக்குள் கற்பக மரங்கள் கருக்கொண்டுள்ளன. முதியோரைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது, சமுதாயத்தின் கடமை.

அக்டோபர் 1, உலக முதியோர் நாள். இதையொட்டி இன்றைய முதியோரின் நிலை குறித்து அறிய முதியோர் மருத்துவத்துறை வல்லுநர் டாக்டர் வ.செ.நடராஜனைச் சந்தித்தோம்.

இவர், இந்தியாவிலேயே முதன்முதலாக முதியோருக்காக, 1978ஆம் ஆண்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் தனிப்பிரிவைத் தொடங்கியவர். இதற்காக 1994இல் டாக்டர் பி.சி.ராய் தேசிய விருது பெற்றார். முதியோர் மருத்துவம் தொடர்பாக 12 நூல்களும் 55 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் படைத்துள்ளார். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்மையில் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இவருடனான இந்த நேர்காணல், முதியோருக்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம்.

?: இன்றைய முதியோரின் நிலை எப்படி இருக்கிறது?

நடராஜன்: 60 வயதுக்கு மேலானவரை முதியோர் என்கிறோம். இன்று இந்தியர்களின் சராசரி ஆயுள், 62 வயது. நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தச் சராசரி, நாற்பதற்கும் கீழே இருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரட்டிப்பாயிருக்கிறது.

இன்று முதியோர், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். அக்காலத்தில் சாதாரண நோய் நொடியிலேயே முதியோர் இறக்கும் நிலைமை இருந்தது. இன்று 60 வயதில் மாரடைப்பு வந்தாலும் அவரைக் காப்பாற்ற முடிகிறது. எலும்பு முறிந்தால் குணமாக்க முடிகிறது. மனிதன், இறப்பைப் பற்றிக் கவலைப்படாத காலம் வந்துவிட்டது. வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது.

இந்தியாவில் 100 கோடி பேரில் முதியோர், 7 கோடிபேர். இன்னும் 5 ஆண்டில் இது, 14 கோடியாகும் வாய்ப்பிருக்கிறது. இந்தியர்களின் சராசரி ஆயுள் வளர்ந்தாலும் 100 வயதுக்கு மேல் இருப்போர் மிகவும் குறைவு.

?: முதியோருக்கு இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

நடராஜன்: முதியோரில் 70 சதம் பேர் கிராமத்தில் வசிக்கிறார்கள். நகரத்தில் மட்டுமில்லை; கிராமத்திலும் கூட்டுக் குடும்பம் உடைந்து விட்டது. மூன்றில் ஒரு பங்கு முதியோர், வீட்டுக்கு வெளியே வாழ்கிறார்கள். வேலை வாய்ப்பு, குடும்பப் பிரச்சினை, இடவசதிக் குறைவு, பணமின்மை ஆகிய காரணங்களால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

கண் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாமல், தன் வேலையைத் தானே செய்யும் ஆரோக்கியமில்லாமல் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். 12 சதம் முதியோர், முழுமையாக மற்றவரின் உதவியில் வாழ்கிறார்கள்.

முதியோரைப் பாதிக்கும் மிக முக்கிய பிரச்சினை, வறுமை. 40 சதம் முதியோருக்கு எந்தவித வருவாயும் இல்லை. கிராமத்தில் உள்ள முதியோருக்கு ஓய்வூதியமோ, வைப்பு நிதியோ கிடையாது. வாரந்தோறும் மேல்மருவத்தூரில் பார்க்கிறேன். முதியோர் பலருக்குக் கஞ்சி, கீரை, தேநீர் மட்டுமே கிடைக்கின்றன. இதுவே சாப்பாடு. கோயில் திருவிழா ஏதேனும் வந்தால்தான் நல்ல உணவு கிடைக்கும்.

முதியோருக்கு மன அழுத்தம், அதிகமாகி விட்டது. மற்றவர்கள், தங்களைக் கவனிக்க வில்லை, தம் பேச்சைக் கேட்கவில்லை என்ற உணர்வால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

ஆண்களைவிடப் பெண்கள், சராசரியாக இரண்டு ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழ்கிறார்கள். இதனால் பெண் விதவை எண்ணிக்கை கூடுகிறது. மூன்று பெண் விதவைக்கு ஓர் ஆண்விதவை (3:1) என்ற விகிதம் இருக்கிறது.

?: முதியோருக்கு என்னென்ன நோய்கள் வருகின்றன?

நடராஜன்: முதுமை, நோய்களின் மேய்ச்சல் காடு எனப்படும். முதியோருக்கு சத்துணவுக் குறைவு, கண்புரைநோய், நெஞ்சில் சளி, கை-கால் புண், கொப்புளம், தோல்நோய்கள், காசநோய், மூட்டுவலி, ரத்தஅழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, மலச்சிக்கல், எலும்பு வலுவிழத்தல் போன்றவை வருகின்றன.

ஒரு நோய்க்குச் சிகிச்சைபெற வந்தாலும் அவரிடம் பல நோய்களைக் கண்டுபிடிக்கிறோம். பல நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களுக்கும் மருந்து தரமாட்டோம். மருந்து, முதுமையின் விரோதி. மருந்தின்றிக் குணப்படுத்தப் பார்ப்போம்.

?: மருந்தின்றி என்னென்ன நோய்களைக் குணப்படுத்தலாம்?

நடராஜன்: மூட்டுவலியென்று வந்தால் உடல் பருமனைக் குறைக்கச் சொல்வோம்.

அதிக ரத்தஅழுத்தத்தைக் குறைக்க, உப்பைப் குறைக்க வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.

நீரிழிவுக்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் தேவை.

சத்துணவுப் பற்றாக்குறையிருந்தால் ராகி, கீரை, காளான், கோதுமை, ஏதாவது பழம், 2 கோப்பை பால் உட்கொள்ளவேண்டும்.

?: என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம்?

நடராஜன்: வேகமாக நடக்கலாம். 3 முதல் 5 கி.மீ அல்லது 45 நிமிடத்திலிருந்து ஒரு மணிநேரம் நடக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல், ஆசனம் ஆகியவையும் பயன்தரும்.

பெண்கள், பாய்விரித்துத் தரையில் படுத்து உடற்பயிற்சி செய்யலாம்.

பக்கவாதம் வந்தோர்- நடக்க முடியாதோர் ஆகியோர், உட்கார்ந்தே உடற்பயிற்சி செய்யலாம். அரைமணி நேரம் தொடர்ந்து செய்யமுடியாவிடில் விட்டுவிட்டுச் செய்யலாம். காலை-மாலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.

?: முதியோர் மருத்துவம் என்பது என்ன?

நடராஜன்: குழந்தை மருத்துவத்தைப்போல முதியோர் மருத்துவம், ஒரு தனித்துறை. 1914இல் டாக்டர் நாய்ஸ்சர் என்பவர், இதைத் தொடங்கினார். உடல்நிலை மட்டுமின்றி மனநிலை, குடும்பநிலை, சமூகநிலை என அனைத்தையும் ஆராய்ந்து அதற்கேற்பச் சிகிச்சை அளிக்கவேண்டும். இது ஒரு தனிக் கலை.

?: முதியோருக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

நடராஜன்: நடுத்தர வயதில் பணம் சேமித்துவிட வேண்டும். சிக்கனமாக இருக்கவேண்டும். பிள்ளைகளுக்குத் தாம்தூம் என்று கல்யாணம் செய்யக்கூடாது. பையனையோ பெண்ணையோ எந்தப் பெற்றோரும் நம்பாதீர்கள். உங்கள் சொத்தை நம்புங்கள். சொத்துக்காகவாவது சொந்தம் இருக்கும். கடைசி வரையில் சொத்தைப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டாம். நகைகளை எல்லாம் லாக்கரில் (பாதுகாப்புப் பெட்டகம்) வையுங்கள். நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளருங்கள். பொழுதும் போகும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

?: முதியோரைத் தத்தெடுக்கலாமே?

நடராஜன்: ஆம். அவசியம் செய்யவேண்டும். “ஹெல்ப் ஏஜ் இந்தியா’’ அமைப்பில் அப்படி ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். ஒரு முதியவருக்குப் பத்தாண்டு ஆகும் செலவைப் பெற்றுப் பாதுகாத்து வருகிறார்கள். பள்ளி - கல்லூரி மாணவர்கள், முதியோர் இல்லம் சென்று உதவிசெய்ய வேண்டும். முதியோருக்கு உதவுதல், ஓர் இயக்கமாக வளரவேண்டும்.

நேர்காணல்: அண்ணா கண்ணன்

Monday, May 10, 2004

திருமணம் : சில அனுபவங்கள்

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அண்ணா கண்ணன்

நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை.
-ரோட்னி டேஞ்சர்ஃபீல்டு

இரண்டு மனைவியருடனும் எனக்குத் துரதிருஷ்டம்தான். முதலாமவள் விலகிவிட்டாள். இரண்டாமவளோ கூடவே இருக்கிறாள்.
-பாட்ரிக் முர்ரே

மகிழ்ச்சியான மணவாழ்வை விரும்பும் கணவன், தன் வாயை மூடவும் காசோலைப் புத்தகத்தைத் திறந்துவைக்கவும் கற்கவேண்டும்.
-கிரௌச்சோ மார்க்ஸ்

தன் எதிரியுடன் உறங்கும் யுத்தம், திருமணம் மட்டுமே.
-யாரோ

திருமணத்துக்குப் பிறகு, கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. ஆனால், சேர்ந்தேவசிக்கிறார்கள்.
- ஹேமந்த் ஜோஷி

எப்படியானாலும் திருமணம் புரிந்து கொள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்வாய். அப்படியில்லாவிடில் தத்துவஞானி ஆகிவிடு வாய்.
- சாக்ரடீஸ்

என்னால் பதில் அளிக்கவே முடியாத ஒரு மாபெரும் கேள்வி. ""ஒரு பெண் விரும்புவது என்ன?''
-புரூட்

கடவுள், மனிதனிடம் நெருப்பை அளித்தார். மனிதன், தீயணைக்கும் கருவியைக் கண்டுபிடித்தான். அவர், காதலை அளித்தார். அவன், திருமணத்தைக் கண்டுபிடித்தான்.
-யாரோ

என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு.
-யாரோ

நான் தீவிரவாதத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
-சாம் கினிசன்

மின்னணு வங்கியைவிட மிக வேகமாகப் பணத்தைப் பரிமாற்ற ஒரு வழி உண்டு. அதன் பெயர், திருமணம்.
-ஜேம்ஸ் ஷோல்ட் மெக்காவ்ரன்

ஒரு வெற்றிகரமான திருமணத்தின் ரகசியம், அதிக நேரம் வீட்டில் இல்லாதிருப்பதே.
-காலின் சாப்மன்

Saturday, May 08, 2004

வளர்ந்த இந்தியா : நாம் என்ன செய்யவேண்டும்?

- மாண்புமிகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் - அண்ணா கண்ணன்

இந்தியாவுக்காக என்னிடம் மூன்று இலக்குகள் உண்டு. நமது மூவாயிரம் ஆண்டுக்கால வரலாற்றில் உலகெங்கிலுமிருந்து மக்கள் இங்கு வந்தார்கள்; நமக்குள் பிளவுண்டாக்கினார்கள்; நமது நிலங்களைக் கைப்பற்றினார்கள்; நமது மனங்களை வெற்றி கொண்டார்கள். அலெக்சாண்டரிலிருந்து கிரேக்கர்கள், துருக்கியர்கள், மொகலாயர்கள், போர்த்துகீசியர்கள், பிரித்தானி யர்கள், பிரெஞ்சு மக்கள், டச்சுக்காரர்கள். எல்லோரும் இங்கு வந்தார்கள்; நம்மைக் கொள்ளை அடித்தார்கள்; நம் செல்வங்களை யெல்லாம் எடுத்துச் சென்றார்கள். இத்தனைக்கும் இந்தத் தீங்குகளை நாம் எந்த நாட்டுக்கும் இழைத்ததில்லை. நாம் எவரையும் வெற்றிகொண்டதில்லை.

நாம் அவர்களுடைய நிலத்தையோ, கலாச்சாரத்தையோ, வரலாற்றையோ, கைப்பற்றியதில்லை. நமது வாழ்க்கை முறையை அவர்கள் மீது திணிக்க முயன்றதில்லை. ஏன்? நாம் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிப்பவர்கள். எனவேதான் என் முதலாவது இலக்காகச் சுதந்திரம் அமைகிறது. சுதந்திரப் போரைத் தொடங்கிய 1857-இல் இந்தியா தன் முதல் இலக்கைப் பெற்றது. இந்தச் சுதந்திரத்தை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும்; வலுப்படுத்த வேண்டும்; வளர்க்க வேண்டும். நாம் சுதந்திரமாக இல்லாவிடில் எவர் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள்.

இந்தியாவுக்கான என் இரண்டாவது இலக்கு, வளர்ச்சி. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் வளரும் நாடாக இருக்கிறோம். நாம் நம்மை வளர்ந்த நாடாக்குவதற்கு இதுவே சரியான தருணம். ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதக் கணக்குப்படி உலகின் முன்னணி நாடுகள் ஐந்தனுள் இந்தியாவும் ஒன்று. பல துறைகளில் நாம் 10 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தைப் பெற்றிருக்கிறோம். நமது வறுமை நிலை மாறி வருகிறது. இன்று நமது சாதனைகள் உலக அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன. ஆனால், நம்மை வளர்ந்த நாடாகக் காணு வதற்குரிய தன்னம்பிக்கையே இப் போதைய பற்றாக்குறையாய் இருக்கிறது. நான் சொல்வது தவறா?

மூன்றாவது இலக்கு, என்னிடம் உண்டு. இந்தியா, உலக அளவில் எழுந்து நிற்கவேண்டும். இந்தியா எழுந்திருக்காவிட்டால் எவரும் நம்மை மதிக்கமாட்டார்கள். வலிமையே வலிமையை மதிக்கும். படைவலிமை மட்டு மல்லாது பொருளாதார வலிமை யையும் நாம் பெற்றாகவேண்டும். இரண்டும் இணைந்து வளர வேண்டும்.

ஏன் இங்குள்ள ஊடகம், எதிர்மறையாக இருக்கிறது? நமது சாதனைகளையும் சொந்த வலிமை களையும் அங்கீகரிக்க ஏன் நாம் கலங்குகிறோம்? நம்முடையது ஒரு மகத்தான நாடு. நம்மிடம் வியப் பூட்டும் பற்பல வெற்றிக் கதைகள் உண்டு. ஆனால், அவற்றை அங்கீ கரிக்காமல் புறக் கணிக்கிறோம். ஏன்? பால் உற்பத்தியில் நாம் முதல் இடத்தில் இருக்கிறோம். விரும்பியவாறு இயக்கும் செயற்கைக் கோள்களில் நாம் முதலிடம் வகிக்கிறோம். கோதுமை உற்பத்தியிலும் அரிசி உற்பத்தியிலும் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்.

டாக்டர் சுதர்சனைப் பாருங்கள். பழங்குடியினர் கிராமங்களைத் தன்னிறைவும் தன் இயக்கமும் கொண்டவையாக அவர் மாற்றிக் காட்டியிருக்கிறார். இவைபோன்ற இலட்சக்கணக்கான சாதனைகள் இருக்கின்றன. ஆனால் நமது ஊடகங்கள், அழிவுகள், தோல்விகள், கெட்ட செய்திகளையே மீண்டும் மீண்டும் காட்டுகின்றன. டெல் அவிவ் நகரில் இருந்தபோது நான் இஸ்ரேலிய செய்தித்தாள் ஒன்றை வாசித்துக்கொண்டி ருந்தேன். அதற்கு முதல் நாள்தான் ஏராளமான தாக்குதல் களும் குண்டுவீச்சுகளும் மரணங்களும் நிகழ்ந்திருந்தன. ஹமாஸ் இயக்கம், முழுதும் தடுக்கப்படும் நிலையில் இருந்தது. ஆனால், அந்தச் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் படத்துடன் ஒரு செய்தி இருந்தது. ஒரு யூத கனவான், ஐந்து ஆண்டுகளில் தன் பாலை நிலத்தைப் பழத்தோட்டமாகவும் மாபெரும் தானிய விளைநிலமாகவும் மாற்றியிருந்த காட்சியை அதில் கண்டேன். அது, ஒவ்வொருவரையும் விழிப்படையச் செய்யும் அகத்தூண்டுதல் மிக்க புகைப்படம். இரத்தத்தை உறையவைக்கும் படுகொலைகள், குண்டுவீச்சுகள், மரணங்கள் பற்றிய செய்திகள், செய்தித்தாளின் உள்ளே இருந்தன; மற்ற செய்திகளை மறைத்தபடி.

இந்தியாவில் நாம் மரணம், நோய், பயங்கரவாதம், குற்றம் ஆகியவை பற்றி மட்டுமே படிக்கிறோம். ஏன் நாம் இவ்வளவு தூரம் எதிர்மறையாக இருக்கிறோம்? இன்னொரு கேள்வி: ஏன் நாம் வெளிநாட்டுச் சிந்தனைகளால் நிரம்பி யிருக்கிறோம்? நமக்கு வெளிநாட்டுத் தொலைக்காட்சிகள் வேண்டியிருக்கின்றன; வெளிநாட்டுச் சட்டைகள் நமக்குத் தேவை; வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை நாம் நாடியிருக்கிறோம்.

ஏன் நமது அனைத்தும் இறக்குமதிகளால் நிறைந் துள்ளன? தன்னம்பிக்கையிலிருந்து சுயமரியாதை உருவாகும் உண்மையை நாம் ஏன் உணரவில்லை?

நான் இந்த ஐதராபாதில் இந்த உரையை ஆற்றவரும் போது, 14 வயதுச் சிறுமி ஒருத்தி, என் கையொப்பத்தைக் கேட்டாள். நான் அவளிடம் "உன் வாழ்வின் இலக்கு எது?' என்று கேட்டேன். "நான் வளர்ந்த இந்தியாவில் வாழ விரும்புகிறேன்' என்று அவள் சொன்னாள். அவளுக்காக நீங்களும் நானும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கவேண்டும். இந்தியா ஒரு வளரும் நாடில்லை; மிக மிக வளர்ந்த நாடு. இதை நீங்கள் எல்லோருக்கும் அறிவியுங்கள்.

உங்களால் 10 நிமிடங்கள் ஒதுக்கமுடியுமா? இப்போது சொன்னதற்குப் பழிக்குப் பழிவாங்க என்னை அனுமதியுங்கள். நாட்டுக்காக ஒரு பத்து நிமிடங்கள் உங்களிடம் உண்டா? ஆமெனில் தொடர்ந்து படியுங்கள். இல்லாவிட்டால் உங்கள் விருப்பம்.

நமது அரசு திறமையற்றது என நீங்கள் சொல்கிறீர்கள்.
நமது சட்டங்கள் மிகவும் பழையவை என நீங்கள் சொல்கிறீர்கள். நமது நகராட்சி, குப்பைகளை அள்ளுவ தில்லை என நீங்கள் சொல்கிறீர்கள்.

தொலைபேசிகள் வேலை செய்வதில்லை; ரெயில் வண்டிகள் சிரிப்பூட்டுகின்றன; நம்முடையவை, உலகிலேயே மிகவும் மட்டமான விமானப் போக்குவரத்து, அஞ்சல்கள் உரியவரைச் சென்றடைவதேயில்லை.... என்றெல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள். நாடு பள்ளங்களால் நிரம்பியுள்ளதாகவும் நாய்களுக்கு உணவாகி வருவதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள். இவற்றுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?

சிங்கப்பூரில் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் பெயரைக் கொடுங்கள். உங்கள் முகத்தைக் கொடுங்கள். நீங்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உலகத் தரத்தில் இருக்கிறீர்கள். சிங்கப்பூரில் சிகரெட்டுத் துண்டுகளைச் சாலைகளில் வீசி எறிய முடியாது. கடைகளின் முன்நின்று சாப்பிட முடியாது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பழத்தோட்டச் சாலை வழியே நீங்கள் காரோட்டினால் நீங்கள் 5 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.60/-) செலுத்துவீர்கள். அவர்களுடைய மறைமுக முடிச்சுகளுக்காகப் பெருமையடைவீர்கள்.

உணவகத்திலோ பேரங்காடியிலோ அதிக நேரம் இருக்கவேண்டி இருந்தால், உங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து வாகன நிறுத்துச் சீட்டைப் புதுப்பித்துச் செல்வீர்கள். சிங்கப்பூரில் நீங்கள் ஏதும் சொல்வதில்லை. மற்றவரை நோக்கி உங்கள் விரல் நீளுவதில்லை. துபாயில் ரமளான் காலத்தில் பொது இடத்தில் உண்ணுவதற்கு நீங்கள் துணிவதில்லை.

ஜெட்டாவில் தலையை மூடாமல் வெளியே செல்ல நீங்கள் துணிவதில்லை.

"என் எஸ்.டி.டி. மற்றும் ஐ.எஸ்.டி. அழைப்புகளுக்கான கட்டணத்தை வேறெவர் தொலைபேசிக் கட்டணத்தி லேனும் சேர்த்துவிடுங்கள்' என இலண்டன் தொலைபேசி இணைப்பக ஊழியரை, 10 பவுண்டுகளுக்கு (ரூ.650/-) நீங்கள் விலைக்கு வாங்கத்
துணிவதில்லை.

வாஷிங்டனில் மணிக்கு 55 மைல்களுக்கு மேலான வேகத்தில் (மணிக்கு 88 கி.மீ) நீங்கள் பயணிக்கத் துணிவதில்லை. அப்படிப்போய், போக்குவரத்துக் காவலரிடம் மாட்டினால் "ஜான்தா ஹை மெய்ன் கவுன் ஹுன்' (நான் யாரென்று உனக்குத் தெரியுமா?) என நீங்கள் கேட்பதில்லை. "நான் இப்பேர்க்கொத்தவரின் மகன். இந்தா இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்துக் கொண்டு தொலைந்து போ' எனச் சொல்ல நீங்கள் துணிவதில்லை.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் கடற்கரைகளில் குப்பைத் தொட்டி அல்லாத வேறெங்கும், காலிசெய்த தேங்காய்களைத் தூக்கிப்போட நீங்கள் துணிவதில்லை.

டோக்கியோவின் வீதிகளில் நீங்கள் ஏன் வெற்றிலை எச்சிலைத் துப்புவதில்லை?

பாஸ்டனில் தேர்வெழுத ஆள்மாறிகளை நீங்கள் அனுப்புவதில்லை. போலிச் சான்றிதழ்களை நீங்கள் விலைக்கு வாங்குவதில்லை. இப்போதும் நாம் உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

வெளிநாடுகளில் வெளிநாட்டு முறையை ஏற்று மதிக்கிற நீங்கள் உங்கள் மண்ணில் மதிப்பதில்லை. இந்திய மண்ணில் இறங்கிய நொடியிலேயே காகிதங்களையும் சிகரெட்டுத் துண்டுகளையும் வீசி எறிகிறீர்கள். வேறொரு நாட்டின் உணர்வுபூர்வமான, பாராட்டத்தக்க குடிமகனாக உங்களால் இருக்க முடிகிறதெனில் ஏன் அதேமாதிரி இந்தியாவில் இருக்கமுடியவில்லை?

நாம் வாக்களிக்கச் செல்கிறோம்; ஓர் அரசைத் தேர்ந்தெடுக்கிறோம்; அதன் பிறகு நம் எல்லாப் பொறுப்பு களையும் இழந்து விடுகிறோம். நமது பங்களிப்பு ஒட்டுமொத்த மாக மோசமாக இருந்த போதும் அரசு எல்லாவற்றையும் செய்ய வேண்டு மென்று எதிர்பார்க் கிறோம். ஆனால், எல்லா இடங்களிலும் குப்பைகளைப் போடுவதை நாம் நிறுத்தப்போதில்லை. தெருவில் கிடக்கும் ஒரு துண்டுச் சீட்டையும் எடுத்துக் குப்பைத் தொட்டியில் நாம் போடப்போவதில்லை. ரெயில்வே துறை, தூய கழிவறைகளை அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், முறையாகக் கழிவறை களைப் பயன்படுத்துவதை நாம் கற்கப் போவதில்லை. இந்தியன் ஏர்லைன்சும் ஏர் இந்தியாவும் சிறந்த உணவையும் கழிவறை வசதியையும் அளிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், ஒரு சிறிய வாய்ப்பிலும் அற்பசொற்பமாகத் திருடுவதை நாம் விடப்போவதில்லை. இது, பொதுப்பணிகள் புரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும். இதுவே எரியும் பிரச்சினைகளான பெண்கள், வரதட்சிணை, பெண் குழந்தை.... மற்றும் பிறருக்கு வரும்போது நாம் சத்தமாக விவாதிக்கிறோம்; எதிர்க்கிறோம். ஆனால், நமது வீட்டுக்குள், இதற்கு எதிர்மாறாகச் செயல்படுவதைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறோம். இதற்கு நாம் கூறும் காரணம் என்ன? ""ஒட்டுமொத்த சமூகமும் மாற வேண்டும்.'' என் மகனின் வரதட்சணை வாங்கும் உரிமையைப் பேணுவேனாயின் இது
எப்படி சாத்தியம்? ஆக, இந்த அமைப்பை மாற்றப் போவது யார்?

ஒரு சமூக அமைப்பானது, எப்படி இருக்கவேண்டும்? நமக்கு மிகவும் வசதியானதாக, நமது அண்டை வீட்டாருக்கு வசதியாக, மற்ற வீடுகளுக்கு, பிற மாநகரங்களுக்கு, பிற சமுதாயங்களுக்கு மேலும் அரசுக்கு வசதியாக இருக்கவேண்டும். ஆனால் நிச்சயமாக, எனக்கும் உங்களுக்கும் அல்ல. ஒரு பாதுகாப்பான பட்டுப்பூச்சிக் கூட்டுக்குள் நம்மையும் நமது குடும்பங்களையும் பூட்டிக் கொண்டு, தொலைதூரத்தில் உள்ள நாடுகளைப் பார்த்தபடி, திருவாளர் தூய்மைக்காகக் காத்துக்கொண்டு, ஒரு கம்பீரமான கரத்தின் வழியே அதிசயங்கள் நிகழ்வதை எதிர்பார்த்திருக்கிறோம். அல்லது நாட்டை விட்டு ஓட்டமெடுக்கிறோம்.

சோம்பல் நிறைந்த கோழையைப்போல அச்சங்களால் "நாய்வேட்டை'யாடப்பட்டு நாம் அமெரிக்காவுக்கு ஓடுகிறோம். அவர் களின் புகழில் சுகமாகக் குளிர்காய்ந்தபடி அவர்களின் அமைப்பைப் போற்றுகிறோம். நியூயார்க், பாதுகாப்பை உறுதிசெய்யாத போது, நாம் இங்கிலாந்துக்கு ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அனுபவித்தபிறகு, அடுத்த விமானத்திலேயே வளைகுடாவுக்குப் பறக்கிறோம். வளை குடாவில் போர் வந்துவிட்டால் இந்திய அரசு நம்மைக் காப்பாற்றித் தாயகத்துக்கு அழைத்து வரவேண்டுமென்று வற்புறுத்து கிறோம். எல்லோரும் துஷ்பிர யோகம் செய்கிறோம். நாட்டைக் கற்பழிக்கிறோம். நமது சமூக அமைப்பை மேம்படுத்த, எவரும் சிந்திக்க வில்லை. நமது மனசாட்சி, பணத்துக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது.

அன்பார்ந்த இந்தியர்களே! இந்தக் கட்டுரை, அதிகபட்ச சிந்தனைகளைத் தூண்ட வேண்டும்; நம்மை மகத்தான ஆத்ம பரிசோதனைக்கு அழைக்கவேண்டும்; நமது மனசாட்சியைக் குத்தவும் வேண்டும்..... அமெரிக்கர்களுக்கான ஜே.எஃப். கென்னடியின் சொற்களை இந்தியர்களுக்காக நான் எதிரொலிக்கிறேன்....

அமெரிக்காவும் இதர மேலை நாடுகளும் இன்றுள்ள நிலைக்கு இந்தியாவை உயர்த்த நாம் என்ன செய்யவேண்டும்? இந்தியாவுக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்று உங்களையே கேளுங்கள். அதைச் செய்யுங்கள்.

இந்தியாவிற்கு நம்மிடமிருந்து எது தேவையோ அதைச் செய்வோம். நகைச் சுவைகளுக்கும் திணிப்பு அஞ்சல்களுக்கும் மாற்றாக, எல்லா இந்தியர்களுக்கும் இந்த மின்னஞ்சலை மடைமாற்றம் செய்யுங்கள். நன்றி.

Friday, May 07, 2004

ப்ரியம் எழுதிய அலைகளின் மீதொரு நிழல்

மிக வசதியாக ஆசிரியர் அல்லது வங்கி ஊழியராய் இருந்துகொண்டு இலக்கியம் படைப்பது ஒரு வகை. இங்கு உபரி நேரம் கிடைக்கும். ஆனால், எழுத்தோடு தொடர்பில்லாத - கடும் உழைப்பை வேண்டும் பணிகளில் இருப்போர் இலக்கியம் படைப்பது, வேறொரு வகை. தையல்காரராய் இருந்தபடி கவிதை படைத்துவரும் ப்ரியம், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்.

ப்ரியம் கவிதைகளின் முதல் தொகுப்பு, அலைகளின் மீதொரு நிழல் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இதில் 82 கவிதைகள் உள்ளன. இதன் முதல் கவிதையே பள்ளியிருந்து நின்று தையல் வேலைக்கு வந்தது பற்றித்தான்.

பிரமிளின் தொடர்ச்சியாய்த் தன்னைக் கருதும் ப்ரியத்தின் மொழி, மிகவும் எளிமையானது. எவரும் புரிந்துகொள்ளக் கூடியது.

பூனை எப்போது திருட்டுப் பூனையாயிற்று? என்ற இவரின் கேள்வியே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

கவிதையைக் காட்சிப்படுத்துவதில் ப்ரியம், பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பல கதைகள் அமைந்திருக்கின்றன. "சீரியல் லைட்"டில் சித்திரம் வரையும் உத்தி உண்டு. அரசியல் மற்றும் கோயில் விழாக்களில் இது,
இன்றியமையாததாகிவிட்டது. அவற்றுக்கு மின்சாரம் எங்கிருந்து போகிறது என்பதை யாருமே கண்டுகொள்வதில்லை.

பயமுறுத்தும் மாகாளியை, சீரியல் விளக்குகளில் அமைக்கிறான் ஒருவன். பயமில்லையோ அவனுக்கு?

ஆயிரம் ஓயர் சூடிய மாகாளியிடமும் உன்னிடமும்
இணைப்புகளில்
அடிக்கடி பணியாற்றும் தோழனை
அழைத்துக் கேட்டேன்
என்ன தோழா இந்த வேலை...
ஓ... அதுவா ஜூஜூபி
என்கிறான்.

பேச்சு வழக்கைப் பயன்படுத்திக் கவிதைக்கு உயிர்த்துடிப்பு ஊட்டுகிறார், ப்ரியம்.

நேரில் நிற்கிற தேவதையைவிட ஒரு கற்பனைப் பெண், மிகவும் கவர்ச்சியானவள்.

பாரதியின் கண்ணம்மா, கலீல் ஜிப்ரானின் செல்மா, கலாப்ரியா & நகுலனின் சுசீலா ..... எனப் படைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணை முன்வைத்துப் படைப்பை வெற்றிகரமாக நகர்த்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் கவிஞர் பிரியம் அவர்களின் சௌம்யா என்ற பாத்திரம், படிப்பவர் மனத்துள் ஒரு சுகமான கதகதப்பை ஏற்படுத்துகிறது.

"பாலினம்" என்ற கவிதையில் முதல் அறிமுகம்.

"மல்லிகை பறிக்கும் சாக்கில் நாற்காலி மீது
நிற்கும் சௌம்யா தன் சட்டைக்குள்
முலைகளை மூடி முகத்தைத் திருப்புவாள்"


அதன் பிறகு சௌம்யா வரும் இடமெல்லாம் அவள் நாற்காலி மீது நிற்கும் காட்சியை மறக்க முடியவில்லை.

"அறைக்குள் யாரேனும் நடமாடுகிறார்களா
பாரேன் என்கிறேன்
யாரிருக்கப் போகிறார்கள் உன்னைத் தவிர
என்கிறாள் சௌம்யா"
(அவன்)

"கிரவுண்டில் ஸ்கிப்பிங்
பிராக்டிசின்போது சௌம்யாவை
யாரும் பார்க்கக்கூடாது...
(சூர்யம்)

"கனியா முலைகளை கவனி
திரட்சி கொண்ட யோனிப் பிசுபிசுப்பை அறி
சதை புரளும் யுத்தத்தில் வெற்றி
கொள்ளேன் எûத் தாழம்பூ வாசத்துடன் தழுவுகிறாய்"

"சௌம்யா! உன் மர்மக் கைகளின்
ரேகைகளில் பதிந்த வாசகத்தை
வாசிக்கப் பழகு"
(அ. விஸ்வ மித்திரம்)

"பம்பு செட்டில் குளிக்கப் போன
சௌம்யாவை
நனைய, நனைய, சீண்டி...
வரப்போர மேட்டில் தலைப்பாகை தெரிந்தவுடன்
தலைதெறிக்க ஓடிவந்தாச்சு"
(லீவு முடிந்து பள்ளி திரும்பும் படலம்)

"ஒரு பதில் சொல்லேன் சௌம்யா" என்ற தலைப்பிலேயே ஒரு கவிதை உள்ளது. அது,

"திரும்பத் திரும்ப இக்கவிதைகளை
காணும் நீ என்னதான்
சொல்லப்போகிறாய்"
என முடிகிறது.

நேரடியாகப் பெயர் வராவிட்டாலும் பெண்ணின் உறுப்பெழில் வர்ணனை வரும் இடமெல்லாம் சௌம்யாவின் ஞாபகம் வருகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று.

"நான் மலர்ந்துவிட்டேன் என
வாயாடி மலரிரண்டு வெள்ளை பனியனுக்குள்
அலட்டுகின்றன"
(நாய்க்குடை)

சௌம்யாவின் அழகை மட்டுமில்லை, கோவிலில் இருக்கும் காளியம்மையின் பேரழகையும் பிரியம் கண்டிருக்கிறார்.

"மஞ்சளரைச் சீலைக்குள் மெருகு குலையா
முலைகள் பொங்க
இடைமீறும் பிருஷ்டங்கள் தரை பரவி
வலக்காலை நடுவில் பொருத்திய
வண்ணம்
வனப்புடன் தான் அமர்ந்திருக்கிறாள்.
வந்தபாடில்லை பரமேச்வரன்!"
(அம்மை)

"மறுசிருஷ்டி" கவிதையில், கோரக் கற்சிலையாய் நின்ற காளிக்குச் சுடிதார். துப்பட்டா, ஷாம்பு குளியல், ஒற்றை ரோஜா, குதிகால் உயர்ந்த காலனி அணிவித்து நவநாகரிகப் பெண்ணாய் மாற்றியிருப்பது எவரும் செய்யாத புதுமை.

பெண் வர்ணனை மட்டும்தான் இந்தப் புத்தகத்தில் இருக்கிறதா? அப்படியில்லை. விரிந்து பரந்த உலகைக் குறும்படங்களாய்த் தன் கவிதைகளில் பதிவு செய்துள்ளார், ப்ரியம்.

தேநீரைப்பற்றி ஒரு கவிதை படைத்துள்ளார். ஒவ்வொரு தேநீர்க் கடையிலும் ஒட்டிவைக்கப்படவேண்டிய அந்தக் கவிதை.

"தேநீர் வாழ்க!
தேநீர் குடித்தவர் வாழ்க!
தேநீர் கொடுத்தவர் வாழ்க!
தேநீரால் தொடங்கிய
நட்பும் உறவும் காதலும் வாழ்க!
தேநீரைப் பருகாது விலகுபவர் ஒழிக!
தேநீருக்காக இனி கவிதைகள் எழுதுபவர் யாவரும் வாழ்க!
தேநீர் ஒன்றே பேராதரவாம்
எளியோர்க்கு. அதனால் தேநீர்க்
கடைகள் வாழ்க.


இதேபோன்று மிதிவண்டியின் பெருமை களைப் பாடும் ஒரு கவிதை உள்ளது. அது, எல்லா மிதிவண்டிக் கடைகளிலும் ஒட்டிவைக்க ஏற்றது.

"சைக்கிள் ஒரு தத்துவமாம். பூக்கள்போல அதுவும் ஒன்றாம். எளிமையான வாழ்விற்கு எடுத்துக்காட்டாம்.
சைக்கிள்களால் வாழ்பவர் புவியில் பலகோடி. சைக்கிளைப்போல வாழ்பவர் புவியில் சிலகோடி. சைக்கிளை நீயும் வாழ்த்துப்பா" (வாழ்த் துப்பா) என அக்கவிதை முடிகிறது.

எளிய தமிழில் எதார்த்த வாழ்வை எடுத்துரைக்கும கவிஞர் பிரியம் அவர்களின் கவிதைகள், அனைவரும் படித்து மகிழத்தக் கவை. நவீன தமிழுக்கு அளவெடுத்துக் கொள்ளுங்கள், இந்த நூலிலிருந்து.


நூல்: அலைகளின் மீதொரு நிழல்
ஆசிரியர்: பிரியம்
விலை: ரூ. 35/-

கிடைக்குமிடம்: எழில், 21, மாதவரம் நெடுஞ்சாலை, (வடக்கு) பெரம்பூர், சென்னை - 600 011.


வாரசுரபி - மே 14, 2004

Thursday, May 06, 2004

பன்முகநாதன்

- அண்ணாகண்ணன்

தினத்தந்தியில் 40 ஆண்டுகள் செய்தி ஆசிரியராய் இருந்தவர்; புதின எழுத்தாளர்; வரலாற்று நூலாசிரியர் மனிதநேயம் மிக்க பண்பாளர்... எனப் பன்முகநாதனாய் விளங்குபவர், ஐ. சண்முகநாதன்.

“ஒரு தமிழன் பார்வையில் 20ஆம் நூற்றாண்டு’’ என்ற நூலில் மூலம் ஏற்கனவே இவர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்போது கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்வரை உலக வரலாறு என்ற புதிய நூலைப் படைத்துள்ளார். இது விரைவில் வெளிவர உள்ளது.

உலகம், இந்தியா, தமிழ்நாடு என 3 பகுதிகளாக இந்நூல் விரிந்துள்ளது. வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர்கள், சம்பவங்கள், நாடுகளைப் பற்றி எளிய நடையில் கதைபோல் விவரிக்கிறார் நூலாசிரியர்.

“மாவீரன் நெப்போலியன் சிறைவைக்கப் பட்ட ஹெலீனாத்தீவின் நீளம் 15கி.மீ அகலம் 10கி.மீ என்ற செய்தியை வாசிக்கும்போது அந்த மாமன்னன் ஆண்டது எத்தனை பெரிய நிலம் மாண்டது எத்தனை சிறிய நிலம் என்று அனுதாபத்தால் உச்சுக்கொட்டுகிறது உதடு.

“மனித குலத்தின் மாபெரும் விஞ்ஞானியான எடிசன், சின்ன வயதிலேயே ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் வல்லவராம்.

பறவைகள் அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதையும் பார்த்த எடிசன் தன் வயிற்றுக்கு அடியில் முட்டையை வைத்துக்கொண்டு படுத்திருந்தார். இந்தச் சுவையான செய்தி இதில் பதிவாகியிருக்கிறது.

கொடியவர் கொடுமைக்காரர் என்று அறியப்பட்ட ஔரங்கசீப் பொதுவாழ்வில் எவ்வளவு தூய்மையானவராக இருந்தார் என்பதற்கு அவர் எழுதிய கடைசி உயில் சாட்சியாகிறது.

என் கைகளால் தைக்கப்பட்ட குல்லாய்களை விற்ற பணம் 4 ரூபாய் 2அணா, என் தலையணைக்கு அடியில் இருக்கின்றது. நான் இறந்தபின் என் உடல்மீது போர்த்துவதற்குத் துணிவாங்க அதைப் பயன்படுத்துங்கள். “இந்த உயில் எழுத்து ஔரங்கசீப்பின் மீதிருந்த அத்தனை அழுக்கையும் சலவை செய்து விடுகிறது’’ என்று பத்மஸ்ரீ வைரமுத்து எடுத்துக் காட்டுகிறார்.

“இந்த உலக வரலாற்று நூலை எழுதி ஒரு புதிய வரலாறு படைத்திருக்கிறார்’’ என்ற
கி. வேங்கடசுப்பிரமணியனின் கூற்று, வழி மொழியத் தக்கது.

பல அரிய புகைப்படங்களும் சித்திரங்களும் இந்நூலுக்கு வலிமை சேர்க்கின்றன.

வெளியீடு :
பூம்புகார் பிரசுரம்
127 (ப.எண் 63)
பிரகாசம் சாலை (பிராட்வே)
சென்னை-600 108.




அமுதசுரபி - செப்டம்பர் 2003

Saturday, May 01, 2004

கவிஞர் முத்துலிங்கம்

காமம் இல்லாமல் இலக்கியமா?

“அன்புக்கு நான் அடிமை - தமிழ்ப்
பண்புக்கு நான் அடிமை ’’


“இது நாட்டைக் காக்கும் கை - உன்
வீட்டைக் காக்கும் கை’’
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை - இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை ’’


“மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ!!’’


உள்பட 1,500 திரைப்பாடல்களை எழுதிக் குவித்தவர், கவிஞர் முத்துலிங்கம். கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.


இந்தப் பாட்டிலக்கியப் பாவலரை “அமுதசுரபி’’ சார்பாகச் சந்தித்தோம்.



?: உங்கள் இளமைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்.

மு: சிவகங்கை மாவட்டம், கடபங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தேன். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தேன். பாடத்தில் மனப்பாடப் பகுதியாக, கம்பராமாயணத்தி லிருந்து ஆறு பாடல்கள் வைத்திருந்தார்கள். அதன் சொல்ஓசையில் ஈர்க்கப்பட்டு கம்ப ராமாயணம் முழுவதையும் படித்தேன். அர்த்தம் தெரிந்து படிக்கவில்லை. சந்தத்துக்காகவே படித்தேன். அந்த வாசிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை... எனத் தொடர்ந்தது.
என் 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினேன். அதைக் கல்கிக்கு அனுப்பினேன். ஆனால், திரும்பி வந்தது. திரும்பி வந்த அந்தக் கவிதை 44ஆண்டுகள் கழித்து கலைமகளில் அண்மையில் வெளியானது.

?: திரைத்துறைக்கு எப்போது வந்தீர்கள்?

மு: 1966இல் முரசொலியில் உதவி ஆசிரிய ராய்ச் சேர்ந்தேன். தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார். எம்.ஜி.ஆர் ரசிகனா யிருந்த நான், முரசொலியிலிருந்து விலகி அலை யோசையில் சேர்ந்தேன். அது, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழாக இருந்தது. அங்கிருந்தபோது பாலமுருகன் என்ற கதாசிரியரை பாடல் எழுத வாய்ப்பு கேட்டுச் சந்தித்தேன். அவர், டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். மாதவன் தயாரித்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தில் “தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’’ என்ற பாட்டை எழுதினேன்.
அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அலையோசையி லிருந்து விலகினேன். அதுதெரிந்து, எம்.ஜி.ஆர் கூப்பிட்டார். “விஷயம் கேள்விப்பட்டேன். பணம் கொடுக்கிறேன். வாங்கிக்கங்க’’ என்றார். “பணம்வேண்டாம். வேலை கொடுங்க’’ என்றேன். வற்புறுத்தினார். “உங்க அன்பு போதும்’’ என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் “கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’’ என்ற பாட்டில் தொடங்கினேன். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினேன்.
“இது நாட்டைக் காக்கும் கை - உன்
வீட்டைக் காக்கும் கை’’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை என்னையும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது. அவர் தம் சொந்தத் திறமையாலேயே ஆட்சிக்கு வந்தார். ராமருக்கு அணில்போல வேண்டுமானால் என் பங்கு இருக்கலாம்.

?: படத் தயாரிப்புக் குழுவினர் பாடல் வரிகளை மாற்றச் சொல்வது குறித்து....?

மு: இயக்குநர், இசையமைப்பாளர்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பதுதான் எங்கள் வேலை. அதற்குத்தான் பணம் கொடுக்கிறார்கள். வெளியே எழுதும் கவிதை இலக்கியம் வேறு. சினிமாவுக்கு எழுதும் பாட்டிலக்கியம் வேறு. எல்லாக் கவிஞர்களாலும் டியூனுக்கு எழுதிவிட முடியாது. இது, ஒரு தனிக் கலை. பெரிய இலக்கியக் கவிஞர்கள்-பலருக்கு வழிகாட்டி- முன்னோடி என்று சொல்லப் படுகிறவர்கள்கூட இதில் தோற்றுப்போயிருக் கிறார்கள்.

?: திரைப்படத் தயாரிப்புக் குழுவினரின் அன்றைய எதிர்பார்ப்பும் இன்றைய எதிர்பார்ப்பும் எப்படி உள்ளன?

மு: அன்று, பாட்டில் கருத்துகள்-கவிதை நயங்கள் இருக்கவேண்டும் என்பது இயக்குநர் - இசையமைப்பாளர் தயாரிப்பாளர்களின் எண்ணமாய் இருந்தது. இப்படத்தின் மூலம் ஏதேனும் ஒரு படிப்பினை ஊட்டவேண்டும் என்ற நினைப்பும் இருந்தது. இப்போது, அந்த நினைப்பெல்லாம் இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கேற்ப என்ன செய்தால் சரியாக இருக்குமோ அதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய கவிஞர்கள், நன்றாக எழுதக் கூடியவர்களே. ஆனால், அப்படி எழுதுவதற்கான காட்சிகள் படத்தில் இருப்பதில்லை.
அன்று, இசையமைப்பாளர்கள், வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இன்று, வாத்தியக் கருவிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் சில பாடல்கள் ரசனைக் குறைவாக கலாசாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. அது, கவிஞர்கள் குற்றமல்ல. இயக்குநர்; இசையமைப்பாளரின் பொறுப்பு.
ஆனால், இளையராஜா இசையமைப்பில் இப்படிப்பட்ட ரசனைக் குறைவான பாடல்கள் இடம்பெறாது.

?: இன்று, பாலுணர்வைத் தூண்டும் பாடல்கள் அதிகமாகிவிட்டதே?

மு: காமம் இல்லாமல் இலக்கியமும் இல்லை. கோயில் சிற்பங்களும் இல்லை. காமக் கலையின் பல நுணுக்கங்களை வெளிப்படுத்தவே ஒரிசாவில் ‘கோனாரக்’ சூரியக் கோயிலைக் கட்டியுள்ளார்கள். காமத்தை வெளிப்படுத்து வதில் ஒன்றும் தவறில்லை. அதை, இலைமறை காயாகச் சொல்லவேண்டும்.
“பாவையுடல் பாற்கடலில்
பள்ளிகொள்ள நான்வரவா?’’ எனப் புலமைப்பித்தனின் பாடலில் வரும். “தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழைகொண்ட மேகம்’’ என்ற பாடலின் சரண வரிகள், அவை. அர்த்தம் என்னவோ காமம்தான். ஆனால், ஆழ்வார் பாசுரம்போல் இருக்கிறது.
இப்போது அப்படியா எழுதுகிறார்கள்?

?: அரசவைக் கவிஞராக உங்கள் அனுபவம் எப்படி?

மு. காங்கிரஸ் ஆட்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, முதல் அரசவைக் கவிஞர் ஆனார். இராஜாஜி முதல்வரான பிறகு, அப்பதவியை நீக்கினார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கண்ணதாசனையும் புலமைப்பித்தனையும் அரசவைக் கவிஞர்கள் ஆக்கினார். அதற்குப் பிறகு நான் மட்டுமே அப்பதவியில் இருந்தேன். கலைஞர், ஆட்சிக்கு வந்ததும் ‘நானே ஒரு கவிஞன். என் ஆட்சியில் இன்னொரு கவிஞன் எதற்கு?’ எனக்கேட்டு அப்பதவியை ரத்து செய்தார். சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே அப்பெருமை கிடைத்தது. அரசவைக் கவிஞர் என்பது இலாகா இல்லாத அமைச்சரைப் போல. அவருக்கு கார், தொலைபேசி, உதவியாளர் ஆகிய வசதிகள் உண்டு. அது ஒரு அலங்காரப் பதவி மட்டுமே.

? எம்.ஜி.ஆருடன் உங்கள் அனுபவங்கள்?

மு. நிறைய இருக்கு. ஒருமுறை, சத்யா ஸ்டூடியோவில் ‘மீனவ நண்பன்’ படப்பிடிப்பில் அவரைப் பார்த்தேன். அப்போது எலலாப் பாடல் காட்சிகளையும் எடுத்து முடித்திருந்தார்கள். பாடலுக்குவேறு காட்சி இல்லையே என்று இயக்குநர் ஸ்ரீதரும் தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரும் சொன்னார்கள். கனவுப் பாடலாகப் போடுங்க என்றார்.
அப்படி எழுதியதுதான் ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல். தன்னை நம்பியவருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம், அது.
வேறொரு முறை ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில் பாட்டின் பல்லவி ஏற்கப்பட்டது. வேறு சரணம் வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். வாகினி ஸ்டூடியோவில் சுருட்டுப்பிடித்தபடி நடந்துகொண்டே யோசித்தேன். சுருட்டுப் பிடித்தவாறு நான் எழுதிய 200க்கும்மேலான பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. அப்படி அங்கே ஓரத்தில் இருந்த மூங்கில் தட்டிகளைப் பிடித்துக்கொண்டு சிறிது தூரம் நடந்தேன். அதைப் பார்த்த தயாரிப்பாளர் என்ன இவன்? மரத்தைப் பிடிக்கிறான் மட்டையைப் பிடிக்கிறான்; சரணத்தைப் பிடிக்கலையே என்றார். அதைக் கேட்டதும் “எதையும் பிடிக்காத ஆளைவைத்து எழுதிக்கோங்க’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வ நாதனும் இயக்குநர் கே. சங்கரும் வந்து என்னிடம் அரை மணி நேரம் பேசினார்கள். திரையுலக நிலவரங்களை எடுத்துச் சொன்னார்கள். அதன்பிறகு எழுதிக் கொடுத்தேன். எம்.ஜி.ஆருக்கு அப்பாடல் மிகவும் பிடித்திருந்தது.

?. திரையுலகில் நீங்கள் அதிக சிரமப்பட்டீர்களா?

ப. யாராக இருந்தாலும் சிரமப்படாமல் எந்தத்துறையிலும் வெற்றிபெறமுடியாது. திறமை -முயற்சி - நம்பிக்கை- உழைப்பு இந் நான்கும் இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றி பெறமுடியும்.
எதிர்காலம் எல்லாருக்கும் உண்டு. அது எப்போது எந்த நேரத்தில் யார்மூலம் வரும்? அதுதான் தெரியாது.

Wednesday, April 21, 2004

சுகந்தி சுப்ரமணியன்

ஒரு பெரிய அணை. நீர் நிரம்பிய நிலை. மேலும் நீர் வருகிறது. உடைப்பெடுக்கும் நிலை. இப்போது நீர் எப்படி வெளியேறும்? அணையின் பலவீனமான பகுதியின் வழியாகத்தான் முதலில் வெளியேறும். அந்த நீர் மேற்புறமாக வழியலாம்; சுவரில் வலுக்குன்றிய பகுதி உடையலாம்; மதகுகள் லேசாக இருந்தால் பிய்த்துக்கொண்டு போகலாம்; அல்லது வந்த வழியாகவே வெளியேறிவிடலாம்....

இப்போது மனித மனத்திற்கு வருவோம். பெரும் துயரத்தைச் சந்திக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? கண்ணீர் விட்டுக் கதறலாம்; சினமுற்றுக் கத்தலாம்; மன அழுத்தத்தால் மெளனம் காக்கலாம்; புலம்பித் தள்ளலாம்; அதிரடியாய்ப் போராட்டத்தில் இறங்கலாம்.... இப்படி மனம் எந்த இடத்தில் பலவீனமாய் இருக்கிறதோ, அந்த இடத்தின் வழியே துயரம் வெளிப்பட்டுவிடும். இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் துயரம் வெளிப்படுகிறது. துயரங்களின் கனம் தாங்காத சுகந்தி சுப்ரமணியன் (37), கவிதை எழுதுகிறார்.

மரணம், வலி, துயரம், ஏக்கம், இயலாமை, வருத்தம், அதிர்ச்சி, விரக்தி, சோர்வு, அச்சம், கவலை, போதாமை, வறுமை, தோல்வி, சங்கடம், ஆயாசம்.... என அகராதியில் இன்னும் மிச்சமிருப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தின் தாக்கத்தையும் ஒரே இடத்தில் பெறவேண்டுமா? சுகந்தியின் கவிதை வெளிக்குள் நுழையுங்கள்.

மாத விடாயின் போதும் கருவுற்ற போதும் பெண் படும் துயரங்கள், மற்றவர்களுக்காக அவள் வாழவேண்டியிருப்பது, அவள் எதிர்கொள்ளும் வசை, வன்முறை, உரிமை மறுப்பு, அடையாளம் இழப்பு, அவமானம், 'எதிர்வீட்டுக்காரியின் என் முகம் பற்றிய வர்ணனை', பாதுகாப்பின்மை, எதிலிருந்தும் தப்பிக்க முடியாத வாழ்க்கை, தனிமைத் துயர், குடும்பத்திற்குள் அகதியான நிலை, 'போதும் கலைத்துவிடு எனச் சொல்ல பக்கத்து வீட்டில்கூட ஆட்கள் இருக்கும்' சமூகம், உறவுகளின் உண்மை முகம், நிலையின்மை, நழுவிச் செல்லும் வாழ்க்கை.... எனச் சுகந்தியின் விரல், இந்தச் சிரிக்கும் உலகின் உண்மைத் தோற்றத்தை அம்பலப்படுத்துகிறது.

இத்தகைய உலகத்தை நெருக்கமாகக் காணும் ஒருவர், எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என நாம் கணிக்க முடியும்.

'என்னைக் கவலைகள் தின்னத் தகாதென நின்னைச் சரணடைந்தேன்' என்றான் பாரதி. கவலை, ஒரு விபரீத நோய்க் கிருமி. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடித்த கதைதான். உள்ளே நுழையவிட்டால் பிறகு, நம்மையே தின்று ஏப்பம் விட்டுவிடும். கவலையின் கரங்களில் நாம் ஒரு பொம்மையாகிவிடக் கூடாது. நம் சூத்திரக் கயிறு, நம்மிடமே இருக்கவேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதான செயலா என்ன?

'ஆகாயத்தில் கண்ணும் பூமியிலே மனசுமாய்' இருக்கும் சுகந்தி, மென்மையான-நுண்மையான மனத்தவர். அவரால் இந்தக் கவலைகளை வெல்ல முடியவில்லை.

எனக்குள் சிதைந்து போகிறேன்.
என்றாலும்
என்னை மீட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.
என் எலும்புகளில் ரத்தத்தோடு
உணர்வுகளையும் நான் மீட்டாகவேண்டும்.
என் சுவாசத்தினூடே விஷம்
உறிஞ்சப்படுவதையும் நான்
நிறுத்தியாக வேண்டும்....
- என்ற கவிதையில் ஒரு மிதமிஞ்சிய அச்சமும் பதற்றமும் விரிகின்றன.

சிரித்திரு என்கிறாய்.
சரிதான்.
என்னால் முடியவில்லை.
எல்லோரும் அப்படித்தான் என்கிறாய்.
என்றாலும் முடியாதென்கிறேன்.
சும்மாகிட என்கிறாய்.
மாட்டேன் என்றேன்.
செத்துப்போ என்கிறாய்
என்னை உன் காலால் எட்டித் தள்ளியபடி.
எனக்கென நான் வாழ்க்கையை
மிச்சம் வைத்திருக்கிறேன்
வாழமுடியாமல்


-'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' எனப் பாடியதெல்லாம் என்னாயிற்று? நம் பெண்கள் பலருக்கு இந்த அனுபவம் என்ன புதிதா? இப்படி ஒரு நாள் கழியாவிட்டால் அதுதானே புதிது.

அவள் முகம் பார்க்கும்போதெல்லாம்
சுடுசொற்கள் வந்துவிடுகின்றன.
மிகவும் வேதனைதான்; என்ன செய்வது?
நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்.
அது:
நானாக இருக்க முடியாதுபோன வருத்தம்தான்


-இப்போது சிக்கலின் அடித்தளம் என்னவென்று புரிகிறது. நான் என்ற உள்மன வேட்கை, ஒவ்வொரு மனத்திற்குள்ளும் சாம்பல் மூடிய தீயெனக் கனலுகிறது. இன்னொரு கவிதையில் பாருங்கள்.

உண்மையில் எல்லோருக்கும்
பிடித்தமானதைப் பற்றிப் பேசத் தெரியவில்லைதான்.
ஆனாலும் நட்பு தோழமை போன்றவை
வெற்று வார்த்தைகளாகிப் போனபின்
எனக்கெதற்கு இந்த விசாரம்.
மனித நடமாட்டமில்லாத இடங்கள்
ஆபூர்வமானவை; அழகானவை கூட....


- மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கும்போது இந்த இடத்திற்குத்தான் வந்துசேர வேண்டியிருக்கிறது.

சுகந்தி பெரும்பாலும் துயரத்தையும் எதிர்மறை உணர்வுகளையுமே எழுதுகிறார். ஆனால், ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாய் அமைந்துள்ளது. வாசிக்கையில் அதே உணர்வில் நாம் இழுத்துச் செல்லப்படுவதை உணருகிறோம்.

இந்த மரம் என்னைத் திட்டியதில்லை
அல்லது எந்த மரமும்.
என் நன்றியைத் தெரிவிக்கிறேன்
மீண்டும்.


-இந்தக் கவிதை, வலியைப் பேசுகிறது. ஆனால், இதில் ஒரு புதுமையான வெளிப்பாடு இருப்பதைக் கவனித்தீர்களா?

சப்தங்களின் கூடாரங்களில்
நடனமாடிய சொற்களை
ஆணியடித்து அறைந்த பின்னும்
அலையடித்துக் கிடக்கும் மனசை
மணல் வெளியில் எறிந்த பின்னும்
எங்கோ இருக்கும் பறவை தேடும்
தன் இனத்தை வீட்டில் தொலைத்தபின்னும்
எதுவுமில்லை இனி தொலைக்க என்று
ஆகிப்போன பின்னும்
நான் சப்தங்களின்...


-மொத்தக் கவிதையுமே இவ்வளவுதான். இந்தக் கவிதையின் வடிவத்தில் ஒரு சிறப்பு உண்டு. தொடங்கிய சொல்லிலேயே முடிவதோடு, ஒரு சுழலும் தன்மை இதில் இருக்கிறது. முடியும் இடத்தில் கவிதை, மீண்டும் மீண்டும் தொடங்கிவிடுகிறது.

மனம் ஒரு விசித்திரம். அது, நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கிறது. 'மதம் பிடித்த யானையாய்', 'அறுந்துவிடப்போகும் பட்டம்போல்', 'விடை தேடும் பறவையாய்', 'ரயிலும் தண்டவாளமும் இணையும் தருணத்தில் சிக்கித் தவிக்கும் உயிராய்', 'தத்திப் பறக்கும் சிறுகுருவிபோல்' எனப் பல வகைகளில் சுகந்தியின் கவிதை மனம், அவதாரம் எடுக்கிறது.

புதையுண்ட வாழ்க்கை(1988), மீண்டெழுதலின் ரகசியம்(2003) ஆகிய கவிதைத் தொகுப்புகளைச் சுகந்தி படைத்துள்ளார். சுமார் இருபது ஆண்டுகளுக்கும் முன்பே பெண்ணியத்தின் குரலை ஒலித்தவர். கவிஞர் மீரா இலக்கிய விருது பெற்றவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மனைவி. திருப்பூரில் வசிக்கிறார். தற்சமயம் உடல்நலன் குன்றியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்.

இந்த உலகில் மனிதர்கள் குறைவு; வேறு உயிரினங்களே மிகுதி. ஆனால், உலகின் அமைதி, பெரும்பாலும் மனிதர்களால்தான் கெடுகிறது. மனிதன், பிற உயிரினங்களுக்கு மட்டுமில்லை; தன் சக மனிதனுக்குக்கூட மகிழ்ச்சியை அளிப்பதில்லை. சுயநலமும் ஆதிக்க மனோபாவமும் இந்த அழகான பூமிப் பந்தை, துயரக் கிண்ணமாக மாற்றி விடுகின்றன.

நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமா என அறிய, ஒரு சிறிய சோதனை. நீங்கள் இந்த உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வெட்ட வெளிக்கு வாருங்கள். உங்கள் காலின் கீழ், தலைக்கு மேல், எட்டுத் திசைகள் என 360 பாகை அளவில் ஒரு சுற்று சுற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு கோணத்திலும் மனிதன் அல்லாத ஏதேனும் ஓர் உயிரைப் பார்க்கிறீர்களா? அதுவே சிறந்த இடம். நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமாக இல்லையென்றால் அதைச் சிறந்ததாக மாற்றுங்கள்.

ஒரு சின்னஞ்சிறு குருவியாலும் மலராலும் நாய்க்குட்டியாலும் நமக்கு மகிழ்ச்சியைத் தரமுடிகிறது! ஆறு அறிவு படைத்த மனிதர் பலரால் அது முடியவில்லை. இ·து ஒரு விநோதம்தான். ஆனாலும் நல்லவர்களும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அதனால்தானே அவ்வப்போது மழை பெய்கிறது. முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம்.

நமக்கென ஒரு கதவு திறக்கும். நம் வெக்கையைப் போக்க, ஒரு குளிர்த்தென்றல் நம்மைத் தழுவும். முட்செடியிலிருந்தும் ஒரு பூ மலரும்.

சொல்லத் தெரியாத பறவை
தன் சந்தோஷத்தை
பறந்து பறந்து நிரப்புகிறது வெளியில்


- என்கிறார் சுகந்தி.

அந்தப் பறவை, உங்கள் தோளில் வந்து உட்காருவதாக!